1 யோவான் 2:3,4 அவருடைய (இயேசுவின்) கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
ஒரு கிறிஸ்தவரைப் பார்த்து, “நீங்கள் இயேசுவை அறிந்துள்ளீர்களா” என்று கேட்டால், அவர் உடனே, “நான் ஒரு கிறிஸ்தவன், எனவே எனக்கு இயேசு கிறிஸ்துவை நன்றாகத் தெரியும்” என்பார். அவர் இப்படிச் சொல்வதில் தவறில்லைதான். ஆனால், அவர் மெய்யாகவே இயேசுவை அறிந்துள்ளார என்பது, அவர் இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதன் மூலமே பிறரால் அறியப்படும் என யோவான் கூறுகிறார்.
இன்றைய கிறிஸ்தவர்கள் பலர், “நான் இயேசுவை அறிந்து கொண்டேன்; நீங்கள் இயேசுவை அறிந்துள்ளீர்களா” என பிறரிடம் கேட்டு, இயேசுவை அவரிடம் அறிவிக்கின்றனர். இது நல்லதுதான், ஆனால் இயேசுவை அறிந்த அவர்கள், இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாவிடில், அவர்கள் பொய்யராகிவிடுவார்கள் என யோவான் கூறுகிறார்.
பொதுவாக, இன்றைய கிறிஸ்தவர்கள் இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்ள அதிகமாகப் பிரயாசப்படுவதில்லை.
ஒரு சாரார், நம் எல்லாப் பாவங்களுக்காகவுந்தானே இயேசு பலியானார், எனவே நாம் என்ன செய்தாலும்/செய்யாவிட்டாலும் இயேசு நம் பாவங்களை மன்னித்துவிடுவார், இயேசுவை ஏற்றுக்கொண்ட அத்தனை பேருக்கும் பரலோகம்தான் என மிகநம்பிக்கையோடு சொல்லி ஆர்ப்பரிக்கின்றனர்.
மற்றொரு சாரார், சிறுமந்தை எனப்படும் ஒரு சிறிய கூட்டத்திற்குத் தகுதியாகிற சிலரால் மட்டுமே இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்ளமுடியும் என்றும், மற்றவர்களால் கைக்கொள்ள இயலாது என்றும், இவ்வுலகில் ஒருவனும் நீதிமான் இல்லை என்றும் சொல்லி, தாங்களும் கற்பனைகளைக் கைக்கொள்ளத் தீவிரப்படாமல், மற்றவர்களிடமும் நீங்கள் என்னதான் முயன்றாலும், நீங்கள் சிறுமந்தைக்கு தெரிந்துகொள்ளப்படாதவர்கள் எனில் உங்களால் கற்பனைகளைக் கைக்கொள்ள இயலாது எனச் சொல்லி அவர்களை மனந்தளரச் செய்துவிடுகின்றனர்.
இன்னும் ஒரு சாரார், நாம் என்னதான் பிரயாசப்பட்டாலும் இயேசுவின் கற்பனைகளை நம்மால் கைக்கொள்ளவே இயலாது என தங்களுக்குத் தாங்களாகவே சொல்லிக்கொண்டு, கற்பனைகளின்படி நடப்பதில் அலட்சியமாய் இருக்கின்றனர்.
ஆனால், யாருமே யோவானின் மேற்கூறிய வசனத்தை அறிகிறதுமில்லை, அதின் கருத்தை உணர்வதுமில்லை.
மேற்கூறிய 3 சாராருமே இயேசுவை நன்றாக அறிந்துள்ளதாகக் கூறுபவர்கள்தான்.
வேதாகமத்தில் தங்களுக்குப் பிரியமான வசனங்களை எடுத்து அவற்றை ஆராய்ந்து விவாதிப்பதென்றால், அவர்கள் சளைக்காமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விவாதிப்பார்கள்; அவர்களில் சிலருக்கு, பிறரை மட்டம் தட்டி விவாதிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். ஆனால், இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்வதைப் பற்றி பேசினால் மட்டும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி பின்வாங்கிவிடுவார்கள்.
அவர்களின் பின்வாங்குதலை நியாயப்படுத்த, சில வசனத்தையும் சொல்வார்கள். ஒருவர், விசுவாசம் போதும், கிரியைகளால் நாம் நீதிமான்களாவதில்லை என்பார், மற்றவர், இவ்வுலகில் யாருமே நீதிமான் இல்லை என்பார். இப்படியாக ஆளாளுக்குச் சொல்லி, கற்பனைகளின்படி நடப்பதை வலியுறுத்த மறுத்துவிடுவார்கள்.
ஆனால் யோவான் நமக்குத் தெளிவாகக் கூறுகிறார்: கிறிஸ்துவை அறிந்துள்ளதாகக் கூறுகிற நாம், கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலமே நாம் கிறிஸ்துவை அறிந்துள்ளோம் என்பது அறியப்படும். மாறாக, கற்பனைகளைக் கைக்கொள்வதில் அலட்சியமாய் இருந்தால், கிறிஸ்துவை அறிந்துள்ளதாக நாம் கூறுவது பொய்யாகிவிடும்.
ஆம் சகோதரரே மிகசரியான வார்த்தைகளை எழுதியுள்ளீர்கள்.
இயேசுவின் கற்பனையை கைகொள்ளாதவருக்கும் கைகொண்டவருக்கும் உள்ள வேறுபாடு ஒருநாள் நிச்சயம் தெரியவரும். எப்பொழுது?
26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
ஆம் அன்பானவர்களே! பெருமழை காற்றாகிய சோதனை துன்பங்கள் வரும்போது நமது அஸ்திபாரம் இயேசுவின் நிலையான வார்த்தைகளின்மேல் இல்லை என்றால் விழுந்து நோருங்கிபோவது உறுதி!
இயேசுவிற்காக வாழ்கிறேன் என்று சொல்லும் அநேகரை இன்று உலகில் பார்க்கமுடியும் ஆனால் இயேசுவின் கற்பனையை கைகொண்டு வாழ்கிறேன் என்று சொல்வதற்கு ஒருவரும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை. அதற்க்கு முயற்சி எடுப்பதுபோலகூட தெரியவில்லை.
"ஒருவன் என்மேல் அன்பாயிருந்தால் என் வார்த்தைகளை கைகொள்வான்" என்பது இயேசுவின் வார்த்தை அவர் வார்த்தையை கைகொள்ளாதவன் அவர்மேல் அன்பாயிருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் வெறும் பொய் என்பதை இயேசு இவ்வார்த்தையின் மூலம் தெரியப்படுத்துகிறார்.
இயேசுவின் வார்த்தைகள்படி "ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை திருப்பி கொடுப்பதும்" "நமக்குண்டானதை விற்று பிச்சை கொடுப்பதும், வஸ்திரத்தை கேட்பவனுக்கு அங்கியையும் விட்டு கொடுப்பதும் மிக மிக கடினம்தான்! ஆனால் குறைந்தபட்சம் அதை செய்யவேண்டும் என்ற முயற்சியாவது ஒவ்வொரு கிறிஸ்த்தவனுக்கும் நிச்சயம் வேண்டும். முயற்சி ஓர்நாளில் வெற்றிபெறும்.
ஆனால் அதெல்லாம் இந்த உலகில் செய்வது கடினம் என்று வார்த்தைகளையே பல கிறிஸ்த்தவர்களிடம் கேட்கமுடிகிறது. பின்னர் இயேசு அதை உலகில் உள்ள மனிதர்களுக்கு சொல்லாமல் தேவ தூதர்களுக்கா சொன்னார்? விசுவாசத்துடன் முயன்றால் முடியும் முடியாது என்றால் முடியாது!
முயன்று தொற்றுபோனாலும் ஆண்டவர் மன்னிப்பார். ஒரு சிறுபிள்ளை எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது எத்தனை முறை விழுந்தாலும் தாய் தூக்கி விடுவதுபோல ஆண்டவர் தூக்கிவிடுவார். ஆனால் முயற்சியே இல்லாமல் அது முடியாது என்று சாதிப்பவர்களை பார்த்து இயேசு "நீங்கள் எவ்விடத்தாரோ" என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது!
sundar wrote: //முயன்று தோற்றுபோனாலும் ஆண்டவர் மன்னிப்பார். ஒரு சிறுபிள்ளை எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது எத்தனை முறை விழுந்தாலும் தாய் தூக்கி விடுவதுபோல ஆண்டவர் தூக்கிவிடுவார். ஆனால் முயற்சியே இல்லாமல் அது முடியாது என்று சாதிப்பவர்களை பார்த்து இயேசு "நீங்கள் எவ்விடத்தாரோ" என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது!//
கற்பனைகளைக் கைக்கொள்ள வாஞ்சையோடு கூடிய முயற்சி இருக்கவேண்டும்.
நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என வேதாகமம் கூறுவது, நாம் நீதியைச் செய்ய முயலவேண்டியதில்லை என்பதற்காக அல்ல. நம் நீதியைக் குறித்து நாம் மேன்மை பாரட்டக்கூடாது என்பதற்காகவே.
கிரியைகளால் நாம் நீதிமான்களாவதில்லை என வேதாகமம் கூறுவது, நாம் நற்கிரியைகளைச் செய்ய பிரயாசப்படவேண்டியதில்லை என்பதற்காக அல்ல. நம் கிரியைகளால் நீதிமான் எனும் பட்டத்தைப் பெற்றுவிடலாம் என நாம் கருதக்கூடாது என்பதற்காகவே.
மத்தேயு 5:16 மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.