2000 வருடங்களுக்கு முன் இப்பூமியில் வாழ்ந்த தேவகுமாரனாகிய இயேசு, நமக்குப் பல போதனைகளைத் தந்தார், அந்நாட்களில் வாழ்ந்த பல வியாதியஸ்தரைக் குணமாக்கினார், அன்றைய சபைத்தலைவர்களின் போலி பக்தியையும் சடங்காச்சாரங்களையும் தோலுரித்துக் காட்டினார், தேவாலயத்தை வியாபார ஸ்தலமாக்கியோரைக் கண்டித்தார், கடைசிநாட்களில் வரப்போகிற கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து ஜனங்களை எச்சரித்தார், தமது 2-ம் வருகைக்கான அடையாளங்களை எடுத்துரைத்தார் இவ்விதமாக பல தேவப்பணிகளை செய்த அவர், இறுதியில் உலக மக்களின் பாவநிவாரண பலியாக மரித்து உயிர்த்தெழுந்து பரமேறினார்.
இவ்விதமாக இயேசுவைக் குறித்து வேதாகமம் கூறியிருக்க, அதையே வழிமொழிந்து அன்றைய அப்போஸ்தலர்கள் ஊழியம் செய்திருக்க, அப்போஸ்தலர் 20:29-ல் பவுல் கூறியபடியே, வேதாகம காலத்திற்குப் பின் வந்த ஊழியர்கள்(!!), மத்தேயு 28:19,20 வசனங்களில் இயேசு சொன்னதை முழுமையாகச் செயல்படுத்தாமல், என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என இயேசு சொன்னதை மனதில் வைத்தோ என்னவோ, இயேசுவை எப்படியாவது கண்டுவிட வேண்டும், அதன் மூலம் பிதாவையும் கண்டுவிட வேண்டும் என பிரயாசப்பட்டதாலோ என்னவோ, அவர்கள் ஓர் உருவத்தைக் கண்டுபிடித்து, இதுதான் இயேசு என ஜனங்களிடம் அடையாளம் காட்டி ஜனங்களை சந்தோஷப்படுத்தினர்.
அவர்களுக்குப் பின் வந்தவர்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா? அவர்களும் கடும்முயற்சிசெய்து, ஆளாளுக்கு ஓர் உருவத்தை உண்டாக்கி, இதுதான் இயேசு என அறிமுகப்படுத்தினர். இதையெல்லாம் பார்த்த ஜனங்கள், நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா, எங்களாலும் இயேசுவைக் காட்டமுடியும் எனும் வண்ணம், ஆளாளுக்கு இயேசுவை அனேக உருவங்களில் காட்டினர், காட்டிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் காட்டியுள்ள சில “இயேசு” க்கள்தான் மேலே தந்துள்ள தொடுப்பிலுள்ள “இயேசு படங்கள்”. இப்போது மக்களுக்கு ஏக சந்தோஷம். இயேசுவையும் கண்டுவிட்டோம், அதன் மூலம் பிதாவையும் கண்டுவிட்டோம் என்ற சந்தோஷத்தில், அவரவர் வீடுகளில், வேலைசெய்யும் இடங்களில், இணைய தளங்களில், காலண்டர்களில், டைரிகளில் என எல்லா இடங்களிலும் தங்களுக்குப் பிடித்த இயேசு படத்தைப் போட்டு தங்கள் பக்தியை உலகுக்குப் பறைசாற்றுகின்றனர்.
இத்தனை பக்தியுள்ள அவர்களிடம், இயேசுவின் போதனையைக் கைக்கொள்ள முயல்கிறீர்களா என்று கேட்டால், அதெல்லாம் யாரால முடியுங்க, ஏதோ நம்மளால ஆனதைச் செய்வோம், மற்றபடி நாம் பாவம் செஞ்சா அதைத்தான் இயேசு மன்னிச்சிருவாரே அப்படின்னு சொல்கின்றனர். சரி, உங்க சபைத்தலைவர்களின் போலித்தனத்தையும் அவங்க ஆலயங்களை வியாபார ஸ்தலமாக்குறதையுமாவது அறிவீங்களா, யார் கள்ளத் தீர்க்கதரிகளா இருப்பாங்கன்னு நிதானித்துப்பார்த்து அவங்களிடம் எச்சரிக்கையா இருக்கீங்களான்னு கேட்டா, என்னங்க நீங்க, ஏதோ கோயிலுக்கு போனோமா காணிக்கை போட்டோமா, ஊழியக்காரங்களுக்கு கொடுத்தோமான்னு இருக்கிறதைவிட்டுட்டு, நீங்க சொல்றதெல்லாம் எதுக்குங்க, அதையெல்லாம் ஆண்டவர் பாத்துக்குவார், ஆண்டவருக்கு அவங்க கணக்கு கொடுத்துட்டுப் போகட்டும்னு சொல்லிடுறாங்க.
ஆனா தினம் தினம் இயேசுவை தவறாம பாத்திடுறாங்க, அப்பப்போ பூமாலையும் போடுறாங்க, சிலர் கும்பிடவும் செய்றாங்க. ஆமாங்க, ஏதோ ஓர் உருவத்திலுள்ள “இயேசு படத்துக்குத்” தாங்க.
நீங்களும் அதுபோன்ற ஒரு “இயேசு” வைத்தான் அறிந்துள்ளீர்களா?
நாம் அறிய வேண்டிய இயேசு யார்? வேதாகமம் என்ன சொல்கிறது?
தள அன்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிப்பார்களாக.
-- Edited by anbu57 on Wednesday 3rd of February 2010 11:08:47 AM