மத்தேயு 7:1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
ரோமர் 2:1 மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
இவ்வசனங்களை மேற்கோள் காட்டி, பிறரது தவறுகள்/குற்றங்களைக் குறித்து நாம் எதுவும் சொல்லக்கூடாது, அல்லது அவர்களைக் கண்டிக்கக்கூடாது என பலரும் கூறுவதுண்டு. ஆனால் மேற்கூறிய வசனங்கள் அடங்கிய அதே வேதாகமத்தில், பின்வரும் வசனங்களும் உண்டு.
மத்தேயு 7:5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
இயேசுவை சோதித்த சாத்தான், வேதாகமத்தின் ஒரு பக்க வசனங்களை மட்டும் கூறினான். ஆனால், இயேசுவோ வேதாகமத்தின் மறுபக்க வசனங்களையும் சொல்லி, சாத்தானின் வாயை அடைத்தார்.
இயேசுவின் இந்த வழிமுறை, நமக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. நாமுங்கூட வேதாகமத்தின் ஒரு பக்க வசனங்களையே நோக்காமல், மறுபக்க வசனங்களையும் பார்த்து, இரு பக்க வசனங்களுக்கும் பாதகமில்லாத ஒரு முடிவை எடுப்பதுதான் சரி.
மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்ப்பதைக் கடிந்துகொண்ட பவுல், பேதுரு ஒரு தவறு செய்தபோது, அவரைக் கடிந்துகொள்ளவே செய்தார் (கலாத்தியர் 2:11-13). அவர் ஏன் அவ்வாறு கடிந்துகொண்டார் என்பதற்கான காரணத்தை பின்வரும் வசனத்தில் கூறுகிறார்.
கலாத்தியர் 2:14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
சபையின் அஸ்திபாரக் கல்லாக இயேசுவால் நேரடியாக நியமிக்கப்பட்ட பேதுருவைக்கூட குற்றவாளியாக்கி, பவுல் கடிந்துகொள்ளத்தான் செய்தார்.
எனவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்த்தல் என்றால் என்ன? எந்தெந்த காரியங்களில் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கலாம், எவைகளில் தீர்க்கக்கூடாது என்பதை சற்று ஆராய்ந்தறியும்படி இத்திரி துவக்கப்பட்டுள்ளது. தள அன்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டுகிறேன்.
எனவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்த்தல் என்றால் என்ன? எந்தெந்த காரியங்களில் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கலாம், எவைகளில் தீர்க்கக்கூடாது என்பதை சற்று ஆராய்ந்தறியும்படி இத்திரி துவக்கப்பட்டுள்ளது. தள அன்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டுகிறேன்.
குற்றவாளியாக தீர்ப்பதற்க்கும் கடிந்துகொள்ளுதல் புத்திசொல்லுதல் இவைகளுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு என்றே நான் கருதுகிறேன்.
மத்தேயு 7:1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
எனது கருத்துப்படி "ஒருவரயும் குற்றவாளியாக தீர்க்காதீர்கள்" என்று வசனம் தெளிவாக சொல்வதால் யாரயும் குற்றவாளி என்று தீர்மானமாக சொல்வது எவ்விதத்திலும் தவறானது. இதுபோல் வசனஙளை சரியாக ஆராய்ந்து கைகொள்ளாத காரணத்தால்தான் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.
