1. "மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்ற இந்த வசனங்கள் நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நிறைவேறும்?
பதில்:
வேதவசனங்கள் நிறைவேறுமா என்ற கேள்வி தேவையற்றது. எல்லா வேதவசனங்களும் நிச்சயமாக நிறைவேறும்.
ஏசாயா 45:23; ரோமர் 14:11; பிலிப்பியர் 2:10 மற்றும் ஆபகூக் 2:14 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ள சில வரிகள் இணைக்கப்பட்டு, மேற்கூறிய கேள்வியில் கூறப்பட்டுள்ளன.
கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி மற்றும் கிறிஸ்துவின் வெள்ளை சிங்காசன இறுதி நியாயத்தீர்ப்பின்போது (வெளி. 20:4,11,12) அவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளவை நிறைவேறும்.
“ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” என யோவான் 6:63-ல் இயேசு கூறுகிறார். அதன்படி, இயேசுவின் வசனங்களே ஆவியாக “மாம்சமான யாவருடைய இருதயங்களிலும் ஊற்றப்படும்”. அவை எப்போது ஊற்றப்படும் என்பது எபிரெயர் 8:10-12 மற்றும் 10:12-17 வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் எனும் காரியம் ஒரே நாளில் நடந்துமுடிகிற காரியம் அல்ல. இயேசுவின் முதலாம் வருகையின் நாட்களிலிருந்து யாவர் மீதும் அவரது வசனமாகிய ஆவி ஊற்றப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் சத்துருவாகிய பிசாசு தற்போது கிரியை செய்துவருவதால், இயேசுவின் வசனங்களை பலர் ஏற்காமல் இருக்கின்றனர். பிசாசின் கிரியைகள் கொஞ்சங்கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் பிசாசானவன் கட்டப்பட்டவனாக இருப்பான். எனவே அந்த 1000 வருடங்களில், ஏராளமான பேர் கிறிஸ்துவின் வசனங்களை ஏற்றுக்கொள்வார்கள். அந்நாட்களில் பூமியானது கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். (அதாவது, பூமியில் குடியிருப்பவர்கள் கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருப்பார்கள்). ஆயினும் துன்மார்க்கராகிய சிலர், கர்த்தரை நன்றாக அறிந்தபின்னர்கூட, அவருக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள் (ஏசாயா 26:10).
இவ்வாறு கீழ்ப்படிய மறுத்தவர்கள் உட்பட அனைவரும், கிறிஸ்துவின் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின்போது, அவருக்கு முன்பாக முடங்க வேண்டியதாக இருக்கும். மேலும், பின்வரும் வசனங்களில் பவுல் கூறுகிறபடியும் நடக்கும்.
ரோமர் 14:11,12 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
ஆம், எல்லோரும் கிறிஸ்துவுக்கு முன்பாக தங்கள் முழங்கால்களை முடக்கி, தங்கள் கிரியைகளைக் குறித்து அவரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதாக இருக்கும்.
-- Edited by anbu57 on Sunday 23rd of May 2010 04:07:37 AM
கோவைபெரியன்ஸ் தளத்தின் அறிந்ததும் அறியாததும் எனும் திரியில் கேட்கப்பட்டுள்ள மேலும் சில கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும்.
2." தாவீது பரத்துக்கு ஏறிப்போகவில்லையே" (அப்2:34) என்றால் தாவீது இப்போது எங்கே?
பதில்:
தாவீது இப்போது உயிரற்ற நிலையில் இருக்கிறார்.
3. இதுவரை (கிறிஸ்துவுக்கு வெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படும்போது நியாயத்தீர்ப்பு எதற்கு? வேறு பெரிய நரகத்தில் போடப்படவா?, அல்லது தற்போது சரீரம் இல்லாமல் வேதனை அனுபவிக்கும் அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு பின்னர் சரீரத்துடன் நரகத்தில் தள்ளப்படுவார்களா?
பதில்:
இதுவரை (கிறிஸ்துவுக்கு வெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படுகிறார்கள் எனும் கூற்று தவறானது. மரித்த அனைவரும், எந்த உணர்வும் அறிவுமின்றி நித்திரையிலுள்ளவர்களைப் போல் இருக்கின்றனர் என்பதே உண்மை. பின்வரும் வசனங்கள் இதற்கு ஆதாரமாயுள்ளன.
பிரசங்கி 9:5,10 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
///இதுவரை (கிறிஸ்துவுக்கு வெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படுகிறார்கள் எனும் கூற்று தவறானது. மரித்த அனைவரும், எந்த உணர்வும் அறிவுமின்றி நித்திரையிலுள்ளவர்களைப் போல் இருக்கின்றனர் என்பதே உண்மை. பின்வரும் வசனங்கள் இதற்கு ஆதாரமாயுள்ளன.
பிரசங்கி 9:5,10 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.///
இந்த வசனத்தை கொஞ்சம் நன்றாக ஆராய்ந்து பாருங்கள்
1. மரித்தவன் ஒன்றும் அறியான்
2. இனி அவனுக்கு ஒரு பயனும் இல்லை
3. அவன் பெர்யர் மறைக்கப்பட்டிருக்கிறது
3. போகிற பாதாளத்தில் நடக்கும் செய்கையை அறியும் ஞானம் இல்லை.
இதில் முதல் வரியை உங்கள் கருத்துக்கு அடிப்படையாக எடுத்து கொண்டால் இரண்டாம் வரி பொய்யாகிவிடும். "மரித்தவனுக்கு இனி ஒரு பயனும் இல்லையா?" அவன் மீண்டும் எழுந்திருப்பான் என்று தானியேல் வசனத்தை சுட்டியுள்ளீர்கள் அவ்வாறிருக்கும்போது இனி ஒரு பயனும் இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்?
உண்மையில் சாலமன் ஞானி மரித்தவனைபற்றிய இந்த இவ் உலகநிலையே இவ்வசனத்தில் எடுத்து கூறியிருக்கிறார். அவ்வாறு பார்த்தால் இவ்வசனம் சரியாக பொருந்தும்.
ஒருவன் மரித்தபின் இவ்வுலகில் நடப்பதை ஒன்றும் அறியான். அவனுக்கு இவ்வுலகில் எந்த பயனும் இல்லை, அவன் பெயர் இவ்வுலகில் விரைவில் மறைக்கப்படுகிறது, அவன் மரித்தபின் போகும் பாதாளத்தில் என்ன நடக்கும் என்பதை அறியும் ஞானம் அவனுக்கு இல்லை
மரித்தவர்கள் யாரும் தேவனை நினைவு கூறுவது இல்லை, பாதாளத்தில் வேதனை அனுபவிக்கும் யாரும் தேவனை துதிக்க மாட்டார்கள் அதையே இவ்வசனம் சொல்கிறது
தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
பூமியின் தூளில் நித்திரை பண்ணும் அநேகரில் (இது மேல் பாதாளத்தில் இருக்கும் நித்திரை நிலையை குறிக்கும்) இதில் சிலர் நித்திய ஜீவனுக்கு சிலர் நித்திய நிந்திக்கும் எழுவார்கள். மற்றவர்கள் இறுதி நியாயதீர்ப்புவரை அங்கேயே இருப்பார்கள்.
வேதவசனங்களின் பல மொழிபெயர்ப்புகளையும் ஆராய்ந்து பார்த்தால்தான் அவற்றின் சரியான கருத்தை அறியஇயலும். பிரசங்கி 9:5,6,10 வசனங்கள், NIV ஆங்கில மொழிபெயர்ப்பில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
For the living know that they will die, but the dead know nothing; they have no further reward, and even the memory of them is forgotten.
Their love, their hate and their jealousy have long since vanished; never again will they have a part in anything that happens under the sun.
Whatever your hand finds to do, do it with all your might, for in the grave, where you are going, there is neither working nor planning nor knowledge nor wisdom.
மனிதர்கள் மரித்தபின் அவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதைத்தான் இவ்வசனங்கள் கூறுகின்றன.
the dead know nothing
மரித்தவர்கள் எதையும் அறிய மாட்டார்கள் என இவ்வசனத்தில் கூறும் சாலொமோன், எதையெல்லாம் அவர்கள் அறியமாட்டார்கள் என்பதற்கான சில உதாரணங்களை தொடர்ந்து வரும் வசனங்களில் கூறுகிறார்.
they have no further reward
ஒருவன் மரித்த பிறகுகூட, அவனுக்கு இவ்வுலகில் சில rewards கொடுக்கப்படுவதை நாம் அறிவோம். ஒருவன் மரித்தபின்னர்கூட அவனுக்குப் பணம் கொடுக்கப்படுவதையும் நாம் அறிவோம். ஆனால் அவனுக்குக் கொடுக்கப்படும் reward, பணம் எதினாலும் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதையே பிரசங்கி கூறுகிறார். ஏனெனில் அவனுக்குக் கொடுக்கப்படும் reward பற்றி அவன் அறியும் நிலையிலும் இருக்கமாட்டான, அவனுக்குக் கொடுக்கப்படும் பணத்தை அவன் அனுபவிக்கும் நிலையிலும் இருக்கமாட்டான். அவனுக்குக் கொடுக்கப்படும் reward-ஆல் அவனது சந்ததிக்குத்தான் பெருமை கிடைக்கும், அவனுக்குக் கொடுக்கப்படும் பணத்தையும் அவன் சந்ததியார்தான் அனுபவிப்பார்கள்.
even the memory of them is forgotten.
தமிழ் வேதாகமத்தில்: மரித்தவர்களின் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இது ஒரு சரியான கூற்றுதானா?
முதல் மனிதனாகிய ஆதாம் உட்பட பல மனிதர்களின் பேர் இன்று வரை மறக்கப்படாமல் இருக்கிறது. மரித்தவர்களின் பெயரை அரசியலில் பலரும் பயன்படுத்தி கட்சி நடத்தி வருவதை நாம் அறிவோம். எனவே மரித்தவர்களின் பேர் இவ்வுலகில் மறக்கப்பட்டிருக்கிறது என்பது சரியான கூற்று அல்ல.
மேற்கூறிய ஆங்கில மொழிபெயர்ப்பின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு: மரித்தவர்களின் நினைவு மறக்கப்பட்டுவிடுகிறது என்பதே.
அதாவது மரித்தவர்களின் நினைவில், பூமியில் நடந்த எந்த நிகழ்வும் இருக்காது என்பதே அதன் பொருள்.
Their love, their hate and their jealousy have long since vanished;
அன்பு, வெறுப்பு, பொறாமை போன்ற எல்லா உணர்வுகளும் அழிந்து காணாமற்போன நிலையில் அவர்கள் இருப்பார்கள்.
never again will they have a part in anything that happens under the sun.
சூரியனுக்குக் கீழே இப்பூமியில் நடக்கும் எந்த நிகழ்விலும் அவர்களுக்கு இனி ஒரு பங்குமில்லை.
மொத்தத்தில் மரித்தவர்கள் அனைவரும் அயர்ந்த நித்திரையிலிருப்போரைப் போல இருப்பார்கள். அவ்வாறு ‘நித்திரையிலிருக்கும்’ அவர்கள், ஒரு நாளில் விழித்தெழுவார்கள். அதாவது உயிர்த்தெழுவார்கள். அதன்பின் என்ன நடக்கும் என்பதைத்தான், தானியேல் கூறுகிறார்.
தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
மரித்து, பூமியின் தூளில் நித்திரை பண்ணுகிற அனைவருக்கும், அவர்கள் நித்திரை பண்ணுகிற காலம்வரை எந்த reward-ம் பலனும் கிடையாது. ஆனால் அவர்கள் விழித்தெழுந்தபின், அதாவது உயிர்த்தெழுந்தபின் மறுமையில் அவர்களுக்குப் பலன் உண்டு.
சங்கீதம் 6:5-க்கு உங்கள் மனம்போல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
மரணத்திலிருக்கும் அனைவரும் ஒன்றும் அறியாத நித்திரை நிலையில் இருப்பதால், அவர்களில் யாரும் தேவனை நினைக்கவும் மாட்டார்கள், அவரைத் துதிக்கவும் மாட்டார்கள் என இவ்வசனம் கூறுகிறது. ஆனால், நீங்களோ பின்வருமாறு விளக்கம் தந்துள்ளீர்கள்.
sundar wrote: //மரித்தவர்கள் யாரும் தேவனை நினைவு கூறுவது இல்லை, பாதாளத்தில் வேதனை அனுபவிக்கும் யாரும் தேவனை துதிக்க மாட்டார்கள் அதையே இவ்வசனம் சொல்கிறது.//
பாதாளத்தில் வேதனை அனுவிப்பதைக் குறித்து சங்கீதம் 6:5 நிச்சயமாகக் கூறவில்லை. வேறு ஏதாவது வேதவசனம் அதுபற்றி கூறினால், அதை சுட்டிக்காட்டுங்கள்.
-- Edited by anbu57 on Tuesday 1st of June 2010 02:49:36 AM
ஒரு மரண வீட்டில் அமர்ந்துகொண்டு ஒரு ஞானி உலக மனிதனைப்பற்றி பொதுவாக சொல்வதுபோல் இவ்வார்ததைகள் அமைந்துள்ளன என்றே நான் கருதுகிறேன். இங்கு உள்ள கருத்துக்களில் எல்லாமே மரித்தவருக்கும் உயிரோடு உலகில் இருப்பவர்களுக்கும் சொல்லப்பட்டதாக பொருந்தும்
இதில் முக்கியமாக வெகுமதியை பற்றிய கருத்தை மட்டுமே நாம் பார்க்கவேண்டும்.
மரித்தவனுக்கு அவன் செய்கையின் அடிப்படையில் மரணத்துக்கு பின் வெகுமதி உண்டா இல்லையா? உலக வெகுமதியை பற்றி பேசவேண்டாம் ஏனெனில் அப்படி வெகுமதி உலகில் கிடைத்தாலும் அது அவனை சேராது அதனால் அவனுக்கு பயன் எதுவும் இல்லை ஆனால் இங்கு வசனம் "மரித்தவனுக்கு வெகுமதியே இல்லை" என்று கூறுகிறது.
"வெகுமதி உண்டு" என்றால் அது மரித்தவனை குறித்து சொல்லப்படவில்லை.
"வெகுமதி இல்லை" என்றால் மரித்தவனை குறித்துதான் சொல்கிறது என எடுத்துகொள்ளலாம் .
ஆனால் மரணத்துக்கு பிறகும் அவரவர் கிரியைக்கு தக்க பலன் கிடைக்கும் என்றல்லவா வேதம் சொல்கிறது
எனவேஎனது நிலை இதுதான்! அது உலகத்தில் உள்ளவர்களுக்கு மரித்தவனின் உலக நிலை என்னவென்பதை குறிப்பிடவே இவ்வசனம் சொல்லப்பட்டது என்று நான் கருதுகிறேன். அப்படியே மரித்தவனை பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் பாதாளத்தில் தூக்க நிலையில் இருக்கும் ஒரு பகுதியும் இருக்கிறது எனவே அதை விட்டுவிடுவோம்.
கீழ்க்கண்ட வசனமாகிய "சிலர் பாதாளத்தில் நிந்தையை சுமந்துகொண்டு இருக்கிறார்கள், பாதாளத்தினுள் இருந்து பேசுவார்கள்"என்று வேதம் சொல்லும் இக்கருத்துக்கு என்ன விளக்கம் தருகிறீர்கள் என்பதையும் அறிய ஆவல்
எசேக்கியேல் 32:21பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.
எசேக்கியேல் 32:30
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் "நரகம்" என்ற வார்த்தைக்கு வேதனையுள்ள இடம் என்று பொருள் கொள்ளலாம் என்று கருதுகிறேன். நரக பாதாளத்தில் கிடக்கிறார்கள் (நிகழ காலம்) என்று வேதம் குறிப்பிடும் இடம் எது ?
லூக்கா 16:23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்
ஐஸ்வர்யாவான் லாசரு உவமையில் இயேசு இல்லாத ஒன்றை கற்பனைபண்ணி சொல்லி பயம்காட்டினரா?
இயேசுவின் உவமைகளில் எதை எடுத்தாலும் எல்லாமே உலக நிலைகளோடு ஒத்ததாகவும் உலகில் நடக்கும் காரியங்களுமாகவே இருந்தது ஆனால் லாசரு மரித்து ஆபிரகாம் மடிக்கும் ஐஸ்வர்யவன் மரித்து பாதாளத்தில் வேதனை அனுபவித்ததும் மட்டும் எந்த ஒரு அடிப்படையும் இல்லாத அர்த்தமற்ற உவமையா?
உங்கள் கருத்தை அறிவதன் மூலம், நான் பார்த்த "பாதாளம்" என்ற இடம் உண்மையில் என்னவென்பதை அறிய முயற்ச்சிக்கலாம் என்று கருதுகிறேன்
-- Edited by SUNDAR on Friday 4th of June 2010 01:10:27 PM
நாம் பேசுபவை மற்றும் எழுதுபவை அனைத்தும் நேரடியான சொல்லர்த்தமுள்ளதாய் இருப்பதில்லை. உதாரணமாக: நான் 1990-ல் இந்த வீட்டைக் கட்டினேன் என ஒருவர் சொன்னால், அவரே தன் கையால் செங்கலை எடுத்து வைத்து சாந்தை எடுத்து வைத்து வீட்டைக் கட்டியதாக நாம் அர்த்தம் எடுப்பதில்லை.
என் மகன் தான் எனக்குச் சோறு போடுகிறான் என ஒருவர் சொன்னால், அதன் அர்த்தம் தனது மகனால் அவர் பராமரிக்கப்படுகிறார் என்பதேயொழிய, அவரது மகன் அவருக்கு தினமும் தனது கையால் சோறு போடுகிறான் என அர்த்தமல்ல.
மரித்துப்போன தனது கணவனின் குடும்ப ஓய்வூதியத்தால் பராமரிக்கப்படும் ஒரு பெண்: என் கணவர் மரித்தபின்னர்கூட அவர்தான் எனக்குச் சோறு போட்டு என்னைக் காப்பாற்றுகிறார் என்று சொல்வது வழக்கம். இப்படி அப்பெண் சொல்வதால், அவளது கணவன் நேரடியாக அவளுக்குச் சோறு போடுவதாகவோ காப்பாற்றுவதாகவோ நாம் அர்த்தம் எடுப்பதில்லை.
இதேவிதமாகத்தான் ஒரு உள்ளர்த்தமுடையதாக எசேக்கியேல் 32:21,30 வசனங்கள் கூறப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். உங்கள் தரிசனத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ள நீங்கள், நான் சொல்கிற கோணத்தில் சிந்திப்பீர்களா என்பது சந்தேகமே.
பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் என வேதாகமம் கூறுவதால், கானான் தேசத்தில் பாலும் தேனும் ஓடியதாக நாம் அர்த்தம் எடுப்பதில்லை. இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், அதை நான் 3 நாட்களுக்குள் கட்டுவேன் என இயேசு சொன்னதை, சொல்லர்த்தமாக யூதர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால் அவரோ தமது சரீரமாகிய ஆலயத்தைக் குறித்து சொன்னதாக யோவான் 2:21 கூறுகிறது. ஒருவேளை இவ்வசனம் வேதாகமத்தில் எழுதப்படாமல் இருந்திருந்தால், நீங்களும் யூதர்களைப் போலவே கருதியிருக்கக்கூடும்; நம்மில் பலருக்கு இயேசுவின் கூற்று, புரியக்கூடாததாகத்தான் இருந்திருக்கும்.
வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களில் பல, நமக்கு நேரடியாக புரியக்கூடாதவைகளே என்பது எனது கருத்து.
பின்வரும் வசனத்தைப் படித்துப் பாருங்கள்.
ஓசியா 11:1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
இவ்வசனத்தின் பின்பகுதி இயேசுவைக் குறித்து கூறுவதாக நாம் சற்றேனும் கற்பனை செய்ய இயலுமா? இயேசு பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர்கள், இக்கூற்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட ஒரு தீர்க்கதரிசனம் என நினைத்திருப்பார்களா? இக்கூற்று இயேசுவைக் குறித்து கூறுவதாக மத்தேயு 2:15 கூறாதிருந்தால், நிச்சயமாக நாம் புரியக்கூடாத எத்தனையோ தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகத்தான் இதுவும் இருந்திருக்கும்.
சாதாரணமாக நமக்குப் புரிய இயலாத வேதாகமக் கூற்றுக்கள் மற்றும் தீர்க்கதரிசனங்களின் கருத்தை நாம் ஆராய்ந்தறிய முயல்வதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு ஆராய்ந்தறிந்த கருத்துக்கள், வேதாகமத்தின் பிற வசனங்களின் நேரடியான கருத்துக்களோடு முரண்படாததாக இருக்கவேண்டும். அவ்விதமான கருத்தை நம்மால் அறிய முடியவில்லையெனில், குறிப்பிட்ட அந்த வேதாகம கூற்று அல்லது தீர்க்கதரிசனத்தின் விஷயத்தில் நாம் கருத்து எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கவேண்டும்.
மரித்தவர்களில் ஒரு பிரிவினர் தற்போது பாதாளத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் நம்பிக்கையாயிருக்கிறது. உங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாக லாசரு-ஐசுவரியவான் உதாரணம் மற்றும் எசேக்கியேல் 32:21,30 போன்ற வசனங்கள் மற்றும் உங்கள் சுய தரிசனங்களைச் சொல்கிறீர்கள்.
ஆனால், மரித்தவர்களில் யாரும் தற்போது பாதாளத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதாக எந்த வசனமும் நேரடியாகச் சொல்லவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்பது வேதாகமம் நேரடியாகச் சொல்கிற ஒரு கருத்து. இக்கருத்துக்கு எதிராக, பாவிகளான ஜனங்கள் பாவத்திற்கு தண்டனையாக பாதாளத்தில் எப்படி வருடக்கணக்கில் வேதனை அனுபவிக்க முடியும்?
இயேசுவை விசுவாசிக்கிறவர்கள், விசுவாசியாதவர்கள் எனும் 2 பிரிவை எடுத்துக்கொண்டு, இயேசுவை விசுவாசியாத அனைவரும் சாத்தானின் பிள்ளைகளாகி விடுவார்கள் என்கிறீர்கள். அப்படி சாத்தானின் பிள்ளைகளானவர்களை சாத்தான் பாதாளத்தில் வேதனைப்படுத்தத்தான் செய்வான், அதற்கு தேவன் பொறுப்பல்ல என்கிறீர்கள்.
சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரரே!
இவ்வுலகில் பிறக்கிற அனைவரும் கட்டாயம் இயேசுவை விசுவாசித்தேயாக என்று சொல்வதில் சற்றேனும் நியாயமுள்ளதா? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சூழ்நிலையில், ஒவ்வொரு விதமான தேவ நம்பிக்கையுள்ள குடும்பத்தில் அல்லது தேவ நம்பிக்கையில்லாத குடும்பத்தில் பிறக்கிறான். இவ்வுலகில் தேவநம்பிக்கை சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்நிலையில், அக்கருத்துக்கள் அத்தனையையும் ஆராய்ந்து, யெகோவாதான் மெய்யான தேவன், இயேசுதான் மெய்யான இரட்சகர் எனும் முடிவுக்கு ஒருவன் வந்து அதை விசுவாசித்தேயாக வேண்டும்; அப்படி அவன் விசுவாசிக்கவில்லையெனில், சாத்தானின் பிள்ளையாகி பாதாளத்தில் வேதனையை அனுபவிக்கத்தான் வேண்டும் என்று சொல்வதில் சற்றேனும் இரக்கம், நியாயம், அன்பு உள்ளதா?
இப்படி ஒரு நியமனத்தை தேவன் வைத்திருந்தால், அவரை நீதியுள்ள, இரக்கமுள்ள, அன்புள்ள தேவனாக நாம் கருதமுடியுமா?
எந்த ஒரு மனிதனும் தன் சுயசித்தத்தின்படி இவ்வுலகில் பிறப்பதில்லை. அப்படி பிறந்த மனிதரில் பலர், இயேசுவை அறியும் வாய்ப்பைப் பெறுவதில்லை. அப்படியே பெற்றாலும், அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பல அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.
அப்படியிருந்தும் அந்நாட்களில் வாழ்ந்த அத்தனை பேரும் இயேசுவை விசுவாசிக்கவில்லையே! தம்மை விசுவாசியாமல் சிலுவையில் அறைந்த யூதர் வேதபாரகர் பரிசேயருக்காக இயேசு என்ன ஜெபம் செய்தார்?
பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்றுதானே ஜெபித்தார்? இயேசு அவ்வாறு ஜெபித்திருக்க, அவரை விசுவாசியாத அனைவரும் மரித்தபின் பாதாளத்தில் வேதனைப்படும் நிலை உண்டானால், இயேசுவின் ஜெபம் அர்த்தமற்றதாக அல்லவா இருக்கும்?
இயேசு அற்புதங்களும் அடையாளும் செய்த அந்நாட்களிலேயே பலர் அவரை விசுவாசியாதிருக்கையில், அப்படி எதுவும் இல்லாத இந்நாட்களில், அவரைக் குறித்து சொல்லியிருக்கும் 4 சுவிசேஷங்கள் மற்றும் நிருபங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இயேசுவை நம்பி விசுவாசிக்கத்தான் வேண்டும் எனச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
இயேசுவே இரட்கர், அவரை விசுவாசியுங்கள் என்று சொல்லி சுவிசேஷம் அறிவிப்பதில் தவறில்லை. ஆனால், இயேசுவை விசுவாசியாதவர்கள் மரித்தபின் பாதாளத்தில் வேதனைப்பட வேண்டும், நியாயத்தீர்ப்புக்குப் பின் நித்திய நித்தியமாக அக்கினியில் வேகவேண்டும் என்று சொல்வது தேவனின் அன்பை தூஷிப்பதாகத்தான் இருக்கும்.
சமயம் கிடைக்கையில் இது குறித்து இன்னும் எழுதுகிறேன். உங்கள் மனதில் தோன்றும் கேள்விகளை நீங்களும் பதியுங்கள். தொடர்ந்து நாம் விவாதிப்போம்.
கோவைபெரியன்ஸ் தளத்தின் அறிந்ததும் அறியாததும் எனும் திரியில் கேட்கப்பட்டுள்ள மேலும் சில கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும். கேள்வி 4. இயேசுகிறிஸ்துவின் 1000 வருட பூலோக அரசாட்சியின் நோக்கம்தான் என்ன? யார் அதில் பிரஜைகள்? அதில் மரணம் உண்டா? இரட்சிப்பு உண்டா?
சுருக்கமாகச் சொல்லப்போனால், சாத்தானின் வஞ்சகத்தால் தேவனைப் பற்றியும் அவரது நீதிகளைப் பற்றியும் அறியத்தவறியவர்கள், மற்றும் விபரமறியாத வயதில் மரித்தவர்கள், மற்றும் தேவனைப் பற்றியும் அவரது நீதிகளைப் பற்றியும் அறியும் வாய்ப்பை பெறத் தவறியவர்கள் ஆகியவர்களை உயிர்த்தெழச் செய்து, தேவனைப் பற்றியும் அவரது நீதிகளைப் பற்றியும் கற்றுக் கொடுப்பதே இயேசுகிறிஸ்துவின் 1000 வருட பூலோக அரசாட்சியின் பிரதான நோக்கம்.
அந்த 1000 வருட காலத்தில் சாத்தான் கட்டப்பட்ட நிலயில் இருப்பதால், ஜனங்களில் பலர் தேவனைப் பற்றியும் அவரது நீதிகளைப் பற்றியும் அறிந்துகொள்வார்கள். ஆகிலும் பின்வரும் வசனம் கூறுகிற பிரகாரம், ஒருசிலர் தேவநீதியை கற்றுக் கொள்ள மறுக்கவும் செய்வார்கள்.
இயேசுவின் 1000 வருட அரசாட்சி காலத்திலும் மரணம் உண்டு என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாயுள்ளது.
ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
இயேசுவின் 1000 வருட அரசாட்சி காலமானாலும் சரி, தற்போதைய மனித அரசாட்சியின் காலமானாலும் சரி, எவர்களெல்லாம் மனந்திரும்பி தேவநீதியின்படி நடக்கிறார்களோ அவர்களுக்கு இரட்சிப்பு உண்டு.
கேள்வி 5. ஏறத்தாழ 1300 வருடங்கள் வேதம் கிடைக்காத காலத்தில் கோடா கோடி ஜனங்கள் 'சுவிசேஷம்' இல்லாமலேயே மரித்துள்ள பட்சத்தில், இந்தக் கடைசி காலத்தில் வாழும் மக்கள்மேல் மட்டும் தேவன் அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறாரா?
தேவன் எல்லோர்மீதும் கரிசனை உள்ளவரே! அதனால்தான் ‘சுவிசேஷம்’ இல்லாமல் மரித்த ஜனங்கள் சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பும் வாய்ப்பைப் பெறத்தக்கதாக, இயேசுவின் 1000 வருட அரசாட்சி காலத்தை அவர் நியமித்துள்ளார்.
bereans wrote at Kovaibereans: //சகோ அன்பு அவரின் தளத்தில் தந்த பதிலின் ஒரு பகுதி: "இயேசுவின் முதலாம் வருகையின் நாட்களிலிருந்து யாவர் மீதும் அவரது வசனமாகிய ஆவி ஊற்றப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் சத்துருவாகிய பிசாசு தற்போது கிரியை செய்துவருவதால், இயேசுவின் வசனங்களை பலர் ஏற்காமல் இருக்கின்றனர். "
இதன்படி அனைவரின் மேலும் ஆவி ஊற்றப்பட்டு வருகிறது என்றும், ஆனால் பிசாசு தேவனின் அந்த ஆவியையும் மிஞ்சி செயல்படுபவனாக, அதாவது தேவ ஆவி பலவீனம் உள்ளதாயும், பிசாசின் கிரியைகள் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா!? இல்லை, அவர் ஒரு போதும் யாவர் மேலும் இந்த யுகத்தில் ஆவியை ஊர்றுவதாக சொல்லவில்லை, இது எல்லாம் மனிதர்களின் பிரயாசமே//
இடக்குத் தனமான வாதம் வேண்டாம் சகோதரரே! மத்தேயு 13-ம் அதிகாரத்தில் இயேசு சொன்ன விதைக்கிறவன் உவமை, விதை உவமைகளையெல்லாம் படிக்கவில்லையா? அவற்றில், இயேசுவின் வசனமெனும் விதைகளை சத்துருவாகிய பிசாசு பறித்துச் சென்றதாக வசனம் 19-ல் இயேசு கூறியுள்ளதை படிக்கவில்லையா? முள்ளிலும் பாறையிலும் விழுந்த விதைகள் பலனற்றுப் போனதாக இயேசு கூறியுள்ளதைப் படிக்கவில்லையா?
நான் ஏற்கனவே சொன்னபடி ஆவியாகிய வசனம் இவ்வுலகில் ஊற்றப்பட்டுத்தான் வருகிறது அல்லது விதைக்கப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் ஊற்றப்பட்ட (அல்லது விதைக்கப்பட்ட) நிலமாகிய மனிதனைப் பொறுத்தே அதன் பலன் கிடைக்கிறது.
மத்தேயு 13:37-42 வசனங்களையும் படித்துப்பாருங்கள். மனுஷகுமாரனாகிய இயேசு, வசனத்தை விதைக்கிற இடம் இவ்வுலகமே என அவை கூறுவதைப் படிக்கவில்லையா?
இவ்வுலகில் யாவர் மீதும் வசனமாகிய ஆவி ஊற்றப்பட்டுத்தான் வருகிறது என்பதற்கு அவை ஆதாரமாயுள்ளன.
முதல் கோணல் முற்றும் கோணல் எனும் கூற்றின்படி, கோணலான ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் வேதத்தை நீங்கள் கண்ணோக்குவதால், உங்கள் புரிந்துகொள்தல் யாவும் கோணலாக உள்ளன.
soulsolution wrote at Kovaibereans: //எல்லாருக்கும் இப்போதே வசனங்கள் அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இவ்வசனம் சாட்சி. "அவர் யாக்கோபுக்கு(மட்டும்)தம்முடைய வசனங்களையும், இஸ்வேரலுக்கு(மட்டும்) தமது பிரமாணங்களையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜாதிக்கும்(யாருக்குமே) இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலுயா. -சங் 147:19,20.
இதைவிட்டுவிட்டு அவர் எல்லாருக்கும் அறிவிக்கிறார் என்று எண்ணுவது அறிவீனம்.//
சங்கீதம் 147:19,20-ஐப் படித்த சகோதரர், பின்வரும் வசனங்களைப் படிக்கவில்லையா?
மத்தேயு 28:19,20 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
லூக்கா 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
அப்போஸ்தலர் 1:8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
கேள்வி 6. இயேசு உயிர்த்தெழுந்தபின் 40 நாட்களாக பரலோகம் போகவில்லை எனும் பட்சத்தில் கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்?
எழுத்துக் குறியீடு இல்லாத நாட்களில் எழுதப்பட்ட வரிகளுக்கு, மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் மனம்போல் எழுத்துக் குறியீடுகளைச் சேர்த்து மொழிபெயர்த்ததால், வேதத்தின் பல வசனங்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் மேற்கூறிய வசனமும் ஒன்று (லூக்கா 23:43).
அவ்வசனத்திற்கு வேறுவிதமான எழுத்துக் குறியீடுகளைச் சேர்த்தால், நீ என்னோடு பரதீசிலிருப்பாய் என இன்றைக்கு நான் மெய்யாகவே சொல்கிறேன் என்றும் மொழிபெயர்க்கலாம். இம்மொழிபெயர்ப்பின் கருத்து, பிற வசனங்களின் கருத்துக்கு முரண்படாதிருப்பதால், இதையே சரியான மொழிபெயர்ப்பாக ஏற்றுக்கொள்ளலாம்.
இவ்விரு வசனங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏதேன் தோட்டம்தான் தேவனுடைய பரதீசு என மிகஎளிதில் புரிந்துகொள்ளலாம். அந்த பரதீசுக்குள் மனிதன் செல்லமுடியாதபடி, கேரூபீன்களையும் சுடரொளிப் பட்டயத்தையும் தேவன் வைத்துள்ளதால் (ஆதியாகமம் 3:24), அது எங்கே உள்ளது என்பதை மனிதன் தற்போது அறியமாட்டான். ஆகிலும் தேவன் சித்தங்கொண்டால், ஒரு மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்படமுடியும் என்பதற்கு 2 கொரி. 12:3 ஆதாரமாயுள்ளது.
கேள்வி 8. பாதாளமும் நரகமும் ஒன்றா? பரதீசு, பரலோகம் என்ன வித்தியாசம்?
ஆதியாகமம் 37:35-ல் காணப்படும் பாதாளம் எனும் வார்த்தைக்கும் உபாகமம் 32:22-ல் காணப்படும் நரகம் எனும் வார்த்தைக்கும் மூலபாஷையில் sheol எனும் ஒரே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவை மூலபாஷை வேதாகமப்படி பாதாளமும் நரகமும் ஒன்றுதான் என நான் கருதுகிறேன்.
ஏதேன் தோட்டம்தான் பரதீசு என ஏற்கனவே நாம் பார்த்தோம். ஆதியில் பூமியின் ஒரு பகுதியாகத்தான் ஏதேன் தோட்டம் இருந்தது. எனவே பரதீசு என்பதும் ஆதியில் பூமியின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் அது தேவனால் காவல் வைக்கப்பட்ட பின்னர், அதன் இருப்பிடம் மனிதனின் கண்ணுக்கு மறைவாக உள்ளது. தேவனுடைய ஆளுகை இப்பூமியில் நடக்கையில், மீணடும் பூமியின் ஒரு பகுதியாக பரதீசு விளங்கும் என நான் கருதுகிறேன்.
பரலோகம் என்பது பூமியின் ஒரு பகுதி அல்ல. அது தேவனும் இயேசுவும் தேவதூதர்களும் வாசஸ்தலம் செய்யும் இடம் (உபாகமம் 26:15; மாற்கு 13:32). பின்னொரு நாளில், தெரிந்தெடுக்கப்பட்ட பரிசுத்தரான சில மனிதர்களும் அங்கு வாசம் செய்வார்கள் (2 கொரி. 5:1).
கேள்வி 9. யோவான் 3:13 ன்படி பரலோகத்தில் யாருமில்லை. எலியா, ஏனோக்கு எங்கே?
எலியா பரலோகத்திற்கு ஏறிச்சென்றதாக 2 ராஜா 2:1 கூறுகிறது. ஆனால் அது எலிசாவின் கண்களுக்கு காணப்படக்கூடியதாக இருந்தது. எனவே எலியா ஏறிச்சென்றதாக கூறப்பட்டுள்ள பரலோகம், தேவன் வாசஸ்தலம் செய்கிறதும் மனிதனின் கண்ணுக்கும் ஞானத்திற்கும் எட்டாததுமான பரலோகம் அல்ல.
ஏனோக்கை தேவன் எடுத்துக்கொண்டதாக ஆதியாகமம் 5:24 கூறுகிறது.
பரலோகத்திற்கு ஏறின மனிதன் யாருமில்லை என்பதால், எலியாவும் ஏனோக்கும் தற்போது பரதீசில் இருக்கக்கூடும் என நான் கருதுகிறேன்.
கேள்வி 10. "லாசருவே வெளியே வா" என்று இயேசு சொன்னபோது 'மரித்த' லாசரு எங்கிருந்து வந்தான்?
கல்லறையிலிருந்து (யோவான் 11:44).
கேள்வி 11. நாம் வாசிக்கும் வேதாகமம் தேவனுடைய வார்த்தையா அல்லது தேவனுடைய வார்த்தையின் மனித முயற்சியின் மொழிபெயர்ப்பா?
தேவனுடைய வார்த்தையின் மனித முயற்சியின் மொழிபெயர்ப்பு.
கேள்வி 12. ஒரு மொழியிலிருப்பதை 100 சதம் சரியாக இன்னோரு மொழிக்கு மொழிபெயர்க்க முடியுமா?
13. சிறு மந்தை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று சபையைக் குறித்து அது ஒரு சிறிய கூட்டம் என்று வேதம் தெளிவாகக்கூறும்போது ஏன் உலகம் முழுவதையும் சபைக்குள் கொண்டுவர பிரயாசம் நடக்கிறது?
சிறு மந்தை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று கூறிய வேதாகமம், அவர்கள் மட்டுமே அடங்கியதுதான் சபை என சொன்னதாகத் தெரியவில்லை.
சபை என்பது ஒரு சிறு மந்தைதான் எனும் கூற்றை ஒத்துக்கொண்டாலும், அந்த சபையை உலகத்திலிருந்துதான் உருவாக்கவேண்டும் என்பதால், உலகத்திற்கு சுவிசேஷம் சொல்வது அவசியமே. இவருக்குத்தான் சுவிசேஷம் சொல்ல வேண்டும், இவருக்கு சுவிசேஷம் சொல்லவேண்டியதில்லை என எந்தவொரு நியமனத்தையும் வேதாகமம் கூறவில்லை.
சிறு மந்தை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் சொன்ன வேதாகமம், அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லையே! எனவே உலகில் எல்லோருக்குமே சுவிசேஷம் சொல்வது அவசியமே. சுவிசேஷத்தைக் கேட்டவர்களில் சிலர்தான் சிறு மந்தையாக தெரிந்தெடுக்கப்படுவார்கள் என நான் கருதுகிறேன்.
15. உயிர்த்தெழுந்த இயேசு பூட்டிய வீட்டுக்குள் பிரவேசித்தார், ஆனால் கல்ல்றையை திறந்துதான் வெளியேறினார். ஏன்?
இயேசு கல்லறையைத் திறந்துதான் வெளியேறினார் என எந்த வசனம் கூறுகிறது? இயேசு உயிர்த்தெழுந்தார் என வசனம் கூறுகிறது. தேவதூதர்கள் கல்லைப் புரட்டினார்கள் என்றும் வசனம் சொல்கிறது. ஆனால் உயிர்த்தெழுந்தபின் கல்லறையைத் திறந்துதான் வெளியேறினார் என வசனம் கூறியதாகத் தெரியவில்லை.
கோவை பெரியன்ஸ் தளத்தின் அறிந்ததும் அறியாததும் பகுதியில் soulsolution wrote: //கல்லைப்புரட்டாமலேயே வெளியேறினார் என்றால் தேவதூதர்கள் ஏன் கல்லைப் புரட்டினார்கள்?//
இக்கேள்விக்கு வேதாகமத்தில் பதில் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே யூகமான பதிலைத்தான் கூற இயலும்.
இயேசுவின் உயிர்த்தெழுதல் உறுதிசெய்யப்பட, கல்லறை திறந்திருப்பது அவசியம்; அவரது சரீரம் அங்கு இல்லாதிருப்பதும் அவசியம். இது ஒரு காரணமாக இருக்கலாம்.
கல்லறையில் இயேசுவின் சரீரத்தைப் பார்க்க வந்த ஸ்திரீகள், கல்லைப் புரட்டுவதற்கு சிரமப்படாதிருப்பதற்காக, கல் புரட்டப்பட்டிருக்கலாம்.
soulsolution wrote: //கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தேவை.//
கேள்விக்கு மட்டும் பதில் தருவதும், எதிர் கேள்வி கேட்பதும், கூடுதல் தகவல் தருவதும் பதிலளிப்பவரின் உரிமையாகும். இவ்விஷயத்தில் நிபந்தனைகளைப் புகுத்தினால், பதில் தர இயலாது எனத் தெரிவிக்கிறேன்.
soulsolution wrote: //புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் தற்போது உயிர்த்தெழவில்லை என்று எப்படி ஆணித்தரமாகக் கூறுகிறாரோ தெரியவில்லை.//
1 கொரிந்தியர் 15:23 அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
soulsolution wrote: //முதலாம் உயிர்த்தெழுதல் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். வசன ஆதாரமுண்டு. இன்னொரு பதிவில் வரும். பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சபையாகிய சிறுமந்தைக்கு தகுதியாகவில்லை.//
வசன ஆதாரத்திற்காகக் காத்திருக்கிறேன்.
சிறுமந்தை மட்டுமே முதலாம் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியானவர்கள் என்பதற்கான வசன ஆதாரத்தையும் தரும்படி வேண்டுகிறேன்.
16. இயேசுகிறிஸ்து எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட கிரயம் (Ransom for all) செலுத்தியிருந்தாலும் மிகக்குறைவான ஜனங்களே இரட்சிக்கப்படுவார்கள். சரியா?
இரட்சிக்கப்படுபவர்கள் குறைவானர்களா, மிகக் குறைவானவர்களா, அதிகமானவர்களா, மிக அதிகமானவர்களா, எல்லோருமா என்பது கேள்வியல்ல. யார் இரட்சிக்கப்படுவார்கள்/இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதுதான் கேள்வி. இக்கேள்விக்கு வேதாகமம் தரும் பதில்:
லூக்கா 9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
லூக்கா 13:23-28 அப்பொழுது ஒருவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
ரோமர் 9:27,28 அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
1 கொரிந்தியர் 15:2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
யாக்கோபு 2:14,26 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
லூக்கா 8:12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
லூக்கா 18:26,27 அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
இவ்வசனத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளும் சிலர், தேவனால் எல்லாம் கூடும், எனவே அவர் எல்லோரையும் இரட்சித்துவிடுவார் எனக் கூறுகின்றனர். ஆனால் அவ்வசனத்தின் கருத்தை சரியாகப் புரிந்துகொள்ள, ஆங்கில மொழி பெயர்ப்பை படிப்பது அவசியமாயிருக்கிறது.
Luke 18:26,27 Those who heard this asked, "Who then can be saved?" Jesus replied, "What is impossible with men is possible with God." - New International Version
Luke 18:26,27 And those who heard it said, "Who then can be saved?" But He said, "The things which are impossible with men are possible with God." New King James Version
மனுஷரோடு செய்யக் கூடாதவைகள், தேவனோடு செய்யக் கூடியவையாகும் என்பதே இயேசுவின் பதில். இதன் கருத்து:
மனுஷரோடு, மனுஷருக்கேற்றபடி நடந்து வந்தால், இரட்சிக்கப்படுவது கூடாதுதான். ஆனால் தேவனோடு, தேவனுக்கேற்றபடி நடந்துவந்தால், இரட்சிக்கப்படுவது சாத்தியமே.
17. இந்த ஆதாமின் சந்ததியில் 99 சதம் மக்கள் நரகத்தில் வாதிக்கப்படுவார்கள், 1 சதம் மட்டும் பரலோகம் செல்வார்கள். இது தான் நற்செய்தியா?
ஆதாமின் பாவத்தால் மரணத்திற்குள்ளாகிய மனுக்குலமானது, இயேசுவின் பாவநிவாரணபலியால் உயிர்த்தெழுதலுக்கு தகுதியாவதே நற்செய்தி.
ஆயினும் உயிர்த்தெழுதலைப் பெற்ற மனிதர்கள் அவரவர் கிரியைகளின்படியே நியாயந்தீர்க்கப்பட்டு, நித்திய ஜீவனைப் பெறுவார்கள் அல்லது 2-ம் மரணமாகிய நித்திய அழிவைப் பெறுவார்கள்.
தங்கள் கேள்வியில் கூறப்பட்டவிதமான நற்செய்தியை வேதாகமம் கூறவில்லை. அப்படி யாராவது கூறினால், அவர்கள் தங்கள் கேள்விக்கு பதில் தருவார்களாக.
நற்கிரியைகளைச் செய்தவர்களுக்கு நித்தியஜீவன் என்றும் நற்கிரியைகளைச் செய்யாதவர்களுக்கு நித்திய ஆக்கினை என்றும் வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. மத்தேயு 25:31-46 படித்துப் பார்க்கவும்.
யாருக்கு நித்திய ஜீவன் யாருக்கு நித்திய ஆக்கினை என்பது சதவீத அடிப்படையில் தீர்மானவாவதில்லை. ஒருவேளை 100 சதவீத மக்களும் நற்கிரியைகளைச் செய்யாதவர்கள்தான் எனில் 100 சதவீத மக்களும் நித்திய ஆக்கினைக்குத்தான் தீர்க்கப்படுவார்கள். இது, நீதியான தேவனின் நீதியான நியமனம். இந்த நியமனத்தை நீங்களோ நானோ மாற்ற இயலாது. இந்த நியமனத்திற்கும் நற்செய்திக்கும் சம்பந்தமில்லை.
18. "என்னைப் பின்பற்றுங்கள், நான் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்" என்று கூறிய அப். பவுல் போல வாழும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? முகவரி அனுப்புக.
அப். பவுல் போல நீங்களும் நானும் வாழ முயல்வதற்காகத்தான் பவுல் அவ்வாறு கூறினாரேயொழிய, யார் யார் அவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை ஆராய்ந்தறிந்து அவர்களின் முகவரிகளை உங்களுக்கு அனுப்புவதற்காக அல்ல.
19. அந்நிய பாஷை வரம் இல்லாதவர்கள்தான் இன்றும் வேதத்தை மொழிபெயர்க்கிறார்கள் தெரியுமா?
வேதத்தை மொழி பெயர்த்தவர்கள்/பெயர்ப்பவர்கள் அன்னிய பாஷை வரம் பெற்றவர்களா இல்லையா என்ற விபரம் எனக்குத் தெரியாது, அது எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.