எசேக்கியேல் 18:12,13 சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்குபவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை;
வாக்குத்தத்தம்:
சங்கீதம் 41:1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
சிறுமைப்பட்டவர்களை ஒடுக்குவதென்பது இவ்வுலகில் காலங்காலமாக நடந்து வரும் ஓர் அநீதியாகும். ஆனால் நீதியுள்ள தேவனோ, சிறுமைப்பட்டவர்களின் பக்கமாகத்தான் எப்போதும் இருக்கிறார். அவர்களின் சார்பாக அவர் வழக்காடவும் செய்வார் என வசனம் கூறுகிறது.
பொதுவாக மனிதர்கள் தங்களைக் காட்டிலும் சிறுமையானவர்களை அற்பமாயெண்ணி அவர்களை ஒடுக்குகிறவர்களாகத்தான் இருக்கின்றனர். எனவேதான் ஒடுக்கப்படுவோர் சார்பாக தேவன் நின்று அவர்களுக்காக வழக்காடுகிறார்.
வேதாகமம் இவ்வளவாய் கூறியுள்ள போதிலும், வேதாகமத்தைப் படிக்கிற சில கிறிஸ்தவர்கள்கூட சிறுமையானவர்களை அற்பமாகப் பேசி இகழ்கின்றனர்.
இன்றைய சமுதாயம், காற்றாடிக்குக் கீழும் குளுகுளு அறையிலும் மேல்வலிக்காமல் வேலை பார்த்து கைநிறைய சம்பளவம் வாங்குவோரைத்தான் அதிகமாக மதிக்கிறது.
அதே சமுதாயம் சேற்றிலும் சாக்கடையிலும் இறங்கி வேலைசெய்வோரை அற்பமாகப் பார்க்கிறது. அது மட்டுமல்ல, அவர்களை இழிவாகப் பேசி எள்ளி நகையாடவும் செய்கிறது. கிறிஸ்தவர்கள், போதகர்கள் என தங்களைச் சொல்லிக்கொள்வோர்கூட, சாக்கடையில் வேலை செய்பவனைப் பார்த்து நாற்றத்தில் கிடப்பவன் என்று சொல்லி எள்ளி நகையாடுகின்றனர்.
இவர்களின் இந்த நகைப்பெல்லாம் சொற்பகாலமே. இவர்கள்மீது தேவகோபம் ஒருநாளில் நிச்சயமாக பற்றியெரியும். அந்நாளில் அவர்கள் முழுமையாக அழிவார்கள்.
அதேவேளையில் சிறுமைப்பட்டவர்கள்மீது சிந்தைகொண்டு அவர்களுக்காக பரிதவிப்பவர்கள் பாக்கியவான்களாவர்கள். ஏனெனில் தீங்குநாளில் சிக்கி அவர்கள் அழியாதபடிக்கு தேவன் அவர்களை விடுவிப்பார் என வசனம் கூறுகிறது.
அந்த பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக நாம் சிறுமைப்பட்டவர்கள்மீது சிந்தையாயிருக்கிறோமா, அல்லது அழிவைப் பெறத்தக்கதாக சிறுமைப்பட்டவர்களை ஒடுக்கி பரியாசம் செய்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம்.