யாரயும் குற்றவாளியாக தீர்க்க நமக்கு எந்த அதிகாரமும் கிடயாது. அது வேற்று மார்க்கத்தாராக இருந்தாலும் சரி! இவர்களுக்கு இப்படித்தான் நடக்கும் இவர்கள் பாவிகள்/ இவர்கள் குற்றவாளிகள் என்று தீர்மானிக்க அல்லது சாபம் கொடுக்க நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
உதாரணமாக பார்வோனின் இருதயத்தை கர்த்தர் கடினப்படுத்தினார் என்று வேதம் சொல்கிறது. இஙகு பார்வோனை நாம் குற்றவாளி என்று தீர்ப்போமனால் அவனை கடினப்படுத்திய கர்த்தர்ரையே நாம் குற்றவாளி ஆக்குவதுபோல் ஆகலாம் அல்லவா. எஙகு தேவன் எவ்வாரு செயல்படுகிரார் என்பது நமக்கு சரிவர தெரியாத பட்சத்தில் எல்லாம் நன்மைக்கே என்ற கருத்தே எற்ப்புடயது. நமக்கு தவறாக தெரியும் காரியஙளுக்காக விவாதிக்கலாம் புத்திசொல்லலாம் அவர்களுக்காக ஜெபிக்க்லாம் அவ்வளவுதான்.
IIயொவான் 5:11 மரண்த்துக்கு எதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால் அவன் வேண்டுதல் செய்யகடவன் என்றுதான் வேதம் சொல்கிறது.
எப்படியும், வசனம் சொல்வதற்க்கு நாம் நிச்சயம் கீழ்படிவது யாரயும் குற்றவாளியாக தீர்க்காதிருப்பது அவசியம்.
ஆனால் தவறு செய்யும் ஒருவரை கடிந்து கொள்ளுதல் நிச்சயம் தவறல்ல.
I தீமோத்தேயு 5:20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
யாக்: 5:19 படி சத்யத்தை விட்டு விலகுகிறவனை திருப்பவேண்டியது அவசியமாக இருப்பதால்
தவறு செய்யும் சகோதரனை கடிந்து கொள்லுதல் நிச்சயம் தவறல்ல.
ஆனால் அந்த கடிந்து கொள்ளுதலில் இரண்டு வைகை உண்டு.
1. ஒன்று நேருக்கு நேர் கடிந்துகொள்ளுதல்.
ஒருவர் செய்யும் குற்றத்தை பிற இடஙளில் சொல்லி அவதூறு பரப்புப்வதைவிட நேரில் கடிந்துகொள்வதுதான் மிக சிறந்தது. இதைதான் பவுல் பேதுரு விஷயத்தில் செய்தார்.
இதில் உள்ள நண்மை என்னவென்றால் எதிர் தரப்பினரின் நியாயம் என்னவென்ப்தை நம்மால் உடனே நேரில் புரிந்துகொள்ள முடியும். அவரிடத்தில் நியாயம் இருக்கும் பட்சத்தில் நாம் உடனே நமது கருத்தை மாற்றிகொள்ள் முடியும்.
2. பொதுவான கடிந்து கொள்ளுதல்:
இம்முறையில் ஆவிக்குரிய நிலையில் நமக்கு முதிர்ச்சி அவசியம் தேவை. ஆவிக்குறியவைகளை ஆவிக்குறியவைகளோடு மட்டுமே சம்பந்தப்படுத்தி பார்க்க முடியும். ஆவிக்குரியவைகளை மாமிச கண்களோடு பார்த்தால் நம்மால் உண்மை நிலயை அறிய முடியாது. அவ்வாரு ஆவியில் நிதானித்தறிந்து சிலர் செய்வது வேதத்திற்கு புறம்பானது என்று நாம் கருதும் பட்சத்தில் அதுபறிய நமது பொதுவான எதிர்ப்பை அல்லது கடிந்து கொள்லுதலை வெளியிடலாம்.
அதை பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. படித்தும் திருந்தாதவர்களின் செயலுக்கு நாம் எவ்விதத்திலும் பொருப்பல்ல. ஆனால் அவர்கள் கேட்டாலும் கேட்காவிடாலும் எவ்விதத்திலாவது நமது கருத்தை வெளிப்படுத்தலாம்.
பவுல் எழுதிய நிரூபங்களில் அதுபோல் பல பொது கடிந்துகொள்ளுதல் மற்றும் புத்தி சொல்தல்களை பார்க்க முடியும்.
