மத்தேயு 7:6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
விவாத மேடைத் தளமான தமிழ் கிறிஸ்தவ தளம், இவ்வசனத்திற்கு ஓர் உதாரணமாகிப் போனது.
கிறிஸ்தவ தளம் எனும் பெயரில் உருவான இத்தளத்தின் பிரதான நோக்கங்கள் இஸ்லாமியருடன் வாதம் செய்வது மற்றும் வேதாகமம் கூறாத திரித்துவக் கொள்கையை பிரஸ்தாபப்படுத்துவது ஆகியவைகளே.
அக்கால வேதபாரகர் பரிசேயரைப் போல பாரம்பரியச் சேற்றில் சிக்கிக்கிடக்கும் தமிழ் கிறிஸ்தவ தளத்தில், சமீபகாலமாக சில பதிவுகளை நான் கொடுக்கவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. “கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு” என எசேக்கியேல் 2:7 கூறுகிற பிரகாரம் தேவவார்த்தைகளாகிய வேதவசனங்களைச் சொல்லி அவற்றின் விளக்கங்களை மூலபாஷை அர்த்தத்தின்படி எடுத்துக்கூறினேன். ஆனால் அத்தளத்தின் நிர்வாகமும், நிர்வாகத்தோடு கூட்டணியாகச் செயல்படும் பல உறுப்பினர்களும், எங்களுக்கு மூலபாஷையும் வேண்டாம், மூலக்கருத்தும் வேண்டாம், எங்கள் பாரம்பரியக் கருத்து ஒன்றே போதும் எனும் விதமாக, நான் சொன்ன வசனங்களையும் அவற்றின் கருத்துக்களையும் உதாசீனம் செய்துவிட்டனர்.
இத்தோடு விட்டால் பரவாயில்லை; வசனங்களையும் வசன ஆதாரத்தோடு கூடிய கருத்துக்களையும் சொன்ன என் மீது அநாகரீமாகப் பாய்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனமும் செய்தனர்.
மத்தேயு 7:6-ல் இயேசு சொன்னபடி, வசனமாகிய முத்துக்களைப் காலில் போட்டு மிதித்த அவர்கள், முத்துக்களைப் போட்ட என்மீது எப்படியெல்லாம் பாய்ந்தனர் என்பதை பின்வரும் தொடுப்பினுள் சென்று அறியலாம்.
முத்துக்களாகிய வசனங்களை மிதித்து, அவற்றைப் போட்ட என்மீது பாய்ந்ததன் மூலம், மத்தேயு 7:6-ல் கூறப்பட்டுள்ள “பன்றிகளுக்கு” அவர்கள் ஓர் உதாரணமாகிப் போய்விட்டனர்.
இப்பதிவு மூலம் இத்தளத்தினுள் வருகிற அனைவருக்கும் அறைகூவல் விடுக்கிறேன்; எனது பதிவுகள் எத்தளத்தினில் பதிக்கப்பட்டதானாலும் சரி, அவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏதேனும் ஒரு பகுதி “வசனஆதாரம் இல்லாதது அல்லது வசனத்திற்கு எதிரானது” என யாராவது கருதினால், அவர்கள் அப்பகுதியை அப்படியே எடுத்துப்போட்டு தெரிவிக்கலாம். என்மீது தவறிருந்தால் பகிரங்கமாக அது அறிக்கை செய்யப்படும்.
திரித்துவம் திரித்துவம் என வாய்கிழியப் பேசும் அனைவருக்கும் ஓர் அறைகூவல் விடுக்கிறேன். உங்கள் திரித்துவத்தில் மெய்யாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், திரித்துவக் கொள்கைகள் என்னென்ன என்பதை தகுந்த வசன ஆதாரத்துடன் விபரமாக எழுதி எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும்படி கேட்கிறேன். பிறரோடு கலந்தாலோசிக்காமல் திரித்துவம் பற்றி நீங்கள் அறிந்ததை அப்படியே எழுதி அனுப்பும்படி கேட்கிறேன். அதன்பின் உங்கள் கொள்கை விபரீதங்கள் என்னென்ன என்பதை வசனஆதாரத்துடன் நான் வெளிப்படுத்திக் காட்டுகிறேன்.
