யோவான் 20:23 வசனத்தின் அடிப்படையில் சகோ.சந்தோஷ் தனது தளத்தில் இப்பதிவைத் தந்துள்ளார்.
//யோவான்.20.23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
இந்த வசனத்தை வைத்து இயேசு கிருஸ்துவின் சீடர்களுக்கு பாவத்தை மன்னிக்க அதிகாரம் உண்டு என்று பொருள் கொள்கின்றனர் (வசனத்தின்படி அது சரியே.). ஆனால் இந்த வசனம் இயேசு கிருஸ்து சொன்னதை தவறாக புரிந்து கொண்டு எழுதியிருப்பதாக எனக்கு படுகிறது. அல்லது மொழி பெயர்ப்பு கோளாறு ஏதாவது இருக்குமா என்றும் தெரியவில்லை.
இந்த வசனத்தின்படி எந்த மனிதனும் இன்னொரு மனிதனின் பாவத்தை மன்னிக்கலாம் என்று இருப்பதால் பாவத்தை மன்னிக்க இயேசு கிருஸ்துவே தேவையில்லை என்ற அர்த்தம் வருகிறது. ரோமன் கத்தோலிக சபைகளில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் பாவத்தை மன்னிப்பதும் சரியே எனற அர்த்தமும் வருகிறது.
எந்த மனிதனும் இன்னொரு மனிதனின் பாவத்தை மன்னித்ததாக சொல்லலாம். ஆனால் அதை உறுதிப்படுத்துவது மன்னிக்கப்பட்ட மனிதன் அனுபவிக்கும் மன நிலையே. அந்த வகையில் மனிதர்களால் மன்னிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பாவம் தங்களை விட்டு போன சந்தோஷத்தை அனுபவித்ததாக எனக்கு தெரியவில்லை. அந்த சந்தோஷம் ஒரு மனிதனுக்கு வராத பட்சத்தில் அவன் பாவம் மன்னிக்கப் பெற்றதாக கருத முடியாது.
ஒருவன் எந்த மனிதனுக்கு தீங்கு இழைத்தானோ அந்த மனிதனிடமே தன் பாவத்தை மன்னிக்க சொல்லி கேட்டுக் கொண்டு, அவன் மன்னித்தால் ஒருவேளை மன்னிக்கப்பட்ட நிச்சயத்தை அடையலாம். ஆனால் எதற்கும் சம்பந்தமில்லாத மூன்றாவது மனிதர்கள் பாவத்தை மன்னிக்க முடியாது (அது இயேசுவின் சீடர்களாக இருந்தால் கூட) என்பதே என் கருத்தாகும்.
இந்த வசனத்தின்படி எந்த சீடரும் இன்னொரு மனிதனின் பாவத்தை மன்னித்ததாக எனக்கு தெரியவில்லை. ஏதாவது வசனம் இருந்தால் சொல்லவும்.
தேவனிடத்தில் இந்த கட்டளையை பெற்ற பேதுரு பரிசுத்த ஆவியை காசுக்கு கேட்ட மனிதனை சபித்த போது "நீ தேவனை நோக்கி வேண்டிக் கொள் ஒருவேளை மன்னிக்கபடலாம்" என சொன்னாரே தவிர அவரே அவனை மன்னிக்கவில்லை என்பதை அறிய முடியும். அந்த மனிதனும் நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் என சொல்லாமல் எனக்காக கர்த்தரை வேண்டிக் கொள்ளுங்கள் என்றே சொன்னான்.
அப்போஸ்.8.18. அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: 19. நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். 20. பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. 21. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. 22. ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். 23. நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். 24. அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
இந்த வசனத்திற்கொத்த வசனங்கள் மத்தேயு போன்ற அதிகாரத்திலும் இருக்கின்றன. ஆனால் அங்கு வருகின்ற வார்த்தை "பாவம்" அல்ல. "தப்பிதம்" என்பதாகும்.
மத்தேயு 6.14. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
இப்படி மற்றவர்களின் தப்பிதங்களை மன்னிக்கும் இவர்களின் பொறுமையையும் கடந்து யாரவாது இவர்களுக்கு துன்பம் விளைவிப்பார்கள் எனில் அவர்களை சபிக்கவும் இவர்களுக்கு அதிகாரம் உண்டு என்பதுதான் யோவான் 20.23 ல் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
இது எதற்கு ஒப்பானதென்றால் "நீ ஆசிர்வதிப்பவர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள், நீ சபிக்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள்" என பிலேயாம் பெற்ற வரத்துக்கு ஒப்பானதாகும்.//
உண்மையில் யோவான் 20:23 மூலம் நாம் அறிவதென்ன? மற்ற மனிதர்களின் பாவங்களை மன்னிக்க நமக்கு அதிகாரம் உண்டா?
முதலாவதாக யோவான் 20:23 வசனத்தில் இயேசு வழங்கியுள்ள அதிகாரம், அவரது 11 சீஷர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வழங்கின அதிகாரமாக யாரேனும் கருதினால், அவர்கள் அப்படிக் கருதுவதில் தவறேதுமில்லை என்றே நான் கருதுகிறேன்.
ஆகிலும் அதை இயேசுவின் மற்ற சீஷர்களுக்குமான பொதுவான அதிகாரம் என எடுத்துக்கொண்டால், அந்த மற்ற சீஷர்கள் இயேசுவின் 11 சீஷர்களைப் போல இயேசுவை முழுமையாகப் பின்பற்றினால்தான் அவ்வதிகாரம் அவர்களுக்கும் உரியதாக இருக்கும்.
இனி அந்த அதிகாரத்தின் பயன்பாட்டைப் பார்ப்போம்.
மனிதரின் பாவங்களை மன்னிக்க ultimate அதிகாரமுடையவர் தேவன் மட்டுமே. அவ்வதிகாரத்தை அவர் இயேசுவுக்கு வழங்கினார் (மத்தேயு 28:18; 9:6); தமக்குக் கொடுக்கப்பட்ட அவ்வதிகாரத்தை தமது சீஷர்களுக்கு இயேசு வழங்கினார் (யோவான் 20:23).
இப்படியாக இயேசுவுக்கும் அவரது சீஷர்களுக்கும் மனிதரின் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளபோதிலும், அவர்களுக்கு அதில் ஓர் எல்லையும் உண்டு. அதாவது சில வேளைகளில் அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாத நிலையும் வருவதுண்டு. அம்மாதிரி சந்தர்ப்பங்கள் சீஷர்களுக்கு நேரிடுகையில் அவர்கள் இயேசுவின் வசம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்; அம்மாதிரி சந்தர்ப்பங்கள் இயேசுவுக்கு நேரிடுகையில் அவர் தேவனின் வசம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இதைத்தான் பின்வரும் வசனங்களில் நாம் பார்க்கிறோம்.
லூக்கா 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
அப்போஸ்தலர் 8:20 பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. 21 உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. 22 ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். 23 நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.
மற்றபடி, இயேசுவுக்கும் சரி, அவரது மெய்யான சீஷருக்கும் சரி, மற்றவர்களின் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என வசனம் சொல்வதை அப்படியே ஏற்கத்தான் வேண்டும்.
தேவன் இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையினால் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கினார்; இயேசு தமது சீஷரின் மீதுள்ள நம்பிக்கையால் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினார். தனக்குக் கொடுக்கப்படும் அதிகாரத்தை இயேசு துஷ்பிரயோகம் செய்யமாட்டார் என தேவனும் நம்பினார்; அவ்வாறே தமது சீஷர்களை இயேசுவும் நம்பினார்.
எனவே மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் என்பது தேவனுக்குரிய அதே அளவில் இயேசுவுக்கும் உண்டு; In turn அவரது சீஷர்களுக்கும் உண்டு. ஆகிலும் இயேசுவும் அவரது சீஷர்களும் தாங்களாகவே தங்களுக்குள் ஓர் எல்லையை நியமித்துக்கொண்டனர். அந்த எல்லையின் அடிப்படையில்தான் லூக்கா 23:34 மற்றும் அப். 8:22-ல் அவர்கள் அப்படியாகக் கூறினர்.
எனவே எவனொருவன் (இயேசுவின் 11 சீஷரைப்போல) இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொள்வதாகவும் இயேசுவை முழுக்க முழுக்கப் பின்பற்றுவதாகவும் தன்னைக் கருதுகிறானோ, அவன் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கிற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இயேசுவின் 11 சீஷருக்கு அவன் ஒப்பானவன் என்பதில் அவன் முழுநிச்சயமுள்ளவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதர்களை மட்டுமல்ல தேவதூதர்களையும்கூட நியாயந்தீர்க்கும் அதிகாரம் உண்டு என பின்வரும் வசனங்களில் பவுல் கூறுகிறார்.
1 கொரி. 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? 3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா?
எனவே யோவான் 20:23-ல் இயேசுவின் சீஷர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது, மற்றவர்களின் பாவங்களை மன்னிக்க தேவனுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம்தான் என நான் கருதுகிறேன்.