இறுதியாக கடிந்துகொள்ளுதல் பற்றி வேதம் நமக்கு சொல்லும் கட்டளை என்னவெனில்:
தீந்து:3:10 வேத புரட்டனாயிருகிற ஒருவனுகு நீ இரண்டொரு தரம் புத்தி சொன்ன பிறகு அவனை விட்டு விலகு.
மத்
:1815. உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். 16. அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. 17. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.
இதற்க்கு மேம்பட்டு செயல்படுபவன் தேவனது உக்கிராண பொறுப்பை தனது கரத்தில் எடுத்துகொள்கிறான் என்றே நான் கருதுகிறேன்
-- Edited by SUNDAR on Monday 15th of February 2010 01:44:08 PM
sundar wrote: //குற்றவாளியாக தீர்ப்பதற்க்கும் கடிந்துகொள்ளுதல் புத்திசொல்லுதல் இவைகளுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு என்றே நான் கருதுகிறேன்.//
சகோ.சுந்தர் அவர்களே!
குற்றம் செய்பவனைத்தான் நாம் கடிந்துகொள்கிறோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
விருத்தசேதன விஷயத்தில் “மாயம் பண்ணுதல்” எனும் குற்றத்தை பேதுரு செய்தபோதுதான் பவுல் அவரைக் கடிந்து கொண்டார். எனவே ஒருவரைக் கடிந்துகொள்ளவேண்டுமெனில் அவர் குற்றம் செய்துள்ளாரா என்பதை முதலாவது அறியவேண்டியது அல்லது தீர்மானிக்கவேண்டியது அவசியம்.
வேதப்புரட்டனுக்கு புத்தி சொல்லவேண்டுமெனில், அவன் “வேதப்புரட்டு” எனும் குற்றத்தை செய்துள்ளான் என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.
எனவே யாரையாவது நாம் கடிந்துகொள்கிறோம் என்றால், அவரை ஏற்கனவே குற்றவாளியாக தீர்மானித்துவிட்டோம் என்றுதான் அர்த்தம்.
ஒருவர் குற்றஞ்செய்துள்ளார் என தீர்மானித்தபின் நாம் எடுக்கிற நடவடிக்கைகளில் ஒன்றுதான் கடிந்துகொள்தல், அல்லது புத்திசொல்தல்.
ஆனால், ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிப்பதற்கும், அவரைக் குற்றவாளியாகத் தீர்த்தல் என வேதாகமம் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
அந்த வித்தியாசம் என்னவென்பதைப் பார்ப்போம்.
ஒரு செயல் குற்றம் அல்லது தவறு என தீர்மானிக்கக்கூடிய அறிவு நிச்சயமாக நம் அனைவருக்கும் உண்டு. மனச்சாட்சிப்படியோ அல்லது வேதாகம கற்பனைகளின்படியோ, எந்தவொரு செயலும் குற்றமா இல்லையா என்பதை நிச்சயமாக நம்மால் தீர்மானிக்க இயலும். இந்த அறிவு நமக்கு இல்லையெனில், நாம் செய்கிற ஒரு செயல் குற்றமா இல்லையா என்பதை நம்மால் தீர்மானிக்க இயலாது.
எனவே, ஒரு செயலை நாம் செய்தாலும் சரி, மற்றவர்கள் செய்தாலும் சரி, அது குற்றமா இல்லையா என்பதை நம்மால் தீர்மானிக்கும் இயலும் என்பது நிச்சயம். அவ்விதமாக ஒரு செயலை குற்றம் என நாம் தீர்மானித்தால், அக்குற்றத்தைச் செய்தவரை குற்றவாளி என்றுதான் கூறமுடியும். இப்படிச் சொல்வதில் தவறு எதுவுமில்லை.
