1. வேதவாக்கியங்களை ஆராய்ந்தறிந்து அதன்மூலம் நித்தியஜீவனை நாம் பெறவேண்டும்.
2. நாம் நித்தியஜீவனைப் பெறுவதற்கு மூலகாரணரான இயேசுவைக் குறித்த சாட்சிகளை நாம் அறியவேண்டும்.
இவ்விரு முக்கிய காரியங்கள் இல்லாத வேதவாக்கிய ஆராய்ச்சி, வெறுமனே தகவல்களைத் தருவதாகத்தான் இருக்குமேயொழிய, நம் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வுக்கு அதிக நன்மை தருவதாக இருக்காது.
இயேசு ஓய்வுநாளில் அற்புதம் செய்யக்காரணமென்ன எனும் கேள்விக்கான பதிலும், ஒருசில தகவல்களை நமக்குத் தருவதாகத்தான் இருக்குமேயொழிய நம் ஆவிக்குரிய வாழ்வுக்கு அதிக நன்மை தருவதாக இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து.
ஆயினும் இக்கேள்வியை ஒருசில சகோதரர்கள் எழுப்பி, அதற்கான பதிலையும் தந்துள்ளதால், அவர்கள் தந்துள்ள பதில் சரியானதுதானா என்பதை இத்திரியில் விவாதிக்க நான் ஆசிக்கிறேன்.
முதலாவதாக, பின்வரும் தளத்தில் கூறப்பட்டுள்ள பதிலைப் பற்றிய எனது கருத்தைத் தருகிறேன்.
http://lord.activeboard.com பாவமில்லாத இயேசு, பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை ருசிபார்க்க வேண்டுமெனில், அவர் ஏதேனும் ஒரு விஷயத்தில் கற்பனையை மீறவேண்டுமென்றும், அதினால்தான் அவர் ஓய்வுநாள் கற்பனையை வேண்டுமென்றே மீறினார் என்றும் அத்தளத்தின் ஒரு திரியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அத்தளத்தில் அத்திரியைக் காணவில்லை. அத்திரியில் கூறப்பட்டிருந்த கருத்துக்கு தக்கதொரு பதிலை சகோ.சந்தோஷ் பின்வரும் தொடுப்பில் கூறியுள்ளார்.
இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினார் என்று சிலர் சொல்லுகின்றனர். அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஓய்வு நாள் :
லேவி 23.3. ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
லேவி 19.30 30. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
ஏசாயா 58.13. என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், 14. அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்
எசேக்கியேல் 20.12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
கர்த்தர் தாம் படைத்த மக்கள் தம்மில் அன்புகூரவும், தம்முடைய பிரசன்னத்தின் மூலம் தம் மக்களை சந்திக்கவும், தம்முடைய அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தவும் ஓய்வுநாளை தெரிந்துகொண்டார். இந்த நாள் கர்த்தரும் மக்களும் கூடிவரும் நாள். பிரிந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சந்திப்பதைப் போல கர்த்தரும் மக்களும் சந்திக்கும் நாள். இது மனமகிழ்ச்சியின் நாள். மனிதன் தன் வாழ்வுக்கு தேவையான செயல்களில் கவனம் செலுத்தி, அவன் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளால் தேவ பிரசன்னத்துக்கு தூரமாவதால் (ஆறு நாட்களாக) அவரை மறுபடியும் சந்தித்து, அடுத்த ஆறு நாட்கள் உலகை சந்திப்பதற்கு தேவையான கடவுள் அளிக்கும் பலனைப் பெறுவதும் இந்த நாளில்தான்.
இப்படிப்பட்ட ஒரு நாளில்தான்
எண்ணாகமம் 15.32. இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். 36. அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
ஒரு ஓய்வுநாளில் விறகு பொறுக்கின ஒரு மனிதன் கண்டுபிடிக்கப்பட்டு தேவ உத்தரவுப்படி தண்டனை அடைந்தான். இந்த மனிதன் ஓய்வுநாளில் விறகு பொறுக்க காரணம் என்னவெனில் அந்த நாளில் மற்ற யாரும் விறகு பொறுக்க வர மாட்டார்கள் என்பதால் நிறைய விறகை எந்த போட்டியும் இன்றி சேகரிக்க முடியும் என்ற சுயநலமான எண்ணத்தினால்தான்.
(அல்லது மற்ற 6 நாட்களில் அலட்சியமாக இருந்திருப்பான் - By anbu57)
நெகேமியாவின காலத்தில் மக்கள் சுயநலத்துடன் செய்த காரியம்
நெகேமியா 13.15. அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
சொந்த வாழ்க்கையும், ஓய்வு நாளூம் :
பள்ளியில் டீச்சர்: எல்லா பள்ளி நாட்களிலும் நீங்கள் பள்ளிக்கு வர வேண்டும்.
