2 தெசலோனிக்கேயர் 2:11,12 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
கடைசி நாட்களில் நடக்கப்போகிற ஒரு பயங்கரத்தைச் சொல்லி, இவ்வசனங்களில் பவுல் நம்மை எச்சரிக்கிறார். இதைப் படித்ததும் நம் மனதில் ஒரு கேள்வி எழக்கூடும். ஜனங்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதான கொடிய வஞ்சகத்தை தேவனே அனுப்புவாரா, அதெப்படி இருக்கமுடியும் எனும் கேள்வி நம் மனதில் எழக்கூடும். ஆகிலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியனாகிய பவுல் இவ்வாறு சொல்வதால், அதைக் கேள்வி எதுவும் கேட்காமல் நாம் ஏற்கத்தான் வேண்டும்.
இந்த எச்சரிக்கையில், ஒரு முக்கியமான காரியத்தை நாம் கவனிக்கவேண்டும். பவுலின் இந்த எச்சரிப்பு எல்லோருக்கும் உரித்தானதல்ல. யாரெல்லாம் சத்தியத்தை விசுவாசியாமல், அநீதியில் பிரியப்படுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.
தேவவசனமே சத்தியம் என யோவான் 17:17-ல் இயேசு கூறுகிறார். எனவே தேவவசனத்தை விசுவாசித்து, தேவவசனம் கூறுகிற நீதியில் பிரியப்படுகிறவர்களுக்கு, அந்த வஞ்சகம் அனுப்பப்பட மாட்டாது. யாரெல்லாம் தேவவசனத்தை விசுவாசியாமல், அநீதியில் பிரியப்படுகிறார்களோ, அவர்கள் மேலும் மேலும் பொய்யை விசுவாசித்து ஆக்கினைக்குள்ளாக ஏதுவாக, அவர்களுக்குத்தான் கொடிய வஞ்சகம் அனுப்பப்படும்.
இதற்கு ஓர் உதாரணமாக பழையஏற்பாட்டில் ஒரு சம்பவம் காணப்படுகிறது. 1 ராஜாக்கள் 22:3-38 வசனங்களில் இச்சம்பவம் அடங்கியுள்ளது. தயவுசெய்து இவ்வசனங்களை வேதாகமத்தில் எடுத்து கண்டிப்பாகப் படிக்கவும்.
ஆகாப் என்பவன் இஸ்ரவேலின் ராஜா. அவன், தன் மனைவியாகிய யேசபேல் எனும் துன்மார்க்க ஸ்திரீயின் பேச்சைக் கேட்டு தேவனுக்குப் பிரியமற்ற பல செயல்களைச் செய்தவன். அவன்மீது தேவகோபாக்கினை வந்ததால், தேவன் அவனைக் கொன்றுபோட முடிவு செய்தார்.
2 தெசலோனிக்கேயர் 2:11,12-ல் கூறப்பட்டபடியே, சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்பட்ட ஆகாபை, தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பொய்யின் ஆவி எவ்வாறு வஞ்சித்து, அவனுக்கு நியமிக்கப்பட்ட ஆக்கினை நிறைவேற வழிவகுத்தது என்பதைத்தான் இத்திரியில் நாம் தெரிந்துகொண்ட சம்பவத்தில் பார்க்கிறோம்.
இஸ்ரவேலின் ராஜாவாக ஆகாப் இருந்தபோது, யூதாவின் ராஜாவாக யோசபாத் என்பவன் இருந்தான். இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்த ராமோத் என்ற இடம், அந்நாளில் சீரியா ராஜாவின் கைவசம் இருந்தது. எனவே, ராமோத்தின்மீது படையெடுத்து அதை மீண்டும் இஸ்ரவேல் தேசத்தின் வசமாக்கவேண்டுமென ஆகாப் நினைத்தான். தனக்குத் துணையாக வரும்படி யூதா ராஜாவாகிய யோசபாத்தை ஆகாப் கேட்டுக்கொண்டான். யோசபாத்தும் அதற்கு சம்மதித்தான். ஆகிலும் யுத்தத்திற்கு செல்லும்முன் தீர்க்கதரிசிகள் மூலம் கர்த்தருடைய வார்த்தையை விசாரித்தறிய யோசபாத் விரும்பினான்.
