நம் ஜெபம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள ஏதுவாக மத்தேயு 6:9-13 வசனங்களில் ஒரு “மாதிரி ஜெபத்தை” இயேசு கற்றுக்கொடுத்துள்ளார். இதுபோக வேறு பல வசனங்களும் நம் ஜெபம் எவ்விதமாக இருக்கவேண்டும் எனக் கூறுகின்றன. பல வேதாகம விசுவாசிகளின் ஜெபங்களும் நமக்கு நல் முன்மாதிரியாய் இருக்கின்றன.
ஆனால் நம் ஜெபங்கள் எப்படிப்பட்டதாக இருக்கின்றன? வேதாகமம் கூறுவதன் அடிப்படையில் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
இவ்வுலக ஆசீர்வாதத்தை வேண்டி ஜெபிப்பதற்கு யாபேஸ் என்பவரின் ஜெபத்தை சில தேவஊழியர்கள் மாதிரியாகச் சொல்வதுண்டு. அந்த யாபேஸின் ஜெபத்தை இப்பகுதியில் தியானிப்பது நமக்கு நன்மை பயக்கும் என நம்புகிறேன்.
1 நாளாகமம் 4:10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்.
யாபேஸின் ஜெபத்தில் 2 காரியங்களை அவர் வேண்டிக்கொள்வதைப் பார்க்கிறோம்.
1. அவரது எல்லை பெரிதாக வேண்டும். 2. தீங்குக்கு அவரை விலக்கிக் காத்தருள வேண்டும்.
இவ்விரு காரியங்களையும் யாபேஸ் வேண்டியதற்குக் காரணம் உண்டு.
யாபேஸை துக்கத்துடனே பெற்றதாக யாபேஸின் தாய் கூறுகிறார் (வசனம் 9). யாபேஸின் ஜெபம் கேட்கப்படுவதற்கு முன்னால், அவரது வாழ்வு துக்கமுள்ளதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் தீங்கு தன்னை துக்கப்படுத்தாதபடி அதற்கு விலக்கி காக்கும்படி அவர் வேண்டுகிறார்.
9-ம் வசனம் கூறுகிறபடி, தனது சகோதரரைப் பார்க்கிலும் யாபேஸ் கனம் பெற்றதும், அவரது ஜெபம் கேட்கப்பட்டபின் வந்த மாறுதலாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதாவது, யாபேஸ் அந்த ஜெபத்தை ஏறெடுக்கும்போது, அவரது சகோதரரைவிட அவர் கனம் குறைந்தவராகத்தான் இருந்திருக்க வேண்டும். அவரது சகோதரரைவிட அவரது எல்லை மிக்குறைவானதாக இருந்து, அதினிமித்தம் அவரது சகோதரர் மத்தியில் அவர் கனம் குறைந்தவராக இருந்திருக்கக்கூடும். இதுபோக அவரது வாழ்வில் பல தீங்குகள் நேரிட்டதன் காரணமாகவும் அவர் மிகுந்த துக்கத்திற்குள்ளாகியிருக்கக்கூடும். சகோதரரால் ஒருபுறம் கனவீனப்படுத்தப்பட்டதோடு, பற்பல தீங்குகளும் அவர் வாழ்வில் நிகழ்ந்ததால், அவர் மிகுந்த துக்கத்திற்குள்ளாகியிருக்கக்கூடும். இந்தச் சூழ்நிலையில்தான் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் பண்ணக்கடவன் என்ற வேதவாக்கியத்திற்கு (யாக்கோபு 5:13) இசைவாக தனது துக்கம் நீங்கும்படி அவர் ஜெபித்திருக்க வேண்டும்.
தொடர்ந்து தியானிப்பதற்குமுன், 9-ம் வசனத்தின் முதற்பகுதியைப் பற்றி ஒரு தகவலைக் கூறவிரும்புகிறேன். அதில், “கனம்பெற்றவனாயிருந்தான்” எனும் வார்த்தைக்கு இணையான எபிரெய மூலபாஷை வார்த்தையின் அர்த்தம் “அதிகம்” என்பது மட்டுமே. அவ்வார்த்தை இடம்பெற்றுள்ள context-ஐப் பொறுத்து, அதை bad sense-லும் good sense-லும் பொருள் கொள்ளலாம் என அகராதி கூறுகிறது.
எனவே நான் கருதுவது என்னவெனில், பிறக்கும்போதே துக்கத்தில் பிறந்த யாபேஸ், வளரும்போதும் பல துக்கங்களை அனுபவித்து, தனது சகோதரரின் மத்தியில் அவர் மிகுந்த கனவீனமான நிலையில் இருந்திருக்க வேண்டும். அதைத்தான் 9-ம் வசனத்தின் முற்பகுதி கூறுவதாயிருக்க வேண்டும்.
