இத்திரியின் நோக்கம் திரித்துவம் என்றால் என்ன, அதன் கோட்பாடுகள் என்ன என்பதை திரித்துவத்தை நம்புபவர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்பதே. இத்திரியில் பதிவுசெய்த உங்களை கொல்வின் மற்றும் ஜான் ஆகியோரோடு சேர்த்து “குட்டையை குழப்பியதாகக்” கூறியதும் உங்களுக்கு என்மேல் வருத்தம் வந்துவிட்டது. எனவே என்னை “நீர், உம்மை” என்பது போன்ற வார்த்தைகளில் எழுதுகிறீர்கள். பரவாயில்லை, எத்தனையோ பேர் எழுதும் கடினமான வார்த்தைகளைக் காட்டிலும் உங்கள் வார்த்தைகள் இதமானதுதான். மேலும் யாரையும் “நீர், உம்மை” என எழுதுவதில் தவறுமில்லை. தேவனையும், இயேசுவையுங்கூட “நீர், உம்மை” எனும் வார்த்தைகளில் நாம் அழைக்கத்தான் செய்கிறோம். நிற்க.
திரித்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கச் சொன்ன இத்திரியில், திரித்துவத்தை நேரடியாக வசன ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லாமல், நீங்கள் எப்படியெல்லாம் குட்டையைக் குழப்பினீர்கள் என்பதை எடுத்துரைக்கிறேன்.
//உதாரணமாக ஏசுவின் ஞானஸ்னானம். அப்போது வானத்தில் இருந்து ஒலித்த குரல், இயேசுவின் மேல் இறங்கிய ஆவியானவர் (புறா வடிவில்). இந்த நிகழ்வில் பிதாவாகிய தேவன், குமாரனாகிய கிறிஸ்து, அவர் மேல் இறங்க்கிய ஆவியானவர் என மூன்று தன்மையுள்ள தேவனை காணலாம்.//
இச்சம்பவத்தில் பிதாவாகிய தேவன், இயேசுவைச் சுட்டிக் காட்டி, “இவர் என்னுடைய நேசகுமாரன்” எனக் கூறினார். அதாவது இயேசுவை “தேவனுடைய குமாரன்” என்றார். இவ்வுண்மையை வேதாகமத்தின் பல வசனங்கள் கூறுகின்றன. இதன் மூலம் திரித்துவக் கோட்பாட்டில் எந்தக் கோட்பாட்டைச் சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை. பரிசுத்தஆவி இயேசுவின் மீது இறங்கியதையும் யாரும் மறுக்கவில்லை. பரிசுத்தஆவி ஒரு ஆள்த்தத்துவமா, ஆள்த்தத்துவமெனில் அவர் ஒரு தேவனா, அவர் பிதாவாகிய தேவனுக்குச் சமமா என்பது போன்ற கேள்விகளுக்கு வசன ஆதாரத்துடன் பதில் சொல்லாமல், “ஒரே நேரத்தில் பிதா இருந்தார், குமாரன் இருந்தார், பரிசுத்தஆவி இருந்தார்” என்று சொல்லி, இது திரித்துவத்தைச் சொல்கிறது என்றால் யாருக்கு என்ன புரியும்? இதை குட்டையைக் குழப்புதல் எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
//எனது விசுவாசம் மிகவும் எளியதாகும் தேவனாகிய கர்த்தர், குமாரனாகிய கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் மூவரும் ஆள்தத்துவமுடையவர்கள் என நம்புவதாகும். திரித்துவம் என்ற வார்த்தை பைபிளில் இல்லை ஒத்துக்கொள்கிறேன், ஆனால் பைபிளில் உள்ள நிகழ்வுகளிலும் வசனங்களிலும் திரியேக கடவுள் உறுதிப்படுத்தப்படுகிறாரே.
ஐயா, எஸ்தர் புத்தகத்தில் கூட கர்த்தரை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை ஆனால் யூதரை காப்பாற்ற அவர் யாருக்கும் புலனாகாத வகையில் செயல்படுவதை காண்கிறோமே. இல்லை இல்லை எஸ்தர் புத்தகத்தில் கர்த்தரை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என அப்புத்தகத்தை ஒதுக்கி வைத்துள்ளீர்களா?