இந்நாட்களைப் போலவே அந்நாட்களிலும் பல தீர்க்கதரிசிகள் இருந்தனர். அவர்களில் பலர் பொய் தீர்க்கதரிசிகளாகவும் இருந்தனர். பொதுவாக யுத்தத்துக்குச் செல்வதற்கு முன், அன்றைய ராஜாக்கள் தீர்க்கதரிசிகளிடம் சென்று, யுத்தத்துக்குச் செல்லலாமா கூடாதா என விசாரிப்பார்கள்.
அவ்வாறே யோசபாத்தும் தீர்க்கதரிசிகளிடம் விசாரிக்க விரும்பினான். அவன் விருப்பப்படியே இஸ்ரவேலிலுள்ள 400 தீர்க்கதரிசிகளை ஆகாப் வரச்செய்து, அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் எல்லோரும், “யுத்தத்திற்குச் செல்லலாம், ஆண்டவர் ராமோத்தை ஒப்புக்கொடுப்பார்” எனக் கூறிவிட்டனர். ஆகிலும் அவர்கள் சொல்லில் யோசபாத்துக்கு நம்பிக்கையில்லை. எனவே இன்னும் யாராவது தீர்க்கதரிசிகள் உண்டா எனக் கேட்டான். அதற்கு ஆகாப் பின்வருமாறு கூறினான்.
1 ராஜாக்கள் 22:8 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான்.
ஆகாப் முதலில் விசாரித்த 400 தீர்க்கதரிசிகளும் பொய்த்தீர்க்கதரிசிகள். மிகாயா ஒருவன் மட்டுமே மெய்யான தீர்க்கதரிசி. அதாவது தேவன் சொல்வது நன்மையாக/தீமையாக எதுவாக இருந்தாலும் அதை அப்படியே சொல்பவன். தேவன் சொன்ன பல தீமையான காரியங்களை அவன் ஏற்கனவே ராஜாவிடம் சொல்லியிருக்கக்கூடும். எனவேதான், அவன் தனக்குத் தீமையாகத்தான் சொல்வான் என ஆகாப் திட்டமாகக் கூறினான்.
ஆம், சத்தியத்தைச் சொன்ன மிகாயாவை ஆகாப் பகைத்தான். ஆனால் பொய்யான தீர்க்கதரிசிகளின் பொய்யை ஆவலோடு கேட்டு அதை விசுவாசித்தான். அவன் நீதியில் பிரியப்படாமல் அநீதியில் பிரியப்பட்டான். எனவேதான் அவன் பொய்யை விசுவாசிக்கத்தக்கதான ஒரு வஞ்சகத்தை தேவனே அனுப்பினார்.
அந்த வஞ்சகத்தை தேவன் எவ்வாறு அனுப்பினார் என்பதை, 1 ராஜாக்கள் 22:19-23 வசனங்களில் மிகாயா கூறுகிறார்.
ஆகாபுக்கு பிரியமான தீர்க்கதரிசிகளிடம் பொய்யின் ஆவி ஒன்றை தேவன் அனுப்பினார். அது, யுத்தத்துக்குச் செல்லும்படி தீர்க்கதரிசிகள் மூலம் ஆகாபுக்குப் போதித்தது. ஆகாபும் அதையே விசுவாசித்தான். சத்தியத்தைச் சொன்ன மிகாயாவின் போதனையைக் கேட்காமல், பொய்யான போதனையை ஆகாப் விசுவாசித்தான். விளைவு?
1 ராஜாக்கள் 22:30,34,35 இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான். ... ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான். அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.
