பாவம் என்றாலே அதற்கு அர்த்தம் தீமைசெய்வதும், அசுத்தமாக நடப்பதும்தான் எனும் கருத்து நம்மில் பலரிடம் காணப்படுகிறது. ஆனால், ஒருவன் தீமை செய்யாமலிருந்தால் மட்டும் போதாது, நன்மையும் செய்வது அவசியம் என்றே வேதாகமம் போதிக்கிறது.
மத்தேயு 7:19-ம் வசனம்தான் இத்திரியின் தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இவ்வசனம் இயேசுகிறிஸ்து நேரடியாகச் சொன்ன ஒரு வசனமாகும். தமது வழக்கமான பாணியில், உவமானமாக இவ்வசனத்தை இயேசு கூறியுள்ளார். இந்த உவமானம் மிகமிக எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது.
நல்ல கனி கொடாத ஒரு மரம் எப்படி வெட்டப்பட்டு அக்கினியில் போடப்படுகிறதோ, அவ்விதமாகவே நன்மை செய்யாத அனைவரும் நரகமெனும் அக்கினிக்குள் போடப்படுவார்கள் என இயேசு கூறுகிறார்.
இயேசு இப்படிச் சொல்வது நம்மில் பலருக்குப் புதுமையாக இருக்கலாம். கொலை செய்தல், விபசாரம் செய்தல், களவு செய்தல், பொய்சாட்சி கூறுதல், பிறர் பொருளை இச்சித்தல் என்பது போன்ற தீமைகளைச் செய்வதுதானே பாவம்? அப்படியிருக்க, நல்ல கனி கொடாதவன் (அதாவது நன்மை செய்யாதவன்) வெட்டுண்டு அக்கினியில் போடப்படுவான் என எப்படி இயேசு கூறுகிறார்?
நன்மை செய்யாதவர்கள் அக்கினிக்குள் போடப்படுவார்கள் எனில், நன்மை செய்யாதிருப்பதும் ஒரு பாவமாகுமா?
இக்கேள்விகளுக்குப் பதில்காண, பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
ஆதியாகமம் 4:7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;
நீதிமொழிகள் 3:27 நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
யாக்கோபு 4:17 ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
நன்மை செய்யாதிருப்பதும் பாவமே என இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. நன்மை செய்யாதவர்களின் கதி என்னாகும் என்பதைத்தான் மத்தேயு 7:19-ல் இயேசு கூறுகிறார்.