உதாரணமாக, ஒருவன் மற்றொருவரின் பொருளை திருடிவிட்டான் என வைத்துக்கொள்வோம். அப்போது நாம் எல்லோரும் அவனைத் திருடன் என்றுதான் சொல்லுவோம். திருடுவது ஒரு குற்றம் அல்லது பாவம் என இச்சமுதாயமும் கூறுகிறது, சட்டமும் கூறுகிறது, வேதாகமும் கூறுகிறது. எனவே திருடனை ஒரு குற்றவாளி என்றுதான் நாம் சொல்லவேண்டும். இப்படிச் சொல்வதை தவறு அல்லது குற்றம் என வேதாகமம் சொல்வதில்லை. ஒரு திருடனை, திருடன் அல்ல என்று சொல்வதுதான் குற்றம். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார். எனவே, ஒருவன் செய்வது துன்மார்க்கம் அல்லது குற்றம் எனத் திட்டவட்டமாகத் தெரிந்தால் அவனைத் துன்மார்க்கன் அல்லது குற்றவாளி என்றுதான் நாம் சொல்லவேண்டும். இதற்கு மாறாகச் சொன்னால், நாம் குற்றவாளியாகிவிடுவோம்.
இனி, “குற்றவாளியாகத் தீர்த்தல்” என வேதாகமம் கூறுகிற சொற்றொடருக்கான அர்த்தத்தைப் பார்ப்போம்.
மத்தேயு 7:1-ல் காணப்படும் “தீர்த்தல்” எனும் சொல்லுக்கு இணையான கிரேக்க சொல் “கிரினோ (krino)” என்பதாகும்.
இவ்வார்த்தைக்கான அர்த்தங்கள்: properly, to distinguish, i.e. decide (mentally or judicially); by implication, to try, condemn, punish:
KJV - avenge, conclude, condemn, damn, decree, determine, esteem, judge, go to (sue at the) law, ordain, call in question, sentence to, think.
அதாவது, தீர்மானித்தல், தீர்மானிக்க முயல்தல், கண்டித்தல், தண்டித்தல் எனும் 4 அர்த்தங்களைத் தருகிறது.
அடுத்து, மத்தேயு 7:2-ல் காணப்படும் “தீர்ப்பு” எனும் வார்த்தைக்கான அர்த்தத்தைப் பார்ப்போம்.
“தீர்ப்பு” எனும் சொல்லுக்கு இணையான கிரேக்க சொல் “கிரிமா (krima)" என்பதாகும்.
இவ்வார்த்தைக்கான அர்த்தங்கள்: a decision (the function or the effect, for or against ["crime"]):
KJV - avenge, condemned, condemnation, damnation, + go to law, judgment.
அதாவது, ஒரு குற்றத்திற்கு எதிரான செயலை அல்லது குற்றத்திற்கான தண்டனையை “கிரிமா” எனும் வார்த்தை குறிப்பிடுகிறது.
இப்போது மத்தேயு 7:1,2 வசனங்களைப் படித்துப் பார்த்து அவற்றின் சரியான அர்த்தத்தைப் பார்ப்போம்.
மத்தேயு 7:1,2 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
நம்மைக் குற்றவாளியெனத் தீர்க்கிற தேவன், நமக்குத் தண்டனை எதுவும் தராவிடில் நமக்கு நஷ்டம் அல்லது கஷ்டம் எதுவுமில்லை. நம் குற்றத்திற்கு தேவன் தண்டனையளித்தால்தான், நாம் குற்றவாளிகளென தீர்க்கப்படாதபடிக்கு ஜாக்கிரதையாயிருக்க அவசியமாகிறது. எனவே “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு” எனும் சொற்றொடரின் அர்த்தம் “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படாதபடிக்கு” எனபதே சரியாக இருக்கும்.
அதாவது, நம் குற்றத்தினிமித்தம் நாம் தண்டிக்கப்படாதபடிக்கு, மற்றவர்களின் குற்றத்தினிமித்தம் அவர்களை நாம் தண்டியாதிருக்க வேண்டும் என்றே இயேசு கட்டளையிடுகிறார். இக்கருத்து, பின்வரும் வசனங்களோடு ஒத்திருப்பதைக் கவனியுங்கள்.
மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.
