நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இழிவான ஆதாயத்துக்காக தகாதவைகளை உபதேசிப்போரின் வாயை அடக்க வேண்டும்


Militant

Status: Offline
Posts: 830
Date:
இழிவான ஆதாயத்துக்காக தகாதவைகளை உபதேசிப்போரின் வாயை அடக்க வேண்டும்
Permalink  
 


இத்தலைப்பைப் பார்த்ததும் “இது ஏதோ நானாக வடிவமைத்த தலைப்பு” என யாரும் கருத வேண்டாம். தீத்துவுக்கு எழுதின நிருபத்தில் பவுல்தான் இப்படிச் சொல்லியுள்ளார்.

தீத்து 1:10 அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். 11 அவர்களுடையவாயைஅடக்கவேண்டும்; அவர்கள்இழிவானஆதாயத்துக்காகத்தகாதவைகளைஉபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

இவ்வசனம் ஏதோ விருத்தசேதனமுள்ளவர்களை மட்டும் குறிப்பிடுவதாகக் கருதவேண்டாம்; இழிவான ஆதாயத்துக்காக தகாதவற்றை உபதேசிப்போரில் விருத்தசேதனமுள்ளவர்களும் அடங்குவார்கள் என்றே பவுல் சொல்கிறார். அன்றைய விருத்தசேதன போதகர்களுக்கு நிகராக இன்றை (சடங்காச்சார) ஞானஸ்நான போதகர்கள் விளங்குகின்றனர்.

ஆதாயத்துக்காக வியாபாரம் செய்பவர்களை நாம் அறிவோம். ஆனால் ஆதாயத்துக்காக யாராவது உபதேசம் செய்வார்களா? அதுவும் இழிவான ஆதாயத்துக்காக?

பவுலின் கூற்றுப்படி 2000 வருடங்களுக்கு முன்பே அப்படிப்பட்டவர்கள் இருந்ததாக அறிகிறோம். சொல்லப்போனால் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னும் அப்படிப்பட்டவர்கள் இருந்ததாக மீகா தீர்க்கதரிசி கூறுகிறார்.

மீகா 3:11 அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்;

கூலிக்காக உபதேசிப்பதும் இழிவான ஆதாயத்துக்காக உபதேசிப்பதும் நம் காலத்தில் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக இவை நடந்து வருகின்றன. இவர்களின் சில விசேஷித்த நடக்கைகளை பவுல் எடுத்துரைத்துள்ளார்.

1. அவர்கள் அடங்காதவர்கள்

நல்ல நோக்கத்தில் உபதேசம் செய்பவர்கள், தங்களது குற்றங்குறைகளை யாராவது எடுத்துரைத்தால், அதை அடக்கத்துடன் கேட்டு நடப்பார்கள். பேதுருகூட தனது தவறைப் பவுல் எடுத்துச் சொன்னபோது, அடக்கத்துடன் கேட்டு நடந்துகொண்டார்.

ஆனால் இழிவான ஆதாய நோக்கத்தில் உபதேசம் செய்பவர்கள் யாருக்கும் அடங்கமாட்டார்கள். ஏனெனில், அப்படி நடந்தால் அவர்கள் தங்கள் ஆதாயத்தையல்லவா இழக்க வேண்டியதிருக்கும்? எனவே இவர்கள் யார் சொல்வதையும் சட்டை செய்வதில்லை.

இந்நாட்களில் நம் மத்தியில் இழிவான ஆதாயத்துக்காக உபதேசிக்கிற ஊழியர்களும் அப்படித்தான் நடக்கின்றனர். இவர்களின் வேதவிரோதப் போக்கை நாம் எடுத்துச் சொன்னால் அதை அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். நாம் சொல்வதெல்லாம் அவர்களுக்கு “செவிடன் காதில் ஊதின சங்காகத்தான்” இருக்கும்.

இதை எனது அனுபவபூர்வமாகவே நான் பார்த்துவிட்டேன். இழிவான ஆதாயத்துக்காக உபதேசம் செய்கிற சில முன்னணி ஊழியர்களுக்கு நானும் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் படிக்ககூட அவர்களுக்கு நேரம் இருக்குமா எனத் தெரியவில்லை. இழிவான ஆதாய வியாபாரத்தில் அவர்கள் அத்தனை busy. இப்படி மற்றவர்களின் ஆலோசனைகளை சற்றும் கண்டுகொள்ளமால் தங்கள் மனம்போனபடி இவர்கள் நடப்பதால்தான் இவர்களை “அடங்காதவர்கள்” எனப் பவுல் சொல்கிறார்.

