கலாத்தியர் 1:10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
இந்நாட்களில் அநேகம்பேர் “நான் கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறேன்” எனக் கூறுவதை நாம் பார்க்கிறோம். கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்வது நல்லதுதான், அவசியமும்தான்; ஆனால் நாம் மெய்யாகவே கிறிஸ்துவுக்குத்தான் ஊழியஞ்செய்கிறோமா என்பதுதான் கேள்வி.
கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்னசெய்ய வேண்டும்?
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், ....
ஆம், கிறிஸ்துவின் மெய்யான ஊழியக்காரன் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும். கிறிஸ்துவானவர் இப்பூமியில் வாழ்ந்த நாட்கள் முழுவதும் பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றினார் (யோவான் 4:34). எனவே கிறிஸ்துவின் ஊழியர்களும் பிதாவின் சித்தத்தையே நிறைவேற்ற வேண்டும். அதுதான் கிறிஸ்துவுக்குப் பிரியமானது.
கிறிஸ்துவுக்குப் பிரியமானவை எவை? பிதாவின் சித்தம் எது? தொடரும் பதிவுகளில் பார்ப்போம்.
யோவான் 14-ம் அதிகாரத்தில் பின்வரும் 4 வசனங்களை இயேசு கூறினார்.
15-ம் வசனம்: நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
21-ம் வசனம்: என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
23,24-ம் வசனங்கள்: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
இவ்வசனங்களில் இயேசு சொல்வதிலிருந்து, இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்வதுதான் அவருக்குப் பிரியமானவை என அறிகிறோம். இயேசுவின் கற்பனைகள் யாவும் பிதாவினுடையவைகளாக இருப்பதால், இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்வதுதான் பிதாவின் சித்தம் என அறிகிறோம்.
இதையறியாமல் இன்றைய விசுவாசிகளும் சபைத்தலைவர்களும், இயேசுவே இயேசுவே எனக் கூறிக்கொண்டும் இயேசுவை பிதாவுக்குச் சமமான தேவன் என நிரூபிக்க தீவிரப்பட்டுக்கொண்டும், பிதாவும் இயேசுவும் ஒருவரே என நிரூபிக்க முற்பட்டுக் கொண்டும், இயேசுவை ஆராதிப்பதுதான் இயேசுவுக்குப் பிரியம் எனக் கருதி இயேசுவை ஆராதனை செய்ய தீவிரப்பட்டுக்கொண்டும், இப்படியாக இயேசு சொல்லாதவற்றையெல்லாம் செய்துகொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் இயேசு சொன்ன மிகஎளிமையான கற்பனையைக்கூட கைக்கொள்ள முன்வருவதில்லை.
உதாரணமாக: தாம் ஒருவரே போதகராகவும் குருவாகவும் இருப்பதாகச் சொல்லி தம்மைத் தவிர வேறு எவரையும் போதகரென்றோ குருவென்றோ சொல்லவும் வேண்டாம் அவ்வாறு அழைக்கப்படவும் வேண்டாம் என மத்தேயு 23:8-10 வசனங்களில் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனாலும் இன்று அனேகர் துணிகரமாக தங்களைத் தாங்களே போதகரென்றும் (பாஸ்டர்) குருவென்றும் சொல்லிக் கொள்கின்றனர்.
இந்நாட்களில் அனேகர் தங்களைப் பாஸ்டர் எனச் சொல்வதிலும் அவ்வாறு அழைக்கப்படுவதிலும் மிகவும் பிரியப்படுகின்றனர். தற்போதைய பாஸ்டர்களின் எண்ணிக்கை வளரும் வேகத்தைப் பார்த்தால், விரைவில் விசுவாசிகளின் எண்ணிக்கையைவிட பாஸ்டர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்போல் தெரிகிறது. அந்த அளவுக்குப் பாஸ்டர் மோகம் பெருகிவருகிறது.
இயேசு சொன்னதைச் செய்யாதிருப்பது, சொல்லாததைச் செய்வது எனும் போங்கு இன்று அதிகமாகக் காணப்படுகிறது.
உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய் எனும் வசனத்தை இயேசு தெளிவாகச் சொல்லியிருந்துங்கூட, தேவனை ஆராதிப்பதைவிட இயேசுவை ஆராதிக்கும் போங்குதான் இந்நாட்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
இத்தவறை எடுத்துச் சொன்னால், அப்படிச் சொல்வோரெல்லாம் இயேசுவின் விரோதி என முத்திரை குத்தி அவர்களை ஜென்மப்பகைவர்களாகக் கருதுகிற போங்கும் காணப்படுகிறது.
இப்படியான காலகட்டத்தில், நாம் எவற்றைச் செய்யவேண்டும் என இயேசு அதிகமாகப் பிரியப்படுகிறார், எவை பிதாவின் சித்தம் என்பதை இப்பதிவின் தொடக்க வசனங்கள் மூலம் அறிந்து, அவற்றின்படி நடப்போமாக.
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.- இயேசு