நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஊழியர் தருகிற கூலிக்கு ஜெபிக்கும் விசுவாசிகள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஊழியர் தருகிற கூலிக்கு ஜெபிக்கும் விசுவாசிகள்
Permalink  
 


ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கும் கலாச்சாரமும் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லும் கலாச்சாரமும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே இருந்துள்ளன (மீகா 3:11). எனவே இன்றைய ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிப்பதும், தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்வதும் பழங்காலக் கலாச்சாரத்தின் பாதிப்பு எனலாம்.

ஆனால் விசுவாசிகள் கூலிக்கு ஜெபிப்பதென்பது ஒரு நவீன கலாச்சாரமாயிருக்கிறது. சுமார் 20 வருடங்களுக்கு முன் உதித்த இக்கலாச்சாரம், தற்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சில பிரபல ஊழியர்களே இக்கலாச்சாரத்திற்குப் பொறுப்பாகும். கூலிக்கு மாரடித்தல் எனும் பழமொழியைப் போல, கூலிக்கு ஜெபித்தல் எனும் புதுமொழி விரைவில் நம்மிடையே வழங்கப்படலாம்.

சமீபத்தில் நான் ஒரு விசுவாசியைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, ஒரு குறிப்பிட்ட ஊழிய ஸ்தாபனத்தில் வேலை செய்வதாகக் கூறினார். அந்த ஸ்தாபனத்தில் உங்களுக்கு என்ன வேலை எனக் கேட்டபோது, தங்களுக்காக ஜெபிக்கும்படி தொலைபேசி மூலமும் நேரிலும் கேட்கிற விசுவாசிகளுக்காக ஜெபிப்பதுதான் என் வேலை எனக் கூறினார். இவ்வேலைக்கு என்ன சம்பளம் தருகிறார்கள் எனக் கேட்டபோது, மாதம் ரூ.6000 தருவதாகக் கூறினார்.

இவ்வாறு சம்பளம் வாங்கி ஜெபிப்போரை, கூலிக்கு ஜெபிக்கும் விசுவாசிகள் எனச் சொல்வதே பொருத்தமாயிருக்கும். அந்த ஸ்தாபனத்தில் இவர்களை “ஜெப வீரர்கள்” என அழைக்கிறார்கள். ஆனால் இவர்களை “ஜெப வீரர்கள்” என அழைப்பதைவிட “ஜெபத் தொழிலாளிகள்” என அழைப்பதே அதிகப் பொருத்தமாயிருக்கும்.

குறிப்பிட்ட ஓர் ஊழியரிடம் சென்று ஜெபித்தால், தான் விரும்புகிற காரியம் நடந்துவிடும் என நினைப்பது அப்பாவி விசுவாசியின் பலகீனமாகும். விசுவாசிகளிடம் அவ்வித நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் ஓர் ஊழியர் நடப்பது, அந்த ஊழியரின் அக்கிரமமாகும்.

தனது ஜெபத்தின் மீது நம்பிக்கை வைத்து ஜெபிக்கச் சொல்லும் விசுவாசிக்காக, மற்றொருவருக்குச் சம்பளம் கொடுத்து ஜெபிக்கச் சொல்வதும், அச்சம்பளத்திற்காக ஒருவர் ஜெபிப்பதும் மாபெரும் அக்கிரமமாகும். இம்மாதிரி அக்கிரமச் செய்கைக்காரர்கள்: கர்த்தாவே உமது நாமத்தினால் ஜெபித்தோமே, அற்புதம் செய்தோமே என்றெல்லாம் எவ்வளவாய் கதறினாலும் அவர்களிடம் இயேசு சொல்லப்போவது: நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் (மத்தேயு 7:23) என்றுதான் என்பதை சம்பந்தப்பட்ட ஊழியர்களும் ஜெபத் தொழிலாளர்களும் அறிவார்களாக.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Newbie

Status: Offline
Posts: 2
Date:
RE: ஊழியர் தருகிற கூலிக்கு ஜெபிக்கும் விசுவாசிகள்
Permalink  
 