கர்த்தராகிய தேவன்,குமாரனாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள், இவர்களின் முழு தன்மையும் செயல்பாடுகளையும், நமக்கு இருக்கும் அறிவை கொண்டு முழுமையாக கடைத்தேற முடியாது, இது எறும்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க நினைப்பது போலாகும்.//
“பைபிளில் உள்ள நிகழ்வுகளிலும் வசனங்களிலும் திரியேக கடவுள் உறுதிப்படுத்தப்படுகிறாரே” எனச் சொன்னால் போதுமா? திரேயேகக் கடவுள் என்றால் என்னவென்பதையே சொல்லவில்லை, ஆனால் “அவர் உறுதிப்படுத்தப்படுகிறார்” என்கிறீர்கள். சம்பந்தமில்லாமல் எஸ்தர் புத்தகத்தில் கர்த்தரைப் பற்றிக் கூறாவிட்டாலும் அவர் அங்கு செயல்பட்டதாக ஒரு பலகீனமான வாதத்தை வைக்கிறீர்கள். எஸ்தர் புத்தகத்தை ஒதுக்குவதும் ஏற்பதும் அவரவர் விருப்பம். எஸ்தர் புத்தகத்தை ஏற்கத்தான் வேண்டுமென நான் பிடிவாதம் பிடிக்கவுமில்லை, அதை ஏற்பவர்களை நான் குறைசொல்லவுமில்லை, அப்புத்தகம் வேதாகமத்தில் இல்லாவிட்டால் எதுவும் குறையப்போவதுமில்லை.
திரித்துவத்திற்கு விளக்கம் கேட்டால், அதைச் சொல்லாமல், எஸ்தர் புத்தகத்தை ஒதுக்குவதா வேண்டாமா என்ற பிரச்சனையைக் கிளப்பினால், இது குட்டையைக் குழப்புதலல்லாமல் வேறென்ன?
//இயேசுவை வணங்குவதாலும், தேவனுடைய குமாரன் அவர், நமது பாவங்களுக்காக மரித்தார், குற்றமில்லாத தனது ரத்தத்தை கல்வாரியில் ஊற்றினார், பாவ பரிகார பலியான அவரது ரத்தத்தால் கழுவப்பட்டாலேயன்றி மீட்பு இல்லை. இதை விசுவாசிப்பதால் நரகமே மிஞ்சினாலும் எனக்கு கவலையில்லை. அதுபோக திரித்துவமாகிய தேவன், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்தாவி என்ற மூன்று ஆள்தத்துவமுடனேயே இருக்கிறார் என்பது இயேசுவின் யோர்தான் ஞானஸ் நானத்திலேயே தெளிவாக விளங்குகிறது.
உங்களை பொறுத்தவரை திரித்துவதேவனை அறிக்கை செய்வது பாவமா? வேதத்தில் திரித்துவம் என்ற வார்த்தை இல்லை என்பதை தவிர வேறு பல நிகழ்வுகளில் பிதா, குமாரன், ஆவியானவர் வெளிப்படுத்தப்பட்டுள்ளனரே.//
இயேசுவை வணங்குவதும் வணங்காததும் உங்கள் விருப்பம். இயேசுவை வணங்குவதால் “நீங்கள் நரகம் போவதற்கும்” திரித்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? இயேசுவை வணங்குவதால் நீங்கள் நரகம்கூட போவதற்குத் தயாராக இருப்பதால், நாங்கள் திரித்துவத்தை ஏற்றுவிட வேண்டுமா? நாங்கள் திரித்துவத்தை ஏற்பதென்றால், அதற்கான விளக்கம் எங்களுக்கு வேண்டுமே, அதைத்தானே மீண்டும் மீண்டும் கேட்கிறேன்; விளக்கத்தைச் சொல்லாமல், நீங்கள் நரகம் போவதைப்பற்றியெல்லாம் சொன்னால், அதைக் குட்டையைக் குழப்புதல் எனச் சொல்லாமல், வேறென்ன சொல்ல?
