நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதபாரக/பரிசேயரின் நீதியைவிட அதிக நீதி


Militant

Status: Offline
Posts: 830
Date:
வேதபாரக/பரிசேயரின் நீதியைவிட அதிக நீதி
Permalink  
 


தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில் நான் பதித்த பதிவின் சில கருத்துக்களுக்கு சில்சாம் என்பவர் எதிர்வாதம் வைத்துள்ளார்.

அவரது பல வாதங்கள் விதண்டா வாதங்களாகவும், தனிப்பட்டவர்களை நேரடியாக தரக்குறைவாக விமர்சிப்பவைகளாகவும் இருந்துள்ளதால், அவரோடு வாதம் செய்வதை நான் நிறுத்தியிருந்தேன்.

காரணமே இல்லாமல் நித்திய ஜீவன் தளத்தை விஷ ஜந்துவின் தளம் என்று அவர் விமர்சித்ததை வாசகர்கள் அறிவார்கள். தற்போதுகூட தமிழ் கிறிஸ்தவ தளத்தில் சம்பந்தமே இல்லாமல் என்னை ஒற்றைக் கண்ணன் என்றும் மாலைக் கண்ணன் என்றும் விமர்சித்துள்ளார். ஆகிலும் ஒரு முக்கியமான வாதத்தையும் அப்பதிவில் அவர் வைத்துள்ளார். அந்த வாதத்திற்கு நான் கண்டிப்பாக பதில் சொல்ல கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஆகிலும் எனது பதில் வாதம், தமிழ் கிறிஸ்தவ தளத்தின் அந்தத் திரியின் தலைப்பிற்கு சம்பந்தமில்லாதது என்பதால், நித்திய ஜீவன் தளத்தின் இத்திரியில் எனது எதிர்வாதத்தை வைக்கிறேன்.

தமிழ் கிறிஸ்தவ தளத்தில் சில்சாம் எழுதியது:
//மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1. இந்த வசனம் யூதருக்காகச் சொன்னதா, புறசாதியினருக்குச் சொன்னதா?

2. அவர்கள் (வேதபாரகர், பரிசேயர்) என்னவெல்லாம் செய்து தேவநீதியினையடைய முயற்சித்தார்களோ அதைவிட அதிகமாக நாமும் செய்யவேண்டுமென்பது ஆண்டவர் சொல்வது சரிதானே?

3. அதில் ஒன்றாக தசமபாகம் வராதா? நான் வாங்கக் கேட்பதாக நினைத்து வாதிடுவதாக எண்ணவேண்டாம், கொடுக்க நினைப்பவனுடைய மனநிலையிலிருந்து பாருங்கள்;//


இதுவரை சில்சாம் எதிர்வாதமாகத் தந்த பல வாதங்களில் இந்த வாதத்தைத்தான் மிகமிகப் பொருத்தமானதும் உருப்படியானதுமான வாதமாக நான் கருதுகிறேன்.

அவரது முதல் கேள்விக்கான பதில்:

மத்தேயு 5-7 அதிகாரங்களின் போதனை, திரளான ஜனங்களின் மத்தியில் போதிக்கப்பட்டதாகும் (மத்தேயு 5:1; 7:29). ஆயினும் தமது சீஷர்களிடம்தான் இயேசு போதித்தார் என நாம் புரிந்துகொள்வதற்கேதுவாக மத்தேயு 5:2 மற்றும் லூக்கா 6:20 வசனங்கள் காணப்படுகின்றன. சீஷர்கள் என்றால் அவர் தெரிந்துகொண்ட 12 சீஷர் மட்டுமின்றி இன்னும் அதிகமானோரையே குறிக்கும் என்பதற்கு லூக்கா 6:13,17 வசனங்கள் ஆதாரமாயுள்ளன. எனவே இயேசுவின் சீஷராக இருக்க யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் மத்தேயு 5-7 அதிகாரங்களின் போதனை உரித்தாகும் என நான் கருதுகிறேன்.

2-ம் கேள்விக்கான பதில்:

ஆண்டவர் சொல்வது சரிதானே என்ற கேள்வி எதற்கு? நிச்சயமாக வேதபாரகர் பரிசேயரின் நீதியைக் காட்டிலும் நமது நீதி அதிகமாக இருந்தால்தான் நாம் பரலோக ராஜ்யம் பிரவேசிக்க முடியும். இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் எனது தளத்திலும் பிற தளங்களிலும் கூறி வருகிறேன். ஆனால் நீங்களோ என்னை துர் உபதேசக்காரர் எனச் சொல்லி என்னைக் குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரையை விரைவில் வெளியிடப்போவதாக ஒரு பதிவில் கூறியுள்ளீர்கள்.

தமிழ் கிறிஸ்தவ தளத்தில் சில்சாம் கூறியது:

//இதுபோன்ற துருபதேசக்காரர் அவ்வளவு சீக்கிரத்தில் முழு பொட்டலத்தையும் அவிழ்த்துக்காட்டுவதில்லை; மூடி மறைத்து மர்மமாகவே பேசுவார்கள்; நிறைய கேள்விகள் கேட்பார்கள்; ....

