எரேமியா 4:22 என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
தேவ ஜனங்களாகிய இஸ்ரவேலர், தேவனை அறிந்தவர்கள்தான். ஆனால் தேவனோ, தம்மை அவர்கள் அறியவில்லை என்று சொல்லி வருந்துகிறார்.
இந்நாட்களில் நாமுங்கூட நம்மைச் சுற்றியுள்ள புறமதத்தாரைப் பார்த்து, “ஐயோ, இவர்கள் மெய்யான தேவனை அறியாதிருக்கிறார்களே; இவர்களெல்லாம் அழிவுக்கு நேராகச் செல்கிறார்களே என்று சொல்லி மிகவும் வருத்தப்படுகிறோம். ஆனால் அவர்களைப் பார்த்து வருத்தப்படுகிற நாம், மெய்யாகவே தேவனை அறிந்துள்ளோமா?
உலகத்திற்கே நாங்கள் தேவனை அறிவிக்கிறோம், எங்களுக்கா மெய்யான தேவனைத் தெரியாது? என நாம் வரிந்துகட்டி கேட்கலாம். ஆனால், மேற்கூறிய வசனம் கூறுகிறபடி, பொல்லாப்பு செய்ய நாம் அறிவாளிகளாகவும் நன்மைசெய்ய பேதைகளாகவும் இருந்தால், நாமும் தேவனை அறியாத ஜனம்தான்.
அப்போஸ்தலன் பவுல் கூறுகிற ஒரு வசனத்தைப் படிப்போம்.
ரோமர் 16:19 ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
ஆம், நாம் நன்மைசெய்ய அதிகமாக அறிந்திருக்கவேண்டும்; அதில் மிகவும் தேறின ஞானியாக இருக்கவேண்டும். தீமை செய்வதிலோ, நாம் ஒன்றுமறியா பேதையாக இருக்கவேண்டும்.
ஆனால், உண்மையில் நாம் எப்படி இருக்கிறோம்? பொய், திருடு, அநீதி போன்ற தீமைகளை மிகுந்த திறமையுடன் செய்கிறோம்; அவற்றைப் பிறர் அறிந்துவிடாதபடி மிகுந்த ஜாக்கிரதையாக ஞானத்துடன் செய்கிறோம். ஆனால், நன்மை செய்வதிலோ ஏனோதானோவென பேதையைப் போல் இருக்கிறோம்.
இப்படியாக இருந்த இஸ்ரவேலரைப் பார்த்துதான், அவர்கள் தம்மை அறியாத ஜனம் என தேவன் கூறினார்.
தேவனை அறிந்ததாகக் கூறுபவர்கள், தேவனின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்திருக்கவேண்டும்.
காயீன், ஆபேல் சகோதரரில் ஆபேல் தேவனை அறிந்திருந்தான்; அதாவது தான் நன்மைசெய்ய வேண்டும் என தேவன் எதிர்பார்ப்பதை அறிந்திருந்தான்; அதன்படி நன்மைசெய்து நீதிமான் எனப் போற்றப்ப்ட்டான். ஆனால் காயீனோ, தேவன் நன்மை செய்வதை எதிர்பார்க்கிறார் என்பதை அறியவில்லை; அதாவது தேவனை அறியவில்லை; எனவே நன்மை செய்யத்தவறினான்.
விளைவு? நீதிமானாகிய ஆபேலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது; காயீனின் காணிக்கை புறக்கணிக்கப்பட்டது. இதைக் குறித்து காயீன் எரிச்சலுற்றபோது, தேவன் பின்வருமாறு கூறினார்.
ஆதியாகமம் 4:6,7 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
காயீன் தீமை ஏதும் செய்ததாக தேவன் கூறவில்லை. அவன் நன்மைசெய்யாததுதான் பாவம் எனத் தேவன் கூறினார். அதினிமித்தமே அவனது காணிக்கை மறுக்கப்பட்டது.
இந்நாட்களில், நாம் ஆலயத்திற்கும் ஊழியங்களுக்கும் ஏகப்பட்ட காணிக்கை கொடுக்கிறோம். அவற்றை ஆலயப் பொறுப்பாளர்களும் ஊழியர்களும் சந்தோஷமாக ஏற்று நமக்கு மிகுந்த மரியாதை கொடுக்கலாம். ஆனால் தேவன் நம் காணிக்கையை ஏற்பாரா?
காயீன், ஆபேல் காலத்தில் நடந்ததுபோல, தேவன் நம் காணிக்கையை ஏற்கிறாரா இல்லையா என்பது வெளிப்படையாகத் தெரியவந்தால், நாம் தீமை செய்பவர்களா நன்மை செய்பவர்களா என்பதும் வெளிப்படையாகத் தெரிந்திருக்கும். ஆனால், அவ்விதமாக தேவன் தற்போது நம்முடன் இடைபடுவதில்லை. எனவேதான் நாம் நம் நிலையை உணராதவர்களாக இருக்கிறோம்.
நான் மெய்யான தேவனை அறிந்துள்ளேன் என்று சொல்லிப் பயனில்லை. தேவனின் எதிர்பார்ப்பை அறிந்து அதன்படி நடப்பதுதான் மெய்யாகவே தேவனை அறிவதாகும்.
யோவான் 14:23,24 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.