நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜீவ விருட்சத்தின் கனி யாருக்கு?


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஜீவ விருட்சத்தின் கனி யாருக்கு?
Permalink  
 


ஆதியில் மனிதனை சிருஷ்டித்த தேவன், ஏதேன் தோட்டத்தின் நடுவில் 2 விருட்சங்களை முளைக்கப்பண்ணினார் (ஆதி. 2:9).

1. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம், 2. ஜீவவிருட்சம்

இந்த விருட்சங்களின் கனியைப் புசிப்பதால் மனிதனுக்கு என்ன நேரிடும் என்பதைப் பின்வரும் வசனங்களில் நாம் காணலாம்.

ஆதி. 2:16,17 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
ஆதி. 3:22,23 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி, மனிதனுக்கு சாவைக் கொடுப்பதாக இருந்தது. ஜீவவிருட்சத்தின் கனியோ, மனிதனை என்றென்றும் உயிரோடிருக்கச் செய்கிற நித்தியஜீவனைக் கொடுப்பதாக இருந்தது.

நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் எனும் கட்டளைக்கு ஆதாம் கீழ்ப்படிந்து நடந்தால், அவருக்கு ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுக்கவேண்டுமென்பதே தேவனின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இக்கருத்துக்குப் பின்வரும் வசனங்கள் ஆதாரமாயுள்ளன.

வெளி. 2:7  ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. (கற்பனைகளின்படி நடந்து ஜெயிப்பவனே ஜெயங்கொள்ளுகிறவன் - வெளி. 2:2,3 படித்துப் பார்க்கவும்)
வெளி. 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
(ஜீவவிருட்சத்தின்மீது அதிகாரமுள்ளவன், அதின் கனியைப் பறித்து புசிக்கவும் அதிகாரமுள்ளவனாகிறான் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை)

ஆதாமைப் பொறுத்தவரை, நன்மை தீமை அறியத்தக்க கனியைப் புசிக்கவேண்டாம் எனும் ஒரேயொரு கற்பனைதான் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்கற்பனையின்படி அவர் நடவாததால், ஜீவவிருட்சத்தின் கனி அவருக்கு மறுக்கப்பட்டது. அதோடு, நன்மை தீமை அறியத்தக்க கனியைச் சாப்பிட்டால் சாகவே சாவாய் என தேவன் கூறியபடி, சில வருடங்களில் அவர் சாகவும் நேரிட்டது. ஆதாமின் பாவம், அவரது சந்ததியினரையும் விட்டுவைக்கவில்லை. ஆதாமின் பாவத்தால் அவர்கள் 2 விதத்தில் பாதிக்கப்பட்டனர்.

1. ஆதாமைப் போல் அவரது சந்ததியினரும் சாகவேண்டியதாயிருந்தது. அவர்கள் கற்பனைகளின்படி நடந்தாலும் நடவாவிட்டாலும் சாவு அவர்களுக்கு நிச்சயமானது. எனவே கற்பனைகளின்படி நடப்பவர்கள், அதற்கான பலனைப் பெறுவதற்கு (அதாவது ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு) வாய்ப்பே இல்லாமற்போனது.

2. ஆதாமின் பாவம் ஜென்மசுபாவமாக அவரது சந்ததியினருக்கும் வந்தது. இதன் காரணமாக, அவர்களின் மாம்சத்தில் பாவப்பிரமாணம் எனும் பிரமாணம் உண்டானது.
இந்தப் பாவப்பிரமாணத்தைக் குறித்து பின்வரும் வசனத்தில் பவுல் கூறுகிறார்.

ரோமர் 7:23 என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

அதாவது பாவஞ்செய்யக்கூடாது என மனிதனின் மனம் நினைத்தாலும், அவனைப் பாவஞ்செய்யவைக்கும்படி அவனோடு போராடுகிறதான பாவப்பிரமாணம் அவன் மாம்சத்தில் உண்டானது.

