இந்நாட்களில் சிலர் தவறான உபதேசத்திற்கும் துர் உபததேசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், எதை எடுத்தாலும் துர் உபதேசம் எனச் சொல்லி, பிறரைக் குற்றப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
உதாரணமாக பாரம்பரிய சபையான CSI சபையில் கொடுக்கப்படும் குழந்தை ஞானஸ்நானத்தை எடுத்துக் கொள்வோம். குழந்தை ஞானஸ்நானம் வேதாகமத்தில் கூறப்படாத ஒன்றுதான். எனவே இதைப் போதிப்பது தவறான உபதேசம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதை துர் உபதேசம் எனக் கூறமுடியாது. ஏனெனில் சடங்காச்சார ஞானஸ்நானத்தின் அடிப்படையில்தான் ஒருவன் நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியும் என வேதாகமம் சொல்லவில்லை. ஒருவன் ஞானஸ்நானமே பெறாவிட்டால்கூட, அவன் கிறிஸ்து தருகிறதான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றாலே அவன் நித்திய ஜீவனை சுதந்தரித்துவிட முடியும். எனவே குழந்தை ஞானஸ்நான போதனையை தவறான போதனை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமேயொழிய அதை துர் உபதேசம் எனச் சொல்லமுடியாது.
வேதாகமம் சொல்வதற்கு மாறான எல்லா போதனைகளும் தவறான போதனைகள்தான். ஆகிலும் அவையெல்லாமுமே துர் உபதேசமாகிவிடுவதில்லை. இயேசு ஒரு முறை பரிசேயரிடம் இவ்வாறு கூறினார்.
மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
இதிலிருந்து நாம் அறிவதென்ன? பலியைப் பற்றியும் தேவன் தான் சொன்னார், இரக்கத்தைப் பற்றியும் தேவன் தான் சொன்னார்; ஆனால் பலியை அவர் விரும்பாமல், இரக்கத்தையே விரும்பினார். எனவே தேவனே சொன்ன கட்டளைகளாயினும், அவற்றில் எவற்றை அவர் விரும்புகிறார் என்பதை அறிந்து, அவற்றை வலியுறுத்துவதுதான் அவசியமேயொழிய, தேவன் சொன்னார் என்பதற்காக “தேவனின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட” காரியங்களை வலியுறுத்துவது அவசியமல்ல.
ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களான நாமுங்கூட, அன்றைய பரிசேயர்களைப் போல “தேவனின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட” காரியங்களை முதன்மைப்படுத்தி, அவற்றின் அடிப்படையில் மற்றவர்களின் போதனைகளை துர் உபதேசம் எனச் சொல்லி, மற்றவர்களைக் குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படிச் செய்கிற நாம், உண்மையாகவே துர் உபதேசம் செய்வோரை அடையாளம் காணாமல் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டுமெனில், “துர் உபதேசம்” என்பது எது என்பதை நாம் சரியான கோணத்தில் அறிவது அவசியம்.
ஒருவனுக்கு நன்மையைத் தரக்கூடிய உபதேசம் “நல் உபதேசம்”, தீமையைத் தரக்கூடிய உபதேசம் “துர் உபதேசம்” என்பதுதான் அடிப்படை உண்மை. இதை அறிவதோடுகூட, எது நன்மை எது தீமை என்பதையும் நாம் அறிய வேண்டும். ஏனெனில் நன்மையைத் தீமை என்றும் தீமையை நன்மை என்றும் சொல்லி வஞ்சிக்கிற பலர் நிறைந்துள்ள காலம் இது. வேதாகமத்தில் ஒரு வசனம் இப்படியாகச் சொல்கிறது.
தீமையை நன்மையென்றும் நன்மையைத் தீமையென்றும் சொல்லி வஞ்சிக்கிறவர்கள் பல ஆயிர வருடங்களுக்கு முன்னதாகவே இருந்தனர். தற்போது கடைசி காலம் என்பதால் இப்படிச் சொல்லி வஞ்சிக்கிறவர்கள் புற்றீசல் போல் பெருகிவிட்டனர். இவர்கள்தான் உண்மையான துர் உபதேசக்காரர்கள். எனவே எது நன்மை எது தீமை என்பதைக் குறித்த அறிவு நமக்கு மிகமிக அவசியம்.
பொதுவாக இவ்வுலக வசதிகளை/ஐசுவரியத்தை/கனத்தை நன்மைகள் என நாம் கருதுவதுண்டு. ஆனால் வேதாகமமோ இப்படிச் சொல்கிறது.
பிரசங்கி 2:24 மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை;
பிரசங்கி 8:15 புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.
இவ்வுலகைப் பொறுத்தவரை புசித்துக் குடித்து மகிழ்வது ஒன்றுதான் நன்மையானது என வேதாகமம் சொல்கிறது. இதற்கு மேலான மற்றவையெல்லாம் ஒருவேளை தீமையாக இல்லாவிட்டாலும், அவற்றை நன்மையெனச் சொல்ல முடியாது. இவ்வுலகில் நன்மையானதாக இருக்கிற புசிப்பும் குடிப்பும்கூட அழிந்துபோகும் நன்மைகளே என இயேசு சொல்கிறார்.
யோவான் 6:27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;
ஆக, இவ்வுலகில் நமக்கிருக்கும் ஒரே நன்மையான போஜனம்கூட அழிந்துபோகக்கூடியதே. எனவே அதையுங்கூட நாடாமல், அழியாத நித்தியஜீவனை நாடி அதற்கேற்ற கிரியையைச் செய்யும்படி இயேசு சொல்கிறார். அழியாத அந்த நித்திய ஜீவனை யார் பெறுவார்கள்?
ஆம், இவ்வுலகில் நாம் நன்மை செய்தால்தான் மறுமையில் நித்திய ஜீவனைப் பெறமுடியும். எனவேதான் பிரசங்கி இப்படிச் சொல்கிறார்.
பிரசங்கி 3:12 மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
எனவே என்றென்றும் நிலைத்திருக்கிற நித்திய ஜீவனும், அதைச் சுதந்தரிக்கும்படி இவ்வுலக வாழ்வில் பிறருக்கு நாம் செய்கிற நன்மையும்தான் நமக்கு மெய்யான நன்மைகளாகும். இந்த நன்மைகளைக் குறித்து போதிப்பதுதான் நல் உபதேசமாகும்.
இனி, எது நமக்குத் தீமையானது என்பதை அறியும்படி பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
பிரசங்கி 5:13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம்.
லூக்கா 6:24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
இவ்வுலக ஐசுவரியம், இப்பூமியின் பொக்கிஷம், மாம்சசிந்தை எனும் இவை யாவும் நமக்குத் தீமையானவைகளே. இத்தீமைகளை நன்மை போல் சொல்லி அவற்றைப் பெறும்படி போதிப்பதுதான் துர் உபதேசம்.
இன்றைய பெரும்பாலான ஊழியர்கள் உலகத்துக்கான விஷயங்கள்தான் நமக்கு நன்மையானவை என்பதுபோன்ற ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்கி, அவற்றைப் பெறுவதைப் பற்றியே உபதேசிக்கின்றனர். இதுதான் உண்மையான துர் உபதேசம். இவ்வுபதேசம் தான் நாம் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதை தடை செய்வதாயிருக்கிறது. எனவே இந்த உபதேசம் செய்வோரைத்தான் நாம் அடையாளங்காட்ட வேண்டும்.
தீமையை நன்மை எனச் சொல்லி போதிக்கும் “துர் உபதேசக்காரரின்” நோக்கம், அவர்களின் சுய ஆதாயமே. இவர்களைக் குறித்து பவுலும் பேதுருவும் யோவானும் பின்வரும் வசனங்களில் கூறி எச்சரித்துள்ளனர்.
ரோமர் 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
2 பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
1 யோவான் 4:5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
இவர்கள் அனைவரும் துர்நோக்கமுள்ளவர்கள். தங்கள் உபதேசத்தைக் கேட்போர் நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதைப் பற்றி இவர்கள் பாரங்கொள்வதில்லை. (அழிந்துபோகும்) உலக நன்மைகள் ஜனங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதில் பாரமிருப்பதைப் போன்று நடித்து, தங்களுக்கு ஆதாயம் உண்டாக்குவதுதான் இவர்களின் நோக்கம். எனவே இவர்களின் உபதேசம்தான் துர் உபதேசம். இவர்களின் உபதேசத்தில் மயங்கித்தான் ஏராளமான ஜனங்கள் உலகத்துக்குரியவற்றை நாடி, பரம நன்மைகளை இழந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே வேதாகமத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, தவறான கோட்பாடுகளை வகுத்து போதிப்பவர்களை குற்றஞ்சாட்டி போராடுவதைவிட, ஜனங்களை கேட்டுக்கு வழிநடத்தும் துர் உபதேசக்காரர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தோலுரித்துக் காட்டுவதற்கு முன்னுரிமை கொடுப்போமாக.