ஆபிசில் மேனஜர்: எல்லா வேலை நாட்களிலும் நீங்கள் வேலைக்கு வர வேண்டும்
இவர்கள் இப்படி சொன்னாலும் உடல் நிலை சரியில்லாவிட்டால் அல்லது வேறு பிரச்சனைகள் இருந்தால் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்பது இவர்களுக்கு தெரியும் என்பது நமக்குத் தெரியும்
சொந்த வாழ்க்கையில் இப்படி சொல்லாமல் விடப்படும் மறைமுகமான அர்த்தங்களை புரிந்து கொள்ளும் நாம், வேத புத்தகத்தில் இது போன்ற கருத்துகள் வரும்போது புரிந்து கொள்ள முடியாதது ஏன் என்று புரியவில்லை. இப்போது
லேவி 23.3. ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
உடல் நிலை சரியில்லாவிடில் ஆறு நாளும் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும் என்பதை நாம் பின்பற்ற முடியாது என்பதை நாமும் அறிவோம், கர்த்தரும் அறிவார்.
ஓய்வு நாளில் உடல் நிலை சரியில்லாவிடினும் மருத்துவமனைக்கு போகக்கூடாது என்று நாமும் சொல்ல மாட்டோம், கர்த்தரும் சொல்ல மாட்டார்.
ஓய்வுநாளும், இயேசுவும் :
மத்தேயு 12.1. அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். 2. பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ ஓய்வு நாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். 3. அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 4. அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே. 5. அன்றியும், ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா? 6. தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 7. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். 8. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
ஓய்வுநாளில் சுயநலமான காரியங்கள் செய்யக்கூடாது என்றுதான் சொன்னாரே தவிர குளிக்கக்கூடாது, சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை ஏனெனில் இவைகள் அனைத்தும் வேலையில் சேராது. இவைகள் உடலின் இன்றியமையாத தேவைகள். இதை ஒரு கேள்வியாக கேட்டு அவரிடம் குற்றம் காண முயற்சிக்கிறார்கள்.
9. அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார். 10. அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா? என்று கேட்டார்கள். 11. அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? 12. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால் ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னார். 13. பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சொஸ்தமாயிற்று.
இயேசு செய்தது தவறில்லை என்று பரிசேயர்களுக்கும் தெரியும். அவர்களுக்கு அது தெரியும் என்பது இயேசுவுக்கும் தெரியும். ஏனெனில் தங்கள் உடல்நிலை சரியில்லாத ஓய்வுநாளின் போது அந்த நாட்களில் இருந்த மருத்துவர்களிடம் எல்லாருமே சென்றிருப்பார்கள்.
நாம் இன்றும் காண்பது போலவே எந்த கால கட்டத்திலும் அவசர கால பணிக்கு என்று தனி விதிமுறைகள் உண்டு. ஆம்புலன்சுக்கு வழி விடுவதும், ஸ்டிரைக் நடக்கும் போது அவசர கால பணிக்கு விலக்கு அளிப்பதும் இப்படி பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம். இவைகள் சாதாரணமாக வேலை என்று சொல்லப்படும் பிரிவில் வராது.
மனிதனுக்கே தெரிந்த இந்த நியாயத்தை அறியாதவர் அல்ல கடவுள். சாதாரண மனிதனுக்கே புரியும் இது போன்ற சிறு விஷயங்கள் ஒவ்வொன்றும் வேதத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். தன் தாயோ அல்லது தந்தையோ ஓய்வு நாளில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது எப்படி ஒருவனால் ஓய்வு நாளை அனுசரிக்க முடியும்? அவர்களை முதலில் மருத்துவமனையில் சேர்ப்பது அல்லவா அவனது முதல் பணியாக இருக்க முடியும்? நல்லவரான கடவுள் இப்படிப்பட்ட செயலை செய்த மனிதன் மேல் குற்றம் சாட்டுவாரா? அல்லது பாராட்டுவாரா?
இப்படி வேண்டுமென்றே குற்றம் சாட்டுபவர்களை எப்போதுமே இயேசு அவருக்கே உரித்தான பாணியில் வாயை அடைப்பது வழக்கம். இங்கேயும் அவர்
11. அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? 12. ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால் ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னார்.
பரிசேயர்கள் தேவனுடைய கட்டளையை காரணம் காட்டி அது நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு இயேசுவோ
யாத் 23.5. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.
என தேவனுடைய இன்னொறு கட்டளையை காட்டி, உதவி செய்யாதிருந்தால் இந்த கட்டளை மீறப்படுமே என அவர்களுக்கு உணர்த்தி அவர்கள் வாயை அடைக்கிறார்.
ஆகவே இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறவில்லை. அவர் மீறவில்லை என்பதை பரிசேயர்களும் அறிவர்.
யோவான் 5.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
மேற்கண்ட வசனத்தில் இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினார் என்று சொல்லப்பட்டுள்ளதே. வேதம் பொய் சொல்லாதே அப்படியானால் அவர் மீறித்தானே இருக்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.
இதற்கு இந்த வசனம் யாருடைய பார்வையில் சொல்லப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இது அவரை குற்றம் சாட்ட முயன்றவர்கள் பார்வையில் சொல்லப்பட்டது என்பது தெரிய வரும். இன்னும் சரியாக சொல்ல போனால் அவர்களது பார்வையில் என்பதை விட இயேசுவை அவர்கள் இப்படியே பார்க்க விரும்பினார்கள். // சகோ.சந்தோஷின் இப்பதில் மிகவும் சரியானதே.
இயேசு ஓய்வுநாள் கட்டளையை மீறினார் எனும் வேதபாரகர்/பரிசேயரின் கூற்றை, வேதாகமத்தின் கூற்றாக எடுப்பது அறியாமையாகும்.
இயேசு ஓய்வுநாள் கட்டளையை மட்டுமின்றி, தேவனின் எந்தவொரு கட்டளையையும் மீறவில்லை என்பதே உண்மை.
நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கத்தரிசனங்களையும் நிறைவேற்ற வந்தவரான (மத்தேயு 5:17) அவரது கீழ்படிதலைக் குறித்து பின்வரும் வசனத்தில் பவுல் அழகாகக் கூறியுள்ளார்.
பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த இயேசு, மோசே மூலம் தேவனால் கொடுக்கப்பட்ட ஓய்வுநாள் கற்பனையை மீறியதாகக் கூறுவது இயேசுவின் கீழ்ப்படிதலைக் கொச்சைப்படுத்துவதாகும்.
ஓய்வுநாளில் வியாதியை சுகமாக்குவதென்பது, நியாயப்பிரமாணத்தை மீறுவதாகாது என்பதை பின்வரும் வசனத்தில் இயேசு மிகத்தெளிவாகக் கூறியுள்ளார்.
யோவான் 7:22,23 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து பாவமில்லாதவராக வாழ்ந்த இயேசு, பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை ருசிபார்க்கக் காரணமென்ன? அடுத்த பதிவில் இக்கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
-- Edited by anbu57 on Sunday 23rd of May 2010 04:41:30 AM
பாவமில்லாதவராகிய இயேசு, நமது பாவங்களை தம்மீது தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டார்.
1 யோவான் 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.
ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்;
1 பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
ஆம், பாவமில்லாத இயேசு, தமது சரீரத்திலே நமது பாவங்களை தாமாக முன்வந்து சுமந்தார். எனவே பாவமில்லாத அவரது சரீரம் பாவமுள்ளதாகியது. பாவத்தின் சம்பளம் மரணம் என்ற தேவநியமனத்தின்படி, இயேசுவும் மரணமடைய நேரிட்டது.
உண்மையில், இயேசு தாமாக முன்வந்துதான் தமது ஜீவனை விட்டார்.
லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
இவ்விதமாக இயேசு தாமாகவே தமது ஜீவனை விட்டதால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. மற்றபடி, பாவமில்லாதவராகிய அவரது ஜீவனை எடுப்பதற்கு பிதாவாகிய தேவன் கூட உரிமையில்லாதவராகத்தான் இருந்தார்.
பாவமில்லாத இயேசு, இவ்வுலகத்தின் பாவத்தை தம்மீது ஏற்றுக்கொள்ளவில்லையெனில், அவரால் கூட அவரது ஜீவனை விட்டிருக்க இயலாது.
எனவே இயேசுவின் மரணத்தின் பின்னே 2 காரியங்கள் உள்ளன.
1. பாவமில்லாத அவர், தாமாக முன்வந்து உலகத்தின் பாவத்தை தம்மீது ஏற்றுக்கொண்டு, தம்மை பாவமாக்கினார்.
2. பிதாவாகிய தேவனால் கூட எடுக்க முடியாத அவரது ஜீவனை, தாமாக முன்வந்து பிதாவிடம் ஒப்புக்கொடுத்து, தாமாக தமது ஜீவனை விட்டார்.