அன்பான சகோதரரே! ஜெபிப்பதற்காக ஒருவருக்கு சம்பளம் கொடுத்தால் அது கூலிக்கு ஜெபிப்பவர் எனக் கூறுகிற உங்களது வாதம் சரியானதல்ல. இந்த உலகில் யாராயிருந்தாலும் வேலை செய்தால் அதற்கு சம்பளம் வாங்கத்தான் செய்கிறார்கள்.அது அரசாங்க வேலையோ தனியார் வேலையோ எதுவானாலும் அப்படியே.அரசு ஊழியர் ஒருவர் வீடு வீடாக சென்று தபாலைக் கொடுத்து வருகிறார். அவருக்கு சம்பளம் கொடுப்பது அரசாங்கம்.அவர் செய்வது போலவே ஒரு ஊழியர் வீடு வீடாச் சென்று துண்டுப் பிரதி கொடுக்கிறார். இது ஊழியரின் வேலை.அதே வேளையில் ஒரு அலுவலகத்தில் ஒருவர் வாட்ச்மேனாக வாசலிலேயே காத்திருக்கிறார். சில இடங்களில் 8மணி நேரம் துப்பாக்கியை கையில் பிடித்துக்கொண்டு நின்று கொண்டே இருக்கிறார் ஏதாவது ஆபத்து வரும்போது மட்டுமே அவர் செயலில் இறங்குவார்.மற்றபடி அவர் நின்று கொண்டே இருப்பதால் அவர் என்ன வேலை செய்கிறார் என்று அரசாங்கம் கூறுவதில்லை.அவர் கூலிக்கு மாரடீக்கவில்லை. அவரும் அரசுப் பணிதான் செய்கிறார் .சம்பளம் பெறுகிறார். இன்னும் தனது பணி நேரம் முழுவதும் கம்ப்யூட்டர் முனபாகவே அமர்ந்து பணி செய்கிறார் ஒருவர்.தொலைபேசி அலுவலகத்தில் பணி செய்கிறவர் அதன் அருகே அமர்ந்து அணைவருக்கும் பதில் சொல்வதையே பணியாகக் கொண்டு வேலை செய்கிறார் அதற்காக அவர் சம்பளம் பெறுகிறார்.இப்படி எந்த வேலையானாலும் அதனைச் செய்பவருக்கு வாழ்வதற்கு தேவைகளுக்கு பணம் வேண்டுமே.இப்படி உலக வேலை செய்வதைவிட ஒருவர் தொலைபேசி மூலம் பிறருக்காக ஜெபிப்பதையே ஊழிய வேலையாகச் செய்கிறபோது அதன் மூலம் அநேகர் ஆறுதலை,விடுதலையை ,அற்புதங்களை அடையும்போது,அந்த தேவபணியை செய்கிறவருக்கு கொடுக்கிற சம்பளத்தைப் பற்றி தவறாகப் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமானது. நீங்கள் இந்த தளத்தில் செய்தியை எழுதுகிறீர்கள் ஏன் அருகே நன் கொடை செலுத்த கேட்கிறீர் அதுவும் ஒரு கூலிதானே.அப்படிப் பார்த்தால் ஒரு போதகர் நமக்காக ஜெபிக்கிறார்,போதிக்கிறார் அவர் சம்பளம் பெறவில்லையா? அது கூலிக்கு வேலை செய்வதில்லையா?
அதே நேரத்தில் பணம் கொடுத்து பழைய ஏற்பாட்டு காலத்தில் கள்ளத் தீர்க்கதரிசனம் சொல்லும்படி ஆசாரியா்களும், தேவ ஊழியர்களும் ஆளுகை செய்பவர்களாலும்,அரசர்களாலும் கட்டாயப்படுத்தப்படார்கள்.அந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டு ஊழியர்களும் நடந்து வந்தாாகள்.அதைத்தான் வேதாகமம் கூறுகிறதே தவிர ஒரு ஸ்தாபனத்தில் ஜெபிப்பதை ஒரு வேலையாகச் செய்து வந்து அதற்காக ஸ்தாபனம் கொடுக்கிற சம்பளத்தை அபத்தமாகப் பேசக் கூடாது.அவர்கள் செய்வது கூலிக்காக வேலையல்ல செய்கிற வேலைக்காக கூலியை பெறுகிறார்கள். ஆண்டவர் இயேசுவே வேலையாள் கூலிக்கு பாத்திரனாயிருக்கிறான் ( லூக்கா 10:7) எனக் கூறவில்லையா? என்பதை சிந்திக்க வேண்டும்.

