எச்சரிக்கை: யோவான் 15:6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.
வாக்குத்தத்தம்: யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;
இயேசுவுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஓர் அருமையான உவமானத்தின் மூலம் இவ்வசனங்களில் இயேசு ஒப்பிட்டுள்ளார்.
இயேசு திராட்சைச் செடி, நாம் அச்செடியின் கொடிகள். எப்படி செடியும் கொடிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்றனவோ அதுபோல நாமும் இயேசுவும் இணைந்திருக்கையில் கொடிகளாகிய நாம் கனி கொடுக்கிறவர்களாக இருப்போம்.
செடியாகிய இயேசு கொடியாகிய நம்மில் நிலைத்திருக்க வேண்டும், அவ்வாறே கொடியாகிய நாமும் செடியாகிய இயேசுவில் நிலைத்திருக்க வேண்டும். கொடி வேண்டாமென செடி புறக்கணித்தாலோ அல்லது செடி வேண்டாமென கொடி விலகிச் சென்றாலோ அக்கொடியால் கனி கொடுக்க இயலாது.
அவ்வாறே நம்மை வேண்டாமென இயேசு புறக்கணித்தாலோ அல்லது இயேசு வேண்டாமென நாம் அவரைப் புறக்கணித்தாலோ நம்மால் கனி கொடுக்க இயலாது. இயேசு எப்போதுமே நம்மில் நிலைத்திருக்கவே விரும்புகிறார். ஆனால் நாம்தான் இயேசுவில் நிலைத்திராமல் அவரை விட்டு விலகிச் செல்லவே முற்படுகிறோம். அவ்வாறு முற்படும் நம்மிடம், இயேசுவால் நிலைத்திருக்க இயலாது.
ஒரு கொடியானது செடியில் நிலைத்திராமல் போனால், கொடிக்கும் அதற்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடும். ஒருவேளை வெளிப்பார்வைக்கு செடியோடு அக்கொடி இணைந்திருப்பதாகத் தோன்றினாலும், செடியிலிருந்து அக்கொடிக்கு எந்த சத்தும் போகாதிருப்பதால் நாளாவட்டத்தில் கொடியானது கொஞ்சங்கொஞ்சமாகக் காய்ந்துபோகும்.
அப்படி காய்ந்துபோனால், சிலநாட்களில் அக்கொடி தானாக கீழேவிழுந்துவிடும், அல்லது காய்ந்துபோன அக்கொடியை தோட்டக்காரன் வெட்டிப்போட்டுவிடுவான். கீழே விழுந்த அல்லது தோட்டக்காரனால் வெட்டப்பட்ட கொடிகளையெல்லாம் ஒரு நாளில் மொத்தமாகச் சேர்த்து அக்கினியில் போடுவார்கள்; அப்போது அவை யாவும் எரிந்துபோகும்.
கொடிகளாகிய நாமும்கூட இயேசுவில் நிலைத்திருக்காவிட்டால், இயேசுவுக்கும் நமக்குமுள்ள தொடர்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் இயேசுவை விட்டும் நாம் முழுமையாக அகன்று போவோம். அப்படிப்பட்ட நமக்கு காய்ந்துபோன கொடிகளுக்கு நேர்ந்த கதிதான் நேரிடும்.
ஆம், இயேசுவில் நிலைத்திராததால் கனியற்ற வாழ்வு வாழ்கிற நாம் இறுதியில் அக்கினிக்கு இரையாகி அழிய நேரிடும் என்பதை அறிவோமாக.
மாறாக, இயேசுவில் நாம் நிலைத்திருந்தால், நாம் என்றென்றும் அவரோடு சேர்ந்து கனிகொடுக்கிறவர்களாக இருப்போம்.
இன்றைய விசுவாசிகளும் சரி, சபைத் தலைவர்களும் சரி, இயேசுவை பிதாவாகிய தேவனுக்குச் சமமாக்கி அவரை ஆராதனை செய்யத்தான் தீவிரப்படுகின்றனரேயொழிய, இயேசுவோடு இணைந்து கனிகொடுக்க வேண்டும் என நினைப்பதில்லை. இப்படிப்பட்ட அவர்கள் என்னதான் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லி இயேசுவை ஆராதனை செய்தாலும், நியாயத்தீர்ப்பு நாளான இறுதி நாளில் அனைவரும் இயேசுவை விட்டு அகற்றப்பட்டு அழிக்கப்படுவார்கள் என்பதை அறிவோமாக.