இதனால் ஆதாமின் சந்ததியினர் அனைவரும் பாவஞ்செய்தேயாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே, ஆதாமின் பாவத்தால் சாகிற அவர்கள் ஒருவேளை உயிர்பெற்றாலும், மாம்சத்தின் பாவப்பிரமாணத்தினால் அவர்கள் செய்த பாவங்கள், ஜீவவிருட்சத்தின் கனியை அவர்கள் பெறுவதைத் தடுத்துவிடும்.

இப்படியாக 2 விதத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஆதாமின் சந்ததியினர், ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறவேண்டுமெனில், 2 காரியங்கள் நடக்கவேண்டும்.

1. ஆதாமின் பாவத்தால் சாகிற அவர்கள் மீண்டும் உயிர்பெறவேண்டும்.
2. அவர்கள் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்தினிமித்தம் அவர்கள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்.


இந்த 2 காரியங்களும் நடப்பதற்கு தேவன் சித்தங்கொண்டார். ஏனெனில், தேவன் இரக்கமும் அன்புமுள்ளவர். ஆதாம் ஒருவரின் மீறுதலினிமித்தம் மனுக்குலம் முழுவதும் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல், நிரந்தரமாக சாவதை அவர் விரும்பவில்லை. எனவே ஆதாமின் பாவத்தால் வந்த பாதிப்புகளைப் போக்கி, எல்லா மனிதரும் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்க தேவன் சித்தங்கொண்டார். (அந்த சித்தத்தை தேவன் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதைப் பின்னர் பார்ப்போம்)

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். ஆதாமின் சந்ததியினர் அனைவரும் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுகிற வாய்ப்பைக் கொடுப்பதுதான் தேவனின் சித்தமாயிருந்ததேயொழிய, ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு கற்பனைகளின்படி நடக்கவேண்டும் எனும் நிபந்தனையை நீக்க அவர் எண்ணவுமில்லை, நீக்கவுமில்லை.

இக்கூற்று நமக்கு சற்று குழப்பமாக இருக்கலாம். எல்லோரது மாம்சத்திலும் பாவப்பிரமாணம் இருக்கும்போது, அவர்கள் எப்படி கற்பனைகளின்படி நடக்கமுடியும் எனும் கேள்வி எழுந்து நம்மை சற்றுக் குழப்பக்கூடும். இக்குழப்பம் நீங்குவதற்கு இன்னும் சில விஷயங்களை நாம் அறியவேண்டும்.

அடுத்த பதிவில் தொடர்கிறது ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

முந்தின பதிவின் தொடர்ச்சி ..

நம் பாவங்களை 2 பிரிவாகப் பிரிக்கலாம்.
1. நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்தோடு போராடித் தோற்பதால் செய்கிற பாவங்கள்.
2. அவ்வாறு போரடாமல் நிர்விசாரமாய் செய்கிற பாவங்கள்.


இவற்றில் முதல் வகையான பாவங்கள் மன்னிக்கப்படத்தான் தேவன் சித்தங்கொண்டார்; மற்றபடி, 2-வது வகையான பாவங்களைச் செய்பவர்கள், அவற்றிற்கான விளைவைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் தேவனின் ஆதித் தீர்மானமும் இறுதித் தீர்மானமுமாகும் (ஆதி. 2:16,17; வெளி. 21:7,8; 22:14,15).

