வெளிப்படுத்துதல் 20:4-ல் 1000 வருட அரசாட்சியைப் பற்றிய தகவலைப் பார்க்கிறோம். இந்த 1000 வருட ஆட்சி, தேவதிட்டத்தின் ஒரு பிரதான பகுதி என்பதோடு மிகமுக்கியமானதாகவும் காணப்படுகிறது.
இந்த 1000 வருட அரசாட்சியின் நோக்கமென்ன, அங்கு யாரெல்லாம் பிரஜைகளாக இருப்பார்கள், அந்த ஆட்சி எப்போது துவங்கும் என்பது பற்றி அறிந்தவர்கள் தகுந்த வேதவசன ஆதாரத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
இவ்வுலகை மனிதன் ஆளவேண்டும், அவன் மூலம் தேவனின் நீதியான ஆட்சி இவ்வுலகில் நடக்கவேண்டும் என்பதே ஆதியில் தேவனின் எண்ணமாக இருந்தது (ஆதி. 1:28). ஆனால், மனிதன் தன்னை சாத்தானுக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்ததால், மனிதன் மூலம் சாத்தான் இவ்வுலகை ஆளத்தொடங்கினான். சாத்தானின் இந்த அநீதியான ஆட்சியை நீக்கி, தேவனின் நீதியான ஆட்சியை நிறுவ ஆதியிலேயே தேவன் திட்டமிட்டார்.
தேவனின் நீதியான ஆட்சியைத்தான் தேவனுடைய ராஜ்யம் அல்லது பரலோக ராஜ்யம் என வேதாகமம் குறிப்பிடுகிறது. தேவனுடைய ராஜ்யத்தில் அநீதி இருக்காது, பாவம் இருக்காது, துன்பம் இருக்காது, வியாதி மற்றும் மரணம் இருக்காது; எல்லோரும் அன்புடனும் சந்தோஷத்துடனும் நித்திய நித்தியமாக வாழ்வார்கள். அந்த தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைத்தான் நித்திய ஜீவனை சுதந்தரித்தல் என்றும் வேதாகமம் குறிப்பிடுகிறது.
இப்பூமியில் மனிதராகப் பிறந்த நம் அனைவரின் பிரதான நோக்கம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்தல் அல்லது நித்திய ஜீவனை சுதந்தரிப்பதாகத்தான் இருக்கவேண்டும். நித்திய ஜீவனை சுதந்தரிப்பதைக் காட்டிலும் மேலான பாக்கியம் ஒன்று உண்டு. அதுதான் பரலோகத்தில் பிரவேசிப்பது. இதைக் குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் சற்று விரிவாக நாம் பார்ப்போம்.
மனிதன் மூலமாக ஆளுகை செய்யும் சாத்தானின் அநீதியான ஆட்சி முடிவுற்று, தேவனுடைய நீதியான ஆட்சி ஸ்தாபிக்கப்படவேண்டும் என்பதே தேவதிட்டத்தின் பிரதான பகுதி. ஆயினும், சாத்தானின் ஆட்சிக்கும் தேவனுடைய ஆட்சிக்கும் இடையில் கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சி நடக்கவேண்டும் என்பதும் தேவதிட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. சாத்தானின் ஆட்சி முடிவுற்றதும், தேவனுடைய ஆட்சி உடனே நிறுவப்படாமல், இடையில் கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சி எதற்கு எனும் கேள்வி நமக்குள் எழக்கூடும். இக்கேள்விக்கான பதிலை இத்திரியில் பார்ப்போம்.
ஒரு மனிதன் தேவனுடைய ராஜ்யத்தின் பிரஜையாக இருக்கவேண்டுமெனில், தேவனுடைய நீதிகளை அறிந்தவனாகவும், அவற்றிற்குக் கீழ்ப்படிபவனாகவும் இருக்கவேண்டும். எனவேதான் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் என மத்தேயு 6:33-ல் இயேசு கூறுகிறார். இப்பூமியில் நாம் வாழ்கிற நாட்களிலேயே தேவனுடைய நீதிகளை அறிந்து அவற்றின்படி நடக்கவேண்டும் என்பதே தேவனின் சித்தமாக இருக்கிறது. ஆனால், எல்லா மனிதரும் அவ்விதமாக தேவநீதிகளை அறிந்துவிடுவதில்லை. இதற்கு 3 காரணங்கள் உள்ளன.
1. மனிதன் பாவத்தில் பிறந்தவன் என்பதால் (சங்கீதம் 51:5), தேவநீதியை எதிர்க்கும் சுபாவம் அவன் மாம்சத்திலேயே இருப்பது.
2. மனிதனை அறியாமை எனும் இருளுக்குள் கட்டி, அவனது மனக்கண்களை சாத்தான் குருடாக்கி வைத்திருப்பது (2 கொரி. 4:4).
3. ஒருவேளை மனிதன் தன் பாவசுபாவத்தை மேற்கொண்டு, தேவநீதிப்படி நடக்க முன்றாலும், அவனை அவ்வாறு நடக்கவிடாதபடி தடுக்கும் சாத்தானின் வல்லமை (1 பேதுரு 5:8).
இந்த 3 காரணங்களால், பெரும்பாலான மனிதர்கள் தேவநீதிகளின்படி நடக்கத் தவறிவிடுகின்றனர். ஆயினும், தேவநீதிகளைத் தேடி அவற்றின்படி நடக்க மெய்யான வாஞ்சையும் முயற்சியும் உள்ளவர்களுக்கு தேவன் தமது பரிசுத்தஆவியைத் தந்து, தேவநீதிகளின்படி அவர்களை நடக்கச் செய்கிறார் (யோவான் 7:37-39). அவ்விதமாக தேவநீதிகளின்படி நடப்போரைப் பொறுத்தவரை தேவனுடைய ராஜ்யமே அவர்களை ஆளுகைசெய்யும். எனவேதான் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என லூக்கா 17:21-ல் இயேசு கூறுகிறார்.
ஆம், நாம் தேவனுடைய நீதிகளைத் தேடி அவற்றின்படி நடக்கும்போது, நம்மைப் பொறுத்தவரை நாம் தேவனுடைய ராஜ்யத்தினுள் வந்துவிடுகிறோம். ஆனால், பெரும்பாலான மனிதர்கள் தேவனுடைய நீதியின்படி நடவாதவர்களாகத்தான் இருக்கின்றனர்.
இதற்கான 3 காரணங்கள்: நம் மாம்சத்திலுள்ள பாவசுபாவம், சாத்தான் நம் மனக்கண்களை குருடாக்கி வைத்திருப்பது, நம்மை ஆளுகை செய்கிற சாத்தானின் வல்லமை ஆகியவைகளே.
இந்த 3 காரணங்களால், தேவநீதியின்படி நடக்கத் தவறிய அனைவரையும், தேவனுடைய ராஜ்யத்திற்கு புறம்பே தள்ளி அழிப்பதற்கு மகா இரக்கமுள்ளவராகிய நம் தேவனின் இரக்கம் இடங்கொடுக்கவில்லை. எனவே சாத்தானின் ஆளுகை நீக்கப்பட்டபின்பு, ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து, ஜனங்களுக்கு தேவநீதியைக் கற்றுக்கொடுக்க தேவன் சித்தங்கொண்டார். அந்தக் குறிப்பிட்ட காலம்தான்: கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி காலம்.
-- Edited by anbu57 on Tuesday 23rd of March 2010 09:49:11 AM
இம்மூன்று வசனங்களும் வேறுவேறு சந்தர்ப்பத்தில் கூறப்பட்டுள்ளபோதிலும், இம்மூன்று வசனங்களிலும் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி நடவாமல் ஒருவன் நித்தியஜீவனைப் பெறமுடியாது என்பது நிச்சயம். அதாவது தேவனை/இயேசுவை விசுவாசியாமலோ அல்லது அவர்களின் கற்பனைகளின்படி நடவாமலோ ஒருவன் நிச்சயமாக நித்தியஜீவனைச் சுதந்தரிக்க முடியாது.
ஆனால், இவ்வுலகில் வாழ்ந்து மரித்தவர்கள் மற்றும் மரித்துக்கொண்டிருப்பவர்களில் ஏராளமானோர் தேவனை/இயேசுவை விசுவாசியாதவர்களே. தேவனை/இயேசுவை விசுவாசித்தவர்களிலும் ஏராளமானோர் கற்பனைகளின்படி நடவாதவர்களே. தேவநியமனத்தின்படி பார்த்தால், ஏராளமான இவர்கள் அனைவரும் நித்தியஜீவனைப் பெறமுடியாமல் அழியத்தான் வேண்டும். ஆயினும் அவர்கள் தேவநீதியின்படி நடக்கத்தவறியதற்கு சாத்தானும் அவர்களின் மாம்சத்திலுள்ள பாவமுமே பிரதான காரணங்களாக இருந்ததால்/இருப்பதால், அவ்விரண்டும் இல்லாத சூழ்நிலையை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் தேவநீதியின்படி நடப்பதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும்படியாகவே, கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சிகாலத்தை தேவன் நியமித்தார்.
இந்த 1000 வருட ஆட்சிகாலத்தில் ஜனங்களை மோசம்போக்குவதற்கு சாத்தான் இருக்கமாட்டான் (வெளி. 20:2). மாத்திரமல்ல, இந்த 1000 வருட ஆட்சிகாலத்தில், கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நடக்கையில், ஜனங்களின் மாம்சத்திலுள்ள பாவசுபாவம் நீக்கப்பட்டு, ஆதியில் ஆதாம் இருந்ததைப்போன்ற பாவமில்லாத மாம்சத்தைப் பெறுவார்கள்.
இவ்விதமாக மோசம்போக்குகிற சாத்தான் இல்லாமலும் மாம்சத்தில் பாவசுபாவம் இல்லாமலும் இருக்கிற நிலையில், ஜனங்கள் தேவநீதிகளின்படி நடப்பதை அறிவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். அவ்வாறு வாய்ப்பு கொடுக்கப்படும்போதுகூட, தேவதயவை புறக்கணிக்கிற சில துன்மார்க்கர் உண்டு எனப் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
இனி, கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சிகாலத்தில் யாரெல்லாம் பிரஜைகளாவார்கள்; அவர்கள் எத்தனை வருடகாலம் அங்கு ஜீவிப்பார்கள் என்பதை தொடரும் பதிவுகளில் பார்ப்போம்.
-- Edited by anbu57 on Thursday 25th of March 2010 03:32:41 PM
மோசம்போக்குகிற சாத்தான் இல்லாமலும் மாம்சத்தில் பாவசுபாவம் இல்லாமலும் இருக்கிறபோது, ஒருவன் எப்படி அநியாயஞ்செய்யமுடியும் என நம்மில் சிலர் கேட்கக்கூடும்.
நாம் செய்கிற எல்லா அநியாயங்களுக்கும் காரணம்: “சாத்தான் அல்லது நம் மாம்சத்திலுள்ள பாவசுபாவமே” என நாம் கருதுவதால்தான், பாவஞ்செய்வதற்கு காரணிகளான சாத்தானும் பாவசுபாவமும் இல்லாதபோது ஒருவன் எப்படி அநியாயஞ்செய்யமுடியும் என நாம் கேட்கிறோம்.
உண்மையில், ஒருவன் அநியாயஞ்செய்வதற்குக் காரணம்: சாத்தான் மற்றும் அவன் மாம்சத்திலுள்ள பாவசுபாவம் மட்டுமல்ல. ஒருவன் முழுக்கமுழுக்க தன் சுயமாகவும் அநியாயஞ்செய்ய முடியும் என்பதே உண்மை.
மத்தேயு 25:31-46 வசனங்களில் ஒரு பிரிவினரை அநீதிமான்களென இயேசு நியாயந்தீர்ப்பதற்கான காரணங்களை சற்று நிதானமாக சிந்த்தித்துப்பார்த்தால், மேற்கூறிய உண்மையை நாம் புரிந்துகொள்ள முடியும்.
அவ்வசனங்களில் 6 நற்கிரியைகளை இயேசு கூறுகிறார். இந்த 6 நற்கிரியைகளும் முழுக்கமுழுக்க அன்பின் அடிப்படையிலானவை. அதாவது ஒருவனிடம் அன்பு இருந்தால், இந்த 6 நற்கிரியைகளையும் நிச்சயமாகச் செய்வான். அப்படி அவன் செய்வதை, சாத்தானோ அல்லது அவன் மாம்சத்திலுள்ள பாவசுபாவமோ அவனை நிச்சயமாகத் தடுக்கமுடியாது. அதாவது, அவன் நற்கிரியைகளைச் செய்வதற்கும், சாத்தான் மற்றும் அவன் மாம்சத்திலுள்ள பாவசுபாவத்திற்கும் சற்றும் சம்பந்தம் கிடையாது.
அதாவது நற்கிரியைகளைச் செய்யத்தவறிய ஒருவன்: “நான் நற்கிரியை செய்யாதபடி சாத்தான் என்னைத் தடுத்தான்” என்றோ, அல்லது “என் மாம்சத்திலுள்ள பாவசுபாவம் தடுத்தது” என்றோ நிச்சயமாகக் கூறமுடியாது.
நற்கிரியை செய்யாதிருப்பதற்கு மட்டுமல்ல, பற்பல தீமைகளைச் செய்வதற்குக்கூட சாத்தான்தான் காரணம் எனக் கூறமுடியாது. ஒருவேளை தீமைகளைச் செய்வதற்கு நம் மாம்சத்திலுள்ள பாவசுபாவம் காரணமாக இருக்கக்கூடும்தான். ஆயினும் நாம் முயற்சி செய்தால், அந்த பாவசுபாவத்தை மேற்கொண்டு சில தீமையான செயல்களைச் செய்வதை நிச்சயம் தவிர்க்கமுடியும்.
உதாரணமாக, திருடுவதை எடுத்துக் கொள்வோம். திருடுவதற்குத் தூண்டக்கூடிய எந்த மோசமான சூழ்நிலை வந்தாலும், தங்கள் மாம்சத்தைக் கட்டுப்படுத்தி, திருடாமல் உறுதியாயிருக்கிற எத்தனையோ புறஜாதியினரை நாம் காணமுடியும்.
எனவே, நாம் செய்கிற எல்லாவித அநியாயங்களுக்கும் சாத்தான் அல்லது நம் பாவசுபாவம்தான் காரணம் எனக் கூறிவிடமுடியாது.
ஆதியில், ஆதாமின் மாம்சத்தில் பாவசுபாவம் எதுவும் இருக்கவில்லைதான். ஆயினும் அவர் தேவசொல்லை மீறி பாவஞ்செய்தார்.
“நடுமரக்கனியைப் புசித்தால் சாவதில்லை” என சாத்தான் கூறியதைப்போல், “நடுமரக்கனியைப் புசித்தால் சாவீர்கள்” என தேவனும் ஆதாமிடம் கூறியிருந்தார். “சாத்தானின் சொல்லை” அல்லது “தேவனின் சொல்லை” நம்புவது, ஆதாமின் முழுக்கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவர் நடுமரக்கனியின் மீது இச்சை கொண்டதால்தான், தன் இச்சைக்கு சாதகமாக இருந்த சாத்தானின் சொல்லை நம்பினார்; தன் இச்சைக்கு எதிராக இருந்த தேவனின் சொல்லைப் புறக்கணித்தார்.
எனவே, ஆதாமின் மீறுதலுக்கு சாத்தான்தான் முழுக்காரணம் என்றோ, அவரது பாவசுபாவம்தான் காரணமென்றோ கூறமுடியாது.
இதேவிதமாகத்தான் நாம் செய்கிற எல்லா அநியாயங்களுக்கும் சாத்தான்தான் காரணமென்றோ அல்லது நம் மாம்சத்தின் பாவசுபாவமே காரணமென்றோ கூறமுடியாது. இவ்விரு காரணங்கள் இல்லாவிடினும் நாம் அநியாயஞ்செய்யக்கூடும் என்பதே உண்மை.
எனவே, சாத்தான் இல்லாமலும் தன் மாம்சத்தில் பாவசுபாவம் இல்லாமலும் இருக்கிற “கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சிக்காலத்தில்கூட” ஏசாயா 26:10 கூறுகிறபடி, ஒருவன் அநியாயஞ்செய்யக்கூடும் என்பதே உண்மை.
கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சிக்காலத்தில் யாரெல்லாம் அவரது ராஜ்யத்தின் பிரஜைகளாயிருப்பார்கள்?
இக்கேள்விக்கு வேதாகமம் நேரடியான பதிலைத் தரவில்லை. ஆதாமுக்குள் எல்லாரும் மரிப்பதைப்போல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் எனக் கூறும் வேதாகமம் (1 கொரி. 15:22), உயிர்ப்பிக்கப்படும் அனைவரும் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சிக்குள் பிரவேசிப்பார்களா என நேரடியாகக் கூறவில்லை.
மாத்திரமல்ல, கிறிஸ்துவின் 2-ம் வருகையின்போது பரிசுத்தவான்கள் மட்டுமே உயிர்த்தெழுவார்கள் என்றும், பின்னர் கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சி முடியும்வரை வேறு யாரும் உயிர்த்தெழமாட்டார்கள் என்றும் பின்வரும் வேதபகுதி கூறுகிறது.
வெளி. 20:4-6 ... அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
இவ்வசனங்கள் கூறுகிறபடி, பரிசுத்தவான்களைத் தவிர மற்ற மரணமடைந்தவர்கள் யாரும் உயிர்த்தெழவில்லையெனில், கிறிஸ்துவின் வருகையின்போது இப்பூமியில் ஜீவிக்கிறவர்கள் மட்டுமே கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக இருப்பார்கள். ஆனால் இக்கூற்று சரியானதாக இருக்கமுடியுமா? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
1 கொரி. 15:22-24 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
மல்கியா 3:1-5 அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.
யோவேல் 2:11,12 ... கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இவ்வசனங்களின் கருத்துக்களை சற்று ஒருங்கிணைத்து தியானிப்போம். அப்போஸ்தலர் 17:31-ல் கூறப்பட்டுள்ள “ஒரு நாள்” என்பது சொல்லர்த்தமான நாளாக இராமல், 2 பேதுரு 3:8 கூறுகிறபடி 1000 வருடங்களைக் குறிப்பிடுவதாக இருக்கவேண்டும். அவ்வசனத்தில் பூலோகத்தை நியாயந்தீர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மனுஷன், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு பூமியிலே நடக்கும்போது, ஏசாயா 26:9-படி, பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு பூமியில் நடக்கிற 1000 வருடங்கள் அடங்கிய “அந்த நாளைச்” சகிப்பவன் யார் என மல்கியா 3:2-ல் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “அந்த நாளில்” எருசலேம் மற்றும் யூதாவின் காணிக்கை கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்படி லேவியின் புத்திரரை அவர் புடமிடுவார் என மல்கியா 3:3,4 வசனங்கள் கூறுவதால், “அந்த நாளில்” லேவியின் புத்திரர், யூதாவின் புத்திரர் மற்றும் எருசலேம் புத்திரர் இப்பூமியில் பிரஜைகளாக இருப்பார்கள் என அறிகிறோம்.
யோவேல் 2:11-ன்படி “அந்த நாள்” பெரிதும் மகா பயங்கரமுமான நாளாக இருக்குமென அறிகிறோம். யோவேல் தீர்க்கதரிசியின் காலத்திலுள்ள ஜனங்களிடம், “ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” எனக் கர்த்தர் கட்டளையிடுவதால், இக்கட்டளைக்குக் கீழ்ப்படியாத ஜனங்கள், பெரிதும் மகா பயங்கரமுமான நியாயத்தீர்ப்பு நாளை சந்திக்க வேண்டியதிருக்கும் என அறிகிறோம். அதாவது, யோவேல் தீர்க்கதரிசியின் கால ஜனங்களிலும் சிலர், கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நாளில் இப்பூமியின் பிரஜைகளாக இருப்பார்கள் என அறிகிறோம்.
மொத்தத்தில், கிறிஸ்துவின் 2-ம் வருகையின்போது பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுந்த பின்னர், பழையஏற்பாட்டு ஜனங்களில் பலரும் உயிர்த்தெழுந்து, கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சியின் பிரஜையாவார்கள் என அறிகிறோம். பழைய ஏற்பாட்டு ஜனங்கள் மட்டுமின்றி, புதிய ஏற்பாட்டு ஜனங்களும் கிறிஸ்துவின் 2-ம் வருகையின்போது உயிர்த்தெழுவார்கள் என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாயுள்ளது.
வெளி. 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
இயேசுவைக் குத்தின இஸ்ரவேல் கோத்திரத்தார் மட்டுமின்றி, பூமியின் எல்லா கோத்திரத்தாரும் இயேசுவின் 2-ம் வருகையின்போது அவரைக் காண்பார்கள் என இவ்வசனம் கூறுகிறது. எனவே, முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ள பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, பூமியின் எல்லாக் கோத்திரத்திலிமிருந்து பலரும் உயிர்த்தெழுந்து, கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாவார்கள் என அறிகிறோம்.
அவ்வாறெனில், “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிர்த்தெழவில்லை” என வெளி. 20:5 கூறுவது பொய்யா எனும் கேள்வி எழுகிறது. இதைக் குறித்து நாம் ஆராய்ந்து பார்க்கையில், வெளி. 20:5-ன் அவ்வாசகம், நம்பத்தகுந்த மூலப்பிரதிகளில் காணப்படவில்லை என பல மொழிபெயர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஒருசில பிரதிகளில், “மரணமடைந்த துன்மார்க்கர் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிர்த்தெழவில்லை” எனும் குறிப்பு காணப்படுவதாகவும் சில மொழிபெயர்ப்பாளர்கள் கூறுகின்றனர். எனவே, பிற வேதபகுதிகளுக்கு முரணான அந்த வாசகம், வெளி. 20:5-ல் இடம் பெற்றிருக்காது எனும் முடிவுக்கு நாம் வரலாம்.
எனவே, பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, மற்றவர்களில் பலரும் உயிர்த்தெழுந்து, கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாவார்கள் எனும் முடிவுக்கு நாம் வரலாம். மேலும், 1 கொரி. 15:23 கூறுகிறபடி, தன்தன் வரிசையில் ஒவ்வொருவராக அவர்கள் உயிர்த்தெழுவார்கள் எனும் முடிவுக்கும் நாம் வரலாம்.
கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜையாகும் வாய்ப்பைப் பெறாதவர்கள் உண்டா எனும் கேள்விக்கான பதிலை அடுத்த பதிவில் பார்ப்போம்.
-- Edited by anbu57 on Friday 26th of March 2010 02:38:34 AM
இவ்வுலகில் மரித்தவர்களில் அனேகர் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி காலத்தில் உயிர்த்தெழுந்து, அவரது ராஜ்யத்தின் பிரஜையாவார்கள் என கடந்த பதிவில் பார்த்தோம்.
மரித்தவர்களில் யாரேனும் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் உயிர்த்தெழாமலும் அதின் பிரஜையாகாமலும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டா?
இக்கேள்விக்குப் பதிலறிய பின்வரும் வசனங்களில் கூறப்பட்டுள்ள 2 பிரிவினரைக் குறித்து பார்ப்போம்.
முதலாம் பிரிவினர்:
மத்தேயு 25:41-43 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
44,45 அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
2-ம் பிரிவினர்
மத்தேயு 7:22,23 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இவ்விரு பிரிவினரும் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக வாய்ப்பில்லை என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்.
முதலாம் பிரிவினர்:
இப்பிரிவினர் மீது இயேசு சாட்டுகிற குற்றச்சாட்டு: சகமனிதர்கள் பசியாயிருந்தபோது, தாகமாயிருந்தபோது, வஸ்திரமில்லாதிருந்தபோது, அந்நியனாயிருந்தபோது, காவலிலிருந்தபோது, வியாதியாயிருந்தபோது அவர்களை விசாரிக்கவில்லை, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவில்லை என்பதே.
ஜனங்களில் யாரேனும் பசியிலிருத்தல், தாகமாயிருத்தல், வஸ்திரமில்லாதிருத்தல், அந்நியனாயிருத்தல், காவலிலிருத்தல், வியாதியாயிருத்தல் எனும் காரியங்கள் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. குறிப்பாக வியாதியில்/காவலில் இருத்தல் எனும் காரியங்கள் நிகழ்வதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை.
எனவே இவ்வுலகில் பசியில்/தாகத்தில் இருப்போர், வஸ்திரமில்லாதிருப்போர், அந்நியனாயிருப்போர், காவலில்/வியாதியில் இருப்போர் ஆகியோருக்கு உதவாதவர்களைக் குறித்தே மத்தேயு 25:41-43 வசனங்களில் இயேசு கூறுகிறார்.
அவர்கள் செய்யத்தவறிய அக்கிரியைகளின் அடிப்படையில்தான் அவர்களுக்கு இறுதி நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் என்றும் இயேசு கூறுகிறார்.
இவ்வுலகில் அவர்கள் செய்யத்தவறிய கிரியைகளின் அடிப்படையில் அவர்களுக்கு இறுதி நியாயத்தீர்ப்பு வழங்கப்படுமெனில், அவர்கள் நீதியைக் கற்று திருந்தும்படி கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக வேண்டிய அவசியமில்லையே!
எனவே மத்தேயு 25:41-43 வசனங்களில் கூறப்பட்டுள்ளவர்கள், கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகாமல், நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்புக்குச் சென்று, நியாயந்தீர்க்கப்பட்டு, நித்திய அக்கினியில் பங்கடைவார்கள் என அறிகிறோம்.
2-ம் பிரிவினர்:
இப்பிரிவினரை அக்கிரமச்செய்கைக்காரர் எனக் கூறும் இயேசு, அவர்கள் செய்த அக்கிரமம் என்னவென்பதைக் கூறவில்லை. ஆனால், அவர்கள் செய்த வேறு சில காரியங்களைக் கூறுகிறார்.
1. இயேசுவின் நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தது, 2. இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்தியது, 3. இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் செய்தது.
இம்மூன்று செயல்களும் நிச்சயமாக அக்கிரமச் செயல்கள் அல்ல. அவ்வாறெனில் அவர்களின் அக்கிரமம் என்னவாக இருக்கமுடியும்?
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வந்து ஜனங்களைப் பட்சிக்கிற ஓநாய்கள் என மத்தேயு 7:15-ல் சொல்லிவிட்டுத்தான், 22,23 வசனங்களில் தமது நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்து, பிசாசுகளைத் துரத்தி, அற்புதம் செய்தோரைக் குறித்து இயேசு கூறுகிறார். எனவே மத்தேயு 7:22,23-ல் கூறப்பட்டுள்ளவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு (அதாவது இயேசுவின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு) வந்து, ஜனங்களை வஞ்சிக்கிற கள்ளத்தீர்க்கதரிசிகளாகிய ஓநாய்களே என அறிகிறோம்.
இவர்கள் இவ்விதமான அக்கிரமத்தை இயேசுவின் 1000 வருட அரசாட்சியில் செய்வதற்கு வாய்ப்பில்லை. எனவே இவ்வுலகில் அவ்வித அக்கிரமத்தைச் செய்ததினிமித்தமே அவர்கள் அக்கிரமக்காரர் என நியாயந்தீர்க்கப்பட்டு, இயேசுவை விட்டு அகன்றுபோகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்துபோவார்கள் என அறிகிறோம்.
எனவே இவர்களும் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகும் வாய்ப்பில்லை என அறிகிறோம்.