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
ஊழியர் தருகிற கூலிக்கு ஜெபிக்கும் விசுவாசிகள்
Permalink  
 


அன்பான சகோ.டேனியல் அவர்களே!

தங்கள் பதிவுக்கு நன்றி. முதல் பதிவிலேயே, எனது எழுத்தை முட்டாள்தனமானது என விமர்சித்துள்ளீர்கள்.

பரவாயில்லை; மோசே, எரேமியா, பவுல், பேதுரு, யோவான், யாக்கோபு போன்ற மாபெரும் ஊழியர்களையே அவமதித்து நிந்தித்த இவ்வுலகம், மிகமிகச் சாதாரணமானவனாக ஒரு சிறிய தேவப்பணியைச் செய்துவருகிற என்னை மட்டும் விட்டுவைக்கவா போகிறது? போகட்டும்.

முதலாவதாக உங்களது ஓர் அபாண்டமான வரிக்கு எனது வலுவான ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

//நீங்கள் இந்த தளத்தில் செய்தியை எழுதுகிறீர்கள், ஏன் அருகே நன் கொடை செலுத்த கேட்கிறீர்? அதுவும் ஒரு கூலிதானே?//

இத்தளத்தில் நான் எந்தவொரு இடத்திலும் நன்கொடை கேட்கவில்லை. அப்படி ஏதேனும் ஓர் இடத்தில் நன்கொடை கேட்டிருந்தால், அதைத் தெளிவாக குறிப்பிட்டு எழுதுங்கள். அது நிச்சயமாக உங்களால் கூடாது. எனவே நான் நன்கொடை கேட்பது பற்றி நீங்கள் எழுதின வரியை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள்.

//அன்பான சகோதரரே! ஜெபிப்பதற்காக ஒருவருக்கு சம்பளம் கொடுத்தால் அது கூலிக்கு ஜெபிப்பவர் எனக் கூறுகிற உங்களது வாதம் சரியானதல்ல. இந்த உலகில் யாராயிருந்தாலும் வேலை செய்தால் அதற்கு சம்பளம் வாங்கத்தான் செய்கிறார்கள்.அது அரசாங்க வேலையோ தனியார் வேலையோ எதுவானாலும் அப்படியே.அரசு ஊழியர் ஒருவர் வீடு வீடாக சென்று தபாலைக் கொடுத்து வருகிறார். அவருக்கு சம்பளம் கொடுப்பது அரசாங்கம்.அவர் செய்வது போலவே ஒரு ஊழியர் வீடு வீடாச் சென்று துண்டுப் பிரதி கொடுக்கிறார். இது ஊழியரின் வேலை.அதே வேளையில் ஒரு அலுவலகத்தில் ஒருவர் வாட்ச்மேனாக வாசலிலேயே காத்திருக்கிறார். சில இடங்களில் 8மணி நேரம் துப்பாக்கியை கையில் பிடித்துக்கொண்டு நின்று கொண்டே இருக்கிறார் ஏதாவது ஆபத்து வரும்போது மட்டுமே அவர் செயலில் இறங்குவார்.மற்றபடி அவர் நின்று கொண்டே இருப்பதால் அவர் என்ன வேலை செய்கிறார் என்று அரசாங்கம் கூறுவதில்லை.அவர் கூலிக்கு மாரடீக்கவில்லை. அவரும் அரசுப் பணிதான் செய்கிறார் .சம்பளம் பெறுகிறார். இன்னும் தனது பணி நேரம் முழுவதும் கம்ப்யூட்டர் முனபாகவே அமர்ந்து பணி செய்கிறார் ஒருவர்.தொலைபேசி அலுவலகத்தில் பணி செய்கிறவர் அதன் அருகே அமர்ந்து அணைவருக்கும் பதில் சொல்வதையே பணியாகக் கொண்டு வேலை செய்கிறார் அதற்காக அவர் சம்பளம் பெறுகிறார்.இப்படி எந்த வேலையானாலும் அதனைச் செய்பவருக்கு வாழ்வதற்கு தேவைகளுக்கு பணம் வேண்டுமே.இப்படி உலக வேலை செய்வதைவிட ஒருவர் தொலைபேசி மூலம் பிறருக்காக ஜெபிப்பதையே ஊழிய வேலையாகச் செய்கிறபோது அதன் மூலம் அநேகர் ஆறுதலை,விடுதலையை ,அற்புதங்களை அடையும்போது,அந்த தேவபணியை செய்கிறவருக்கு கொடுக்கிற சம்பளத்தைப் பற்றி தவறாகப் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமானது.//

ஆக, கூலிக்கு ஜெபிப்பதாக நான் கூறியுள்ள விசுவாசிகள், சம்பளத்துக்காக வேலைசெய்யும் பிற வேலையாட்களைப் போன்ற வேலையாட்கள்தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டீர்கள். உங்கள் கூற்றுக்கும் எனது கூற்றுக்குமுள்ள ஒரே வித்தியாசம்:

நீங்கள் அவர்களை சம்பளம் வாங்கி ஜெபிக்கிற வேலையாட்கள் என்கிறீர்கள்; நான் அவர்களை கூலிக்காக ஜெபிக்கிற வேலையாட்கள் என்கிறேன்.

அவர்கள் சம்பளம் வாங்கி ஜெபிக்கிற வேலையாட்கள் எனச் சொல்கிற நீங்கள், கடைசி வரியில் இப்படியும் சொல்கிறீர்கள்.

//அவர்கள் செய்வது கூலிக்காக வேலையல்ல; செய்கிற வேலைக்காக கூலியைப் பெறுகிறார்கள்.//

அதாவது அவர்களின் நோக்கம் ஜெபிப்பதுதானேயொழிய, கூலியை வாங்குவதல்ல என்கிறீர்கள். நல்லது, கூலியை நோக்கமாகக் கொள்ளாமல் ஜெபித்துவிட்டு, அதன் பின்னர் கொடுக்கிற கூலியை வாங்கினால், அவர்கள் செய்கிற வேலைக்காக கூலியைப் பெறுகிறார்கள் எனச் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், இவர்கள் வேலையில் சேரும்போதே தங்களது கூலி என்னவென்பதை ஸ்தாபக முதலாளியான தேவ(?)ஊழியரிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு, அதன் பின்னரல்லவா ஜெபம் எனும் “வேலையைச்” செய்யத்தொடங்குகின்றனர்? அப்படியானல் இவர்களது நோக்கம் தேவப்பணி செய்வதல்ல, செய்கிற ஜெபவேலைக்குக் கூலி வாங்குவதுதான் என்பது தெளிவாகிறதல்லவா?

தேவப்பணி என்பது தேவனுக்கு மட்டுமே செய்யவேண்டியது. மற்றொரு ஊழியரின் சார்பாக ஜெபிப்பதென்பது, தேவனுக்கு செய்யும் பணியல்ல, அவ்வூழியருக்குச் செய்யும் பணி. இதையெல்லாம் புரிந்துகொள்ளும் நிலையில் நீங்கள் இருப்பீர்களா என்பது சந்தேகமே!