2. அவர்கள் வீண்பேச்சுக்காரர்கள்

உபதேசம் செய்பவர்களின் பேச்சு முழுவதும் பரம நன்மைகளைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். அதுதான் நல்ல உபதேசகருக்கு அடையாளம். இயேசு தமது ஊழியம் முழுவதிலும் பரலோக ராஜ்யத்தையல்லாமல் வேறெதையும் குறித்து போதிக்கவில்லை. சொல்லப்போனால், பூமிக்கடுத்த காரியங்களுக்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்றுதான் இயேசு சொன்னார்.

இயேசுவைப் பின்பற்றின அப்போஸ்தலர்களும் பூமிக்குரிய காரியங்களைக் குறித்து எதுவும் பேசவில்லை. பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் என்றே அவர்கள் கூறினர். அவர்களின் நோக்கம் இழிவான ஆதாயம் அல்ல என்பதால், வீணான பூமிக்குரிய காரியங்களைப் பற்றி அவர்கள் பேசவில்லை.

ஆனால் இழிவான ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டவர்கள், பெரும்பாலும் வீணான பேச்சுக்களைத் தான் பேசுவார்கள். பவுல் காலத்து உபதேசகர்கள் என்னென்ன வீண்பேச்சுக்களை பேசினார்கள் என்பதை நாம் அறியோம். ஆனால், இன்றைய ஊழியர்கள் என்னென்ன வீண்பேச்சுக்களைப் பேசுகின்றனர் என்பதை அவர்கள் வெளியிடும் பத்திரிகைகளைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, இயேசு விடுவிக்கிறார் பத்திரிகையின் மார்ச் 2012 மாத இதழைப் பார்ப்போம்.

இப்பத்திரிகையில் 32 பக்கங்கள் உள்ளன. முதல் பக்க அட்டையில், "விசுவாசியுங்கள், விரும்புவதைப் பெறுவீர்கள்" எனும் வேதவசன மேற்கோள் இல்லாத ஒரு கூற்று. 2-ம் பக்கத்தில் ஊழிய நிறுவனரின் கடந்தகால/வருங்கால ஊழியம் பற்றிய விளம்பரங்கள், கூடவே ஜனங்களின் உலக ஆசீர்வாதங்கள் பற்றின சில ஆறுதலான வார்த்தைகள், வியாபாரிகளின் ஆசீர்வாதத்திற்கென விசேஷித்த அழைப்பு ஆகியவை மட்டுமே.

3-9 பக்கங்களில் உலக ஆசீர்வாதங்களை விரும்புங்கள் எனும் உபதேசத்தைச் சொல்லி, ஆசீர்வாதத்தை நினைக்காதவர்களையும் நினைக்கத்தூண்டும்படியான பேச்சு. இப்பேச்சின் நடுவில் பெருமையுடன் கூறப்பட்டுள்ள “ஒரு விசுவாசியின் ஜெபம்” வேடிக்கையிலும் வேடிக்கை. அந்த ஜெபம்:

“ஆண்டவரே! நீர் நினைத்தால் என்னை ஆசீர்வதிக்க முடியும், டாட்டாவையும் பிர்லாவையும் ஆசீர்வதித்து உமக்கு என்ன பிரயோஜனம்? என்னை ஆசீர்வதியும், நான் ஆலயம் கட்டுவேன், மிஷனரியைத் தாங்குவேன், உம்முடைய ஊழியத்திற்கு உதவி செய்வேன்.”

ஜெபம் எப்படிப் போகிறது பாருங்கள். “யாரை ஆசீர்வதிக்கக்கூடாது, யாரை ஆசீர்வதிக்க வேண்டும்” என ஆண்டவருக்கே இவர் பாடம் எடுக்கிறார். “உமக்கு விபரம் தெரியாம, டாட்டா பிர்லாவை ஆசீர்வதிச்சிட்டீர், இனிமே விபரமா என்னை ஆசீர்வதியும், அப்போதான் உமக்கு நல்லது” என்று சொல்லி ஆண்டவரையே விவரமில்லாதவரா ஆக்கிட்டார்.

இந்த ஜெபத்தைக் கேட்ட ஆண்டவர், “ஐயய்யோ, நாம் விவரமில்லாம டாட்டா பிர்லாவை ஆசீர்வதிச்சிட்டோமே”ன்னு நினைச்சி, நம்ம விசுவாசியை அபரிதமாக ஆசீர்வதிச்சிட்டாராம்.

(ஆனா என்ன, மறுபடி மறுபடி விவரமில்லாம அம்பானி, அமிதாப்பச்சன், ரஜினி போன்ற பல புறமார்க்கத்தாரை ஆண்டவர் ஆசீர்வதிச்சிட்டுத்தான் இருக்கார்.)

அப்புறம் 10,11 பக்கங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சர்ச்களுக்கு, ஜனங்களிடம் இவர் வசூலித்த பணத்தைக் கொடுத்தது பற்றி படத்தோடு கூடிய விளம்பரங்கள். 12-ம் பக்கதுல இவரது டிவி நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள். 13-ம் பக்கத்துல தேவனுடைய கூடாரத்துக்கு காணிக்கை கேட்கும் விளம்பரம். இப்படியே பல விளம்பரங்கள்.

14,15 பக்கங்களில் வின்செண்ட் செல்வகுமாரின் முடிவுகால எச்சரிப்பு கட்டுரை; இதில் பூமிக்குரிய போதனையோ விளம்பரமோ இல்லாததால், இதையாவது பரலோகராஜ்யத்துக்கடுத்ததா எடுத்துக் கொள்ளலாம்.

அப்புறம் 16,17 பக்கங்களில் சாது செல்வராஜுடன் இணைந்து செய்த ஊழியங்களைக் குறித்த தகவல்கள், பிரமாண்ட படங்கள். 18-27 பக்கங்களில் இவரது ஊழியங்களுக்கு நற்சான்றிதழ் தருகிற பல சாட்சிகள், பல (உலக) ஆசீர்வாதக் கூட்டங்கள் பற்றிய விளம்பரங்கள், நடந்து முடிந்த ஊழியங்களைக் குறித்த தகவல்கள் படங்களுடன், காருண்யாவுக்கு விளம்பரம், திருவசனப் பண்டிகை விளம்பரம், அப்படி இப்படின்னு பல விளம்பரங்கள்.

28, 29 பக்கங்களில் “புத்தியுள்ள ஸ்திரீ” என்ற தலைப்பில் சற்று உருப்படியான கட்டுரை, 30-ம் பக்கத்தில் செய்திகள், மறுபடி 31,32 பக்கங்களில் இவரது ஊழியங்களுக்கான விளம்பரங்கள். ஆக, 32 பக்கங்களில் சுமார் 27 பக்கங்களில் வீண்பேச்சுக்கள்தான்.

இவர்களின் ஊழிய மேடைகளிலும் இப்படித்தான் வீண்பேச்சுக்கள். சில சமயங்களில் இவர்களின் ஊழிய மேடைகளைப் பார்த்தால், ஏதோ அரசியல் கூட்டத்துக்கு தெரியாம வந்துவிட்டோமோ என்றுகூட நினைக்கத் தோன்றும். ஒவ்வொருவரின் ஊழிய பிரஸ்தாபங்களைச் சொல்லி, அவங்களைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, கரகோஷம் எழுப்பி …. இவர்கள் செய்கிற பரபரப்புகளைப் பார்த்தால், அரசியல் மேடை தோற்றுவிடும்.

இவர்களின் இந்த செயல்களும், பேச்சுக்களும் வேதத்தின்படி வீணானதாக இருக்கலாம்; ஆனால் அவைதான் இவர்களுக்கு இழிவான ஆதாயத்தைப் பெற்றுதருகிற வல்லமையான ஆயுதங்கள். ஆம், அவர்களைப் பொறுத்தவரை அவை வீணானவையல்ல, அவர்களுக்கு ஆதாயம் தருகிற ஆயுதங்கள்.

3. அவர்கள் மனதை மயக்குகிறவர்கள்

இழிவான ஆதாயத்தைப் பெறுவதற்காக இவர்கள் கையாளும் மிக முக்கியமான உத்தி, ஜனங்களின் மனதை மயக்குவது. ஜனங்களை மயக்குவதற்கு இவர்கள் கையாளுகிற மிக முக்கியமான ஆயுதம் தான், தகாததை உபதேசிப்பது. எது தகாத உபதேசம்?