திரித்துவ கொள்கையை மறுப்பவர்களுடன் நான் வாதம் செய்ததில்லை
"பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்னானம் கொடுங்கள்" என இயேசு சொல்லியிருக்கிறாரே. குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தொழத்தக்க தெய்வமாக நீங்கள் கருதுவதில்லை அதுதானே உங்கள் பிரச்சனையே.
சங்கீதம் 2:12 மற்றும் 110:1 ல் குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்?
பிதாவினிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என இயேசு சொல்ல காரணம்.
josephsneka wrote: //திரித்துவ கொள்கையை மறுப்பவர்களுடன் நான் வாதம் செய்ததில்லை "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்னானம் கொடுங்கள்" என இயேசு சொல்லியிருக்கிறாரே. குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை தொழத்தக்க தெய்வமாக நீங்கள் கருதுவதில்லை அதுதானே உங்கள் பிரச்சனையே.
சங்கீதம் 2:12 மற்றும் 110:1 ல் குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்?
பிதாவினிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என இயேசு சொல்ல காரணம்.//
அன்பான சகோதரரே!
இதுவரை திரித்துவ கொள்கையை மறுப்போருடன் வாதம் செய்யாத நீங்கள், தற்போது வாதத்தைத் துவக்கியுள்ளீர்கள், நன்றி. தொடர்ந்து வாதம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் பதில் வாதம் வைக்கிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்கள்:
சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
யோவான் 14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
இவ்வசனங்களில், குமாரன் எனக் கூறப்பட்டவரும், ஆண்டவர் எனக் கூறப்பட்டவரும் “இயேசுகிறிஸ்துவே” என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதன் மூலம் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். நாம் மிகமிக நிதானமாக விவாதிக்கலாம்.
தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கும்படி இயேசு சொன்னதற்குக் காரணம் கேட்கிறீர்கள். கலக்கத்தில் இருந்த தமது சீஷர்களை தைரியப்படுத்தி ஊக்கமூட்டும்வண்ணமாக அவ்வாறு இயேசு கூறினார். குறிப்பாக, பிதாவின் வீட்டில் அவர்களுக்கு தாம் வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போவதை (வசனம் 2,3) அவர்கள் விசுவாசிக்கும்படியாக, அவ்வாறு கூறினார் எனக் கருதுகிறேன். உங்களுக்குத் தெரிந்த வேறு காரணம் இருந்தால் அதைச் சொல்லுங்கள்.
josephsneka wrote: //பன்றிகள் என நீங்கள் விளித்திருப்பது என்ன விதமான சகிப்புத்தன்மை ஐயா?//
எனது பதிவு மிகத் தெளிவாக உள்ளது. பன்றிகள் என நான் யாரையும் நேரடியாக விளிக்கவில்லை. மத்தேயு 7:6 கூறுகிற பன்றிகளுக்கு உதாரணமாகிப் போன .... என்றுதான் கூறியுள்ளேன். முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் போட்டால் அவை எப்படி போட்டவர் மீது பாய்ந்து அவரைப் பீறிப்போடும் என இயேசு சொன்னாரோ, அதேவிதமாகத்தான் வசனமாகிய முத்துக்களைப் போட்ட என்மீது தமிழ் கிறிஸ்தவ தள உறுப்பினர்களில் பலர் பாய்ந்தனர். அதை நீங்களும் வேடிக்கை பார்த்தீர்கள். தள நிர்வாகமும் வேடிக்கை பார்த்தது. எனவே “பன்றி, முத்து” உதாரணத்திற்கு, தமிழ் கிறிஸ்தவ தளம் பொருத்தமாகிப்போனது. இவ்வுண்மையைக் குறிப்பிட்டுதான் இத்திரியைத் துவக்கினேன்.
தமிழ் கிறிஸ்தவ தள உறுப்பினர்களில் பலர் என்மீது எப்படியெல்லாம் பாய்ந்தனர் என்பதை பின்வரும் தொடுப்புகளுக்குள் சென்று ஒருமுறை நிதானமாகப் படியுங்கள்.
வசனத்தை மதிக்காமல் வசனத்தைச் சொன்னவர் மீது பாய்வோரை மத்தேயு 7:6-ல் இயேசு சொன்ன பன்றிகளுக்கு ஒப்பிடுவது 100-க்கு 100 நியாயமானதே. இப்படியெல்லாம் ஒப்பிடக்கூடாதென்றால், இயேசு அந்த உதாரணத்தைச் சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை.
வசனத்தை மதியாதோர் மீது சகிப்புத்தன்மை காட்டவேண்டிய அவசியமில்லை. ஒருவேளை நான் வசனத்திற்கு எதிராக ஒரு கருத்தைச் சொல்லியிருந்தால், அதை கண்டிப்பாக எனக்கு எடுத்துக் காட்டுங்கள்.
என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று தானே இயேசு அறிவிக்கிறார், காணக்கூடாத இறைவனை மோசே முதலான உத்தமர்களுகே தரிசனம் கிடைக்க கொடுத்துவைக்கவில்லை, இயேசு அன்றி பிதாவினிடத்தில் ஏறிப்போகமுடியும் என நம்புகிறீர்களா? ஆச்சரியம் தான்.
யார் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஏறுவான், உமது கூடாரத்தில் தங்குவான் என தாவீதே அங்கலாய்க்கிறானே.
தனது இறுதி கட்டளையாக நீங்கள் உலகெமெங்கும் புறப்பட்டு போய் சகல ஜாதியினரையும் சீஷராக்கி, பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ் நானம் கொடுங்க்கள் என இயேசு சொல்லியிருக்கிறாரே. திரித்துவ நிலையை இயேசுவே அறிவிக்கிறாரே பின்னர் ஏன் இந்த குழப்பம்.
சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என இஸ்ரவேலர் ஆச்சரியப்படும் அளவுக்கு சவுலை ஆவியானவர் ஆட்கொண்டதால் தான் அவன் தீர்க்கதரிசனம் சொன்னான். ஆவியானவர் அப்போதே இருந்ததற்கான அடையாளம் தானே இது. குமாரன் இருந்த நிலையை தான் சங்கீதத்தில் உள்ள வசனங்க்களில் காண்கிறோமே, அப்புறம் திரித்துவத்தை நம்புவதற்கு என்ன தயக்கம்?
தாங்கள் எனக்கும் கொல்வினுக்குமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளீர்கள், அதில் பின்னூட்டம் இடும் வசதி இல்லாததால், இதில் எனது பதிவை அளிக்கிறேன், வால்டர் மார்டின் அவர்கள் எழுதிய துர் உபதேசங்கள் என்ற புத்தகத்தை வாசித்திருக்கிறீர்களா என தெரியவில்லை. அதில் துர் உபதேசங்க்களையும் அது எவ்வாறு வேதத்தில் இருந்து மாறுபாடான சத்தியமாக உருவெடுக்கிறது என்பதை தெளிவாக விளக்கியிருப்பார். எனக்கு தெரிந்தவற்றை பாயிண்டு பாயிண்டாக திறம்பட எடுத்துவைக்கும் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் இல்லீங்க...
திரித்துவம் குறித்து சில கருத்துக்களை/கேள்விகளை சகோ.ஜோசப்ஸ்னேகா வைத்துள்ளார். அதைக் குறித்து இத்திரியில் விவாதிக்க வேண்டாம் என நான் கருதுவதால் வேறொரு திரியைத் துவக்கி அதில் எனது பதிகளைக் கூறியுள்ளேன். அத்திரியில் தனது விவாதத்தைத் தொடரும்படி சகோ.ஜோசப்ஸ்னேகாவை வேண்டுகிறேன்.
josephsneha wrote: //தாங்கள் எனக்கும் கொல்வினுக்குமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளீர்கள், அதில் பின்னூட்டம் இடும் வசதி இல்லாததால், இதில் எனது பதிவை அளிக்கிறேன், ....//
அன்பான சகோதரரே!
தங்கள் வசதிக்காக, தாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவை பின்னூட்டமிடும் வசதி உள்ள திரிக்கு மாற்றியுள்ளேன். தங்கள் பதிவுக்கான பதில்களை அத்திரியில் கூறியுள்ளேன். நீங்களும் உங்கள் கருத்தை அதே திரியில் பதியுங்கள்.