1 யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
நம்மில் அனேகர் வேத வசனங்களை நன்றாகப் படிக்கிறோம், வசனங்களை மனப்பாடம் செய்கிறோம், பிறரிடம் வசனங்களைச் சொல்லி போதிக்கிறோம், வசனங்களை நன்றாக ஆராய்ச்சி செய்கிறோம். இவையெல்லாம் நல்லதுதான்.
ஆனால் இவற்றையெல்லாம் செய்துவிட்டு, வசனங்களின்படி நடப்பதில் மட்டும் அலட்சியமாயிருந்தால், மேலே சொன்ன அத்தனை காரியங்களும் வீண்தான்.
பிறர் கஷ்டப்படுவதைப் பார்த்து சிலர் மிகுந்த பாரப்படுவார்கள். கஷ்டத்தில் இருப்போரிடம் சென்று, “ஒன்றுக்கும் கவலைப்படாதீங்க, எல்லாவற்றையும் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்” என மிகுந்த உருக்கத்தோடு சொல்வார்கள். இவ்வளவாய் சொல்கிற அவர்கள், கஷ்டப்படுவோரின் தேவை சந்திக்கப்படத்தக்கதாக ஏதாவது செய்வார்களா எனக் கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டியதிருக்கும்.
இப்படிப்பட்டோரைக்குறித்துதான் யோவானும் யாக்கோபும் இவ்விதமாகக் கூறுகின்றனர்.
1 யோவான் 3:17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
யாக்கோபு 2:15-17 ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
கிரியையைக் குறித்து பேசினாலே சிலருக்குக் கோபம் வருகிறது. கிரியையைக் குறித்து பல வசனங்கள் தெளிவாகக் கூறியுள்ளபோதிலும், கிரியை என்றாலே அது தீண்டத்தகாத வார்த்தை என்பதுபோல் அவர்கள் கருதக் காரணமென்ன என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.
கிரியையினால் அன்புகூரும்படிச் சொன்ன யோவான், உண்மையினாலும் அன்புகூரவேண்டும் என்கிறார். அவர் இப்படிச் சொல்லக் காரணமென்ன?
இந்நாட்களில் நம்மில் பலர், பல்வேறு விடுதிகளில் இருக்கிற சிறுமைப்பட்டவர்களுக்கு ஒரு நாள் சாப்பாடு வழங்குவதுண்டு. பிறந்த நாள், திருமண நாள், மரித்த நம் அன்புக்குரியோரின் நினைவு நாள் போன்றவற்றை ஆசரிக்கையில் அவ்விதமாக நாம் செய்வதுண்டு. இது நல்லதுதான்.
ஆனால், அதை மெய்யான அன்புடன் செய்யாமல், இப்படிச் செய்தால் நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும், மரித்தவர்களின் ஆத்துமா சாந்திபெறும் என்ற எண்ணத்தில் நம்மில் பலர் செய்கிறோம்.
நம்மில் சிலர் பெருமைக்காகவும், வருமான வரி விலக்குக்காகவுங்கூட அவ்வாறு செய்வதுண்டு. உண்மையான அன்பு இல்லாத இம்மாதிரி செயல்களால் பிரயோஜனம் எதுவுமில்லை என்பதை பின்வரும் வசனத்தில் பவுல் உரைக்கிறார்.
1 கொரி. 13:3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
நம் அன்புகூருதல் எப்படிப்பட்டதாயுள்ளது? வசனத்தினாலும் நாவினாலும் மட்டுமுள்ளதா, அல்லது கிரியையினாலும் உண்மையினாலும் உள்ளதா? சிந்தித்துப் பார்ப்போம்.
-- Edited by anbu57 on Wednesday 3rd of February 2010 08:00:51 PM
கிரியை இல்லாமல் வெறும் விசுவாசம் ஒன்றுக்கும் உதவாது என்பதை யாக்கோபு மிக தெளிவாக எழுதியிருக்கிறார்.
14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
அப்படி கிரியை இல்ல்லாமல் விசுவாசம் மட்டும் இருக்கு என்று சொல்பவர்கள் வீணான மனுஷர்கள் என்றும் அது ஒரு செத்த விசுவாசம் என்றுகூட தொடர்ந்து வரும் வசனங்களில் குறிப்பிடுகிறார்.
20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாம் விசுவாசத்தால் மட்டுமல்ல தன கிரியையினால் தான் தேவனை விசுவாச்க்கிறேன் என்பதை தன மகனை பலியிட துணித்து நிரூபித்தபோதே அவன் மூலம் பூமியில் எல்லா வம்சமும் ஆசீர்வதிக்கப்படது.
விசுவாசம் விசுவாசம் என்று சொல்வது வெறும் வார்த்தையில் இருப்பதால் எல்லோரும் தாங்கள் விசுவாசி என்றும் தேவனை விசுவாசிக்கிறோம் என்று சுலபமாக சொல்லமுடிகிறது. ஆனால் கிரியை என்றால் அதை செயலில் காட்டவேண்டுமே அல்லது நிரூபிக்கப்பட வேண்டுமே! எனவே அது மிக மிக கடினமும் சாத்தானால் செய்யமுடியாத ஒன்றுமாய் இருப்பதால் "கிரியை" என்ற சொல்லை கேட்டவுடன் அதற்க்கு உடனே கோபம் வந்துவிடுகிறது.
எப்படியெல்லாம் சாத்தான் தந்திரமாக வேலை செய்கிறான் பாருங்கள்!
1 யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
இதில் வசனத்தினாலும் என்பது தேவனுடைய வசனம் என்பது அல்ல. சிலர் வாய் ஒழுக சர்க்கரையாக பேசுவார்கள், ஆனால் உள்ளுக்குளே விஷம் இருக்கும் செயலும் அப்படியே விஷ தன்மையாக இருக்கும். அப்படி பேசுவதோடு நிறுத்தாமல் கிரியையில் அதை காண்பிக்க சொல்லியிருக்கிறார் யோவான். இது ஒரு பொது அறிவுரை தான் என்று நினைக்க்றேன். வேதத்தில் தேடி பார்க்கும் போது, மற்ற இடங்களில் எல்லாம் வசனம் என்று வெறுமையா இல்லாமல், "தேவ வசனம்" என்றே இருக்கிறது. ஆகையால் தான் இந்த விளக்கம்.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
வசனத்தினால் எனும் வார்த்தை, நீங்கள் சொல்வதைப் போல், நாம் தேனொழுகப் பேசுகிற வார்த்தைகளையே குறிப்பிடுகிறது என நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள எனக்கு ஆட்சேபணை இல்லை.
ஆனால், நாவினால் எனும் வார்த்தையும் அதே அர்த்தத்தில்தான் வருகிறது என்பதால், வசனத்தினால் எனும் வார்த்தைக்கு ஏன் வேறு அர்த்தம் எடுக்கக்கூடாது? அந்த அர்த்தம் ஏன் தேவவசனத்தைக் குறிப்பிடுவதாக இருக்கக்கூடாது?
இந்த இடத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை "லோகோஸ்" தான் என்று நீங்களும் அறிவீர்கள். அந்த லோகோஸ் என்கிற வார்த்தைக்கு உள்ள அர்த்தங்களும் நீங்கள் அறிவீர்கள்! தேவனை அறிகிற அறிவு (சத்தியத்தின் ஆவி) தான் நம்மை எந்த இடத்தில் எந்த அர்த்தம் என்று பகுத்து அறிய முடிகிறது.
"அந்த அர்த்தம் ஏன் தேவவசனத்தைக் குறிப்பிடுவதாக இருக்கக்கூடாது?"
"தேவவசனம்" என்கிற படியான வார்த்தையே வேதத்தில் இருக்கும் போது, வெறும் "வசனம்" என்று கொடுக்கப்பட்டதை நாம் ஏன் "தேவ வசனம்" தான் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தாங்கள் தான் விளக்க வேண்டும்.
"தேவன்" என்கிற வார்த்தை எத்துனை சந்தர்ப்பத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது, அதுவும் யெகோவா தேவன் தொடங்கி, இயேசு கிறிஸ்து அந்த வரிசையில் சாத்தானுக்கும் "தேவன்" என்கிற வார்த்தையே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதே! தேவன் என்கிற வார்த்தையை வேதத்தில் பார்த்தவுடன் அது யெகோவா தேவனை தான் குறிக்கிறது என்று சொல்லி விட முடியுமா? அப்படியே இதுவும்!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
//"தேவவசனம்" என்கிற படியான வார்த்தையே வேதத்தில் இருக்கும் போது, வெறும் "வசனம்" என்று கொடுக்கப்பட்டதை நாம் ஏன் "தேவ வசனம்" தான் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தாங்கள் தான் விளக்க வேண்டும்.
"தேவன்" என்கிற வார்த்தை எத்துனை சந்தர்ப்பத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது, அதுவும் யெகோவா தேவன் தொடங்கி, இயேசு கிறிஸ்து அந்த வரிசையில் சாத்தானுக்கும் "தேவன்" என்கிற வார்த்தையே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதே! தேவன் என்கிற வார்த்தையை வேதத்தில் பார்த்தவுடன் அது யெகோவா தேவனை தான் குறிக்கிறது என்று சொல்லி விட முடியுமா? அப்படியே இதுவும்!//
சகோ.பெரியன்ஸ் அவர்களே!
நீங்கள் எழுதின இந்த 2 பத்திகளுமே ஒன்றுக்கொன்று எதிரான கருத்தாக உள்ளதை அறியமுடிகிறதா?
முதல் பத்தியில்: “தேவவசனம்” என்கிற வார்த்தை வேதாகமத்தில் இருப்பதால், வெறுமனே “வசனம்” என இருப்பதை தேவவசனம்” என எடுக்கக்கூடாது என்கிறீர்கள்.
ஆனால், 2-வது பத்தியில்: வெறுமனே “தேவன்” என இருப்பதை, யெகோவா தேவன் என்றோ, அல்லது இயேசு என்றோ, அல்லது சாத்தான் என்றோ எடுக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறீர்கள்.
அதாவது வெறுமனே “தேவன்” என்றிருப்பது, யெகோவா தேவனைக் குறிப்பிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறீர்கள்.
“தேவன்” என்கிற வார்த்தையை “யெகோவா தேவன்” என எடுக்க வாய்ப்பு இருக்கும்போது, “வசனம்” என்கிற வார்த்தையை “வேதவசனம்” என ஏன் எடுக்கக் கூடாது? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
இயேசுவை “தேவனுடைய குமாரன்” என பல வசனங்கள் கூறியிருக்கும்போது, இவ்வசனத்தில் “குமாரன்” எனும் வார்த்தையை “தேவனுடைய குமாரன்” என எடுக்க முடியுமா? ஆனால், நாம் “தேவனுடைய குமாரன்” என்றுதான் அதை எடுத்து வருகிறோம்.
இதுபோலவே, “வசனம்” எனும் வார்த்தையை “தேவவசனம்” என எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றே நான் கருதுகிறேன்.
எந்த ஒரு வார்த்தைக்கும் அந்த வார்த்தை அமைந்துள்ள பகுதியின் அடிப்படையில்தான் பொருள் கொள்ளவேண்டும் என்பது நியதி; அப்படித்தான் நாம் எடுத்து வருகிறோம்.
ஆனால், 1 யோவான் 3:18-ஐப் பொறுத்தவரை, “வசனம்” எனும் வார்த்தை தேவவசனத்தைத்தான் குறிப்பிடுகிறது என திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலயில்தான் நான் உள்ளேன்.
முதன்முதலாக அவ்வசனத்தை நான் படித்ததிலிருந்தே, “வசனம்” எனும் வார்த்தை “தேவவசனத்தைக்” குறிப்பிடுவதாகக் கருதியே நான் படித்து வருகிறேன். அதன் அடிப்படையில்தான் என் கருத்தைக் கூறியிருந்தேன்.
ஆனால், தற்போது நீங்கள் கூறுவதைப் பார்க்கையில், நான் எடுத்துக்கொண்ட அர்த்தம் தவறாக இருக்கக்கூடும் என்பதை நான் மறுக்கவில்லை.
அதன் அர்த்தம் எதுவாக இருந்தாலும், நாம் அன்புகூருவது என்பது வெறும் வார்த்தையோடு அல்லது பேச்சோடு நின்றுவிடாமல் செயலிலும் இருக்கவேண்டும் என்ற கருத்தையே அவ்வசனம் கூறுகிறது என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.