இதுபோல அநேகர் இருந்தாலும் எனக்குத் தெரிந்து மூன்று பேரைக் குறித்து வைத்திருக்கிறேன்; அதில் முதலிடம் பெறுவது கோவை பெரியன்ஸ் எனும் வேதாகம மாண‌வர் குழுவினர்;
http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=1

இரண்டாவது நித்திய ஜீவன் எனும் கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலம் மட்டுமே இரட்சிப்படைய முடியும் என்று போதிக்கும் பெரியவர்;
http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=1

மூன்றாவது சகல கனமும் மகிமையும் பொருந்திய அடிக்கடி ஆவியாவனவருடன் டூர் அடிக்கும் சுந்தர்.பீ
http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=1

இவர்களைக் குறித்து இன்னும் விவரமாக ஒரு ஆய்வு கட்டுரையினை விரைவில் சமர்ப்பிக்க முயற்சிக்கிறேன்.//


கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலமே இரட்சிப்படைய முடியும் என நான் போதிப்பதாகச் சொல்லி என்னை துர் உபதேசக்காரன் என வர்ணித்த நீங்கள், இப்போது நீங்களாகவே நீதியைச் செய்தால்தான் பரலோகராஜ்யம் என இயேசு கூறியதை மேற்கோள் காட்டி எனது (துர்?) உபதேசத்திற்கு ஆதரவான வசனத்தை வெளியிட்டுள்ளீர்கள். (ஒருவேளை இரட்சிப்பு வேறு, பரலோக ராஜ்யம் பிரவேசித்தல் வேறு என்று சொல்லி காமெடி பண்ணுவீர்களோ என்னவோ?)

3-ம் கேள்விக்கான பதில்:

வேதபாரகர் பரிசேயரின் நீதிகளில் ஒன்றாக தசமபாகம் வராதா எனக் கேட்கிறீர்கள். இக்கேள்விக்கு ‘வரும்’ என்பதுதான் நேரடியான பதில். ஆனால் இப்பதில் எனக்குப் போதும் என நீங்கள் கருதினால், நான் ஏற்கனவே சொன்னபடி, உங்கள் தசமபாகத்தை எருசலேம் தேவாலயத்தில்தான் நீங்கள் படைக்க வேண்டும். வேறெங்கு படைத்தாலும் அது வேதபாரகர் பரிசேயரின் நீதியாக இல்லாமல், அதைவிட குறைவானதாகத்தான் இருக்கும்.

எருசலேம் தேவாலயம் சென்று தசமபாகம் படைப்பது தற்போது சாத்தியப்படுமா என நீங்கள் நினைத்தால், எனது பதிலுக்கான மேலும் சில விளக்கங்களைப் படியுங்கள்.

வேதபாரகர் பரிசேயரின் நீதியைவிட அதிக நீதி தேவை எனக் கூறிய இயேசு, அதற்கு உதாரணமாகக் கூறின சில நீதிகளைக் கவனியுங்கள்.

1. கொலை செய்யாதிருத்தல் (மத்தேயு 5:21); 2. விபசாரம் செய்யாதிருத்தல் (27); 3. மனைவியைத் தள்ளிவிடாதிருத்தல் (31); 4. பொய்யாணையிடாதிருத்தல் (33); 5. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் (38); 6. தனக்கடுத்தவனை சிநேகித்து, சத்துருவைப் பகைத்தல் (43).

தேவனின் கற்பனைகள் எல்லாவற்றிற்குள்ளும் தேவநீதி அடங்கியுள்ளது. கொலை செய்யாதே எனும் கற்பனைக்குள், கொலை செய்யக்கூடாது என்ற சட்டம் மட்டுமில்லாமல், கொலை செய்ய வேண்டும் எனும் எண்ணம் மனதில் இருக்கக்கூடாது எனும் நீதியும் அடங்கியுள்ளது. ஆனால் வேதபாரகர் பரிசேயரோ, சட்டத்தை மட்டும் செயல்படுத்திவிட்டு, அதன் உள்ளேயுள்ள தேவநீதியை அறியாமற்போனார்கள்.

ஒருவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் இருந்துகொண்டு, சட்டம் சொல்கிறதே என்பதற்காக தன்னை அடக்கிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?

விபசாரம் செய்யவேண்டும் என்ற எண்ணம் மனதை ஆக்ரமிக்க இடங்கொடுத்துவிட்டு, சட்டத்திற்காக தன் சரீரத்தை கட்டுப்படுத்துவதில் என்ன பயன்? சரீரம் களங்கப்படாவிடினும், இருதயம் களங்கப்பட்டுவிடுகிறதல்லவா?