மொத்தத்தில், 10-ம் வசனத்தில் யாபேஸ் அப்படி ஒரு ஜெபத்தை ஏறெடுப்பதற்கான காரணத்தைத்தான் 9-ம் வசனம் கூறுகிறதென நான் கருதுகிறேன். நமது மொழிபெயர்ப்பில் உள்ளபடி, யாபேஸ் ஏற்கனவே தனது சகோதரரைப் பார்க்கிலும் கனம்பெற்றவராக இருந்திருந்தால், அவர் தனது எல்லையைப் பெரிதாக்கும்படி வேண்டவேண்டிய அவசியமில்லை. எனவே, 9-ம் வசனத்தின் முற்பகுதி, யாபேஸ் தனது சகோதரரைப் பார்க்கிலும் அதிக கனவீனமுள்ளவராக இருந்தார் என்பதாக இருக்கவேண்டும், அல்லது யாபேஸின் ஜெபம் கேட்கப்பட்ட பின்னர் அவரது நிலை எப்படி இருந்தது என்பதைக் கூறுவதாக இருக்க வேண்டும்.
தனது சகோதரரின் எல்லையைப் பார்க்கிலும் தனது எல்லை பெரியதாக இருந்தால், தானும் தன் சகோதரரைப்போல் கனம் பெறலாம் என யாபேஸ் கருதியதால் தனது எல்லையைப் பெரிதாக்கும்படி அவர் தேவனிடம் கேட்டிருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இவ்வுலகப் பிரகாரமான ஆசீர்வாதத்திற்கு முக்கியத்துவம் இருந்தது. உபாகமம் 28-ம் அதிகாரத்தில், இஸ்ரவேலர்கள் தமக்குக் கீழ்ப்படிந்தால் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை அபரிதமாகப் பெறுவார்கள் என்றும், கீழ்படியாவிடில் உலகப்பிரகாரமான சாபங்களைத்தான் பெறுவார்கள் என்றும் தேவன் கூறுவதைப் பார்க்கிறோம். எனவே அக்கால கட்டத்தில் வாழ்ந்த யாபேஸ், தனது துக்கம் நீங்கவேண்டும் என்றும், தனது எல்லை பெரிதாவதன்மூலம் தனது சகோதரரைப்போல் தானும் கனம்பெறவேண்டும் என்றும் விரும்பியது இயல்பானதுதான்.
அந்த இயல்பான விருப்பத்தின்படி, யாபேஸ் ஜெபித்தார்; தேவனும் அவரது ஜெபத்திற்குப் பதிலளித்தார். யாபேஸின் ஜெபத்திற்கு தேவன் செவிசாய்த்ததால், யாபேஸ் ஒரு நீதிமான் என அறிகிறோம். ஏனெனில் நீதிமானின் ஜெபத்திற்குத்தான் தேவன் செவிசாய்ப்பார் என வேதாகமம் கூறுகிறது (சங்கீதம் 34:15; 1 பேதுரு 3:12).
இனி, யாபேஸின் ஜெபத்தின் மூலம் நமக்குப் போதிக்கப்படும் ஆவிக்குரிய போதனை என்னவென்று பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தின் ஒரு காலகட்டம்வரை நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் கிடைத்த பலன்கள் வெளிப்படையானதாகவும் இவ்வுலகப் பிரகாரமானதாகவும் இருந்தன. ஆனால் அந்நிலை பழையஏற்பாட்டுக் காலத்திலிலேயே மாறிவிட்டது. சங்கீதம் 37; பிரசங்கி 8:14; 9:2,3 ஆகிய வேதபகுதிகளைப் படித்துப் பார்த்தால் இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இவ்வுலகில் துன்மார்க்கர் சிறப்பாக வாழ்வதும் நீதிமான்கள் துன்பமாக வாழ்வதுமான நிலை அன்று தொடங்கி இன்றுவரை நீடித்து வருகிறது. நீதிமானுக்கு வருகிற துன்பங்கள் அநேகமாயிருக்கும் என சங்கீதம் 34:19 கூறுகிறது.
ஆயினும் மல்கியா தீர்க்கதரிசி மூலம் பின்வரும் வாக்குத்தத்தமும் கூறப்பட்டுள்ளது.
மல்கியா 3:17,18 என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன். அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.
நம் மறுமையின் காலத்தில், தேவனுடைய ராஜ்யம் இப்பூமியில் நிறுவப்படும்போதுதான், நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்குமிடையேயான வித்தியாசத்தை நாம் மீண்டும் காணமுடியும். அதுவரை நீதிமான்களுக்கு இவ்வுலகில் உபத்திரவங்கள் உண்டுதான். நமக்குத் துன்பங்கள் நேரிடுகையில், நம் துன்பங்கள் நீங்கும்படி யாபேஸைப் போல் நாமும் ஜெபிக்கலாம். ஆனால் இவ்வுலக வாழ்விலேயே நம் துன்பங்கள் யாவும் நீங்கிப்போகும் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் கிடையாது. பவுலின் பலவீனத்தில் கர்த்தரின் வல்லமை அவரிடம் பூரணமாய் விளங்கும் என வாக்களிக்கப்பட்டபோதிலும், அவரது மாம்சத்தில் இருந்த முள் அவரிடமிருந்து நீக்கப்படவில்லை (2 கொரி. 12:7-9).
பரலோகத்தில் நம் பலன் மிகுதியாயிருக்கும் என்பதே புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கான வாக்குத்தத்தம். இதற்கு ஆதாரமாக மத்தேயு 5:12; லூக்கா 6:23 போன்ற பல வசனங்களைக் கூறலாம். லூக்கா 14:14-ல் நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பதில் செய்யப்படும் என இயேசு கூறுகிறார். எனவே, இன்றைய விசுவாசிகளாகிய நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ள பலன்கள் யாவும் மறுமையின் பலன்களே. பூமியின் பலன்களைவிட மேலான பரலோகப் பலன்கள் வாக்களிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் வாழ்கிற நாம், யாபேஸைப் போல இப்பூமியின் ஆசீர்வாதத்திற்காகவும், பூமியின் எல்லை பெரிதாவதற்காகவும் ஜெபிப்பது சரிதானா? நிச்சயமாக இல்லை. இவ்வுலகில் உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமென்றிருக்கக் கடவோம் என 1 தீமோ. 6:8-ல் பவுல் கூறுகிறார். அடிப்படைத் தேவைகளான உணவு உடைக்காகக் கவலைப்படுவோரை அஞ்ஞானிகள் என்றும் உலகத்தார் என்றும் மத்தேயு 6:31,32 மற்றும் லூக்கா 12:29,30 வசனங்களில் இயேசு கூறுகிறார்.
எனவே இன்றைய விசுவாசிகளாகிய நம் நோக்கமும் சிந்தையும் பரலோகப் பலன்களைப் பெறுவதிலேயே இருக்கவேண்டும். ஆம், கொலோசெயர் 3:2-ல் பவுல் கூறியபடி, பூமியிலுள்ளவைகளை நாடாமல் மேலான பரலோகப் பலன்களை மட்டுமே நாம் நாடவேண்டும். நம் ஜெபமுங்கூட, மேலான பலன்களைக் குறித்ததாகவே இருக்கவேண்டும்.
பூமிக்குரிய ஆசீர்வாதத்தின் காலத்தில் வாழ்ந்த யாபேஸ், பூமிக்குரிய ஆசீர்வாதத்தை வேண்டினார்; தனது பூமியின் எல்லையைப் பெரிதாக்கும்படி வேண்டினார். ஆனால் நாமோ பரலோக ஆசீர்வாதங்களைப் பெறுகிற காலத்தில் வாழ்கிறோம். எனவே யாபேஸைப் போலவே நாமும் ஜெபிப்பதாக இருந்தால், பரலோக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபிக்க வேண்டும்; நம் பரலோக எல்லையைப் பெரிதாக்கும்படிதான் நாம் வேண்டவேண்டும். யாபேஸைப் போல் நாமும் ஜெபிக்கத்தான் வேண்டும்; ஆனால் நம் வேண்டுதல் பூமிக்குரியதாக இராமல், பரலோகத்திற்குரியதாக இருக்கவேண்டும். இதுதான் யாபேஸின் ஜெபத்தின்மூலம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஆவிக்குரிய போதனை.
யாபேஸைப் போல் இவ்வுலக துன்பங்களிலிருந்து விடுவிக்கப்படவும் நாம் ஜெபிக்கலாம். சங்கீதம் 34:19-ல் வாக்களிக்கப்பட்டபடி, நம் துன்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் தேவன் நம்மை விடுவிப்பார் என்பது உண்மைதான். ஆனால், இவ்வுலக நாட்களிலேயே அவ்வாறு நடந்துவிடும் என்பதற்கு வேதாகமம் உத்தரவாதம் தரவில்லை. மாறாக, மறுமையின் நாட்களில் நம் துன்பங்களிலிருந்து நாம் முழுமையாக விடுவிக்கப்படுவோம் என்பதே உண்மை.