சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்புண்டாக வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டுள்ள போதிலும், அந்த உரிமையை தான் அனுபவிக்கவில்லை என 1 கொரிந்தியர் 9:14,15 வசனங்களில் பவுல் கூறுகிறார்.
ஆனால் இந்நாட்களில் பலர் ஊழியத்துக்கு வருவதன் நோக்கமே, தங்கள் வயிற்றுப்பாட்டை பார்ப்பதற்காகத்தான். தங்கள் பிழைப்புக்காக பல வேலைகளைத் தேடி அலைந்துவிட்டு, ஒன்றும் கிடைக்காதபோது, ஊழியத்தின் மூலமாக பிழைப்பை நடத்தலாம் என எண்ணி ஊழியத்துக்கு வருபவர்கள் அநேகர்.
இது மாத்திரமல்ல. தங்கள் பிழைப்புக்காக நல்ல வேலையில் இருக்கிறபோதிலும், அதில் சம்பாதிப்பதைவிட ஊழியத்தில் அதிகமாய் சம்பாதிக்க முடியும் என கணக்குப்பார்த்து ஊழியத்துக்கு வருபவர்கள் இன்னும் அநேகராய் இருக்கின்றனர்.
ஊழியம் செய்துகொண்டு, தன் சாப்பாட்டிற்காக இரவும் பகலும் வருத்தத்துடன் பிரயாசப்பட்டு வேலையும்செய்துவந்த அப்போஸ்தன் பவுல் எங்கே? ஊழியத்தை பிழைப்பாக்கியதோடு, அதன் மூலம் ஏராளமாய் சம்பாதித்து சுகபோகமான வாழ்வையும் வாழ்ந்துகொண்டு, தங்களை அப்போஸ்தலர் என அழைத்துக்கொள்கிற இன்றைய ஊழியர்கள் எங்கே?
பவுல் அப்போஸ்தலனுடன் சற்றும் ஒப்பிடமுடியாத வாழ்வு வாழ்ந்துவரும் இவர்கள், சற்றும் நாகூசாமல் தங்களை அப்போஸ்தலர் என அழைத்துக் கொள்கின்றனர்.
தங்கள் வயிற்றுக்காக ஊழியஞ்செய்பவர்களையே ரோமர் 16:18-ல் பவுல் கண்டித்திருக்கையில், தங்கள் சுகபோக வாழ்வுக்காக ஊழியஞ்செய்பவர்களை அவர் எவ்வளவாய் கண்டிப்பார்?
ஆனால் இதையெல்லாம் இன்றைய விசுவாசிகள் சற்றும் சிந்தியாமல், அப்படிப்பட்ட ஊழியர்களைத்தான் அதிகமாக ஆதரிக்கின்றனர். காரணமென்ன?
ரோமர் 16:18-ல் பவுல் கூறியபடி, அவ்வூழியர்கள் நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும் விசுவாசிகளின் மனதை மயக்கிவிடுவதால், விசுவாசிகள் அதில் மயங்கி ஏமாந்துபோய்விடுகின்றனர்.
விசுவாசிகளை ஏமாற்றி வஞ்சிக்கிற அவ்வூழியர்களை பொய்யான ஊழியர்கள் என்றுதானே சொல்லமுடியும்?
அந்தப் பொய்யான ஊழியர்களை நாம் அடையாளங்கண்டுகொண்டு அவர்களைவிட்டு விலகுவோமாக.