தலைப்பைப் பார்த்ததும், இது பாஸ்டர்களை எச்சரிக்கிற பாஸ்டர்களுக்கான கட்டுரை என யாரும் கருத வேண்டாம். “நாய் ஜாக்கிரதை” எனும் வாசகம் எப்படி அவ்வாசகத்தைப் படிப்பவர்களை எச்சரிப்பதாக உள்ளதோ அதேவிதமாகத்தான் இக்கட்டுரையின் தலைப்பும் அதைப் படிப்பவர்களை எச்சரிப்பதாக உள்ளது.
கடந்த 14-12-2011-ல் “Z தமிழ்” TV-யில், “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சியில், ஒரு பாஸ்டர் மற்றும் அவரது 2-வது மனைவிக்கிடையேயான பிரச்சனை அலசப்பட்டு தீர்வுகாண முயலப்பட்டது. அவர்களின் பேச்சை ஓரளவு எனது செல்போனில் பதிவு செய்துள்ளேன். அவர்களைப் பற்றின சுருக்கமான விபரம்:
அந்தப் பாஸ்டர் முதலாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து 4 பிள்ளைகளுக்கு தகப்பனாக இருந்துள்ளார். தனது பிள்ளைகளை தனக்குத் தெரியாமல் அவரது மனைவி திருமணம் செய்துகொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். இதனால் தனது மனைவியைவிட்டுப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தபோது, 2 பிள்ளைகளையுடைய ஒரு விதவையுடன் தொடர்புண்டாகி, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே அந்த விதவையுடன் குடும்பம் நடத்தியுள்ளார். ஒரு சமயம் அந்த விதவையை திருமணம் செய்ததாகச் சொல்கிறார், மற்றொரு சமயம் திருமணம் செய்யாமல் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகச் சொல்கிறார்.
அப்படி வாழ்ந்து வருகையில் இந்த விதவையுடனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாஸ்டரைக் கேட்டால், அப்பெண் ஒரு சைக்கோ என்கிறார். அப்பெண்ணோ தான் சைக்கோ அல்ல என்றும் பாஸ்டருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்புண்டானதால் தன்னை வெறுக்கிறார் என்கிறார். அதற்கு ஆதாரமாக பாஸ்டரும் ஒரு பெண்ணும் பேசின தொலைபேசி உரையாடலைப் பதிவுசெய்து தந்துள்ளார்.
அந்த தொலைபேசி உரையாடலும் TV-ல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அந்த உரையாடலில் தான் பேசியுள்ளதை பாஸ்டர் மறுக்கவில்லை. பாஸ்டரின் தற்போதைய வயது 55 என்கிறார். அவரோடு பேசின பெண்ணின் வயது தனக்கு தெரியாது என பாஸ்டர் கூறுகிறார்; ஆனால் அப்பெண்ணின் வயது 26 என TV பேட்டியாளர் கூறினார்.
அப்பெண்ணோடு அவர் பேசின உரையாடல் மூலம், அப்பெண் அவரது தற்போதைய காதலியாக இருப்பது தெரிகிறது. அப்பெண், அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத்தான் தன்னைத் திருமணம் செய்யவேண்டும் என்கிறார்; பாஸ்டரும், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அப்பெண்ணைத் திருமணம் செய்வதாகவும் அதுவரை இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.
இப்படியாக முதல் மனைவி, சைக்கோ எனச் சொல்லப்படும் விதவைப் பெண், இனிமேல் திருமணம் செய்வதாக வாக்களித்துள்ள இளம்பெண் ஆகிய 3 பெண்களின் வாழ்க்கையுடன் பாஸ்டர் விளையாடியுள்ளார். இத்தனைக்கும் அவர் தனது பாஸ்டர் பணியையும் செய்துவருகிறார்; பாஸ்டர் பணியில் வருகிற சொற்பமான காணிக்கைப் பணத்தின்மூலம் அந்த விதவைப் பெண்ணுக்கு நஷ்டஈடு தர இயலாது என்றும், 50 லட்சம் மதிப்புள்ள தனது சொத்து சம்பந்தான வழக்கு முடிந்தபின்னர், நஷ்டஈடு தருவதாகவும் கூறுகிறார்.
இந்நிகழ்ச்சியை பார்க்கையில் பவுலின் பின்வரும் வசனம்தான் நினைவுக்கு வந்தது.
2 தீமோ. 3:6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 7 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
இந்த உண்மைச் சம்பவத்தை இங்கு பதிவதற்கான காரணங்கள்:
1. பெண்களின் ஏமாளித்தனத்தை பாஸ்டர் எனப்படுபவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை விசுவாசிகள் குறிப்பாக பெண் விசுவாசிகள் அறிந்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
3. காணிக்கை பணத்தை தங்களால் கைவிடப்படும் மனைவி/துணைவிக்கு நஷ்டஈடாகக் கொடுக்கத் துணிவதைப் போல மேலும் பல வேதாகமத்திற்கு விரோதமான காரியங்களுக்கும் காணிக்கைப் பணத்தை பாஸ்டர்கள் பயன்படுத்தக் கூடும் என்பதை விசுவாசிகள் அறிய வேண்டும்.
FaceBook தளத்தில் பல “பாஸ்டர்கள்” வலம் வருகின்றனர். அவர்களில் பலர் தங்களது அரும்பெரும் புகைப்படைங்களை அடிக்கடி வெளியிடுகின்றனர். அந்த புகைப்படங்களில் அவர்களின் style, விதவித வண்ண ஆடைகள், விதவித cooling glasses, விதவித வாகனங்கள், ஆடம்பர வீடுகள், ஆலயங்கள், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் மலைப்பாக உள்ளது. பாஸ்டர்களின் ஆடம்பர அனுபவித்தலுக்கா விசுவாசிகள் காணிக்கை கொடுக்கின்றனர்?
வேலைசெய்ய மனதில்லாதவன் சாப்பிடவும் கூடாதென பவுல் சொல்கிறார். ஆனால் இந்த பாஸ்டர்களோ சற்றும் உறுத்தலில்லாமல் விசுவாசிகளின் உழைப்பில் ஆடம்பரங்களை அனுபவிக்கின்றனர். இதை விசுவாசிகளும் முழுமனதோடு அனுமதிக்கின்றனர். எனவேதான் தாங்கள் என்ன செய்தாலும் விசுவாசிகள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில் அனைத்து பாவங்களிலும் பாஸ்டர்கள் துணிகரமாக இறங்குகின்றனர்.
இப்படியாக “உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்” என்ற ரீதியில் விசுவாசிகளும் பாஸ்டர்களும் போய்க்கொண்டிருக்கின்றனர். இதைப் படிப்பவர்கள் விழிப்புணர்வு பெறுவார்களா இல்லையா என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல.
தேவனும் இயேசுவும் சொன்னதையே மதிக்காதவர்கள், அற்பனாகிய நான் சொல்வதையா மதிக்கப்போகிறார்கள்?
பூமியில் யாரையும் போதகர், குரு, பிதா என அழைக்கவும் வேண்டாம், அப்படியாக அழைக்கப்படவும் வேண்டாம் என இயேசு நேரடியாகச் சொன்னதையே மதிக்காதவர்கள், நான் சொல்வதையா மதிக்கப்போகிறார்கள்?
என்றாலும் சொல்ல வேண்டியது என் கடமை. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.