பூமிக்குரியவற்றைப் பேசுவதுதான் தகாத உபதேசம் (யாக்கோபு 4:4; 1 யோவான் 4:5). அன்றைய காலத்தைப் போலவே இக்காலத்திலும் உலகத்தைக் குறித்து பேசுகிற அநேக ஊழியர்கள் உண்டு. 

பொதுவாக ஜனங்களின் எண்ணமும் சிந்தையும் எப்போதும் உலகத்தைப் பற்றித்தான் இருக்கும். அவர்களிடம் போய், பரலோக ராஜ்யத்துக்கடுத்தவைகளைப் பேசினால் அது நிச்சயமாக எடுபடாது. ஆனால் இந்த ஊழியர்களுக்கு தங்கள் வியாபாரம் நடக்க வேண்டுமே, வியாபாரத்தில் ஏராளமான ஆதாயம் கிடைக்க வேண்டுமே!! என்ன செய்வது?

உலகத்தைப் பற்றி சிந்திக்கிற ஜனங்களிடம் உலகத்தைக் குறித்து பேசினால் அது நன்றாகவே எடுபட்டுவிடும். இதை நன்கறிந்த உபதேசகர்கள், ஜனங்களின் மனதை மயக்கும் வண்ணம், உலக ஆசீர்வாதங்களையே தங்களது பிரதான உபதேசமாகப் போதிக்கின்றனர். இப்போதனைகள் மூலம் இவர்கள் பெறுகிற ஆதாயம், நிச்சயம் இழிவானதே. இப்படிப்பட்டவர்களின் வாயைத்தான் அடக்கவேண்டும் எனப் பவுல் கூறுகிறார்.

இவர்களிடம் நேரில் போய் சொல்லி இவர்கள் வாயை அடக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனெனில் இவர்கள் யாருக்கும் அடங்காதவர்களாகத்தான் இருப்பார்கள் என பவுலே சொல்லிவிட்டார். பின்னர் எப்படித்தான் இவர்கள் வாயை அடக்க முடியும்?

எந்த ஜனங்களின் மனதை அவர்கள் மயக்கினார்களோ, அதே ஜனங்களிடம் சென்று அவர்களின் வஞ்சகங்களை எடுத்துரைப்பது ஒன்றுதான் வழி. இதன் மூலம் 2 நல்விளைவுகள் நேர வாய்ப்புண்டு. 1. இவர்களின் வஞ்சகங்களிலிருந்து ஜனங்கள் தப்பிப்பது, 2. இவர்களின் வஞ்சகங்களை உணர்ந்த ஜனங்கள், இவர்களை ஒதுக்கிவிட்டால், தானாகவே அவர்கள் அடங்குவது.

ஆம், இழிவான ஆதாயப் போதகர்களை அடக்குவதென்பது ஜனங்களின் கையில்தான் உள்ளது. ஜனங்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டால், தானாக அவர்கள் அடங்கிவிடுவார்கள்.

எனவே இழிவான ஆதாயத்துக்காக தகாதவைகளை உபதேசிப்போரின் வாயை அடக்கவேண்டுமெனில், இவர்களின் தகாத உபதேசங்களில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் ஜனங்களிடம்தான் செல்ல வேண்டும்; இவர்களின் ஓநாய்த் தனங்களை ஜனங்களிடம்தான் எடுத்துச் சொல்லவேண்டும்.

பின்குறிப்பு (அல்லது எச்சரிக்கை):

இவர்களின் இழிவான ஆதாயத்திலிருந்து பங்கைப் பெறுகிற சில இழிவானவர்களும் உண்டு. இவர்களின் அபிமான ஊழியர்களின் இழிவுகளை யாராவது அம்பலப்படுத்தினால் இவர்களுக்கு ஆவேசம் பொத்துக்கொண்டு வரும். இவர்களைக் குறித்து சற்றுவிரிவாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: இழிவான ஆதாயத்துக்காக தகாதவைகளை உபதேசிப்போரின் வாயை அடக்க வேண்டும்
Permalink  
 


https://www.facebook.com/note.php?saved&&note_id=10150677255039367



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard