TRUTH SPEAKS தளத்தில் “திரித்துவம், திரியேகம் என்றால் என்ன?” எனும் தலைப்பைக் கொண்ட ஒரு திரியில் சகோ.சந்தோஷ் பல அபத்தங்களைக் கூறியுள்ளார். அவற்றை இத்திரியில் பார்ப்போம்.
ஒருவர் எப்பேற்பட்ட சிந்தனையாளராக இருந்தாலும் வேதாகமம் சொல்லாத திரித்துவத்தை அவர் ஆதரிக்க/நிரூபிக்க முனையும்போது அவர் எப்படியெல்லாம் நிலைதடுமாறிவிடுகிறார் என்பதற்கு சகோ.சந்தோஷின் பின்வரும் அபத்தங்கள் ஆதாரமாயுள்ளன.
அபத்தம் 1. நோவா கால ஜலப்பிரளயத்திலிருந்து ஜனங்கள் காக்கப்படுவதற்கு தேவன் கொடுத்த வழி, அவர்கள் பேழைக்குள் செல்லவேண்டுமாம்.
இந்த அபத்தம் சம்பந்தமாக சந்தோஷ் எழுதியது:
//நோவாவின் காலத்தில் மனிதர்களை காப்பாற்ற அவர் கொடுத்த வழியானது
நோவா-பேழை என்பதன் வழியாய் அவரை அடைவதாய் இருக்கிறது.//
சந்தோஷின் இக்கூற்று கடைந்தெடுத்த அபத்தமாக உள்ளது. தேவன் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்ததன் நோக்கம், நோவாவின் குடும்பத்தைத் தவிர மற்ற அனைத்து மனிதரையும் அழிப்பதற்கே. நோவாவின் குடும்பத்தைத் தவிர வேறு யாரையும் “பேழை” மூலம் காக்கவேண்டும் என்பது தேவனின் திட்டத்தில் இல்லை. நோவாவிடம் பேழையைச் செய்யச் சொன்னபோது தேவன் நோவாவிடம் சொன்னது:
ஆதியாகமம் 6:17,18 வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
ஜலப்பிரளயத்திலிருந்து நோவாவின் குடும்பத்தையும் சில உயிரினங்களையும் பேழை மூலம் காப்பாற்றுவதுதான் தேவனின் திட்டமேயன்றி, சந்தோஷ் கூறுவதுபோல், மற்ற யாரையும் காப்பாற்ற பேழை மூலம் ஒரு வழியை தேவன் கொடுக்கவில்லை.
பேழையைக் குறித்த சந்தோஷின் அபத்தமான கற்பனை: //இப்போது நோவா ஒருவரை நோக்கி ஏக தேவன் என்னை பேழை செய்ய சொல்லியுள்ளார். இந்த உலகம் பெரு வெள்ளத்தால் மூழ்க போகிறபடியால் நான் சொல்வதை கேட்டு பேழைக்குள் வாருங்கள் என சொல்கிறார் என வைத்து கொள்வோம்.
அந்த மனிதர் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் நீ என்ன தேவனா? நான் உனக்கு செவி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எனக்கு தேவனை பற்றி நன்றாக தெரியும். நான் அவர் ஒருவருக்குதான் செவி கொடுப்பேனே தவிர உன்னையும், நீ செய்த பேழையையும் நான் மதிக்க மாட்டேன் என சொல்வாரானால் அவர் அழிந்து போவார்.//
சந்தோஷ் சொன்னபடி நோவா ஜனங்களிடம் பிரசங்கிக்கவில்லை, அதாவது ஜனங்கள் தப்பிப்பதற்கான வாய்ப்போ சந்தர்ப்பமோ நோவா மூலம் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
சந்தோஷ் சொல்வது: //இங்கே ஏக தேவன் என்பவர் ஒருவராய் இருந்தாலும் அவர் மனிதனிடம் நோவா-பேழை என்ற வழியாய் இடைபடுகிறார்.
இதுதான் அந்த காலத்திய திரித்துவம்
நோவா-பேழை-ஏக தேவன்//
எப்படியொரு அபத்தமான திரித்துவத்தை சந்தோஷ் புகுத்துகிறார் என்பதை நல்சிந்தனையாளர்கள் கவனிப்பார்களாக.
ஜலப்பிரளயத்தால் வரப்போகும் அழிவைக் குறித்து சொல்லி, நோவா பிரசங்கித்தார் என்பது மெய்தான். ஆனால் அவரது பிரசங்கம் மனந்திரும்புதலைக்குறித்துதான் இருந்திருக்குமேயொழிய, பேழைக்குள் பிரவேசிக்கச் சொன்னதாக நிச்சயம் இருந்திருக்காது. ஒருவேளை நினிவே ஜனங்களைப் போல் யாராவது மனந்திரும்பியிருந்தால், அவர்களை பேழைக்குள் அனுமதிப்பது குறித்து தேவன் நோவாவிடம் சொல்லியிருக்கக்கூடும்.
மற்றபடி, ஜனங்களை பேழைக்குள் பிரவேசிக்கச் சொல்லி பிரசங்கிக்கும்படி தேவன் கூறவுமில்லை, நோவா அவ்வாறு பிரசங்கிக்கவுமில்லை.
ஜனங்கள் அழிவிலிருந்து தப்பிக்கவேண்டுமெனில், அவர்கள் செய்யவேண்டிய ஒரே காரியம் மனந்திரும்புதல் மட்டுமே.
சந்தோஷ் சொல்கிறபிரகாரம் “நோவா-பேழை” என்ற வழியாய் எந்த மனிதனிடமும் தேவன் இடைபடவில்லை. இப்படி ஒரு அபத்தமான கற்பனை நல்ல சிந்தனையாளரான சந்தோஷின் மூளையில் எப்படி உதயமானதோ தெரியவில்லை.
அபத்தம் 2: மனந்திரும்பாமலும் தேவனை அறியாமலும் ஒருவன் பேழைக்குள் ஏறினால்கூட, அவன் அழிவிலிருந்து காக்கப்பட்டுவிடுவானாம்.
இந்த அபத்தம் சம்பந்தமான சந்தோஷின் வார்த்தைகள்: //ஏக தேவனை அறியாத ஒருவர் இருக்கிறார் என வைத்து கொள்வோம். இப்போது அவர் நோவா தனக்கு தெரிந்தவராய் இருப்பதால் நோவாவை நம்பி பேழையில் ஏறுகிறார் என கொள்வோம். இவர் அழிவிலிருந்து காப்பாற்றப்படுவார். ஏக தேவனை பற்றி தெரியாதிருந்தும் அவர் ஏற்படுத்தின வழிக்கு மரியாதை கொடுத்ததால் அவர் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார்.//
சந்தோஷின் கற்பனையில் உதித்த இதே அபத்தம்தான் இன்றும் தொடர்கிறது. ஒருவன் மனந்திரும்பவும் வேண்டியதில்லை, மெய்த்தேவனை அறியவேண்டியதுமில்லை, இயேசுவை மட்டும் தெய்வமாக நம்பி ஞானஸ்நானம் எடுத்தால்போதும், அவன் இரட்சிக்கப்பட்டுவிடுவான் எனும் கருத்துதான் இந்நாட்களில் நம் மத்தியில் உலவுகிறது.
மனந்திரும்பாத ஒருவனை எப்படி பேழைக்குள் தேவன் அனுமதிப்பார்? பாவம் செய்த அத்தனை பேரையும் அழிப்பதற்காகத்தானே ஜலப்பிரளயம், அப்படியிருக்க பாவத்தை விட்டு மனந்திரும்பாமல் “பேழை” எனும் விக்கிரகத்தை நம்பி வருவோரை தேவன் காப்பாற்றினால், விக்கிரமமாகிய பேழையையல்லவா தேவன் முக்கியப்படுத்துகிறவராக இருப்பார்?
அபத்தம் 3: மோசேயை வணங்க விருப்பமில்லாமல், ஏக தேவனையே வணங்குவேன் என பார்வோன் சொன்னால், அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதாம்.
இந்த அபத்தம் சம்பந்தமாக சந்தோஷ் எழுதியது: //பார்வோனுக்கு தேவனாக மோசேயை ஏற்படுத்தினேன் என ஏக தேவன் கூறுகிறார். இதன் பொருள் என்னவெனில் தன் அரண்மனையில் வளர்ந்த தன்னை போல மனிதனான மோசேயை பார்வோன் மரியாதை செய்ய வேண்டும், வணங்க வேண்டும் என்பதே. ஏனெனில் மோசே தேவனுடைய கருவியாக அங்கே இருக்கிறான். அவனுக்கு செய்யும் மரியாதை தேவனுக்கு செய்யும் மரியாதையாகும். மோசேயை வணங்க விருப்பமில்லாமல் நான் ஏக தேவனையே வணங்குவேன் என பார்வோன் சொல்வான் எனில் அது ஏற்று கொள்ளப்பட மாட்டாது.//
சந்தோஷின் இப்பதிவின் கடைசி வரியை சற்று கவனியுங்கள். இக்கருத்து எத்தனை அபத்தமானது என்பதற்கு பின்வரும் வசனங்கள் ஆதாரமாயுள்ளன.
யாத். 7:14-18 கர்த்தர் மோசேயை நோக்கி: ... காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, ... நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, ....அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர். இதோ, என் கையில் இருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி, நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
யாத். 9:27,28 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர். இது போதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான்.
எகிப்தியரும் பார்வோனும் மெய்யான தேவனை அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் தேவனின் நோக்கம். அதுவேதான் மோசேயின் விருப்பமாகவும் இருந்தது. எனவேதான் பார்வோனுடன் ஒவ்வொருமுறை மோசே பேசினபோதும் தேவனைக் குறித்து சொல்லி, தேவனுக்கு ஆராதனை செய்ய ஜனங்களை அனுப்பவேண்டும் என்றே கூறினார்.
பார்வோனும் ஒவ்வொரு வாதை நிகழ்ந்த போதும் அதை தேவனே செய்தார் என்பதை அறிந்து, வாதையிலிருந்து தன் தேசத்தை விடுவிக்கும்படி தேவனிடம் ஜெபிக்கும்படி மோசேயிடம் கூறினான்.
எகிப்துக்கு எதிரான அத்தனை வாதைகளையும் யுத்தத்தையும் தேவனே நடத்தினார் என்பதை மோசேயும் பார்வோனிடம் தெளிவாகக் கூறினார்; பார்வோனும் அதை நன்றாகவே அறிந்திருந்தான். எனவே மோசேயல்ல, தேவன்தான் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார், அவரே மகிமைப்படுத்தவும்பட்டார்.
ஆனால் சந்தோஷோ, மோசேயை பார்வோன் வணங்க வேண்டும் என்பதே தேவனின் நோக்கம் என்பதுபோலவும், தேவனை அவன் வணங்கினால்கூட அதை தேவன் ஏற்கமாட்டார் என்பது போலவும் கூறுகிறார். என் மகிமையை வேறொருவனுக்கும் கொடேன் என்று சொன்ன தேவன், தமக்குரிய மகிமையை மோசேக்கு பார்வோன் செலுத்த வேண்டும் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.
இவ்விஷயத்தில் சந்தோஷின் கருத்து, முழுக்க முழுக்க அவரது அபத்தமான கற்பனையே.
தேவன் மோசேயை பார்வோனுக்குத் தேவனாக்கியது உண்மைதான். ஆனால் அதன் அர்த்தம், பார்வோனை ஆட்டிப்படைக்கும் தேவனாக, பார்வோனை தனக்குக் கீழ்ப்படியச் செய்யும் தேவனாக மோசே இருக்கவேண்டும் என்பதே. ஆகிலும் தமக்கு மட்டுமே உரிய வணக்கத்தை, மோசேக்கு பார்வோன் செலுத்த வேண்டும் என அவர் ஒருபோதும் நினைக்கவில்லை; அப்படி அவர் நினைக்ககூடியவருமில்லை. தமக்குரிய வணக்கத்தை வேறு யாருக்கும் எவரும் கொடுக்கக்கூடாது என்பதே தேவனின் திட்டவட்டமான எண்ணம். இஸ்ரவேலருக்குத் தந்த 10 கற்பனைகளில் முதல் கற்பனையில் தேவன் இதை தெள்ளத்தெளிவாகச் சொல்லி கட்டளையிட்டுள்ளார்.
அப்படியிருக்க, மோசேயை வணங்காத பார்வோன் தேவனை வணங்கினால், அதை அவர் ஏற்கமாட்டார் என சந்தோஷ் சொல்வது அபத்தத்திலும் அபத்தம்.
சந்தோஷுக்கு ஒரு கேள்வி.
நோவா-பேழை காரியத்தில், ஒரு திரித்துவத்தைச் சொல்லி, அதன் அங்கங்களாக “நோவாவையும் பேழையையும்” சொன்ன நீங்கள், மோசே-பார்வோன் விஷயத்தில் மோசேக்கு அடுத்தபடியாக திரித்துவத்தின் 3-வது அங்கமாக எதைக் கூறுவீற்கள்?
ஒருவேளை ஒரு கோலின் மூலமாகவே மோசே அற்புதங்களைச் செய்ததால், அக்கோலையே திரித்துவத்தின் 3-வது அங்கமாகச் சொல்வீர்களா?
அப்படி நீங்கள் சொல்லக்கூடியவர்தான். அது மட்டுமல்ல, மோசேயின் கோலை பார்வோன் கைப்பற்றிவிட்டால், பார்வோனும் அவன் தேசமும் அழிவிலிருந்து காக்கப்பட்டிருக்கும் என்றுகூட நீங்கள் சொல்வீர்கள்.
திரித்துவம் பேசுவோர் திரித்து பேசுவதால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பெசிவிடுகிறார்கள்!! ஜீவன் உள்ள தேவனின் ஒரு அங்கம் அல்லது ஒரு பகுதி நோவா கட்டிய பேழை என்பது ஒரு புதிய விளக்கம்!! இது வரையில் ஐஸ்கட்டி, தண்ணீர், நீராவி, மின்சாரம், கம்பி, பல்பு, ஒளி, உஷ்னம், போன்றவற்றை வைத்து திரித்துவம் சொல்லி வந்தார்கள், சந்தோஷ் ஒரு புதிய யுக்தியை கையாண்டுவிட்டார், ஏனென்றால் நோவாவில் பேழை என்பது வேதத்திலிருக்கிறது என்று சொல்லுவதற்கு வசதியாக இருக்குமே!!
தேவன் வேறு, கிறிஸ்து வேறு, என்று வேதம் முழுவதும் சொல்லியிருந்தாலும், இவர்கள் இவர்களின் முயற்சியில் அவர்களை ஒன்று படுத்த விரும்புகிறார்கள்!! ஆனாலும் காலம் வருகிறது, அனைவரும் சத்தியத்தை தெரிந்துக்கொள்ளும் காலம்!! அது வரை இப்படியும் இன்னும் மோசமான நிலையை நோக்கி தான் கிறிஸ்தவம் போய்க்கொண்டு இருக்கும்!! ஏனென்றால் இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லியும் கிறிஸ்தவர்கள் அல்ல, இவர்கள் கிறிஸ்துவை அறிவதில்லை!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
சமீபத்தில் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து எனும் தலைப்பில் சகோ.சந்தோஷ் தனது தளத்தில் ஒரு திரியைத் துவக்கியுள்ளார்.
அதில் வேதவசனங்களோடு தனது கற்பனை வளத்தைக் கலந்து என்னென்னவெல்லாமோ கூறியுள்ளார். வேதவசனங்களுக்கு விளக்கம் கொடுப்பதில் தவறில்லைதான். ஆனால் நாம் நம்புகிற ஒரு கோட்பாட்டை நிரூபிப்பதற்காக ஒரு வசனத்திற்கு நம் மனம்போல் விளக்கம் கொடுப்பதென்பது தவறு என்பதோடு அதை வேதப்புரட்டு என்றும் சொல்லலாம்.
நல்ல சிந்தனைவாதியான சந்தோஷ் இம்மாதிரி வேதப்புரட்டைச் செய்து பிறருக்கு இடறல் செய்வதை மனம் பொறுக்கவில்லை.
சந்தோஷ் புரட்டு செய்த ஒரு வசனம்:
ஆதியாகமம் 28:18,19 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்;
இவ்வசனத்தை சந்தோஷ் புரட்டிக் கூறுவது:
//தூக்கத்திலே ஒரு சொப்பனத்தை கண்டு, அதிகாலையில் தன் தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து தூணாக நிறுத்தி அதற்கு எண்ணெய் வார்த்து அதை வணங்குகிறான்.//
யாக்கோபு எண்ணெய் வார்த்தார் என்று மட்டுமே வசனம் சொல்லுகிறது; ஆனால் சந்தோஷோ, எண்ணெய் வார்த்து வணங்கியதாகக் கூறுகிறார்.
ஏன் இந்தப் புரட்டு? அக்கல்லை இயேசுவுக்கு முன்னடையாளமாக சொல்லவிருப்பதால், அக்கல்லை எப்படி யாக்கோபு வணங்கினாரோ அதேவிதமாய் நாமும் இயேசுவை வணங்க வேண்டும் என சந்தோஷ் கூறவருகிறார்.
அவரது கருத்து மாபெரும் அபத்தம் என்பதோடு, மற்றவர்களை இடறச் செய்யும் மாபெரும் வேதப்புரட்டுமாகும்.
எண்ணெய் வார்ப்பதற்கும் வணங்குவதற்கும் வித்தியாசம் இல்லையா? இப்படி சற்றும் பொறுப்பற்ற விதமாக சந்தோஷ் விளக்கம் தருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
சவுலையும் தாவீதையும் சாமுவேல் அபிஷேகம் பண்ணும்போதுகூட அவர்கள்மீது எண்ணெய் வார்த்துதான் சாமுவேல் அபிஷேகம் செய்தார்; இதனால் சவுலும் தாவீதும் வணக்கத்திற்குரியவராகிவிடுவார்களா?
1 சாமுவேல் 10:1 அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா?
1 சாமுவேல் 16:13 அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்;
இவர்களைப் போல் இன்னும் பலரும் எண்ணெய் வார்க்கப்பட்டு தேவப்பணிக்கென அபிஷேகம் பண்ணப்பட்டதாக வேதாகமம் கூறுகிறது.
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர் என சங்கீதம் 23:5-ல் தாவீது சொன்னதைப்போல் நாமுங்கூட சொல்லலாம்.
தன் தலைக்கு வைத்திருந்த கல்லை யாக்கோபு தூணாக நிறுத்தி அபிஷேகம் செய்தது அக்கல்லை வணங்குவதற்காக அல்ல, தேவன் தனக்கு தரிசனமான இடத்தை வருங்காலத்தில் அடையாளம் காண்பதற்காகவே. ஒரு விசேஷித்த இடத்தை பின்னாளில் அடையாளம் காண்பதற்கு கல்தூணை நாட்டுவது அக்கால வழக்கம். வேதாகமத்தில் இதற்கு ஆதார வசனங்கள் உள்ளன (ஆதியாகமம் 35:20; யோசுவா 4:9).
தேவன் தனக்குத் தரிசனமான இடத்தில் ஓர் அடையாளத் தூணை யாக்கோபு நிறுத்தியதால்தான், அவர் சீகேமிலிருந்து தன் மனைவி பிள்ளைகளுடன் வருகையில், பெத்தேல் எனப்பட்ட அவ்விடத்தை எளிதில் அடையாளங்காணமுடிந்தது (ஆதியாகமம் 35:3).
தேவன் ஒருவரைத் தவிர வேறு யாரையும் எதையும் நமஸ்கரிக்கவோ சேவிக்கவோ வேண்டாம் என பின்னாளில் கட்டளையிட்ட தேவனின் கற்பனைக்கு விரோதமாக, ஒரு கல்தூணை யாக்கோபு வணங்கியிருப்பாரா? சந்தோஷின் கற்பனையில் உத்தித்த இக்காரியம் அபத்தத்திலும் அபத்தமாகும்.
நான் கூட ஏதோ யாக்கோபு மூலமாக தேவன் சிலைவழிப்பாட்டிற்கு ஓ.கே சொல்லிவிட்டார் என்று எழுதியிருப்பார் என்று நினைத்தேன்!! எப்படி எல்லாம் இல்லாத வசனங்களை கொடுத்து, எப்படியாவது இயேசு கிறிஸ்துவை தொழுத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்கிற இவர்கள் என்னங்கள் தான் இதில் வெளிப்படுகிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை!!
வசனம் சொல்லுகிறபடியே இவர்கள் ஏற்றுக்கொண்டால், அதை எப்படி ஜனங்களிடத்தில் சொல்லுவோம் என்கிற ஒரு அச்சம் இருக்கும், இத்துனை வருடங்கள், இவர் தான் அவர், அவர் தான் இவர் என்றும் ஆகவே கிறிஸ்துவை சர்வவல்லமையுள்ள தேவனாக தொழுலாம் என்று சொல்லிவிட்டு, இப்போது அதை எப்படி மாற்றுவது என்கிற அச்சம் வேறு இவர்களுக்கு!!
இத்துனை வீண் விளக்கங்களை கொடுப்பதற்கு பதில் வசனம் சொல்லுவதை ஏற்றுக்கொண்டு போக வேண்டியது தானே!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17