எனவே உங்கள் பார்வையில் எனது பதிவு முட்டாள்தனமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Newbie

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

அன்பான சகோதரரே! உங்களை முட்டாள் என கூறவில்லை. உங்களது கருத்தைத்தான் அப்படிக் கூறிறேன்.எனவே தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.மேலும் முலிலேயே சம்பளம் இவ்வளவென்று பேசி ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் வேலை செய்யத் தொடங்குகின்றனர் என்ற குற்றச் சாட்டும் தவறானதே.தாங்களாகவே முன்வந்து ஊழியத்தில் ஏதாவது பணியைச் செய்ய வருகின்றனர்.அதன்பின்னர் ஸ்தாபனம் அவர்களுக்கு சம்பளத்தைத் தருகிறது. அதாவது காணிக்கை தருகிறது.மேலும் சின்ன ஊழியமாக இருக்கும்போது, அல்லது ஆரம்பகாலத்தில் இருக்கும்போது இந்த ஜெபிக்கும் பணியையோ கடிதம் எழுதுவதையோ ஊழியரே செய்துவருகிறார். ஊழியம் பெருகப் பெருக ஒருவரே அதனைச் செய்ய முடியாது.எனவே வேலைகளைப் பிரித்துக் கொடுத்து உதவி ஆட்களை வைத்து அந்தப் பணியைச் செய்கிறார் அதற்காக காணிக்கைகளை வழங்குகிறார்.அந்தக் காணிக்கையை கூலிக்கு ஜெபம் செய்வதாக அர்த்தப்படுத்தி தவறாக எண்ணி, அந்தத் தவறான எண்ணத்தை இப்படி இன்டர்நெட் மூலம் எழுதி, தேவ நாமத்துக்கு அவதூறு கொண்டுவருகிற பணியைச் செயவது ஒரு ஊழியமல்ல.ஜெபிப்பது ஒரு ஊழியம் அதனைக் குறை சொல்லி எழுதுவது பேசுவது ஒரு ஊழியமல்லவே அல்ல. இதை முதலாவது புரிந்து கொள்ளுங்கள்.காணி்ககை இந்தத் தளத்தில் கேட்கவில்லை என்பது சந்தோஷம்மதான். ஆனால் எப்படி இந்தத் தளத்தை நடத்துகிறீர்கள்.எந்த வருமானத்திலிருந்து உங்களது பிழைப்பு நடக்கிறது.என்பதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.மேலும் ஒரு அன்பான வேண்டுகோள் தளத்தில் கருத்தைப் பதிவு செய்ய தளத்தப் பார்வையிடும் அணைவருக்கும் அநுமதி அளித்தால் இன்னும் அதிகம் பேருடைய கருத்துக்களை தெரிவி்க்க முனவருவார்கள்.நன்றி.             http://youtube.com/danielpeter2010



-- Edited by daniel on Wednesday 24th of August 2011 06:26:35 AM



-- Edited by daniel on Wednesday 24th of August 2011 06:32:19 AM

__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: ஊழியர் தருகிற கூலிக்கு ஜெபிக்கும் விசுவாசிகள்
Permalink  
 


மீண்டும் பதிவைத் தந்ததற்கு நன்றி சகோதரரே!

//உங்களை முட்டாள் என கூறவில்லை. உங்களது கருத்தைத்தான் அப்படிக் கூறிறேன்.எனவே தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.//

நீங்கள் என்னை முட்டாள் எனக் கூறியதாக நானும் கூறவில்லை; உங்கள் பதிவை நான் தவறாகக் கருதவும் இல்லை. எனது பதிவை மீண்டுமொருமுறைப் படியுங்கள்.

//தாங்களாகவே முன்வந்து ஊழியத்தில் ஏதாவது பணியைச் செய்ய வருகின்றனர்.அதன்பின்னர் ஸ்தாபனம் அவர்களுக்கு சம்பளத்தைத் தருகிறது. அதாவது காணிக்கை தருகிறது.//

உங்களது இக்கருத்து தவறு. எனது நெருங்கின உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “வருமானத்திற்காகத்தான் அவர் ஓர் ஊழிய ஸ்தாபனத்திற்குச் சென்று இம்மாதிரி ஜெபிப்பதாக” நான் அறிந்ததால்தான், அவரது ஜெபத்தை “கூலிக்காக ஜெபிக்கும் ஜெபம்” என விமர்சித்தேன்.

வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் எனும் வசனத்தை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். அந்த வசனத்தை முழுமையாகப் படியுங்கள்.

லூக்கா 10:7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

ஊழியத்தைச் செய்ய ஊர் ஊராகச் செல்பவர்கள், பாத்திரமான (அதாவது தகுதியான) ஒருவரது வீட்டில் தங்கி அவர் கொடுப்பதை வாங்கிப் புசிப்பதைதான் “கூலி” என இயேசு சொல்கிறார். மற்றபடி முகமே தெரியாத ஒருவர், யாரோ ஒருவருக்கு கடிதம் மூலம் ஜெபிக்கச் சொன்ன காரியத்திற்காக ஜெபித்து, அதற்காக சம்பளம் பெறுவதைப் பற்றி இயேசு சொல்லவில்லை.

ஒருவரது தனிப்பட்ட காரியத்துக்காக நாம் ஜெபிக்கிறோம் என்றால், அந்த ஒருவரைக் குறித்தும் அவரது தேவையைக் குறித்தும் நன்கு அறிந்து, அவரது தேவைக்காக ஜெபிப்பது அவசியம்தானா என்பதையும் அறிந்து, அதன்பின்னர்தான் நாம் ஜெபிக்க வேண்டும். மாறாக, A என்பவர் B என்பவரிடம் “எனக்கு வேலை கிடைப்பதற்காக ஜெபியுங்கள்” எனக் கடிதம் மூலம் சொல்ல, அதை B என்பவர் C என்பவரிடம் சொல்லி, “A-ன் தேவைக்காக ஜெபியுங்கள், நான் உங்களுக்கு இவ்வளவு பணம் தருகிறேன்” எனச் சொல்ல, அதன்படி C என்பவர் A க்காக ஜெபிப்பதும் ஜெபிப்பதற்காக சம்பளம் வாங்கிக்கொள்வதும் வேதபோதனைப்படி சரியல்ல.

உண்மையில் A என்பவர் வேலையில்லாத நிலையில்தான் இருக்கிறார் என்பது B-க்கோ C-க்கோ தெரியுமா? ஒருவர் வேண்டுமென்றே தனக்கு வேலையில்லை என பொய் சொல்லி ஒரு கடிதத்தை B-க்கு அனுப்பியிருக்கலாமே!

ஒருவரது உண்மையான நிலையினை நன்கு அறிந்து ஜெபிக்கும் ஜெபம்தான் அர்த்தமுள்ள ஜெபமாக இருக்கும். மாறாக, முகம் தெரியாத யாரோ ஒருவர் சொல்வதை நம்பி, அவர் கேட்டுக்கொண்ட ஒரு பொய்யான காரியத்திற்காக ஜெபிக்கிற ஜெபம் அர்த்தமற்றதாகத்தான் இருக்கும்.

இந்த ஊழியக்காரர்கள் “உங்களுக்காக 24 மணி நேரமும் ஜெபிக்கிறோம், உங்கள் தேவைகளை எங்களிடம் சொல்லுங்கள்” என அறிவிப்பதே வேதாகம நடைமுறைக்கு எதிரானதுதான். அதுவும் தாங்கள் ஜெபிப்பதாக சொல்லிவிட்டு, மற்றொருவரை வேலைக்கு அமர்த்தி சம்பளம் கொடுத்து ஜெபிக்கச் சொல்வது எத்தனை அயோக்கியமானது?

புதியஏற்பாட்டு ஊழியர்களில் யாராவது விசுவாசிகளின் உலக ஆசீர்வாதத்துக்காக ஜெபித்ததாக அல்லது ஜெபிக்கும்படி சொன்னதாக நீங்கள் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது. உலகப்பிரகாரமாக பார்த்தால், விசுவாசிகளின் வியாதிக்காகவும், துன்பத்திற்காகவும் மட்டுமே அவர்கள் ஜெபித்தனர், ஜெபிக்கும்படி ஆலோசனையும் கூறினர். உதாரணம்:

யாக்கோபு 5:13  உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். 14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.

மற்றபடி அவர்களின் ஜெபத்தில் உலகஆசீர்வாதங்களைக் கேட்கவுமில்லை, அவ்வாறு ஜெபிக்கும்படி ஆலோசனை சொல்லவுமில்லை. அவர்களின் ஜெபம் மற்றும் ஜெபஆலோசனைக்கு உதாரணமாக சில வசனங்கள்:

அப்போஸ்தலர் 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, 16 அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, 17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.

அப்போஸ்தலர் 9:40 பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். (விதவைகளின் அழுகையைக் கண்டு அவர்களின் துன்பம் நீங்குவதற்காக, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் அற்புததம் நிகழத்தக்கதாக பேதுரு ஜெபித்தார். அவரது ஜெபம் கேட்கப்பட்டதன் காரணமாக, அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்)

அப்போஸ்தலர் 12:5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். (ஊழியர் பேதுரு துன்பத்திலிருந்து விடுவிக்கப்படும்படி விசுவாசிகள் ஜெபித்தனர்)

அப்போஸ்தலர் 13:2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார். 3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். (ஊழியத்திற்காக சிலரை அனுப்பும்போது ஜெபித்தனர்)

அப்போஸ்தலர் 28:8 புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். (வியாதிப்பட்ட ஒருவனை நேரடியாகப் பார்த்து, அவனுக்காக ஜெபித்து, அவனது வியாதியை உடனடியாக குணமாக்கவும் செய்தார் பவுல்)

ரோமர் 15:30 மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக, 31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும், 32 நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். (என்னென்ன காரியங்களுக்காக அன்றைய விசுவாசிகள் ஜெபித்தனரென்பதை நன்றாகப் பாருங்கள்)

பிலிப்பியர் 4:6  நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். (எந்தக் காரியமானாலும் அதை தேவனுக்குத் தெரியப்படுத்தும்படி பவுல் ஆலோசனை சொல்கிறார்; ஆனால் இன்றைய ஊழியர்களோ எங்களிடம் தெரியப்படுத்துங்கள், நாங்கள் கூலிக்கு ஆள் அமர்த்தி ஜெபித்து, உங்களுக்குப் பதில் சொல்கிறோம் என்கின்றனர்.)

கொலோசெயர் 4:12 உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். (அன்றைய ஊழியக்காரர்கள் எதற்காகப் போராடி ஜெபித்தனர் என்பதை உற்றுப் பாருங்கள்)

1 தீமோ. 2:1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; 2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். (இது ஒரு பொதுவான ஜெபம்; இப்படி ஜெபிக்கச் சொன்னதற்கான காரணங்களை உற்றுப் பாருங்கள்)

1 தெச. 3:10 உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.

இவை போக புதியஏற்பாட்டை நன்றாகப் படித்துப் பாருங்கள். இந்நாட்களில் ஊழியர்கள் ஜெபிப்பதைப் போலவோ, சம்பளம் வாங்கி ஜெபிப்பதைப் போலவோ, உலகஆசீர்வாதத்திற்காக ஜெபிப்பதைப் போலவோ அன்றைய ஊழியர்கள்/விசுவாசிகள் யாராவது ஜெபித்தார்களா என்பதை நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.