தேவனின் தீர்ப்பின்படியே ஆகாப் இறந்துபோனான். இச்சம்பவம் இன்றைய காலகட்டத்தில் நமக்கு முக்கியமான படிப்பினையைத் தருகிறது.
இந்நாட்களில் தேவஊழியர்களில் பலர், ஆகாபின் பொய்த்தீர்க்கதரிசிகளைப் போலவே, மனிதருக்குப் பிரியமான இவ்வுலக நன்மையான காரியங்களையே சொல்லிவருகின்றனர். இவ்வருட வாக்குத்தத்தம், இம்மாத வாக்குத்தத்தம், திருமண நாள் வாக்குத்தத்தம், பிறந்த நாள் வாக்குத்தத்தம் என்ற பெயரில் பல உலக நன்மைகளைச் சொல்லிக் கொண்டும், தேவசெய்தி என்ற பெயரில், இஸ்ரவேலருக்கு அந்நாட்களில் வாக்களிக்கப்பட்ட உலக ஆசீர்வாதங்களை எப்போது பார்த்தாலும் அள்ளி வழங்கிக்கொண்டும் இருக்கின்றனர்.
இவற்றைக் கேட்கிற ஜனங்கள், சத்தியமாகிய தேவவசனம் என்ன சொல்கிறது, தேவநீதி என்ன சொல்கிறது என்பதை சற்றும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவ்வுலகில் உணவு உடைக்காகக் கூட கவலை வேண்டாம் என்றும் தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள் என்றும் ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ என்றும் இவ்வுலகில் உங்களுக்குக் உபத்திரவங்கள் உண்டு என்றும் இயேசு சொன்னாரே! பூமியில் பொக்கிஷம் சேர்க்கவேண்டாம், இருக்கிற பொக்கிஷத்தைக்கூட விற்று பிச்சையிடுங்கள் என்று சொன்னாரே என சிந்தித்துப் பார்ப்பதில்லை.
அன்றைய அப்போஸ்தலர்களும், உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமென்றிருக்கக்கடவோம், பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் என்றெல்லாம் சொன்னார்களே என சிந்திப்பதில்லை. மாறாக, உனக்குப் பதவி உயர்வு கிடைக்கும், அயல்நாட்டில் வேலை கிடைக்கும், வீடு கட்டுவாய், கார் வாங்குவாய் என ஆவியானவர் என்னிடம் சொன்னார் என யாராவது ஊழியர் சொன்னால் அதை ஆவலோடே கேட்பார்கள்.
ஆகாபுக்கு தீர்க்கதரிசிகள் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, தேவனே பொய்யின் ஆவியை ஊழியர்களிடம் அனுப்பி, அவர்களை இவ்விதமாக சொல்ல வைப்பார் என அறிகிறோம்.
இதற்குக் காரணம், வேதவசனமாகிய சத்தியத்தை ஜனங்கள் விசுவாசியாமற்போவதே. இக்கருத்தை 2 தெச. 2:11,12 வசனங்களில் பவுல் உறுதிப்படுத்துகிறார்.
நாம் பொய்யானவற்றை நாடினால், அவற்றை இன்னும் அதிகமாக விசுவாசிக்கத்தக்கதாக, தேவன் அனுப்பும் கொடிய வஞ்சகத்தை ஏந்திக்கொண்டு பல ஊழியர்கள் நம்மிடம் வந்து பல பொய்களைச் சொல்லத்தான் செய்வார்கள். இவ்விஷயத்தில் நாம்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்நாட்களில் பலர், வெளிப்பாடு என்ற பெயரிலும் வேதவசனத்துக்கு ஒவ்வாத பல கருத்துக்களை ஜனங்களிடம் கூறுகின்றனர். நான் நரகத்தைப் பார்த்தேன், பரலோகத்தைப் பார்த்தேன், நரகத்தில் பலர் இரவும் பகலுமாக வாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன் என்றெல்லாம் சொல்லி, வேதவசனம் கூறாத பல விஷயங்களைச் சொல்லி வருகின்றனர்.
