புதுவருட வாக்குத்தத்தம்/தீர்க்கதரிசனம் எல்லாம் வெறும் ஏமாற்று என்பதை இந்நாட்களில் பலரும் உணரத் தொடங்கிவிட்டனர். ஆகிலும் புதுவருடத்தில் பிரவேசிப்பதை மிகவும் விசேஷித்ததாகக் கருதுவதென்பது நம்மில் பலரிடம் இன்னமும் காணப்படுகிறது. புதுவருடம் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துவிடாதா, சந்தோஷத்தைத் தந்துவிடாதா என ஏங்குகிற பலருங்கூட நம்மிடையே உண்டு. நமது இந்த ஏக்கத்தை மூலதனமாக்கித்தான், நம் புரூடா மன்னர்களாக கள்ளஊழியர்கள் புதுவருட வாக்குத்தத்தத்தையும் தீர்க்கதரிசனத்தையும் ஒவ்வொரு வருடத்துவக்கதிலும் அவிழ்த்துவிடுகின்றனர்.
“ஹாப்பி நியூ இயர்” சொல்லும் வழக்கத்தை எவர்/எப்போது தொடங்கினாரோ தெரியவில்லை; ஆனால் நான் விவரமறிந்த நாள் முதல் இவ்வழக்கத்தைப் பார்த்துவருகிறேன். என் சிறுவயதில் நானுங்கூட பிறருக்கு “ஹாப்பி நியூ இயர்” கூறியுள்ளேன்; அவ்வாறே பிறர் எனக்குச் சொல்லவேண்டுமென எதிர்பார்த்துமுள்ளேன். ஆனால் “அதனால் எந்தப் பலனுமில்லை, அதெல்லாம் வெறும் மாயை” என்பதை என் இளம்வயதிலேயே அறிந்துகொண்டேன்.
நம் கடந்தகால வருடங்களை சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் எந்த வருடமுமே விசேஷித்ததாக இருந்ததில்லை என்பதை நாம் அறியமுடியும். மாத்திரமல்ல, எல்லா வருடங்களிலுமே நமக்கு இன்பமான நிகழ்வுகளும் துன்பமான நிகழ்வுகளும் மாறிமாறி நிகழ்ந்துள்ளதையும் காணமுடியும்.
நம் வாழ்நாட்களைக் குறித்து வேதாகமம் என்ன சொல்கிறது?
யோபு 14:1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்
சங்கீதம் 90:10 எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது,
பிரசங்கி 1:13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார். 14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
பிரசங்கி 2:11 என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
நம் வாழ்நாட்கள் எத்தனை சஞ்சலமுள்ளது, எத்தனை தொல்லை நிறைந்தது என்பதைக் குறித்து வேதாகமம் இத்தனை தெளிவாகக் கூறியிருக்கையில், புதுவருடத்தில் மகிழ்ச்சி உண்டாகும் என நம்புவதும், அதற்காக ஒருவரையொருவர் “ஹாப்பி நியூ இயர்” எனச் சொல்லி வாழ்த்துவதும் வேதாகமக் கருத்துக்கு இசைவாயிருக்குமா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
வருடத்துவக்கம், வருடமுடிவு என்பதெல்லாம் காலக்கணக்குகாக மட்டுமேயன்றி, இவ்வுலகில் தேவன் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்காக அல்ல. அதுவும் நாம் பயன்படுத்துகிற காலக்கணக்குக்கும் வேதாகம காலக்கணக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; இப்படியிருக்க, இந்தக் காலக்கணக்கின் அடிப்படையில் தேவன் தமது திட்டங்களை வைப்பாரா? நம் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவருவாரா? நிச்சயமாகக் கிடையாது.
ஆனாலும் கிறிஸ்தவர்களான நம்மில் பலருங்கூட, புதுவருடப் பிறப்பை விசேஷித்ததொன்றாகக் கருதி, அதைக் கொண்டாடுவதும், ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதுமாக இருக்கிறோம்.
ஒருவரையொருவர் வாழ்த்துவதில் தவறேதுமில்லை; வேதாகம விசுவாசிகள் பலருங்கூட ஒருவருக்கொருவர் வாழ்த்தியுள்ளனர். ஆனால் அவர்களில் எவரேனும், இந்த நாள்/வாரம்/மாதம்/வருடம் சந்தோஷமாயிருக்குமென வாழ்த்தியுள்ளனரா? சற்று வேதாகமத்தைத் தேடித்தான் பாருங்களேன்! பொதுவான வாழ்த்தை மட்டுமே அவர்கள் கூறியுள்ளனர்.
மாத்திரமல்ல, இவ்வுலக வாழ்வு சஞ்சலமும் உபத்திரவமும் நிறைந்ததுதான் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறியுமுள்ளனர். ஆனாலும் உபத்திரவம் நிறைந்த இவ்வுலக வாழ்வில், தேவனுடைய கிருபையை மட்டும் சார்ந்திருந்து, எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கும்படி சொல்லி நம்மை ஊக்கப்படுத்தியுமுள்ளனர்.
இயேசுவுங்கூட “இவ்வுலகத்தில் உபத்திரவம் உண்டு” என்றும், “துயரப்படுகிறவர்கள், துன்பப்படுகிறவர்கள், அழுகிறவர்கள், பசியாயிருப்பவர்கள், தரித்திரர் அனைவரும் பாக்கியவன்கள்” என்றும் சொல்லி, கூடவே “உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்” என்றும் சொல்லி உற்சாகப்படுத்தியுள்ளார் (யோவான் 16:20,33; மத்தேயு 5:4,10; லூக்கா 6:20-22) .
இப்படியிருக்க, நாம் ஒருவரையொருவர் “ஹாப்பி நியூ இயர்” எனச் சொல்லி வாழ்த்துவது அர்த்தமுள்ளதாயிருக்குமா? சிந்தித்துப் பார்ப்போம்.
தேவனின் கிருபை என்பது வருடங்கள் மாறும்போது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளின் காலைதோறும் அது புதியதாக இருப்பதாகப் பின்வரும் வசனம் கூறுகிறது.
புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. 23 அவைகள் காலைதோறும் புதியவைகள்;
இத்தனை தெளிவான வசனம் இருக்கையில், நாம் ஏன் வருடத்தின் மாறுதலை முக்கியப்படுத்தி, புதுவருடத்தில் புது கிருபைகள் புது மகிழ்ச்சி உண்டாகும் என எதிர்பார்க்க வேண்டும்? சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் இப்படி புதுவருடத்தை முக்கியப்படுத்தி பற்பல எதிர்பார்ப்புகளுடன் இருப்பதால்தான், நமது இந்த எதிர்ப்பார்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகி, இந்தக் கள்ள ஊழியர்கள் ஆளாளுக்கு ஒரு வாக்குத்தத்தத்தையும் தீர்க்கதரிசனத்தையும் சொல்லி நம்மை முட்டாள்களாக்குகின்றனர்.
அவர்களின் இந்த வேதவிரோதச் செயல்களுக்கு, அவர்களை மட்டுமே குற்றம் சொல்லி பயனில்லை; நாமுங்கூட வேதம் சொல்லாத புதுவருட எதிர்பார்ப்புகளை விட்டுவிட வேண்டும். ஆனால் நாமோ, இதில் ஒரு நம்பிக்கை இல்லாவிட்டால்கூட, ஊரோடு ஒத்துவாழ் எனும் கூற்றின்படி, உலக மக்களோடு ஒத்துப்போகிறோம்.
இப்படி நாம் உலகவழக்கத்தோடு ஒத்துப்போகிறவரை, இந்தக் கள்ள ஊழியர்களின் புதுவருட வாக்குத்தத்தம் மற்றும் தீர்க்கதரிசனங்களும் ஓயாது.