இதைத்தான் ஆதாமின் விஷயத்திலிருந்தே நாம் பார்த்துவருகிறோம். ஆதாம் பாவஞ்செய்வதும் செய்யாதிருப்பதும் அவருடைய முழு சுயாதீனத்தில் இருந்தது. அவருடைய மாம்சத்தில் பாவப்பிரமாணம் இருக்கவில்லை. ஆனாலும் பாவத்தில், குறிப்பாக இச்சையில் விழுந்தார். பாவப்பிரமாணம் இல்லாதபோதுகூட இச்சையில் விழக்கூடும் என்பதற்கு ஆதாம் சிறந்த உதாரணமாயுள்ளார். இன்று நாமுங்கூட நம்முடைய பல பாவங்களுக்கு நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணமே காரணம், அல்லது சாத்தானே காரணம் என நமக்குநாமே சமாதானம் சொல்லிக்கொண்டு நிர்விசாரமாகப் பாவஞ்செய்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் செய்கிற பல பாவங்கள், நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்திற்கு அப்பாற்பட்டவைகளே. நாம் நிர்விசாரமாய் செய்கிற பாவங்களுக்கு 2 உதாரணங்கள்:
1. நம் வசதிவாழ்வைப் பெருக்கிக்கொள்ள பிறரிடமிருந்து திருடுவதை எடுத்துக்கொள்வோம். இச்செயல் முழுக்க முழுக்க நம் மனதைச் சார்ந்ததேயன்றி, நம் மாம்சத்தைச் சார்ந்ததல்ல. அதாவது, நம் வசதிவாழ்வுக்காக திருடுவதைத் தவிர்ப்பது நிச்சயம் நமக்கு சாத்தியமே. இவ்விஷயத்தில் நாம் திருடத்தான் வேண்டுமென நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணம் நம்மோடு போராடுவதில்லை.
2. பசியில் வாடுகிற ஒருவனின் பசியைப் போக்கும் வசதி நம்மிடமிருந்து, அதைச் செய்யாதிருப்பதை எடுத்துக்கொள்வோம். இப்படிச் செய்யாதிருப்பதும், நம் மனதைச் சார்ந்ததேயன்றி நம் மாம்சத்தைச் சார்ந்ததல்ல. அதாவது பசியில் வாடுபவனின் பசியைப் போக்க நமக்கு வசதியிருக்கையில் அதைச் செய்வது நமக்கு சாத்தியமே. அப்படிச் செய்கையில், அதைச் செய்யவிடாதபடி நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணம் நம்மோடு போராடி தடுப்பதில்லை.

தன் மாம்சத்தில் பாவப்பிரமாணம் இல்லாதபோது ஆதாம் செய்த பாவத்திற்கான விளைவுகளை அவர் சந்தித்துதான் ஆகவேண்டியதிருந்தது. அந்த விளைவுகளில் ஒன்று மரணம், மற்றொன்று ஜீவவிருட்சத்
தின் கனியைப் புசிக்க மறுக்கப்படுதல். ஆதாமைப் போலவே, நாமும் (நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்திற்கு அப்பாற்பட்டு) நிர்விசாரமாகச் செய்கிற பாவங்களுக்கான விளைவுகளைச் சந்திக்கத்தான் வேண்டும். அந்த விளைவுகளில் ஒன்று மரணம் (நம்மைப் பொறுத்தவரை 2-ம் மரணம்), மற்றொன்று ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்க மறுக்கப்படுதல்.

எனவே, நமக்குக் கொடுக்கப்பட்ட கற்பனைகளின்படி நடப்பதற்கு நாம் உண்மையாய் பிரயாசப்படவேண்டும்; அப்போது, நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணம் நமக்கெதிராக நின்றால், அதனோடு போராடத்தான் வேண்டும். ஒருவேளை அப்போராட்டத்தில் தோற்றால், அதைக் குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை. ஏனெனில், அப்படிப்பட்ட பாவங்களை மன்னிக்கத் தேவன் சித்தங்கொண்டு அதை நிறைவேற்ற வழியும் செய்துள்ளார். எனவே அப்பாவங்களினிமித்தம் ஜீவவிருட்சத்தின் கனி நமக்கு மறுக்கப்பட்டுவிடுமோ என நாம் கவலைப்படவேண்டியதில்லை. ஆனால், அப்பாவங்களைக் குறித்து துயரப்பட வேண்டும். இப்படிச் செய்துவிட்டோமே எனத் துயரப்பட்டு, மீண்டும் அதைச் செய்யாதிருக்க தீர்மானித்து, பரிசுத்தஆவியின் உதவியையும் நாடவேண்டும்.

