பிரசங்கி 7:16,17 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? 17 மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?
ஒருவன் எவ்வளவு அதிக நீதிமானாக இருந்தாலும் அது நல்லதுதானே, பின்னர் ஏன் மிஞ்சின நீதிமானாயிராதே என இவ்வசனம் கூறுகிறது என நாம் கேட்கலாம். அவ்வாறே அதிக ஞானியாக்குதல் என்றால் என்ன? மிஞ்சின துஷ்டன் என்றால் என்ன? அதிக பேதை என்றால் என்ன? எனும் கேள்விகள் நம் மனதில் எழலாம். இக்கேள்விகளுக்கான பதிலை இத்திரியில் காணலாம்.
1. மிஞ்சின நீதிமான் என்றால் என்ன?
நீதிமான் என்பவன் யார் என்பதற்கான விளக்கத்தை வேதாகமம் மிகத்தெளிவாகவே கூறுகிறது. இது சம்பந்தமான சில வசனங்கள்:
எசேக்கியேல் 18:5 ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, 6 மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும், ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, 8 வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து, 9 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஏசாயா 58:6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், 7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். 8 அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
மத்தேயு 25:34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். 37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
சங்கீதம் 112:9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
இது போன்ற பல வசனங்களில் நீதி என்றால் என்ன, நீதிமான் என்பவன் யார் என வேதாகமம் சொல்கிறது. வேதாகமம் சொல்கிற இந்த வரையறைகளுக்கும் மேலாக நாம் அதிகப்பிரசங்கித்தனமாக சில செயல்களை “நீதி” என வரையறுத்து அவற்றைச் செய்வதுதான் மிஞ்சின நீதிமானாயிருப்பதாகும்.
உதாரணமாக: பசித்தவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடு என வேதாகமம் கூறியிருக்க, “இல்லையில்லை, நான் என் ஆகாரம் முழுவதையும் பசித்தவனுக்குக் கொடுத்துவிட்டு, நான் பட்டினியாயிருப்பேன்” எனச் சொல்லி, வேதாகமம் சொல்கிற நீதியைவிட அதிக நீதியை செய்வது மிஞ்சின நீதியாகும்.
இரண்டு அங்கியுள்ளவன் இல்லாதவனுக்கு ஒன்றைக் கொடு என வேதாகமம் சொல்லியிருக்கையில் (லூக்கா 3:11), இருக்கிற 1 அங்கியையும் பிறனுக்குக் கொடுத்து தன்னைப் பெரிய தியாகியாக்க முற்படுவது மிஞ்சின நீதியாகும்.
உனக்கு விரோதமாக குற்றஞ்செய்பவனை ஏழெழுபது தரமானாலும் மன்னிக்க வேண்டும் என இயேசு சொல்லியிருக்க (மத்தேயு 18:22), தேவனுக்கு விரோதமாக, பிறனுக்கு விரோதமாக குற்றஞ்செய்பவனையும் நான் மன்னிப்பேன் என்று சொல்லி தன்னைப் பெரிய தயாளனாகக் காட்ட முற்படுவதும் மிஞ்சின நீதியாகும்.
நமக்கு வேதாகமம் என்ன நீதிகளைச் சொல்லியுள்ளதோ அவற்றை மட்டும் செய்தால் போதும். அதற்கும் மேலாக, அதாவது 1 கொரி. 4:6 சொல்கிற பிரகாரமாக எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணி, எதையாவது செய்ய முற்பட்டால் அப்படிச் செய்பவன்தான் மிஞ்சின நீதிமான்.
தேவனைப் பார்க்கிலும் நாம் நீதிமான் அல்ல (யோபு 4:17). எனவே தேவன் எவர்களிடம் இரக்கம் பாராட்டச் சொல்கிறாரோ, எவர்களை மன்னிக்கச் சொல்கிறாரோ, எவர்களுக்கு எவற்றைக் கொடுக்கச் சொல்கிறாரோ அம்மட்டோடு நாம் நிறுத்திக் கொண்டால் போதும். அதைவிடுத்து, தேவன் சொன்னதற்கு மேலாக இரக்கம் பாராட்டுதல், மன்னித்தல், கொடுத்தல் எல்லாமே நம்மை (தேவனைவிட) மிஞ்சின நீதிமானாக்கிவிடும். அப்படிச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போமாக.