பரிசுத்த வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டு புத்தகத்திலும் சரி புதிய ஏற்பாட்டு புத்தகத்திலும் சரி "பரிசுத்தவான்கள்" என்ற சொல் அனேக இடங்களில் பயன்படுத்தபட்டு உள்ளது.
இந்த "பரிசுத்தவான்கள்" என்பவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் இரண்டாம் வருகையோடு கூட வருவார்கள் என்றும் "பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள்" என்றும் "பரிசுத்தவான்களின் குறைவில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்றும் இன்னும் அனேக காரியங்கள் "பரிசுத்தவான்"களை பற்றி வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
1 தெசலோனிக்கேயர் 3:13இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது,
I கொரிந்தியர் 6:2பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?
ரோமர் 12:13 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்;
ஆண்டவராகிய இயேசுவின் வருகைக்கு முன்னரும் பல பரிசுத்தவான்கள் இருந்தார்கள் என்பதை பழையஏற்பாட்டு வசனங்கள்மூலம் நாம் அறியமுடிகிறது.
II இராஜாக்கள் 4:9அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
சங்கீதம் 50:5பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
தானியேல் 4:13நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.
இந்த வசனங்களை ஆராய்ந்தால் "பரிசுத்தவான்" என்ற சொல் பல்வேறு விதமாக பயன்பட்டுஇருந்தாலும் அதற்க்கு ஒட்டுமொத்தமாக பாவங்கள் நீக்கபட்டவர்கள் என்று பொருள் கொள்ள முடியுமேயன்றி அவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்றோ இயேசுவின் வார்தைகள்படி வாழ்ந்தவர்கள் என்றோ பொருள்கொள்ள முடியாது!
கீழ்கண்ட வசனங்கள் சொல்லும் பரிசுத்தவான்கள் யாரென்பதை நாம் சற்று கவனிக்கலாம்.
அப்போஸ்தலர் 9:32பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
II கொரிந்தியர் 1:1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது:
இவ்வசனங்களின்படி பரிசுத்தவான்கள் என்பவர்கள் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்தமாக வாழ விளைபவர்களே என்று எடுத்துகொள்ள முடியும்.
எனது கருத்துப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியை பெற்று ஆவியானவரால் நடத்தப்படும் ஒவ்வொருவரும், தேவனின் பரிசுத்த ஆவியை தன்னுள் கொண்டுள்ளதால் அவர்கள் பரிசுத்தவன்களே! என்றே கருதுகிறேன். எந்த ஒரு மனுஷனும் தன் சுய முயற்சியால் பரிசுத்தவான் ஆகிவிட முடியாது! பரிசுத்த ஆவியானவரே ஒருமனுஷனை பரிசுத்தமாக்குகிறவர். அவ்வாறு ஆவியில் நடத்தப்படுகிறவர்களுக்குதான் ஆக்கினைதீர்ப்பு இல்லை என்று வேதம் சொல்கிறது
இவர்களே முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பாத்திரவான்கள்! இவர்களை குறித்தே தாங்கள் குறிப்பிடும் கீழ்கண்ட வசனம் சொல்கிறது என்பது எனது கருத்து.
வெளி 20:6முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
"இவர்களிடம் பாவம்இல்லை" என்பது உண்மையே! ஆனால் இவர்களது பாவங்கள் ஆவியானவரால் நீக்கபட்டதேயன்றி முற்றிலும் இயேசுவின் வார்த்தைகள்படி வாழ்ந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. தேவனாலேயேயன்றி நாம் சுய கிரியயினால் ஒருவரும் பரிசுத்தவனாக முடியாது
அடுத்து வசனத்தின் படியே சரியாக ஆராய்ந்தாலும், பரிசுத்தவான் என்பவர்கள் யார் என்பதை குறித்து கீழ்கண்ட வசனங்கள் சொல்கிறது.
வெளி 14:12தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
ஒருவர் இயேசுவின் கற்பனையை கைகொள்ளவில்லை என்றாலும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் தேவனின் கற்பனையையும் காத்துகொண்டால் அவன் பரிசுத்தவான் என்று இங்கு வேதம் சொகிறது. இதில் எங்கும் பரிசுத்தவான்கள் என்பவர்கள் இயேசுவின் கற்பனையை கைகொண்டு வாழ்ந்தவர்கள் என்ற செய்தி இல்லை.
"இயேசுவின் கற்பனையை கைகொள்ளுதல்" என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு மேலான நிலை. இயேசுவின் வர்த்தைகள்படி "தனக்குண்டனவற்றை விற்று தரித்திரனுக்கு கொடுக்காதவனை" பாவம் செய்தவன் என்று சொல்லிவிட முடியாது. காரணம் அவனுக்குண்டானத்தை அவன் எப்படி வேண்டுமானாலும் செய்ய அவனுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதையும் வேறொரு வசனம் சொல்கிறது. ஆனால் பாவம் என்றால் என்னவென்பதை நியாயப்பிரமாணமே சொல்கிறது.
I யோவான் 3:4பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
புதிய ஏற்பாட்டு பிரமாணத்தின்படி, பாவம்/ மரணம் என்னும் பிரமாணத்தில் இருந்து நாம் ஏற்கெனவே விடுபட்டு விட்டோம்
இவ்வாறு விடுபட்ட நாம் இயேசுவின் கற்பனையை கைகொள்ளுவது என்பது ஒரு மேலான நிலைக்கு நம்ம கொண்டுசொல்லுமேயன்றி, மீண்டும் நம்மை பாவம் மரணம் என்ற பிரமாணத்துக்குள் கொண்டு செல்லாது. அந்த மேலான நிலையே ஆண்டவராகிய இயேசு குறிப்பிடும் மறுரூபம்ஆகி மரணத்தை காணாத நிலை என்று நான் சொல்கிறேன்.
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
//
சுந்தரின் இப்பதிவுக்கான எனது பதில், அடுத்த பதிவில் ...
இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவரும் பரிசுத்தவான்கள்தான். இதன் அடிப்படையில்தான் நிருபங்களின் ஆரம்பத்தில் "பரிசுத்தவான்களுக்கு எழுதுவதாக" பவுல் குறிப்பிடுகிறார். ஆனால் பரிசுத்தவான்கள் என அழைக்கப்பட்ட அவர்களில் பலர், நடக்கைகளில் பரிசுத்தமாக இல்லை. பின்வரும் வசனங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.
1 கொரி. 5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. 2 இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
எபேசியர் 4:17 ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். 22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். 26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; 27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். 28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். 29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். 30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். 31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. 32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
இப்படி பல வசனங்களைக் காட்டமுடியும். கிறிஸ்துவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், தங்கள் நடக்கைகளில் முடிவுபரியந்தம் பரிசுத்தத்தைக் காத்துக் கொண்டால்தான், வெளி. 20:6 கூறுகிற பரிசுத்தவான்களாக அவர்கள் ஆகமுடியும். அவர்கள்தான் கிறிஸ்துவோடுகூட உலகத்தை ஆளுகை செய்யும் பாக்கியத்தைப் பெறமுடியும்.
எனவே நிருபங்களில் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களில் எவர்கள் முடிவுபரியந்தம் பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டார்களோ, அவர்களையே “பரிசுத்தவான்கள்” என வெளி. 20:6 கூறுகிறது.
பரிசுத்தவான்கள் வேறு, இயேசுவின் கற்பனைகளின்படி வாழ்ந்தவர்கள் வேறு என்கிறீர்கள். உங்களது இக்கருத்து சரியல்ல என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாயுள்ளது.
வெளி 14:12 தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
இவ்வசனத்தை நீங்களும் மேற்கோள் காட்டியுள்ளீர்கள்; ஆனால் இவ்வசனம் தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்பவர்களைப் பற்றித்தான் கூறுகிறதேயன்றி கிறிஸ்துவின் கற்பனைகளைக் காத்துக்கொள்பவர்களைப் பற்றி கூறவில்லை என்கிறீர்கள்.
கிறிஸ்துவின் கற்பனைகள் யாவும் தேவனுடைய கற்பனைகளே என்பதை அறியீர்களா சகோதரரே! பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
யோவான் 14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் தேவன் சொன்ன கற்பனைகள் போக, புதிய ஏற்பாட்டில் இயேசு சொன்ன கற்பனைகளும் தேவனுடைய கற்பனைகளே. அவரது கற்பனைகளையும் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொண்டவர்கள்தான் பரிசுத்தவான்கள். எனவே வெளி. 20:6 கூறுகிற பரிசுத்தவான்கள் யாவரும் “கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி வாழ்ந்தவர்களே”.
ஒருவேளை இதை ஒத்துக்கொள்ள உங்களுக்கு மனமில்லையெனில், பின்வரும் வசனங்களையும், அவ்வசனங்களின் அடிப்படையில் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் படியுங்கள்.
யோவான் 14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்.
யோவான் 8:51-ஐச் சுட்டிக்காட்டி, இயேசுவின் வார்த்தையைக் கைக்கொள்பவன் மாமிச மரணத்தைக் காணமாட்டான் என்கிறீர்கள். ஆனால் பேதுரு, பவுல், யோவான் போன்ற அப்போஸ்தலர் அனைவரும் மாமிச மரணத்தைக் கண்டுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை முழுமையாகக் கைக்கொண்டிருக்க மாட்டார்கள் என்கிறீர்கள்; அப்படியானால் அவர்கள் இயேசுவின்மீது முழுமையாக அன்புகூரவில்லை எனச் சொல்லலாமா?
1 யோவான் 2:3 அவருடைய (கிறிஸ்துவினுடைய) கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
இயேசுவின் வார்த்தைகளை முழுமையாகக் கைக்கொள்ளாததால் மரித்துப்போன பேதுரு, பவுல், யோவான் ஆகியோர், இயேசுவை முழுமையாக அறியவில்லை என்றும் அவர்கள் பொய்யர்கள் என்றும் கூறமுடியுமா?
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
இயேசுவின் கற்பனைகளை முழுமையாகக் கைக்கொள்ளாததால் மரித்துப்போன பேதுரு, பவுல், யோவான் ஆகியோர் இயேசுவிடம் அன்புகூரவில்லை எனக் கூறமுடியுமா?
1 யோவான் 3:24 அவருடைய (கிறிஸ்துவினுடைய) கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.
கிறிஸ்து தங்களில் நிலைத்திருப்பதை அறிந்துள்ளதாக யோவான் கூறுகிறாரே; அவ்வாறெனில் கிறிஸ்துவின் கற்பனைகளை யோவான் கைக்கொண்டிருப்பார் அல்லவா? கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்ட அவர் ஏன் யோவான் 8:51-ன் உங்கள் புரிந்துகொள்தலுக்கு மாறாக மரிக்க நேரிட்டது?
நன்கு சிந்தித்து, இக்கேள்விகளுக்கான பதில் காணுங்கள். அப்போது யோவான் 8:51-ஐ நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டதை உணர்வீர்கள்.