//காணி்க்கை இந்தத் தளத்தில் கேட்கவில்லை என்பது சந்தோஷம்தான்.//

ஆனால் கடந்த பதிவில் நான் நன்கொடை கேட்பதாக எப்படி எழுதினீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

//ஆனால் எப்படி இந்தத் தளத்தை நடத்துகிறீர்கள்.எந்த வருமானத்திலிருந்து உங்களது பிழைப்பு நடக்கிறது.என்பதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.//

இந்த விவாததளம் நடத்துவதற்கு பணம் எதுவும் தேவையில்லை, இது ஒரு இலவச தளம். ஆனால் Become Perfect என்ற பெயரிலான எனது இணையதளத்திற்கு வருடத்திற்கு சுமார் ரூ.1000 செலவாகிறது. இந்த செலவையும் “பூரண சற்குணராகுங்கள்” எனும் எனது பத்திரிகைக்கான செலவையும் எனது குடும்பத்தின் வருமானத்தின் மூலம்தான் சந்திக்கிறேன். எனது குடும்பத்தின் உலகத்தேவையை எந்த வருமானத்தின் மூலம் சந்திக்கிறேனோ, அதே வருமானத்தின் மூலம்தான் இவ்வூழியத் தேவைகளையும் சந்திக்கிறேன். மற்றபடி யாரிடமும் இதுவரை காணிக்கை எனச் சொல்லிக் கேட்டதில்லை; அப்படிக் கேட்பவன் ஒரு மெய்யான ஊழியக்காரன் அல்ல என உறுதியாகக் கூறுவேன்.

ஒருசிலர் எனது பத்திரிக்கைக்காக ரூ.50, 100 என அவ்வப்போது அனுப்புவதுண்டு. அதையும் வேண்டாம் எனச் சொன்னாலும் அவர்கள் அனுப்புகின்றனர். அப்படி அனுப்புவது எனது பத்திரிக்கைக்கு ஆகிற செலவில் அதிகபட்சம் 10% இருக்கலாம்.

//மேலும் ஒரு அன்பான வேண்டுகோள். தளத்தில் கருத்தைப் பதிவு செய்ய தளத்தப் பார்வையிடும் அணைவருக்கும் அநுமதி அளித்தால் இன்னும் அதிகம் பேருடைய கருத்துக்களை தெரிவி்க்க முனவருவார்கள்.//

தளத்தில் உறுப்பினராகி தாராளமாகக் கருத்தைத் தெரிவிக்கலாம். இதுதான் பொதுவாக எல்லா விவாதமேடைகளிலும் நடைமுறையாக உள்ளது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

திரு.டேனியல் அவர்களே,தாங்கள் கொடுத்துள்ள லிங்க் மூலம் உங்களுடைய செய்திகளில் சிலதை பார்வையிட்டேன்;அதில் நீங்களும் பணத்துக்காகவே பேசுவது வெளிப்படையாகவே தெரிகிறது;நீங்கள் மக்களுடைய நலனுக்காக பிரார்த்தனை செய்ய அவர்கள் உங்களுக்கு தங்கள் சம்பாத்தியத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை மாத்திரமல்ல,முழு மாத சம்பளத்தையே தரவேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்துகிறீர்கள்,இது நியாயமா..?

http://www.youtube.com/user/danielpeter2010

 



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நீண்ட நாட்களுக்குப் பின் பதிவைத் தந்துள்ள சகோ.ஆர்யதாசனுக்கு நன்றி.

உங்கள் கேள்விக்கு சகோ.டேனியல் விரைவில் பதில் தருவார் என நம்புகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Newbie

Status: Offline
Posts: 1
Date:
ஊழியர் தருகிற கூலிக்கு ஜெபிக்கும் விசுவாசிகள்
Permalink  
 


எங்கள் அன்பின் பரலோக தகப்பனே உம்மை நன்றியுள்ளதோடு துதிக்க ஸ்தோத்திரிக்க கொடுத்த கணப்பொழுதிற்காக நன்றி அப்பா நன்றி நன்றி

தேவனுக்கு ஊழியம் செய்யும் உண்மை ஊழியர்களும் இப்பூவுலகில் இருக்கிறார்கள்

அப்பா நீங்க உங்க பிள்ளைகளுக்கு செய்த செய்யப்போகின்ற சகல ஆசிர்வாதங்களுக்கும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து உம்மை பணிவுடன் தொழுதுக்கொள்கிரோம்

நன்றி அப்பா
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க


__________________
R.S.A.Nadar
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard