லேவியராகமம் புத்தகத்தில் பலியிடும்படி தேவனிட்ட கட்டளைகள் பலவற்றை நாம் பார்க்கலாம். உதாரணம்: லேவியராகமம் 4:2-4.
ஆனால் தேவதாசனாகிய தாவீதோ “பலியை நீர் விரும்புகிறதில்லை” என சங்கீதம் 51:16-ல் சொல்கிறார். பரிசுத்தஆவியின் ஏவுதலால் சங்கீதங்களைப் பாடின தாவீது சொல்வது, தேவனின் கட்டளைக்கு முரண்படுவதாக உள்ளது. அதாவது தேவன் விரும்பாத ஒரு காரியத்தை, கட்டளையாகக் கொடுத்ததைப் போலுள்ளது. வேதாகமத்தில் ஏன் இந்த முரண்பாடு? சற்று ஆய்வு செய்வோம்.
இவ்விஷயத்தில் தெளிவு பெற, தேவனின் கட்டளைக்கு முரண்பாடாக தாவீது சொன்னதாகக் தோன்றுகிற வசனத்தை அடுத்த சில வசனங்களைப் படிப்போம்.
16-ம் வசனத்தில் “தேவன் பலியை விரும்புகிறதில்லை” எனச் சொன்ன தாவீது, 19-ம் வசனத்தில் “பலிகளில் நீர் பிரியப்படுவீர்” எனச் சொல்கிறார். அவ்வாறெனில் தனது கூற்றுக்கு தாவீதே முரண்படுகிறார் சொல்கிறார் என்றாகுமா? நிச்சயமாக அல்ல.
16-ம் வசனத்தை தாவீது சொன்ன சூழ்நிலைக்கும், 19-ம் வசனத்தை தாவீது சொன்ன சூழ்நிலைக்கும் வேறுபாடு உள்ளது.
பாவத்திற்கு பரிகாரமாக பலியைச் செலுத்தினால் தேவன் சாந்தமாகிவிடுவார் என்ற எண்ணத்திலோ அல்லது ஒரு நெருக்கடியான நேரத்தில் பலி மூலம் தேவனின் மனதை குளிர்வித்து அவரது சகாயத்தைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்திலோ பலி செலுத்துவதை தேவன் நிச்சயமாக விரும்புவதில்லை.
சவுல் அப்படித்தான் தனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது, தேவனுக்குப் பலி செலுத்தி அவரைப் பிரியப்படுத்தி அவரது சகாயத்தைப் பெற்றுவிடலாம் என எண்ணி (சாமுவேல் மூலம் தேவனிட்ட கட்டளையை மீறி) பலி செலுத்தினார் (1 சாமுவேல் 13:1-14).
மற்றொரு வேளையிலும் தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போன சவுல், பலியைக் காரணமாகச் சொல்லி தனது கீழ்ப்படியாமையை நியாயப்படுத்தினார். அப்போது கீழ்ப்படிதலைப் பார்க்கிலும் பலி பிரியமாயிருக்குமோ என சாமுவேல் சொன்னார் (1 சாமுவேல் 15:22).
தாவீதைப் பொறுத்தவரை அவர் பாவம் செய்து தேவனின் கோபத்திற்கு ஆளான நிலையில் இருந்தார். அப்போது பலியைச் செலுத்தினால் தேவன் அதில் பிரியப்பட்டு, தனது பாவத்தை மன்னித்துவிடுவார் என தாவீது நினைத்தால், அது நிச்சயம் சரியல்ல. அந்த நேரத்தில் தேவனுக்குப் பிரியமானது ஆடு மாடுகளின் பலியல்ல, நொறுங்குண்ட ஆவியின் பலிதான் என்பதை தாவீது அறிந்து அதையே அறிக்கை செய்தார் (சங்கீதம் 51:17).
தேவனின் கட்டளைப்படி பாவத்திற்குப் பரிகாரமாக மிருகங்களின் பலியைச் செலுத்த நினைப்பவன், முதலாவது தன் பாவத்தினிமித்தம் மனஸ்தாபப்பட்டு இருதயத்தை நொறுக்கவேண்டும். அதைத்தான் தாவீது செய்தார். நொறுங்குண்ட இருதயத்தை தேவனுக்குப் பலியாகச் செலுத்துவிட்டு, தேவநீதிப்படி (அல்லது தேவநியமனத்தின்படி) மிருகங்களின் பலியைச் செலுத்தினால் அந்த பலியில் தேவன் நிச்சயமாகப் பிரியப்படுவார். அதைத்தான் சங்கீதம் 51:19-ல் தாவீது கூறுகிறார்.
எனவே பலியிடும் கட்டளையைத் தந்த தேவன், அதை விரும்புகிறதில்லை என்று சொல்லமுடியாது. பாவத்தை உணராமல், தன் இருதயத்தை நொறுக்காமல், நொறுங்குண்ட ஆவியைப் பலியாகச் செலுத்தாமல், வெறுமனை மிருகங்களின் பலியைச் செலுத்தினால் தேவன் அதை விரும்பமாட்டார்.
இருதயத்தை நொறுக்கி பலி செலுத்தினபின், மிருகங்களின் பலியைச் செலுத்தினால் தேவன் நிச்சயமாக அதில் பிரியப்படுவார்.
பின்குறிப்பு:மிருகங்களின் பலியைக் காட்டிலும் மேன்மையான நிரந்தரமான ஒரே பலியை இயேசுகிறிஸ்து தாமே முன்வந்து செலுத்திவிட்டதால், இனி மிருகங்களின் பலி தேவையில்லை.