மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
இவ்வசனம் ஒரு வாக்குத்தத்தமாகவும் உள்ளது, எச்சரிக்கையாகவும் உள்ளது.
பரலோகத்திலுள்ள பிதாவின் சித்தப்படி செய்பவன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்பது ஒரு வாக்குத்தத்தமாக உள்ளது. அதேவேளையில் பிதாவின் சித்தப்படி செய்பவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் எனச் சொல்வதால், பிதாவின் சித்தப்படி செய்யாதவன் பரலோகராஜ்யம் பிரவேசிக்கமாட்டான் எனும் எச்சரிக்கையும் இவ்வசனத்தில் அடங்கியுள்ளது.
பிதாவின் சித்தம் என்பது என்ன? அதாவது மனிதன் என்ன செய்யவேண்டும் என பிதாவானவர் விரும்புகிறார், அல்லது எதிர்பார்க்கிறார்?
பழையஏற்பாட்டுக் காலத்தில் மோசே மூலம் அவர் சொன்ன கற்பனைகள் மற்றும் கட்டளைகளின்படி மனிதன் நடப்பதுதான் அவரது விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது; ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அவரது எதிர்பார்ப்பு மற்றும் விருப்பம் என்னவென்பதை அதே மோசே மூலம் அப்போதே சொல்லிவிட்டார். பின்வரும் வசனங்களில் அதைப் பற்றிய கட்டளை காணப்படுகிறது.
உபாகமம் 18:18,19 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசி யார் என்பதை அறிய பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
அப்போஸ்தலர் 3:22-26 மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
மோசே மூலம் தேவன் முன்னறிவித்த தீர்க்கதரிசி இயேசுவே என இவ்வசனங்கள் மூலம் அறிகிறோம். அந்த இயேசுவுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும் என்பதே பிதாவின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பு. மாத்திரமல்ல, இயேசுவுக்கு செவிகொடாதவன் நிர்மூலமாக்கப்படுவான் என எச்சரிக்கவும் செய்துள்ளார்.
இயேசுவுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும் எனும் தமது சித்தத்தை பின்வரும் வசனத்திலும் பிதாவானவர் கூறியுள்ளார்.
மத்தேயு 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
எனவே, இயேசுவுக்கு நாம் செவிகொடுப்பதுதான் பிதாவின் சித்தம். அந்த சித்தத்தின்படி செய்யாதவன் நிச்சயம் பரலோக ராஜ்யம் போகமாட்டான்.
இயேசுவின் போதனைகளின்படி, கற்பனைகளின்படி நடப்பதுதான் பிதாவின் சித்தம். ஆனால் நம்மில் அனேகர், இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதற்குத் தீவிரப்படாமல், இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்லத்தான் தீவிரப்படுகிறோம். குறிப்பாக “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்வாயாக” எனக் கூறின அவரது வார்த்தைக்கு எதிராக, அவரையே ஆராதிக்கவும் தீவிரப்படுகிறோம்.
இயேசுவின் வார்த்தைக்கு எதிராக நடப்பவர்கள் நிர்மூலமாவார்கள் என மோசே மூலம் தேவன் சொன்னார்; இயேசுவுக்கு செவிகொடாததன் மூலம் பிதாவின் சித்தப்படி செய்யாதவர்கள் பரலோக ராஜ்யம் பிரவேசிக்கமாட்டார்கள் என இயேசு கூறியுள்ளார். இவ்வளவாய் வேதாகமம் நம்மை எச்சரித்துங்கூட, நம்மில் அனேகர் துணிகரமாக இயேசுவின் வார்த்தைகளை புறக்கணித்து வருகிறோம். இப்படிப்பட்ட நாம் நிச்சயமாக பரலோக ராஜ்யம் பிரவேசிக்க இயலாது என்பதை அறிவோமாக.