வேதபாரகரும் பரிசேயரும் தேவகற்பனைகளின் நீதிகளை மனதளவில் கைக்கொள்ளாமல் புறம்பாக மட்டுமே கைகக்கொண்டனர். தசமபாகம் விஷயத்திலும்கூட, ஒற்தலாம் வெந்தயம் போன்றவற்றில் “சட்டப்படி” பத்திலொன்றை கொடுத்துவிட்டு, இரக்கம் இல்லாதவர்களாக இருந்தனர் (மத்தேயு 23:23). ஆனால் தசமபாகக் கட்டளையின் உள்ளே அடங்கியிருக்கும் தேவநீதி, இரக்கம்தான் என்பதை அவர்களும் உணரவில்லை, நம்மில் பலரும் உணரவில்லை.

தசமபாகம் என்பது ஏதோ தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கை என்றுதான் நம்மில் பலரும் கருதி வருகிறோம். ஆனால் தசமபாகம் என்பது ஆகாரத்திற்கு வழியில்லாத லேவியர்களுக்கும் திக்கற்றவர்களுக்குமே உரித்தானதாகும்.

லேவியர்கள் தேவப்பணியை முழுநேரமும் செய்வதால்தான் ஆகாரத்திற்கு வழியில்லாதிருக்கின்றனர்; எனவே லேவியருக்குக் கொடுப்பது மறைமுகமாக தேவனுக்குக் கொடுப்பதாகிறது.

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான் என்ற வசனத்தின்படி, ஏழைகளின் ஆகாரத்தேவைக்காக கொடுப்பதும் மறைமுகமாக தேவனுக்குக் கொடுப்பதாகிறது.

இவ்விதமாக தசமபாகம் என்பது, ஆகாரத்திற்கு வழியில்லாதவர்கள்மீது இரக்கம் பாராட்டி, அவர்களின் பசியைப் போக்குவதற்கு தேவனால் நியமிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவாகும். மனதில் இரக்கம் இல்லாமல், குறைந்த பட்ச அளவை மட்டும் நிறைவேற்றுவது, தேவநீதியை நிறைவேற்றுவதாகாது. வேதபாரகரும் பரிசேயரும் குறைந்தபட்ச அளவை நிறைவேற்றுவதில்தான் நோக்கமாயிருந்தனரேயொழிய, அதில் அடங்கியுள்ள இரக்கம் எனும் தேவநீதி இல்லாதிருந்தனர்.

எனவே தசமபாக விஷயத்தைப் பொறுத்தவரை, வேதபாரகர் பரிசேயரின் நீதியைக்காட்டிலும் நம் நீதி அதிகமாயிருக்க வேண்டுமெனில், ஆகாரத்திற்கு வழியில்லாதவர்களிடம் இரக்கம் எனும் நீதி ஊற்றுப்பெருக்கெடுத்து ஓட வேண்டும். அந்த இரக்கத்தின் காரணமாக தசமபாகம் மட்டுமின்றி நமக்குண்டானவைகளை விற்றுகூட பிச்சையிட நாம் தயாராயிருக்கவேண்டும்.

லூக்கா 12:33  உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.

ஆனால் இம்மாதிரி போதனைகளைச் சொன்னால், தங்களுக்கு எப்படி பொக்கிஷம் சேரும் எனக் கருதும் நம் சபைத் தலைவர்கள், இம்மாதிரி போதனைகளை விட்டுவிட்டு, தசமபாகத்தை எங்கள் ஆலயத்தில் படையுங்கள் என்று சொல்கின்றனர்.

தசமபாகத்தை தேவாலயத்தில் படைக்கத்தான் வேண்டும், அப்போதுதான் வேதபாரக பரிசேயரின் நீதியைவிட அதிக நீதி செய்வதாக ஆகும் எனக் கருதுபவர்கள்/போதிப்பவர்கள், வேதாகமம் கூறுகிற ஒரே தேவாலயமான எருசலேம் தேவாலயத்தில் படைப்பார்களாக/படைக்கும்படி போதிப்பார்களாக.

அது சாத்தியமல்ல/அவசியமல்ல என நினைப்பவர்கள், புதிய ஏற்பாடு கூறுகிற தேவாலயமாகிய நம்மிடம் (1 கொரி. 3:16,17; 2 கொரி. 6:16) ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகத்தை நாமே வைத்துக்கொண்டு, ஆகாரத்திற்கு வழியில்லாதோருக்குக் கொடுப்போமாக. புதிய ஏற்பாட்டில் தசமபாகம் எனும் அளவைப் பற்றி இயேசு கூறாமல், இரக்க சிந்தையையே வலியுறுத்துவதால், நம் இரக்க சிந்தையின் அளவுக்குத் தக்கதாக, எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்போமாக. இதுவே வேதபாரகர் பரிசேயரின் நீதியைக் காட்டிலும் அதிக நீதியாகும்.

எனது இப்பதில் சில்சாமை திருப்திப்படுத்தாது என்றே கருதுகிறேன். ஆகிலும், பல விஷயங்களில் அவரை மாற்றி வரும் தேவன், இவ்விஷயத்திலும் அவரை மாற்றுவார் என நான் விசுவாசிக்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard