இறைவன் தள நிர்வாகி இறைநேசன், ஒரு பதிவில் இவ்வாறு எழுதியுள்ளார்.
//இந்த உலகம் தோன்றியதில் இருந்து எந்த ஒரு மூலையில் யார் ஒருவரால் செய்யப்படும் காரியமும் இறைவனுக்கு தெரிந்தே நடைபெறுகிறது. அவரின்றி இந்த உலகில் எதுவும் இல்லை. இவ்வாறிருக்கையில், பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துகொண்டு அதற்கு உள்ளேயா? வெளியேயா? என்று பார்ப்பது அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன்.//
அவரது இப்பதிவை, குறிப்பாக “பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துக்கொண்டு” எனும் சொற்றொடரை சிலர் கடுமையாக விமர்சித்து கண்டித்துள்ளனர். குறிப்பாக சகோ.சில்சாம் தனது வழக்கமான பாணியில் அர்ச்சனை செய்துள்ளார்.
இறைவன் தளத்தில் ஏற்கனவே வந்த பல பதிவுகளின் அடிப்படையில் பார்க்கையில், சகோ.இறைநேசனின் தற்போதைய பதிவு அத்தனை ஆச்சரியமானதல்ல.
பிற மத புத்தகங்களின் கருத்துக்கள் வேண்டாம் என நான் கூறவில்லை. ஆனால் வேதாகமக் கருத்துக்களை தியானிக்கையில், வேறு எந்த புத்தகத்தின் கருத்தைக் கொண்டு வேதாகமக் கருத்தை நிலைநாட்ட முயல்வதும் அல்லது வேதாகமக் கருத்திற்கு எதிரான கருத்தைக் கூறுவதும் சரியல்ல என்பதே எனது கருத்து. இக்கருத்தை ஏற்கனவே அத்தளத்தில் நான் கூறியுள்ளேன். ஆகிலும் இறைவன் தளம் தனது போங்கை மாற்றவில்லை.
தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் இறைவன் தளப் பதிவு நிச்சயம் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்குமுரியதுதான். ஆனால், அந்த விமர்சனம் மற்றும் கண்டனங்களுக்கு பதில் தரும் வண்ணம் விக்கிரக ஆராதனை என்றால் என்ன எனும் திரியில் சகோ.சுந்தர் கூறியுள்ள பின்வரும் கருத்துக்கள் மிகவும் சரியானதே.
//தேவன் மேலுள்ள வைராக்கியத்தை தவிர ஒரு நபியின் மேலோ அல்லது ஒரு புத்தகத்தின் மேலோ அல்லது எந்த ஒரு பொருளின் மேலோ வைத்திருக்கும் வைராக்கியம் எல்லாமே விக்கிரக ஆராதனையே சாரும் என்பதை அறியவேண்டும்.//
//நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை ஆராய்ந்து, அதன்படி வாழவே தேவனால் அந்த வேதம் தரப்பட்டுள்ளதே அன்றி, என் வேதம் பெரியதா உன்னுடையது பெரியதா என்று போட்டிபோட அல்ல!//
//நீங்கள் எத்தனை வேத புத்தகத்தை படித்தாலும் அதன்படி வாழவில்லை என்றால் அந்த புத்தகத்தால் உங்களுக்கு பலன் எதுவும் இல்லை. அப்படி வேதத்தின்படி தேவனின் வார்த்தைகளின்படி வாழ்பவன் அவ்வளவு சீக்கிரம் பிறரை பழிக்கவும் மாட்டான்.//
//ஆண்டவராகிய இயேசுவை சோதிக்க வந்த பிசாசானது வேதபுத்தகத்தில் இருந்து பல வசனங்களை சுட்டிக்காட்டி கேள்விகளை கேட்டது. அதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் "இவ்வளவு வேதஞானம் உள்ள ஒருவனை "பிசாசு" என்று வேதம் ஏன் குறிப்பிடுகிறது, இயேசு ஏன் அவனை பார்த்து ‘அப்பாலே போ சாத்தானே’" என்று கூறினார் என்று ஆச்சர்யப்பட தோன்றும்.
வேதாகமம் புத்தகமாக உருவாகவும் அது உலகெங்கும் பரவவும் அனேக தடைகளை சாத்தான் உண்டாக்கினான்; பல உயிர்களை பலிகொண்டான்; இறுதியில் பல காரியங்களை செய்தும் பருப்பு வேகாத சாத்தான் இப்பொழுது ஒரு புது யுக்தியை கையில் எடுத்துகொண்டான்!
என்ன தெரியுமா?
"நான் வேதபுத்தகத்தை பத்திரமாக பாதுகாக்க போகிறேன் என்பதுதான்!”
வேதத்தை ஒருவன் கையில் வைத்திருப்பதாலோ அல்லது அதை கரைத்து குடித்து மனப்பாடம் செய்வதாலோ அல்லது அதை பத்திரமாக ட்ரெங்கு பெட்டியில் மூடி பாதுகாப்பதாலோ அல்லது பிறரிடம் அதைப்பற்றி பெருமையாகப் பேசுவதாலோ அவனுக்கு எந்த பலனும் நேர்ந்துவிடப்போவது இல்லை. அதில் உள்ள வார்த்தைகள் நம் வாழ்வில் கிரியை செய்து, நம் வாயிலும் உன் செயலிலும் வெளிப்பட்டால் மட்டுமே நமக்கும் சாத்தனுக்கும் வேறுபாடு தெரியும்.//
ஆம், வேதாகமத்தின் மீது வைராக்கியம் காட்டுவதில் பயனில்லை; அதில் கூறப்பட்டுள்ள போதனைகளின்படி நடப்பதில் வைராக்கியம் காட்டுவதுதான் பயன்தரும்.