“திரித்துவமாகிய தேவன், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்தாவி என்ற மூன்று ஆள்தத்துவமுடனேயே இருக்கிறார்” என்கிறீர்கள். அதாவது திரித்துவ தேவனில் பிதாவாகிய தேவன் ஒரு அங்கம் என்கிறீர்கள். ஆனால் “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு” எனப் பவுல் கூறியதை எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் அதற்கு பதில் சொல்ல மறுக்கிறீர்கள். “பிதாவாகிய ஒரே தேவனை” திரித்துவ தேவனின் ஒரு அங்கம் எனச் சொன்னால், அது குட்டையைக் குழப்புவதைத் தவிர வேறென்ன?
//வேதத்தை ஆராய்கிறோம் ஆராய்கிறோம் என்று சொல்லி கிறிஸ்துவின் இறை தன்மையை மறுதலிக்கும் மிகப்பெரிய உண்மை (!) யை தானே கண்டுபிடித்திருப்பதாக நினைக்கிறீர்கள்.//
இயேசுவின் இறைத்தன்மையை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. ஒரு மனிதனின் மகன் மனிதத்தன்மையில் இருப்பதைப் போல, இறைவனின் மகன் இறைத்தன்மையில்தானே இருப்பார்? இதற்கும் திரித்துவத்திற்கும் என்ன சம்பந்தம்?
இயேசுவின் இறைத்தன்மையை மறுதலிக்காத எங்களை, இயேசுவின் இறைத்தன்மையை மறுதலிப்பவர்களாகச் சொல்வது குட்டையைக் குழப்புவதையன்றி வேறென்ன?
//ஒரு வாதத்துக்கு நமது புறஜாதியினரான சகோதரரை வைத்துக்கொள்வோம், அந்தணர்களான குருக்கள், பூசாரிகள் மூலவருக்கு தீபாராதனை காட்ட கையில் ஒரு தட்டை வைத்திருப்பார்கள். ஆராதனை செய்வது என்றால் வணங்குவது என்றும் தானே பொருள் படும். வணக்கத்திற்குரியவராக மூலவர் இல்லாமல் இருந்தால், இவர்கள் கையில் தட்டை பிடித்துக்கொண்டு, மந்திரம் சொல்லிக்கொண்டு இருக்க தேவையில்லையே.
24 மூப்பர்களும், ஆட்டுக்குட்டியானவரை தங்களுடைய வணக்கத்திற்குரியவராக கருதாதிருந்தார்களானால் அவர்கள் கையில் தூப கலசம் இருக்க தேவையில்லையே, இவ்வளவு ஏன் அந்த கால யூத மார்க்கத்தில் (இப்போது எப்படி என எனக்கு தெரியாது), தேவனுடைய ஆலயத்தில் பிரதான ஆசாரியன் கையில் தூப கலசத்தோடு பிரவேசிக்கிறானே.//
புறஜாதியாரின் வழக்கத்தையெல்லாம் காட்டுகிறீர்கள். அவர்கள் செய்கிற அந்த ஆராதனையெல்லாம் நம் வேதாகமத்தில் கூறப்பட்டவற்றின் அடிப்படையில்தான் என்பதை நீங்கள் அறியீர்கள் போலும். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
எண்ணாகமம் 16:16,17 பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள். 17 உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.
தூபகலசத்தில் தூபவர்க்கம் போட்டு நம் தேவனுக்கு ஆராதனை செய்கிற இம்முறையைப் பின்பற்றித்தான், புறஜாதியாரும் தங்கள் “விக்கிரகங்களுக்கு” ஆராதனை செய்கின்றனர்.
உங்கள் வாதம்: இயேசுவுக்கு முன்பாக 24 மூப்பர்களும் தூபகலசம் வைத்துக்கொண்டு விழுந்தார்களே, அவ்வாறெனில் இயேசுவும் ஆராதனைக்குரியவர்தானே என்பதுதானே? நீங்கள் குறிப்பிடும் வசனத்தை சற்று படிப்போம்.
வெளி. 5:8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: ...
இவ்வசனத்திற்கு விளக்கம் கொடுக்கும்படி மூலபாஷை அர்த்தங்களை எடுத்துச்சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பொற்கலசம் எனும் பதத்திற்கான மூலபாஷை பதம் phile (NT:5357) என்பதாகும். இதன் அர்த்தம்:
phiale (fee-al'-ay); of uncertain affinity; a broad shallow cup ("phial"): KJV - vial என்பதாகும்.
இதே வார்த்தை வெளி. 15:7; 16:1-4,8,10,12,17; 17:1; 21:9 ஆகிய வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள கலசங்களில் தேவகோபாக்கினையும் வாதைகளும்தான் நிறைந்திருந்ததாக அவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே இக்கலசங்கள் யாவும் தேவனை ஆராதனை செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கலசங்கள் அல்ல.
தேவனை ஆராதனை செய்ய பயன்படுத்தப்படும் தூபகலசம் எபிரெயர் 9:4-ல் கூறப்பட்டுள்ளது. அதன் மூலபாஷை பதம் thumiaterion (NT:2369) என்பதாகும். இதன் அர்த்தம்:
thumiaterion (thoo-mee-a-tay'-ree-on) or thumiasterion (thoo-mee-as-tay'-ree-on); from a derivative of NT:2370; a place of fumigation, i.e. the alter of incense (in the Temple): KJV - censer என்பதாகும்.
இப்பதத்தின் derivative பதமான thumiao (NT:2370) எனும் பதத்தின் அர்த்தம்:
thumiao (thoo-mee-ah'-o); from a derivative of NT:2380 (in the sense of smoking); to fumigate, i.e. offer aromatic fumes: KJV - burn incense என்பதாகும்.
இப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே வசனம் லூக்கா 1:9 ஆகும்.
புதிய ஏற்பாட்டில் லூக்கா 1:9 மற்றும் எபிரேயர் 9:4 எனும் இவ்விரு வசனங்கள் மட்டுமே பழையஏற்பாட்டின் ஆராதனைக்கு ஒத்த ஆராதனையைக்கிரிய தூபகலசம் மற்றும் தூபங்காட்டுதலைக் குறிப்பிடுகின்றன.
மற்றபடி தேவகோபாக்கினை மற்றும் வாதைகள் அடங்கிய கலசங்களுக்கும் ஆராதனைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
தேவகோபாக்கினை மற்றும் வாதைகள் அடங்கின கலசங்களைப் போலவே, வெளி. 5:8-ல் கூறப்பட்டுள்ள கலசமும் பரிசுத்தவான்களின் ஜெபங்கள் அடங்கிய ஒரு கலசமாகும். அந்த ஜெபங்களை “தூபவர்க்கங்கள்” என தமிழ் வேதாகமம் குறிப்பிடுவதால், அந்த ஜெபங்கள் அடங்கிய கலசத்தை “ஆராதனைக்குரிய தூபகலசமென” நீங்கள் கருதுகிறீர்கள். நீங்கள் இப்படிக் கருதுவதை மாற்றிக்கொள்ள மறுத்தால் அது உங்கள் விருப்பம். ஆனால் எனது புரிந்துகொள்தல்படி, வெளி. 5:8-ல் கூறப்பட்டுள்ள கலசம், “ஆராதனைக்குரிய கலசம்” அல்ல, பரிசுத்தவான்களின் ஜெபங்கள் நிறைந்த கலசம் மட்டுமே என்பதாகும்.
நம் ஜெபங்களை இயேசுவின் மூலம் ஏறெடுப்பதை வேதாகமம் தடைசெய்யவில்லை, அதை ஆதரிக்கவே செய்கிறது (யோவான் 14:13,14). இதன் அடிப்படையில்தான் இயேசுவின் மூலம் பரிசுத்தவான்களின் ஜெபம் தேவனை அடைவதை வெளி. 5:8 குறிப்பதாக நான் கருதுகிறேன்.