அப்போது துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்யும் தேவன் (ஏசாயா 61:2; மத்தேயு 5:4), நியாயத்தீர்ப்பு நாளில் நமக்கு ஆறுதலைத் தருவார். மாறாக, தேவன் எல்லாரையும் இரட்சிக்க திட்டம் வைத்துள்ளார், அவர் பார்த்துக்கொள்வார், நம்மில் ஒருவனும் நீதிமானில்லை, பாவியில்லாத மனிதன் ஒருவனுமில்லை எனச் சொல்லிக்கொண்டு, கற்பனைகளின்படி நடப்பதில் நிர்விசாரமாயிருந்தால், ஆதாமுக்கு ஜீவவிருட்சத்தின் கனி மறுக்கப்பட்டதைப் போல் நமக்கும் மறுக்கப்படும்.

வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை, நீதிமான்களுக்கு இப்பலன், துன்மார்க்கருக்கு இப்பலன், நன்மை செய்தால் இப்பலன், தீமை செய்தால் இப்பலன் என பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆதி. 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்.
நீதிமொழிகள் 11:19 நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்.
எசேக்கியேல் 18:10-14 (படித்துப் பார்க்கவும்)
எசேக்கியேல் 18:20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
சங்கீதம் 37:9,20 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள், துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள்.
சங்கீதம் 92:7 துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
சங்கீதம் 73:19 துன்மார்க்கர் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
யாக்கோபு 5:19,20 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
1 யோவான் 3:14,15 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
2 தெச. 1:10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.
மத்தேயு 13:40,41 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
மத்தேயு 25:41-43 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.

ஆதாமின் பாவத்தால் ஏற்கனவே நாம் சாவைச் சுமந்துகொண்டிருக்கையில், மேற்கூறிய வசனங்களில் கூறப்பட்டுள்ள வாசகங்களான மரணத்துக்கு ஏதுவாதல், அறுப்புண்டு போதல், என்றென்றும் அழிந்து போதல், அக்கினியால் சுட்டெரிக்கப்படுதல், மரணத்தில் நிலைகொண்டிருத்தல், நித்திய அழிவாகிய தண்டனையை அடைதல், பிசாசுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய அக்கினிக்குப் போதல் ஆகியவை ஆதாமால் வந்த சாவைக் குறிப்பதாக இருக்கமுடியாது. ஏனெனில் ஆதாமால் வந்த சாவு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்லாது எல்லாருக்கும் உண்டு. எனவே மேற்கூறிய வாசகங்கள் யாவும் ஆதாமால் வந்த சாவுக்கு அப்பாற்பட்டவைகளாகும். ஆதாமால் வந்த சாவிலிருந்து உயிர்பெற்ற பின்னர் வரப்போகிற அழிவுகளையே அவ்வாசகங்கள் குறிப்பிடுகின்றன. இதைத்தான் 2-ம் மரணம் என வெளி. 2:11; 20:6; 21:8 வசனங்கள் கூறுகின்றன.

அடுத்த பதிவில் தொடர்கிறது .....



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

முந்தின பதிவின் தொடர்ச்சி ...

இப்போது நமக்குள் சில கேள்விகள் எழக்கூடும். கற்பனைகளைத் தெரிந்தவர்கள் மட்டுந்தானே அவற்றின்படி நடக்க பிரயாசப்படமுடியும்? கற்பனைகளை அறியாத புறஜாதியினர் அவற்றின்படி எப்படி நடக்கமுடியும்? அவர்களுக்கு ஜீவவிருட்சத்தின் கனி கிடையாதா? எனும் கேள்விகள் எழக்கூடும். இக்கேள்விகளுக்கு பவுலின் பின்வரும் வசனங்கள் பதில் தருகின்றன.

