யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
பிதா ஒருவனை இழுத்தால்தான் அவன் இயேசுவிடம் வருவான் என அர்த்தங்கொள்ளும்படி இவ்வசனம் காணப்படுகிறது.
எனவே இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி, “நம் சொந்த முயற்சியால் அல்லது நம் சுயசித்தத்தால் நாமாக இயேசுவிடம் வரமுடியாது, பிதா சித்தங்கொண்டு நம்மை இழுத்தால்தான் நாம் இயேசுவிடம் வரமுடியும்” என நம் சகோதரரில் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் வேறு சில வசனங்களில் இயேசு இப்படியும் கூறுகிறார்:
மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
யோவான் 7:37 ...ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். 38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் ..
ஒருபுறம் வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற அனைவரையும் தம்மிடம் அழைக்கிற இயேசு, தாகமாயிருக்கிற அனைவரையும் தம்மிடம் அழைக்கிற இயேசு, மற்றொரு புறம் ஒருவனை பிதா இழுத்தால்தான் அவன் தம்மிடம் வரமுடியும் என்றும் கூறுகிறார்.
இயேசுவின் இக்கூற்றுகள் முரண்பாடாகத் தோன்றுகின்றன. இந்த முரண்பாட்டுக்குக் காரணமென்ன? சற்று ஆராய்ந்தறிவோம்.
யோவான் 6:45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
பிதா இழுக்காவிட்டால் ஒருவன் என்னிடத்தில் வரமாட்டான் என 44-ம் வசனத்தில் சொன்ன இயேசு, அடுத்த வசனத்திலேயே, பிதாவிடத்தில் கேட்டு கற்றுக்கொள்கிற எவனும் தன்னிடத்தில் வருவதாகக் கூறுகிறார்.
44-ம் வசனத்தைப் பார்த்தால், ஒருவன் இயேசுவிடம் வருவது பிதாவின் கரத்தில் இருப்பது போலுள்ளது; 45-ம் வசனத்தைப் பார்த்தால் ஒருவன் இயேசுவிடம் வருவதென்பது அவனது ஆர்வத்தைப் பொறுத்ததாக இருப்பதைப் போலுள்ளது.
அவ்வாறெனில் எதுதான் சரியான கருத்து? தொடர்ந்து தியானிப்போம். தள அன்பர்களும் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.
வேதவசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாகக் காணப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு; அவற்றில் முக்கியமானவை:
1. மொழிபெயர்ப்புக் கோளாறு
2. நம் புரிந்துகொள்தலில் கோளாறு
ஒரு வசனத்தைப் புரிந்துகொள்ள முயலும் நாம், அவ்வசனம் கூறப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் அவ்வசனத்தின் கருத்தைப் புரிந்துகொள்ள முயல்வது அவசியம். அப்படி செய்யாவிட்டால், மிகச் சாதாரணமாகப் புரிந்துகொள்ளப்படக்கூடிய வசனங்கள்கூட, முரண்பாடான வசனங்களாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பாகிவிடும்.
உதாரணமாக பின்வரும் வசனங்களை எடுத்துக்கொள்வோம்.
நீதிமொழிகள் 1:28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
ஏசாயா 58:9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்.
இந்த 2 வசனங்கள் கூறப்பட்டுள்ள சந்தர்ப்ப சூழ்நிலையை நாம் பார்க்காவிட்டால், இவ்விரு வசனங்களும் முரண்பாடான வசனங்களாகத்தான் தோன்றும். ஆனால் அவை கூறப்பட்டுள்ள சந்தர்ப்ப சூழ்நிலையை அறிந்துகொண்டால், அவற்றில் முரண்பாடு இல்லையென்பதை மிகஎளிதில் நாம் புரிந்துகொள்ளமுடியும்.
இத்திரியில் நாம் எடுத்துக்கொண்ட வசனத்தைப் பொறுத்தவரை, அடுத்தடுத்த வசனங்களிலேயே முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது.
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
44-ம் வசனத்தின் முதல் வரியும் 45-ம் வசனத்தின் 2-ம் வரியும் முரண்பாடாகத் தோன்றுகின்றன. அதாவது ஒரே சந்தர்ப்ப சூழ்நிலையில் கூறப்பட்டுள்ள வசனங்களுக்குள்ளேயே முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது. ஆகிலும் வசனங்களுக்கிடையே முரண்பாடு என்பதை ஒத்துக்கொண்டால், நம் வேதாகம விசுவாசமே கேள்விக்குறியாகிவிடும். எனவே வசனங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய ஞானத்துக்காக நான் தேவனிடம் ஜெபிப்பது மட்டுமே ஒரே வழி. எனவேதான் சங்கீதக்காரன் இப்படியாகக் கூறுகிறார்.