இப்படி மூலபாஷை பதத்தையெல்லாம் சொல்லி விளக்கினால் சிலருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல் வரத்தான் செய்யும். சாத்தானும் அவன் தூதரும் இதுவரை போதித்துவந்த பொய்ப்போதகங்களுக்கு (மூலபாஷை பத விளக்கங்கள் மூலம்) நான் சாவுமணி அடிக்கையில் அவர்களுக்குக் கோபம் வருவது இயல்புதானே? அதன் காரணமாக அவர்களுக்கு என் மீது காறி உமிழக்கூடத் தோன்றும். இயேசுவின் மீதே காறி உமிழச்செய்யும்படி தூண்டின சாத்தானுக்கு நானெல்லாம் எம்மாத்திரம்?
//ஏற்கனவே நான் கேட்டிருந்த கேள்விக்கு இப்போது பதில் தாருங்கள், தோமா, உயிர்த்தெழுந்த ஆண்டவரை நோக்கி என் ஆண்டவரே என் தேவனே என ஏன் விளிக்க வேண்டும்?//
இதுகுறித்து நான் பதில் சொல்லி 10 நாட்களாகிவிட்டது; ஆனால் நீங்கள்தான் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்.
//பிலி 2:10-11 வாசித்தபிறகுமா உங்களுக்கு குழப்பம் "இயெசு கிறிஸ்து கர்த்தரென்று....." இது என்ன புரிந்துகொள்ளமுடியாத மொழியிலா இருக்கிறது. இல்லை இதற்கும் மூல பாஷையில் இப்படி இல்லை என ஏதாவது விளக்கம் கொடுத்தாலும் கொடுப்பீர்கள்.//
இயேசுகிறிஸ்து கர்த்தரல்ல என நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. பிதாவாகிய ஒரே தேவன், கிறிஸ்துவாகிய ஒரே கர்த்தர் என பவுல் தெளிவாகச் சொல்லியிருக்கையில் அதை எப்படி மறுக்க முடியும்? நீங்களாக எங்களைக் குறித்து ஏதேதோ கற்பனை செய்து, நாங்கள் தவறான விளக்கங்களைக் கொடுப்பதாகச் சொன்னால், அது குட்டையைக் குழப்புவதைத் தவிர வேறென்ன?
//வேதத்தில் தேவனாகிய கர்த்தர், குமாரனாகிய கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று பெயர்களை நிச்சயமாகவே பார்க்கிறோம், இவர்களது செயல்பாடு பற்றிய சூட்சுமம் மனிதனால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாததாகவே உள்ளது, மனிதன் உருவாக்கிய கம்ப்யூட்டரிலேயே அதன் வல்லுனர்களுக்கு தெரியாத பல சங்க்கதிகள் உள்ள போது, தேவன், கிறிஸ்துவானவர், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று ஆள்தத்துவமான நபர்களின் செயல்பாடுகளையும் எண்ணங்க்களையும் அறிந்து கொள்ள யத்தனிப்பது ஒரு எறும்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க நினைப்பது போலாகும்.
உங்களுக்கு என்ன ஐயா பிரச்சனை, இயேசுவை வணங்க வேண்டாம், நீங்கள் வணங்க மாட்டீர்கள், சந்தோஷம், அப்படியே வைத்துக்கொள்ளுங்க்கள், மற்றவர்கள் இயேசுவை வணங்க்குகிறோம், இதனால் ஆனது ஆகிவிட்டு போகிறது. ஆத்தும ரட்சிப்புக்கு தேவை, நான் ஒரு பெரிய பாவி, என் இயேசு என் ஆத்துமாவை அழிவுக்கு அல்லாமல் மீட்டுக்கொண்ட ரட்சகர் இந்த இரண்டு உணர்வுகளும் போதும் ஒருவன் தேவனிடம் அண்டிவர.
பிதாவின் சித்தத்தை செய்வதையே அவர் எதிர்பார்க்கிறார். அவரது மீட்பின் திட்டமாகிய அவரது குமாரனின் ரத்தத்தால் கழுவப்படுதல் அதன்பின்னர் ஆவியின் கனிகளால் மற்றவருக்கு அவரது அன்பை காண்பித்தல், ஆவியின் வரங்க்களால் மற்றவர்களுக்கு சாட்சியாயிருத்தல். நித்திய ராஜ்யத்தை சுதந்தரிக்க இது போதாதா.
இல்லை நியாய தீர்ப்பின் நாளில் பிதாவாகிய தேவன், நீங்கள் எப்படி என் குமாரனாகிய கிறிஸ்துவை வணங்கப்போயிற்று என கழுத்தை பிடிப்பாரா? ஒரு மன்னன் அரியணையில் வீற்றிருக்கும் போது அவனது வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இளவரசனான தனது மகனை அவைக்கு வருபவன் வணங்கினானால் அவனுக்கு கோபம் வருமா? மனிதனுக்கே வராதபோது சகலத்தையும் தனது குமாரனின் அதிகாரத்துக்கு கீழ்ப்படுத்தினவருக்கு கோபம் வருமா?//
வேதத்தில் இல்லாததும் உங்களால் புரியவைக்கமுடியாததுமான திரித்துவத்தை ஆராய முற்பட்டால் கம்ப்யூட்டரை ஆராய நினைக்கும் எறும்பின் கதிதான் ஏற்படும் எனும் உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. இப்படிச் சொல்வதன் மூலம், திரித்துவதை ஆராய்வது குட்டையைக் குழப்புவதுதான் என நீங்களே ஒத்துக்கொண்டீர்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். ஆனால் நான் சொன்னால் வருத்தப்படுகிறீர்கள்.
நீங்கள் எப்படி குமாரனை வணங்கப்போனீர்கள் என பிதா கழுத்தைப் பிடிப்பாரா மாட்டாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. உங்கள் பாவங்களையெல்லாம் என் முதுகுக்குப் பின்னே போடுவேன் என்று சொன்ன தேவன், உங்களையெல்லாம் எப்படி நியாயந்தீர்ப்பார் என்பதை நான் அறியேன். ஆனால் ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் எனச் சொன்ன இயேசுவின் வாக்குப்படி (யோவான் 17:3), பிதாவாகிய தேவனையும் அவர் அனுப்பின இயேசுவையும் அறியாத உங்களுக்கு நித்தியஜீவன் கிடைக்காது என்றே நான் நம்புகிறேன்.
அரியணை, அரசன், இளவரசன் என்பது போன்ற உதாரணங்களெல்லாம் ஏன் அன்பரே? வசனங்களை எடுத்துச் சொல்லலாமே!
அரசனுக்குப் பக்கத்தில் இருக்கும் இளவரசனை ஒருவன் வணங்குவதுபோல், அரசனுக்குப் பக்கத்தில் அவனுக்கு காற்று வீசுகிற (சாமரம் வீசுகிற) பணிப்பெண்ணையும் வணங்கலாமே! அதாவது பிதாவை வணங்குவதுபோல அவரது குமாரனையும் வணங்குபவர்கள், அவருக்கு சேவைசெய்கிற ஊழியர்களையும் வணங்கலாமே! இக்கருத்தில்தான் பணிப்பெண்கள் பற்றி நான் கூறினேன்.
//இயேசு கிறிஸ்து பிதா அல்ல என்கிறீர்கள். சரி, நீங்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?
நீங்களும் சற்று நிதானமாக பதிலளியுங்கள்.//
திரியேக தேவனில் பிதா, குமாரன், பரிசுத்தஆவி 3 ஆள்த்தத்துவங்கள் என முன்பொரு பதிவில் நீங்களே சொல்லியுள்ளீர்கள். அதன்படி, 3 ஆள்த்தத்துவங்களில் இருவரான பிதாவும் கிறிஸ்துவும் எப்படி ஒருவராக இருக்க முடியும்? ஆனால் இப்போது, கிறிஸ்து பிதா அல்ல நாங்கள் சொல்வது தவறு என்பதுபோல் சொல்கிறீர்கள்.
இதைத்தான் குட்டையைக் குழப்புவது என்கிறேன் நான்.
//இயேசுவை தொழத்தக்க தெய்வம் இல்லை என சொல்லி அவரது தெய்வீகத்தன்மையை நீங்கள் மறுப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏசாயா தீர்க்கன் இயேசுவுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே அவரது பிறப்பை தீர்க்கதரிசனமாக எழுதினார். "அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா சமாதான பிரபு" என எழுதியுள்ளார், அவரது தெய்வீகத்தை உணர்ந்துகொள்ள இது போதாதா?
வல்லமையுள்ள தேவனாக அவருக்கு சகல அதிகாரங்களையும் அளித்தாரே. அவரை தொழத்தக்க தெய்வம் அல்ல என்கிறீர்கள், இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூன்று நிலைக்கும் வேதத்தில் வசனங்கள் இருக்கின்றன, அப்புறம் திரித்துவம் இல்லை என எதை வைத்து சொல்கிறீர்கள், இயேசுவின் ஞானஸ்னானத்தில் வானத்தில் இருந்து உண்டான குரல், மனுஷ குமாரன், புறா வடிவிலான ஆவியானவர் ஆகிய மூன்று நிலைகளையும் இஸ்ரவேலர் கண்டார்களே அப்போ அது இல்லை என ஆகிவிடுமா?//
இயேசு தெய்வீகமானவர் என்பதை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆராதனை என்பது ஒரே தேவனாகிய பிதாவுக்கு மட்டுமே என இயேசு சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம். அதுவும் உங்களைப் போன்ற பலர் “இயேசுவுக்கு ஆராதனை, இயேசுவுக்கு ஆராதனை” என specific-ஆகச் சொல்லி, ஒரே தேவனாகிய பிதாவுக்கு ஆராதனை என்பதை மட்டுப்படுத்தி தேவதூஷணம் செய்வதால்தான், “யாருக்கு ஆராதனை” என வேதாகமம் கூறுகிறது என்பதை நாங்கள் விளக்கிச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது.
நீங்கள் எப்படியெல்லாம் “குட்டையைக் குழப்பினீர்கள்” என்பதை எடுத்துரைத்துள்ளேன். ஆகிலும் “குட்டையைக் குழப்புதல்” எனும் வார்த்தை உங்களைப் புண்படுத்தியிருக்குமானால் அதற்காக மன்னிப்பு வேண்டுகிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன், உங்களைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல.
இதுவரை எழுதினதை இருவரும் மறந்துவிட்டு, இனி புதிதாக திரித்துவம் பற்றிய உங்கள் நம்பிக்கை, திரித்துவக் கோட்பாடு ஆகியவற்றை தகுந்த வசன ஆதாரம் மூலம் எடுத்து வையுங்கள்; அவற்றின்மீது மிகமிக நிதானமாக நாம் விவாதிப்போம்.
எனது முழு கவனத்தையும் இதில் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லை, அதுபோக ஓய்வு பெற்றுவிட்டு கணிணியின் முன் மணிக்கணக்காக அமர்ந்திருக்கும் பாக்கியத்தை இன்னும் பெறவில்லை.
இயேசு தெய்வீகமானவர் என ஒத்துக்கொள்கிறீர்கள், தெய்வீகமான ஒருவர் தொழுகைக்கு பாத்திரமில்லாதவரா?. அவரது இரத்தஞ்சிந்துதலுக்காக அவருக்கு நன்றி செலுத்துவது பாவமா?
திருத்துவம் என்றால் என்ன, திரித்துவ கோட்பாடுகள் எவை என்பதுதான் கேள்வி. அதற்குப் பதில் சொல்லாமல், இயேசு தொழத்தக்கவரா இல்லையா என கேள்வி கேட்கிறீர்கள். இக்கேள்விக்கான பதில் வேறு 2 திரிகளில் விவாதிக்கப்பட்டுள்ளது(திரி 1, திரி 2). இயேசுவைத் தொழுதல் சம்பந்தமான உங்கள் விவாதத்தை/கேள்விகளை அத்திரிகளில் பதியுங்கள்.
இத்திரியில் திரித்துவத்தைக் குறித்த உங்கள் விளக்கத்தை மட்டும் தகுந்த வசன ஆதாரத்துடன் பதியுங்கள்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நிதானமாகப் பதில் தந்தால் போதும்.