ரோமர் 2:14-16 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

நன்மை தீமை அறியத்தக்க அறிவையுடைய மனிதன், சுபாவமாகவே நன்மையெது, தீமையெது, நீதியெது, நியாயமெது என்பதைத் தீர்க்கும் திறனுள்ளவனாக இருக்கிறான். இத்திறனைக் கொண்டு, எதைச் செய்யவேண்டும்/செய்யக்கூடாது என்பதை அவனால் நிதானிக்க இயலும். இவ்வாறு நிதானித்து அறிந்த விஷயங்களைத்தான் மனதின் பிரமாணம் என ரோமர் 7:23-ல் பவுல் கூறுகிறார். இந்த மனதின் பிரமாணத்தின்படி நடந்தாலே அது கற்பனைகளின்படி நடப்பதற்குச் சமம்தான்.

புறஜாதிகள் மட்டுமல்ல, ஆதாம் முதல் மோசே வரையிலான ஜனங்களும் கற்பனைகளை அறியாதவர்கள்தான். ஆனாலும் அவர்களில் ஆபேல், நோவா போன்றோரை தேவன் நீதிமான்கள் எனக் கூறத்தான் செய்தார். இவர்களெல்லாம் தங்களது மனதின் பிரமாணத்தின்படி நடந்ததால்தான் அவர்களை நீதிமான்கள் என தேவன் கூறினார். அதேவேளையில் மனதின் பிரமாணத்திற்கு எதிராக நடந்த காயீனிடம் தேவன் பின்வருமாறு கூறினார்.

ஆதி. 4:6,7 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும் ... என்றார்.

காயீனிடம் நன்மை தீமை அறியத்தக்க அறிவு இருந்ததால், எது நன்மையென அவன் மனதின் பிரமாணம் நிச்சயமாகச் சொல்லியிருக்கும். ஆனால் அந்த நன்மையை அவன் செய்யவில்லை.

இதற்குக் காரணம், அவனுடைய சுயாதீன சிந்தையேயன்றி, அவன் மாம்சத்திலிருந்த பாவப்பிரமாணம் எனக் கூறமுடியாது. ஏனெனில், அவன் கூடவே இருந்த ஆபேல் நன்மைசெய்து, தேவனால் நீதிமான் என பேர்பெற்றான் (மத்தேயு 23:35). எனவே காயீன் நன்மை செய்யாததற்குக் காரணம் அவன் தன் மனதின் பிரமாணத்தின்படி நடக்கப் பிரயாசப்படாததே. அவன் நன்மை செய்யாதிருந்ததை தேவன் எடுத்துரைத்துச் சொன்னபிறகுகூட மனந்திரும்பாமல், ஆபேலைக் கொல்லுதல் எனும் தீமையைச் செய்தான். விளைவு? தேவனால் சபிக்கப்பட்டான் (ஆதி. 4:11).

அந்நாட்களில் தேவன் கற்பனைகள் எதையும் கூறவில்லை. நன்மை செய், எரிச்சல் படாதே, கொலை செய்யாதே என்றெல்லாம் யாரிடமும் கூறவில்லை. ஆயினும் ஆபேல், தீமையை விலக்கி நன்மை செய்தான், காயீனோ, நன்மை செய்யாமல் தீமை செய்தான். விளைவு? ஆபேல் நீதிமான் எனப் பேர்பெற்றான், காயீனோ தேவனால் சபிக்கப்பட்டான்.

இப்போது மற்றுமொரு கேள்வி நமக்குள் எழுகிறது. ஆதாமின் பாவத்தால் மனிதர்மீது வந்த 2 பாதிப்புகளை (1. மரணம், 2. ஜென்மபாவசுபாவத்தால் செய்கிற பாவங்கள்) நீக்கி, ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்க சித்தங்கொண்ட தேவன், நிர்விசாரமாய் (சுயமாக) பாவஞ்செய்து, பின்னர் துயரப்பட்டு மனந்திரும்புவோருக்கு, ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்க சித்தங்கொண்டாரா என்பதே அக்கேள்வி. இக்கேள்விக்கும் பதில், ஆமாம் என்பதுதான். உருக்கமும் இரக்கமும் அன்புமுள்ள தேவன், தங்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்புவோருக்கும் தயவளித்து, அவர்களுக்கும் ஜீவவிருட்சத்தைப் பெறுவதற்கான வாய்ப்பளிக்க சித்தமுள்ளவராகவே இருந்தார்.

ஆதாமின் பாவம், நம் மாம்சத்திலுள்ள பாவப்பிரமாணத்தால் நம்மையும் மீறி செய்கிற பாவங்கள், நாம் நிர்விசாரமாய் பாவஞ்செய்து பின்னர் உணர்ந்த பாவங்கள் இவையனைத்துக்கும் நிவாரணம் செய்ய தேவன் செய்த காரியம், தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்ததே. இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை இரட்சிக்கும் என்பது மெய்தான்; ஆனால் அவ்வாறு இரட்சிக்கப்பட நாம் என்னசெய்யவேண்டும் என பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

அப். 3:20 உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.
1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.


பாவங்களினிமித்தம் வருந்தி, மீண்டும் அவற்றைச் செய்யாதிருக்கத் தீர்மானித்து, அத்தீர்மானத்தை நிறைவேற்ற உண்மையாய் பிரயாசப்படுவதுதான் மனந்திரும்பிக் குணப்படுதலாகும். இவ்வித குணப்படுதல் இருந்தால்தான் நம் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் என அப். 3:20-ல் பேதுரு தெளிவாகக் கூறுகிறார். எனவே, மனந்திரும்பியதாகக் கூறிக்கொள்கிற நாம் யாவரும், இனிமேல் பாவஞ்செய்யாதிருக்க உண்மையாய் பிரயாசப்படுவது கண்டிப்பாக அவசியம். நம் பாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிட்டால் மட்டுமே இரக்கம் பெறமுடியும் என நீதி. 28:13 கூறுகிறது.

அடுத்த பதிவில் தொடர்கிறது .....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

முந்தின பதிவின் தொடர்ச்சி ...

மற்றுமொரு காரியத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆதாமின் பாவம் மற்றும் நம் சுயபாவங்களை நீக்கி, நாம் ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கு தேவன் வாய்ப்பு தந்ததன் ஒரே காரணம் தேவ இரக்கம், அல்லது கிருபை மட்டுமே. ஒரேயொரு மனுஷனான ஆதாமின் பாவத்தால் மனுக்குலம் முழுவதும் அழிந்துபோகக்கூடாது, தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்புபவர்கள் கெட்டழியக்கூடாது என தேவன் நினைத்ததற்குக் காரணம்: அவரது கிருபை மட்டுமே. யாருடைய கிரியையுமல்ல. நாம் யாரும் கிரியை செய்வதற்கு முன்னால், ஆதியிலேயே (அதாவது ஆதாம் பாவஞ்செய்த அக்கணத்திலேயே) இயேசுவை பலியாகக் கொடுத்து, மரணத்திற்கு அதிகாரியான சாத்தானை அவர் மூலம் நசுக்க தேவன் திட்டம் தீட்டி அதை அறிவிக்கவும் செய்தார் (ஆதி. 3:15). எனவேதான் நம் கிரியைகளினால் நாம் நீதிமான்களாவதில்லை, நம் கிரியைகள் நம்மை இரட்சிக்காது என பவுல் மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

கிரியைகள் நம்மை இரட்சிக்காது எனக் கூறிய பவுல், கிரியைகள் வேண்டும் என்பதாகவும் பல வசனங்களில் கூறியுள்ளார். அவற்றில் சில:

ரோமர் 2:6,7 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
1 கொரி.15:58 எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
கலாத்தியர் 5:6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.

இன்னும் 2 கொரி. 9:8; கொலொ. 1:10; 1 தீமோ. 2:10; 5:10; 6:18; 2 தீமோ. 3:16,17; தீத்து 3:8,14 வசனங்களைப் படித்துப் பாருங்கள்.

விருத்தசேதனம் வேண்டாம் என்று சொன்ன பவுல், கற்பனைகள் வேண்டாம் எனச் சொல்லவில்லை.

1 கொரி. 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். கிரியைகள் நம்மை இரட்சிக்காது என பவுல் ஒருபுறம் கூறியிருக்க, யாக்கோபு இப்படிக் கூறுகிறார்.