சங்கீதம் 119:18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
இவ்வசனத்தில் காணப்படும் “அதிசயங்களை” எனும் வார்த்தைகூட அத்தனை சரியான மொழிபெயர்ப்பு அல்ல. அவ்வார்த்தைக்கு இணையான எபிரெய வார்த்தையான pala என்பதற்கு அகராதியில் கூறப்பட்டுள்ள அர்த்தம்:
pala' (paw-law'); a primitive root; properly, perhaps to separate, i.e. distinguish (literally or figuratively); by implication, to be (causatively, make) great, difficult, wonderful:
பெரியதானதை/கடினமானதை/அதிசயமானதை பிரித்துப்பார்க்க வேறுபடுத்திப் பார்க்க (separate, distinguish) என்பதுதான் சரியான அர்த்தமாகும்.
ஆம், வசனங்களை ஒன்றோடொன்று இணைத்து அவற்றின் கருத்துக்களை வேறுபடுத்திப் பார்க்கவும், அவற்றிலுள்ள பெரியதான/கடினமான/அதிசயமான காரியங்களைப் புரிந்துகொள்ளவும் தேவன் நம் கண்களைத் திறக்கும்படி ஜெபிக்க வேண்டும். அப்போது தேவன் தமக்கு சித்தமான வேளையில் நம் கண்களைத் திறப்பார்.
வேதாகமத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை, தேவன் மனிதனிடம் பல கட்டளைகளையும் கற்பனைகளையும் சொல்லியிருப்பதைக் காணலாம். தாம் படைத்த மனிதன் இப்படியிப்படி நடக்கவேண்டும் என்பதே தேவனின் சித்தம்; தமது சித்தப்படி மனிதன் நடக்கவேண்டும் என்பதே தேவனின் விருப்பம். தமது சித்தப்படி நடப்பவனுக்கு மாபெரும் பாக்கியங்களை தேவன் வாக்களித்துமுள்ளார் (உதாரணம்: மத்தேயு 7:21).
மனிதன் தேவசித்தப்படி நடக்கவேண்டும், அதன்மூலம் தேவன் வாக்களித்துள்ள பாக்கியங்களைப் பெறவேண்டும் என்பது தேவநியமனமாக உள்ளபோதிலும், மனிதன் முழுக்க முழுக்க தன் சுயபலத்தினால் தேவசித்தப்படி நடப்பதென்பது கடினமான காரியம் மட்டுமின்றி கூடாத காரியமுமாகும். ஏனெனில், மனிதனை தேவசித்தத்துக்கு எதிராக செயல்பட வைக்கும்படி பிசாசானவன் மனிதனோடு எப்போதும் போராடிக்கொண்டிருக்கிறான். பவுலுங்கூட தன் மனவிருப்பத்திற்கு மாறாக, தான் விரும்புகிற நன்மையைச் செய்யமுடியாமல் விரும்பாத தீமைகளையே செய்ததாக ரோமர் 7:15-ல் கூறுகிறார்.
பிசாசின் வல்லமைக்கு எதிராகப் போராடி, நாம் தேவசித்தப்படி நடக்கவேண்டுமெனில், தேவனின் ஒத்தாசை நமக்கு வேண்டும். எனவேதான் “எங்களை சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்” என ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்பித்துள்ளார். பவுலுங்கூட பிசாசின் தந்திரங்களுக்கு எதிராகப் போராடும்படி தேவனின் சர்வாயுதவர்க்கங்களையும் தரித்துக்கொள்ளும்படி கூறுகிறார் (எபேசியர் 6:11-13).
நம் மாம்ச பலவீனத்தின் காரணமாக, நாம் பிசாசின் சோதனைகளில் சிக்குண்டு விழுந்து போகக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம்; ஆனால் அப்படி விழுந்துபோகிற நம்மை, நம் பிதாவாகிய தேவன் தூக்கி இழுக்கும்போது நாம் சோதனைகளை ஜெயிக்க இயலும்.
தேவசித்தப்படி நாம் நடப்பதென்பது தேவனும் நாமும் ஒருங்கிணைந்து (In mutual) செயல்படுவதன் விளைவாகும். நமது தனிப்பட்ட முயற்சியாலும் பயனில்லை, அதே வேளையில் நாம் முயற்சியே செய்யாதிருக்கும்போது தேவன் நம்மை இழுப்பதுமில்லை.
நாம் தேவசித்தப்படி நடப்பது, இயேசுவிடம் வருவது எல்லாம் ஒன்றுக்கொன்று சமமான செயல்களே.
எப்படியெனில், “நான் இயேசுவிடம் வருகிறேன்” எனச் சொல்லுகிற நாம், இயேசுவின் கற்பனைகளின்படி நடக்கப் பிரயாசப்படவேண்டும். ஆனால் இயேசுவின் கற்பனைகள் யாவும் பிதாவின் கற்பனைகளே! எனவே இயேசுவிடம் நாம் வருவதாகக் கூறுவதென்பது, பிதாவின் சித்தப்படி நடப்பதற்குச் சமமானதே.