இப்படி அவர்கள் சொல்வதை நாம் நம்பலாமா? நிச்சயமாக கூடாது என்பதுதான் 1 ராஜாக்கள் 22:3-38 வசனங்களில் காணப்படுகிற சம்பவம் கூறுகிற படிப்பினை.
ஆகாப் ராஜா மெய்யான தீர்க்கதரிசியை, அதாவது சத்தியத்தைப் பகைத்தான்; தனக்கு நன்மையானதைச் சொல்கிற தீர்க்கதரிசிகளை மட்டும் நம்பினான். எனவேதான் அவன் நம்பின தீர்க்கதரிசிகளிடம் தேவன் பொய்யின் ஆவியை அனுப்பி, பொய்யான தீர்க்கதரிசனத்தை ஆகாப் நம்பும்படி செய்தார்.
ஆகாபைப் போலவே நாமும் “பாவத்தின் சம்பளம் மரணம், பாவம் செய்கிற ஆத்துமா சாகும்” என வேதாகமம் தெளிவாகக் கூறியுள்ள சத்தியமான நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க மறுக்கிறோம். மாறாக, நமக்கு சாதகமானதாகத் தோன்றுகிற ஒரு பொய்யான நியாயத்தீர்ப்பை நம்புகிறோம். அதாவது, இயேசுவை விசுவாசிக்கிற நாம் அனைவரும் பரலோகம் சென்றுவிடுவோம் என்கிறதும் இயேசுவை விசுவாசியாத அனைவரும் நரகஅக்கினியில் இரவுபகலாக நித்திய காலமாக உயிரோடு வாதிக்கப்படுவார்கள் என்கிறதுமான பொய்யான நியாயத்தீர்ப்பை நம்புகிறோம்.
எது உண்மை எது பொய் என்பதை ஆராயாமல், நமக்கு நன்மையாகத் தோன்றுவதை ஏற்றுக்கொண்டு, வேதவசனம் கூறுகிற சத்தியத்தைப் புறக்கணிப்பதால், நாம் நம்புகிற பொய்யை இன்னும் அதிகமாக விசுவாசிக்கத்தக்கதாக பொய்யின் ஆவி மூலம் கொடிய வஞ்சகத்தை தேவன் அனுப்புகிறார். அந்தப் பொய்யின் ஆவி, நம் மத்தியிலுள்ள பலரிடம் வெளிப்பாடு என்ற பெயரில் நமக்கு நன்மையாகத் தோன்றுகிற பொய்யான நியாயத்தீர்ப்பைச் சொல்லி வஞ்சிக்கிறது. இதையறியாமல், வெளிப்பாடு என்ற பெயரில் அவர்கள் சொல்வதை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில், இயேசுவை விசுவாசிக்கிற நமக்குப் பரலோகம் என்ற தீர்ப்பு நமக்கு மகிழ்வானதுதானே?
இவ்வாறு பொய்யை விசுவாசிக்கிற நாம், நமக்குப் பரலோகம் உறுதி என்ற நம்பிக்கையில் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதைப் பற்றி சிரத்தை கொள்ளாதிருக்கிறோம். ஆனால் வசனம் என்ன சொல்கிறது?
கற்பனைகளின்படி நடவாத நாம், பாவத்தின் சம்பளம் மரணம் என்ற வசனத்தின்படி நித்திய மரணத்தைத்தான் சந்திக்க வேண்டியதிருக்கும்.
எனவே நமக்கு நன்மையாய் தோன்றுகிற நியாயத்தீர்ப்பில் நம்பிக்கை வையாமல், வேதவசனமாகிய சத்தியத்தின் நியாயத்தீர்ப்பை மட்டும் நம்புவோம்; சத்தியம் கூறுகிற போதனைகளின்படி நடப்போம். அப்போது, வெளிப்படுத்துதல் 22:14 கூறுகிறதான பாக்கியத்தை நாம் பெறுவோம்.
-- Edited by anbu57 on Friday 19th of February 2010 02:11:36 PM