ஆபேலைக் காயீன் கொலை செய்தபோது, தேவன் இடைபட்டு காயீனைக் கண்டித்து தண்டிக்கவும் செய்தார். பின்னர் இஸ்ரவேலருக்கு இட்ட 10 கற்பனைகளில் ஒரு கற்பனையாக கொலை செய்யாதிருப்பாயாக எனும் கற்பனையை தேவன் கூறினார். இப்படியாகச் சொன்ன தேவன், தனிப்பட்ட மனிதரை மற்றும் சிறு குழந்தைகள் உட்பட்ட பெரும் ஜனக்கூட்டத்தைக் கொல்லும்படி சில மனிதரிடம் சொல்வதையும் பல வசனங்களில் நாம் காணலாம் (உ-ம்: 1 சாமுவேல் 15:2,3). தேவனின் இச்செயல் முரண்பாடானதா? இக்கேள்விக்கான பதிலை இப்பதிவில் பார்ப்போம்.
தேவனின் செயல் நிச்சயம் முரண்பாடானது அல்ல.
மனிதன் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக செய்யும் கொலை மனிதனின் நியாயந்தீர்ப்பாகஉள்ளது. தேவன் சில காரணங்களுக்காக ஒரு மனிதனை அல்லது ஜனக்கூட்டத்தைக் கொல்லும்படி சொல்வது தேவனின் நியாயத்தீர்ப்பாக உள்ளது. இந்த 2-க்குமான வித்தியாசத்தை நாம் அறியாததால்தான் தேவனின் செயல் நமக்கு முரண்பாடாகத் தோன்றுகிறது.
தனிப்பட்ட எந்த மனிதனுக்கும் பிறனை நியாயந்தீர்த்து கொலை செய்வதற்கு உரிமையில்லை. இதன் அடிப்படையில்தான் கொலை செய்யாதிருப்பாயாக எனத் தேவன் கட்டளையிட்டார். ஆனால் தமது நீதியான நியாயத்தீர்ப்பின் அடிப்படையில் எந்தவொரு மனிதனையோ அல்லது ஜனக்கூட்டத்தையோ கொல்வதற்கு தேவனுக்கு உரிமையுள்ளது. அந்த உரிமையை சில வேளைகளில் தமது தாசர்களாகிய மனிதர்கள் மூலமும் தேவன் செயல்படுத்துவதுண்டு.
இதனால்தான் கொலை செய்யாதிருப்பாயாக என மனிதரிடம் ஒருபுறம் கட்டளையிட்ட தேவன், அதே மனிதரிடம் சிலரைக் கொல்லும்படியும் கூறினார். தேவனின் இச்செயல் எவ்விதத்திலும் முரண்பாடானதல்ல.
இப்போது நமக்கு சில கேள்விகள் எழும்பலாம்.
கொலை செய்யாதே எனகட்டளையிட்ட தேவன், தனிப்பட்ட காரணங்கத்திற்காக சீமேயி, யோவாப் போன்ற சிலரைக் கொல்லும்படி தாவீது சொன்னதையும், அதை அவரது மகனாகிய சாலொமோன் செயல்படுத்தியதையும் எப்படி அனுமதித்தார்?
தனிப்பட்ட காரணத்திற்காக தனது சகோதரனாகிய அதோனியாவை சாலொமோன் கொன்றதை தேவன் எப்படி அனுமதித்தார்?
குறிப்பிட்ட இக்கொலைகளின் காரணங்களை மேலோட்டமாகப் பார்த்தால், அவை தனிப்பட்ட காரணங்களுக்கான கொலைகள் என்பது போலத் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல. தாவீது மற்றும் சாலொமோனின் ராஜ்யபாரம் எனும் தேவஊழியத்தின் ஒரு பகுதியாகவும், அந்த ஊழியத்தில் அவர்கள் செயல்படுத்தும் நியாயத்தீர்ப்பாகவும்தான் அக்கொலைகளை அவர்கள் செய்தனர்.
இதைக் குறித்த விரிவான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.