நாம் இயேசுவிடம் வருவதற்கு, பிதா நம்மை இழுப்பது அவசியமாக உள்ளது. இதைத்தான் யோவான் 6:44-ல் இயேசு கூறுகிறார்.
நாம் இயேசுவிடம் வரவேண்டுமெனில், பிதா நம்மை இழுத்தால்தான் அது சாத்தியமாகுமேயன்றி நம் சுயபலத்தினால் அது சாத்தியமல்ல. ஆனால் பிதா நம்மை இழுக்கவேண்டுமெனில், நாம் இயேசுவிடம் வருவதற்கு நம்மை ஒப்புக்கொடுத்து பிரயாசப்பட வேண்டும். அப்படி பிரயாசப்படுகிற நாம், நம் சுயபலத்தினால் அதைச் செய்துவிடுவோம் எனக் கருதாமல், நம் பிரயாசம் நிறைவேற தேவ ஒத்தாசையையும் நாடவேண்டும்.
இப்போது யோவான் 6:44,45 வசனங்களைப் படிப்போம்.
இவற்றில் 44-ம் வசனத்தில், “என்னிடத்தில் வரமாட்டான்” எனும் சொற்றொடரை, “என்னிடத்தில் வர இயலாது” எனப் படித்தால் புரிந்துகொள்ள இன்னும் எளிதாக இருக்கும். ஆங்கில வேதாகமங்களில், “No man can come to me" என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதேயொழிய “No man will come to me" என மொழிபெயர்க்கப்படவில்லை. மூலப்பிரதியிலும், able, possible எனும் அர்த்தத்தைத் தருகிற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே 44-ம் வசனத்தில் “என்னிடத்தில் வரமாட்டான்” எனும் சொற்றொடருக்குப் பதிலாக, “என்னிடத்தில் வர இயலாது” எனும் சொற்றொடரைப் பயன்படுத்தி அவ்விரு வசனங்களையும் படிப்போம்.
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர இயலாது; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
நாம் இயேசுவிடம் வரவேண்டுமெனில், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” எனும் இயேசுவின் அழைப்புக்குச் செவிகொடுத்து அவரிடம் வருவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்; அதாவது இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆகிலும் நம் சுயபலத்தினால் இயேசுவின் கற்பனைகளின்படி நடந்துவிடமுடியும் என எண்ணாமல், தேவனின் ஒத்தாசையை நாம் நாடவும் வேண்டும். ஏனெனில், தேவஒத்தாசை இல்லாமல் நாம் இயேசுவண்டை வர இயலாது. இதைத்தான் யோவான் 6:44-ல் இயேசு கூறுகிறார்.
யோவான் 6:44-ல் இயேசு கூறுகிறபடி பிதாவாகிய தேவன் நம்மை இழுக்கும்போது, நாம் இயேசுவிடம் வர முடியும் (we can). அதாவது இயேசுவின் கற்பனைகளின்படி நம்மால் நடக்க முடியும். எப்படியெனில், நாம் இயேசுவிடம் வருவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கையில், 45-ம் வசனம் கூறுகிறபடி கற்பனைகளின்படி நடப்பதற்கு பிதாவாகிய தேவன் நமக்குப் போதிக்கிறார். அவரது போதனையைக் கேட்டுக் கற்றுக்கொள்ளும்போது நாம் இயேசுவிடம் வருபவர்களாக இருப்போம்.
பிதாவாகிய தேவன் நம்மை இழுப்பது என்பதில், அவரது சிட்சையும் அடங்கும். ஆம், நம் மனதில் கற்பனைகளின்படி நடக்கவேண்டும் என்ற வாஞ்சை இருந்தாலும், நம் மாம்ச பலவீனத்தின் காரணமாக, நாம் விழுந்துபோகக் கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். அம்மாதிரி வேளைகளில், தேவன் நம்மை சில உபத்திரவங்களால் சிட்சிக்கிறார். இதைத்தான் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
நீதிமொழிகள் 3:11 என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. 12 தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
வெளி. 3:19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்;
இப்படியாக தேவன் நம்மை சிட்சித்து போதித்து இயேசுவண்டை இழுப்பதைத்தான் யோவான் 6:44-ல் இயேசு கூறுகிறார்.
தேவன் நம்மை இழுக்காமல் நம்மில் எவரும் இயேவண்டை வர இயலாது என்பது மெய்தான்; ஆனால் பின்வரும் வசனங்களில் இயேசு நம்மை அழைக்கும் அழைப்புக்குச் செவிகொடுத்து, இயேசுவண்டை வருவதற்கு நாம் ஒப்புக்கொடுப்பதும் முயல்வதும் அவசியமாகும்.
மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
யோவான் 7:37 ...ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். 38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் ..
அப்படி முயலும்போது, இதே வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி, நாம் இளைப்பாறுதலைப் பெறவும், நம் உள்ளத்தில் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடத்தக்கதாகவும், பிதாவானவர் நம்மை இயேசுவண்டை இழுத்து வருகிறார்.