மத்தேயு 7:1-ல், “தீர்த்தல்” என்ற வார்த்தை “தண்டித்தல்” எனும் செயலையும் குறிப்பிடுவதால்தான், “மற்றவர்களுக்கு அளத்தல்” எனும் செயலுடன் இயேசு அதை ஒப்பிடுகிறார். எனவே மத்தேயு 7:1,2-ஐ பின்வரும் அர்த்தத்தில் புரிந்துகொள்வதே சரியானதாக இருக்கும்.
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்து தண்டியாதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்த்து தண்டிக்கிறபடியே நீங்களும் தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
இதே அர்த்தத்தில்தான், ரோமர் 2:1-லும் பவுல் கூறுகிறார். எனவே மற்றவர்களை குற்றவாளியெனத் தீர்மானிப்பதில் தவறில்லை. குற்றவாளியாகத் தீர்த்து, அவர்களைத் தண்டிப்பதுதான் தவறாகிறது.
தண்டித்தல் என்றால், பழி வாங்குதல் போன்ற வெளிப்படையான தண்டித்தல் மட்டும் அல்ல.
குற்றம் செய்தவன் தேவனால் தண்டிக்கப்பட வேண்டும் என நினைப்பது, சாபம் கொடுப்பது, சட்டம் தடுப்பதால் பழிக்குப் பழி வாங்க முடியாவிட்டாலும் மனதில் பழி உண்ர்ச்சி இருப்பது இவையெல்லாமும் தண்டிப்பதற்குச் சமமானவைகளே.
குற்றம் செய்த ஒருவர் ஏதேனும் துன்பத்திற்குள்ளாகும்போது, அவர் செய்த குற்றத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறார் என நினைப்பதுகூட அவரைத் தண்டிப்பதற்குச் சமமே.
இப்படி பலவிதங்களில், பிறரைக் குற்றந்தீர்த்து தண்டிப்பது (அல்லது தண்டிக்கப்பட நினைப்பது) தான் கூடாது என மத்தேயு 7:1,2-ல் இயேசு கூறுகிறார். ரோமர் 2:1-ல் பவுல் கூறுகிறார்.
அப்படியானால், மற்றவர்கள் குற்றம் செய்யும்போது நாம் என்ன செய்யவேண்டும்?
மற்றவர்கள் குற்றம் செய்யும்போது நாம் என்னசெய்ய வேண்டும்?
மற்றவர்களின் குற்றத்தை 3 பிரிவுகளாகப் பிரித்து, இக்கேள்விக்கான பதிலைக் காண்போம்.
1. நமக்கு விரோதமானதும் நம்மை மட்டும் பாதிக்கிறதுமான குற்றம்:
2. வேறு யாரையும் பாதிக்காமல், தங்களை மட்டும் பாதிக்கிறதான தனிப்பட்ட குற்றம்
3. இடறல்கள் மூலம் பிறரைப் பாதிக்கிறதான குற்றம்.
1. நமக்கு விரோதமானதும் நம்மை மட்டும் பாதிக்கிறதுமான குற்றம்:
இவ்விஷயத்தில் வேதாகமம் 2 ஆலோசனைகளை நமக்குத் தருகிறது.
i. மன்னித்து விடுவது
மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.
லூக்கா 17:3,4 உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக.
நமக்கு விரோதமாக நம் சகோதரனோ அல்லது வேறு யாரோ குற்றஞ்செய்தால், அவர்கள் மனஸ்தாபப்பட்டாலும் படாவிட்டாலும் மன்னிக்க வேண்டும் என்றே வேதாகமம் கூறுகிறது.
ஏனெனில், நம்மில் எவருமே குற்றமற்றவர்கள் அல்ல. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிறருக்கு விரோதமாகவோ தேவனுக்கு விரோதமாகவோ நாம் கட்டாயம் குற்றம் செய்திருப்போம். அக்குற்றம் நமக்கு மன்னிக்கப்படவேண்டுமெனில், பிறர் நமக்கு விரோதமாக செய்கிற குற்றத்தை நாம் மன்னித்தேயாக வேண்டும்; அதுவும் மனப்பூர்வமாய் மன்னிக்க வேண்டும். என வேதாகமம் கூறுகிறது.
ii. சபைக்குத் தெரியப்படுத்துவது
மத்தேயு 18:15-17 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன்
உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.
நம் சகோதரனோடு உள்ள உறவை ஆதாயப்படுத்தும்வண்ணம், சகோதரனை நேருக்கு நேராகக் கடிந்துகொள்ளலாம்; அதில் பயன் இல்லையெனில் சாட்சிகள் மூலமாகவும், பின்னர் சபை மூலமாகவும் கடிந்துகொள்ளலாம். இவற்றில் எதிலும் பயன் இல்லையெனில், சகோதரனோடு உள்ள உறவை விட்டுவிடலாம் என வேதாகமம் ஆலோசனை கூறுகிறது.
2. வேறு யாரையும் பாதிக்காமல், தங்களை மட்டும் பாதிக்கிறதான தனிப்பட்ட குற்றம்
இக்குற்றத்தை ஒருவர் செய்தால் நாம் என்னசெய்ய வேண்டும் என பின்வரும் வசனம் கூறுகிறது.
கேட்டுக்கு நேராகச் செல்பவர்கள் மனந்திரும்புவதற்கு ஏதுவாக, அவர்களைக் பிறர் நடுவில் கடிந்துகொள்ள வேண்டும் எனப் பவுல் கூறுகிறார். தீமோத்தேயுவைப் போன்ற ஊழியர்களுக்கு இந்த அதிகாரத்தைப் பவுல் கொடுத்துள்ளார். நாம் மெய்யாகவே தேவனுக்கு ஊழியஞ்செய்தால், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாவஞ்செய்பவர்களை கடிந்துகொள்ளலாம்.
3. இடறல்கள் மூலம் பிறரைப் பாதிக்கிறதான குற்றம்.
இக்குற்றம், முதல் 2 குற்றங்களைவிட மிக மோசமானது என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாயுள்ளது.
மத்தேயு 18:6,7 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
இடறல் செய்பவர்கள், மற்றவர்களை ஐயோ எனும் நிலைக்கு ஆளாக்குவதோடு, தங்களையும் ஐயோ எனும் நிலைக்கு ஆளாக்கிவிடுகின்றனர். இவர்களைக் குறித்து மிகுந்த எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென இயேசுவும் அப்போஸ்தலரும் கூறியுள்ளனர் (ரோமர் 16:17).
நம் கையோ காலோ இடறல் உண்டாக்கினால் அவற்றைக்கூட வெட்டியெறியும்படி மத்தேயு 18:8,9 வசனங்களில் இயேசு கூறுவதால், இடறல் உண்டாக்குகிறவர்களை நம்மைவிட்டு விலக்குவது அவசியமாகும். அவர்களை விலக்கவேண்டுமெனில், அவர்களை நாம் அடையாளங்காண வேண்டும். எனவே இடறல் செய்பவர்களை அடையாளங்காட்டும் பணிதான் இந்நாட்களில் மிகமிக முக்கியமானது. தேவனின் மெய்யான ஊழியர்கள் இப்பணியைச் செய்யவேண்டும்.
மத்தேயு 13:24-30 வசனங்களில், ஓர் உவமையைக் கூறும் இயேசு, அதற்கான விளக்கத்தை 36-43 வசனங்களில் கூறுகிறார். அதில் ராஜ்யத்தின் புத்திரருக்கு நிகராக, இடறல் செய்பவர்களும் வளர்வார்கள் என இயேசு கூறுகிறார். எனவேதான் விசுவாசிகளை இடறச்செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் ஏராளமாகப் பெருகியுள்ளனர். அவர்களை விசுவாசிகளிடம் அடையாளங்காட்டுவது மெய்யான ஊழியர்களின் கடமையாகும்.
-- Edited by anbu57 on Tuesday 16th of February 2010 03:42:40 PM