யாக்கோபு 2:24,26 மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

பவுலும் யாக்கோபும் என்ன சண்டைக்காரர்களா? நிச்சயமாக இல்லை. கிரியைகளால்தான் நாம் நீதிமான்களாகிறோம் என மேன்மை பாராட்டக்கூடாது என்பதும், குறிப்பாக நியாயப்பிரமாண கிரியைகளான விருத்தசேதனம், பலி போன்றவற்றை நம்பக்கூடாது என்பதும்தான் பவுலின் உபதேசத்தின் சாராம்சம்.

ஒருவனும் நீதிமான் இல்லை எனக் கூறுகிற வேதாகமம், ஆபேல், நோவா, யோபு, சகரியா, யோசேப்பு இன்னும் பலரை நீதிமான்கள் எனச் சொல்கிறது.
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது என சங்கீதம் 34:15 கூறுகிறது. நீதிமான் ஒருவனுமில்லையென்றால், இவ்வுலகில் யார் மீதும் கர்த்தரருடைய கண்கள் நோக்கமாயில்லை என அர்த்தமாகிவிடும். எனவே வேதாகமத்தின் ஒரு வசனத்தை மாத்திரம் வைத்து ஒரு தீர்மானத்தை எடுத்துவிடக்கூடாது. சாத்தான் தான் அவ்விதமாக ஒரு வசனத்தைச் சொல்பவன்.

சாத்தான் ஒரு வசனத்தைச் சொல்கையில், இயேசுவோ மற்றொரு வசனத்தைச் சொல்லி பதில் சொன்னதை நாம் அறிவோம்.

எனவே, நீதிமான் ஒருவனுமில்லை, எல்லோரும் பாவஞ்செய்து கெட்டுப்போனார்கள் என்பது போன்ற வசனங்களை மட்டும் சொல்லி, நீதியைச் செய்வதில் அலட்சியமாக இருப்பதும், நிர்விசாரமாகப் பாவஞ்செய்வதும் சரியல்ல.

ஒருவனும் நீதிமான் இல்லை எனக் கூறும் வேதாகமம் நீதியைச் செய் என்றுதான் கூறுகிறதேயொழிய, நீதியைச் செய்வதால் பயனில்லை எனக் கூறவில்லை.

பிரதான பாவி நான் என்று சொன்ன பவுல், யாரையும் பாவஞ்செய்யச் சொல்லவில்லை.

ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறவேண்டுமெனில் கற்பனைகளின்படி நடக்கவேண்டும் என்பதுதான் வேதாகமத்தின் தெளிவான உபதேசம். ஜீவவிருட்சத்தின் கனியால் நமக்குக் கிடைப்பது நித்தியஜீவன். அந்த நித்தியஜீவனைப் பெற நாம் என்னசெய்ய வேண்டும் எனும் கேள்விக்கு இயேசு பின்வருமாறு பதில் சொன்னார்.

மத்தேயு 19:17 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

இத்தனை தெளிவாக இயேசு கூறியிருக்க, எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1 தீமோ. 2:4) எனும் வசனத்தைச் சுட்டிக்காட்டி, யார் எந்த அக்கிரமம் செய்தாலும் துணிகரமாக பாவஞ்செய்தாலும், அவர்களை தேவன் இரட்சித்துவிடுவார் என நம்மில் சிலர் கருதுகிறோம்.

எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்பது மெய்தான். ஆனால், ஜீவவிருட்சத்தின் கனியைப் பெறுவதற்கான நிபந்தனையை அவர் தளர்த்தவில்லை.

எனவே, கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கு மட்டுமே ஜீவவிருட்சத்தின் கனி என்பதை அறிவோமாக.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Newbie

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

Hai,

I am a new member to this forum..I have to spend little more time to read full forum topics, because of less time i could not do it now, but i will check it later..

Anyway, best wishes....

Lovingly yours,

Jalal, Dubai.



__________________
Jalal Mohamed Ali
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard