வேதாகம சரித்திரங்களில் காணப்படும் பல சம்பவங்கள் நமக்கு சிறந்த படிப்பினையைத் தருவதாக உள்ளன. அப்படிப்பினைகளை ஆராய்ந்தறியும்படி, “வேதாகம சம்பவங்கள்” எனும் தலைப்பில் இத்தளத்தில் ஒரு பிரிவை ஒதுக்கியுள்ளோம். பல்வேறு வேதாகம சம்பவங்கள் தரும் படிப்பினைகளை, இத்தலைப்பின் கீழ் ஆராய்ந்தறிவோம்.
இத்திரியில், 2 ராஜாக்கள் 7-ம் அதிகாரத்தில் அடங்கியுள்ள ஒரு சம்பவத்தை ஆராய்வோம்.
இஸ்ரவேல் தேசத்தின் பட்டணமாகிய சமாரியாவை, சீரிய தேசத்து ராணுவம் முற்றுகையிட்டதால், சமாரியாவில் கொடிய பஞ்சம் உண்டானது. (2 ராஜாக்கள் 6:24-30-ஐப் படித்துப் பார்க்கவும். பஞ்சத்தின் கொடுமையைக் கண்ட இஸ்ரவேலின் ராஜா, தீர்க்கதரிசியாகிய எலிசா மீது கோபமுற்று, அவரைக் கொல்ல முயன்றான். ஆனால், எலிசாவோ, “அடுத்த நாள் காலை சமாரியாவின் பஞ்சம் நீங்குமென்றும், தானியங்கள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படும்” என்றும் ராஜாவுக்கு சொல்லியனுப்பினார்.
எலிசாவின் இத்தீர்க்கதரிசனத்தை ராஜாவின் பிரதானி ஒருவன் நம்பாமல், வானத்தின் மதகுகளை தேவன் திறந்தால்கூட எலிசா சொன்னது நடக்காது எனக் கூறினான். அவனிடம் எலிசா பின்வருமாறு கூறினார்.
2 ராஜாக்கள் 7:2 அதற்கு அவன் (எலிசா): உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
எலிசா சொன்னபடியே, அடுத்தநாள் காலையில் தானியங்கள் மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டன. ராஜாவின் பிரதானி அதைக் கண்களால் கண்டான், ஆனாலும் கூட்ட நெரிசலில் சிக்கி அவன் இறந்துபோனதால், எலிசா சொன்னபடியே அதிலே அவன் சாப்பிடமுடியவில்லை.
எலிசாவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது என்பது மிகவும் சுவராசியமானதாகும். அதை வேதாகமத்தில் விரிவாகப் படித்து அறிந்துகொள்வோமாக.
இச்சம்பவத்தில் நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம் எலிசாவின் விசுவாசம்.
சமாரியாவின் பஞ்சத்திற்குக் காரணம் எலிசாதான் என நினைத்த இஸ்ரவேலின் ராஜா, எலிசாவைக் கொன்றுபோட முற்பட்டான். இந்நிலையில், அடுத்தநாள் பஞ்சம் பறந்துவிடும் என எலிசா சொல்லியபடி நடவாமற்போனால், எலிசாவின் தலை உருளுவது நிச்சயம். ஆனாலும், கர்த்தர் தனக்கு சொல்லியதை அப்படியே எலிசா அறிவித்தார்.
ஆம், கர்த்தர் சொன்னதை எலிசா அப்படியே விசுவாசித்ததால்தான், அதை அப்படியே ராஜாவிடமும் ஜனங்களிடமும் அவர் அறிவித்தார்.
தேவன் ஒருவர் உண்டென்று நம்புவது மட்டும் விசுவாசமல்ல. பிசாசிடம் கூட அந்த விசுவாசம் உண்டு (யாக்கோபு 2:19). தேவன் சொன்ன வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் விசுவாசிப்பதுதான் மெய்யான விசுவாசம். ஒருவேளை, சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி பார்த்தால், தேவன் சொல்வது நடக்கக்கூடாத ஒரு காரியமாகக்கூட இருக்கலாம். ஆனால் அதையும் விசுவாசிப்பதுதான் மெய்யான விசுவாசம். எலிசா அப்படித்தான் விசுவாசித்தார்.
கொடிய பஞ்சம் தலைவிரித்தாடும் சமாரியாவில், ஒரே நாளில் ஏராளமாக தானியங்கள் வந்து நிறையும் என்பது, சாதாரணமாக யாராலும் நம்பமுடியாத ஒரு விஷயம்தான். ஆனாலும், தேவன் தனக்குச் சொன்னதை எலிசா அப்படியே நம்பினார், விசுவாசித்தார். இப்படிப்பட்ட ஒரு விசுவாசம் நம்மிடம் உண்டா? பின்வரும் வசனத்தின் அடிப்படையில் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
தேவனை சேவித்தல் என்றால் என்ன? வெறுமனே அவரை ஆராதிப்பது மட்டுமல்ல. அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுதான் மெய்யாகவே அவரைச் சேவிப்பதாகும். அப்படி அவரைச் சேவித்தால், நம் அப்பமும் தண்ணீரும் ஆசீர்வதிக்கப்படும், வியாதி நம்மைவிட்டு விலக்கப்படும்.
தேவனின் இவ்வாக்கை மெய்யாகவே நாம் விசுவாசிக்கிறோமா?
பொதுவாக நமக்கு வியாதி வந்தால் என்ன செய்கிறோம்? வியாதிக்கான காரணங்களென மனிதன் சொல்வதன் அடிப்படையில் யோசிக்கிறோம்.
ஆனால் யாத்திராகமம் 23:25-ல் தேவன் சொல்வதன்படி பார்த்தால், நம் வியாதிக்குக் காரணம் எதுவாக இருக்கமுடியும்? நாம் ஏதோ ஒரு வகையில் தேவனைச் சேவிப்பதில் குறைவுபட்டுள்ளோம் என்பதாகத்தானே இருக்கமுடியும்?
ஆனால் இந்த ரீதியில் நாம் எப்போதாவது யோசித்துள்ளோமா? அப்படி நாம் யோசிக்காவிடில் அதற்குக் காரணமென்ன?
வியாதிக்குக் காரணமென மனிதன் சொல்வதைத்தான் நம்புகிறோமேயொழிய, தேவன் சொல்வதை நம்புவதில்லை.
தேவனை மெய்யாகவே சேவித்தால், வியாதி நம்மைவிட்டு விலக்கப்படும் என்பதுதானே தேவனின் வாக்குத்தத்தம்? தேவன் சொன்னதை, எலிசாவைப்போல் அப்படியே விசுவாசித்தால், நமக்கு வியாதி வருகையில், தேவனை சேவிப்பதில் நாம் குறைவுபட்டுள்ளோம் என்றல்லவா நாம் நினைக்கவேண்டும்? ஆனால் நாம் அப்படி நினைக்காமல், வியாதிக்குக் காரணமாக மனிதன் சொல்வதையல்லவா நம்பிக்கொண்டிருக்கிறோம்?
கர்த்தர் உன் அக்கிரமங்களை மன்னித்து வியாதியைக் குணமாக்குகிறார் என சங்கீதம் 103:3 கூறுகிறது. இவ்வசனத்தின்படி, கர்த்தர் நம் அக்கிரமங்களை மன்னித்து வியாதியைக் குணமாக்குகிறார் என்ற நிச்சயத்தை நாம் எப்போதாவது பெற்றுள்ளோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
மனிதன் சொல்கிற எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் வியாதி நமக்கு வராதென்று நம்புகிற நாம், யாத்திராகமம் 23:25 கூறுகிறபடி தேவனை நாம் மெய்யாகவே சேவித்தால் வியாதி நமக்கு வராதென்றோ விசுவாசிக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
தேவனின் வார்த்தைகளை அப்படியே விசுவாசித்த எலிசாவிடமிருந்து, விசுவாசம் என்றால் என்னவென்பதைக் கற்றுக்கொள்வோம்.
இச்சம்பவத்தின் மூலம் மேலும் பல படிப்பினைகளை ஆராய்ந்தறிந்து, இங்கு பகிர்ந்துகொள்வோம்.
-- Edited by anbu57 on Monday 15th of February 2010 07:23:06 PM
இச்சம்பவத்தின் மூலம் அடுத்ததாக நமக்குக் கிடைக்கும் படிப்பினை: “எச்சரிக்கையை அலட்சியப்படுத்தக் கூடாது” என்பதாகும்.
எலிசாவின் தீர்க்கதரிசனத்தை நம்ப மறுத்த ராஜாவின் பிரதானியிடம் எலிசா பின்வருமாறு கூறியிருந்தார்.
2 ராஜாக்கள் 7:2 அதற்கு அவன் (எலிசா): உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
எலிசாவின் இக்கூற்று ஒரு தீர்க்கதரிசனமாக இருந்தாலும், அந்தப் பிரதானியைப் பொறுத்தவரை, இது ஓர் எச்சரிக்கையுமாகும்.
ஆனால், அந்தப் பிரதானி இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்தான். எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதே கஷ்டம்தான்; அப்படியே நிறைவேறினாலும், ஏராளமாக வந்து குவியும் தானியத்தில், ராஜப்பிரதானி எனும் உயர்ந்த பதவியில் இருக்கும் தான் சாப்பிடமுடியாமலா போய்விடும் என்ற கெர்வமான எண்ணம் அவனுக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், முடிவு என்னானது?
ஏராளமாக வந்து குவிந்த தானியங்கள் விற்கப்படுகையில், அதை மேற்பார்வை பார்க்கும்படி அப்பிரதானிக்கு ராஜா கட்டளையிட்டான். அதன்படியே அவன் மேற்பார்வை பார்த்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி மரித்துப் போனான். எலிசாவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்த அவன், மரிக்கவேண்டியதானது.
நம்மிலும்கூட பலர், தேவன் தமது ஊழியர்கள் மூலம் தருகிற எச்சரிக்கைகளை அலட்சியம் செய்துகொண்டே இருக்கிறோம். நம் பணம், பதவி, அந்தஸ்தை தேவஆசீர்வாதம் என நினைத்து பெருமை கொண்டு, எச்சரிக்கையை அலட்சியம் செய்கிறோம். அப்படிப்பட்ட நாம் அந்தப் பிரதானிக்கு நேர்ந்த கதியை சற்று சிந்தித்துப் பார்ப்போமாக.
அந்தப் பிரதானியின் நடவடிக்கைகளை நாம் சிந்தித்துப் பார்க்கையில், அவனிடம் மற்றொரு தவறும் இருந்ததை நாம் அறியமுடியும்.
சீரியரின் ராணுவம் பயந்துபோய் விட்டுச்சென்ற தானியங்களையும் பொருட்களையும் சாமாரியாவின் ஜனங்கள் கொள்ளையிட்டதாக வசனம் 16 கூறுகிறது. இவையெல்லாம் அந்தப் பிரதானியின் கண்களுக்கு முன்பாகத்தான் நடந்திருக்கவேண்டும். தானியங்கள் கொள்ளையிடப்பட்டு ஏராளமாக சமாரியாவுக்கு கொண்டு வரப்படுவதை அவன் நன்றாகப் பார்த்திருப்பான். அப்போது, எலிசா சொன்ன தீர்க்கதரிசனம் விரைவில் நிறைவேறிவிடும் என்பதையும் அவன் அறிந்திருப்பான். இதையெல்லாம் நிதானமாகப் பார்த்தபிறகுகூட, எலிசா தன்னைக் குறித்து சொன்ன தீர்க்கதரிசனமும் நிறைவேறிவிடுமே என அவன் நினைக்கவில்லை.
தானியங்களை ஏராளமாகப் பார்த்தபோது, எலிசாவின் தீர்க்கதரிசனத்தை நம்பாமற்போனது தவறு என நிச்சயம் அவன் நினைத்திருப்பான். அவ்வாறு தவறை உணர்ந்தபிறகாவது, எலிசாவிடம் சென்று அவன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படி எதுவும் செய்யாமல், சற்றும் பயமின்றி, தன் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். விளைவு? கூட்ட நெரிசலில் சிக்கி மரித்தான். எலிசாவின் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியது.
அந்தப் பிரதானியைப் பொறுத்தவரை 3 தவறுகள் அவனிடம் இருந்தன. 1. தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் சொன்ன வார்த்தைகளை நம்பாதது; 2. தனக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை அலட்சியம் செய்தது; 3. தவறை உணரக்கூடிய வாய்ப்பு கிடைத்தபின்னர்கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்காமல் இருந்தது.
இந்நாட்களில் நாமுங்கூட தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட கடைசிகால சம்பவங்களில் பல நிறைவேறி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். ஆனாலும், காலம் நிறைவேறிவருவதை உணராமல், நம் பாவஜீவியத்தில் தொடர்ந்து ஜீவிக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு, அந்தப் பிரதானிக்கு நேர்ந்த கதி ஒரு பாடமாக உள்ளது.
இச்சம்பவத்தின் முக்கிய பாத்திரமாக திகழ்பவர்கள் 4 குஷ்டரோகிகள். அவர்களால்தான் எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
சமாரியாவின் கொடிய பஞ்சத்தால் உணவின்றி தவித்த அவர்கள், சமாரியாவில் இருந்து சாவதைவிட, சீரிய ராணுவத்தின் பாளையத்திற்குச் சென்றால், ஒருவேளை சீரியரின் ராணுவம் தயவு செய்தால் உயிர்பிழைக்கலாம், அல்லது செத்துமடியலாம் என முடிவெடுத்து சீரியரின் பாளையத்திற்குச் சென்றனர்.
ஆனால் அங்கு சீரிய ராணுவத்தினர் யாரும் இல்லை; காரணம்? பின்வரும் வசனத்தைப் படிப்போம்.
2 இராஜாக்கள் 7:6,7 ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி, இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.
எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேற ஏதுவாக, தேவன் செய்த அற்புதத்தை இவ்வசனங்களில் பார்க்கிறோம். தேவன் வானத்தின் மதகுகளைத் திறந்தால்கூட எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறாது என இராஜாவின் பிரதானி கூறினான். அவன் தனது அற்ப அறிவால் தேவசெயலை மட்டுப்படுத்தினான். ஆனால் தேவனோ மனித அறிவுக்கு எட்டாத ஒரு செயலைச் செய்து, தமது ஊழியக்காரனாகிய எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேற வழிசெய்தார்.
நாமுங்கூட தேவனிடமிருந்து ஒரு நன்மையை எதிர்பார்க்கையில், தேவன் என்ன செய்தால் இக்காரியம் நடக்கும் என நம் அற்ப அறிவில் யோசித்து, தேவசெயலை மட்டுப்படுத்துகிறோம். தேவன் இப்படிச் செய்தால் நடக்குமா, அப்படிச் செய்தால் நடக்குமா என யோசித்து, இறுதியில் தேவன் என்ன செய்தாலும் இது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என முடிவெடுத்து விடுகிறோம். ஆனால் நம் தேவன் யாரும் எதிர்பாராதவிதமாக செங்கடலைக்கூட பிளந்து, தமது ஜனங்களை இரட்சித்தவர் என்பதை மறந்துவிடுகிறோம்.
சமாரியாவின் பஞ்ச விஷயத்திலும், யாரும் எதிர்பாராததும் மனித அறிவுக்கு எட்டாததுமான ஒரு செயலை தேவன் செய்ததை 2 இராஜா. 7:6,7-ல் பார்க்கிறோம். தேவசெயலால் சீரிய இராணுவம் முழுவதும் அச்சத்திற்குள்ளாகி, தங்கள் பிராணனைக் காத்துக்கொள்வதற்காக, தங்கள் பொருட்களையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு, பாளையத்தைவிட்டு ஓடிப்போனார்கள்.
சீரிய இராணுவத்தினரின் தயவை நாடி அங்கு வந்த குஷ்டரோகிகள், இராணுவத்தினர் யாரும் அங்கு இல்லாததைக் கண்டு, கூடாரங்களுக்குள் பிரவேசித்து, வேண்டிய மட்டும் புசித்துவிட்டு, அங்குள்ள பொன் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்கத் தொடங்கினர்.
அப்போதுதான் அவர்கள் மனதில் ஒரு நீதியான எண்ணம் உதித்தது. அது என்ன எண்ணம்? பின்வரும் வசனத்தைப் படிப்போம்.
2 இராஜாக்கள் 7:9 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.
ஆம், சமாரிய மக்கள் பசியால் வாடிக்கொண்டிருக்கையில், தாங்கள் புசித்து குடித்து திருப்தியானதோடு மட்டுமின்றி, பொன்னையும் பொருளையும் தங்களுக்காக எடுத்துக் கொண்டிருப்பது நியாயமல்ல என்ற எண்ணம் அவர்கள் மனதில் உதித்தது.
எந்த ஜனங்கள் தங்களை அருவருத்து ஊருக்கு வெளியே ஒதுக்கிவைத்தார்களோ அந்த ஜனங்கள்மீது, குஷ்டரோகிகளுக்கு கரிசனை பிறந்தது. அக்கரிசனை இல்லாதிருப்பது நியாயமல்ல என்றும் அவர்கள் நினைத்தார்கள். அந்தக் குஷ்டரோகிகளின் நியாயத்துடன் நமது நியாயத்தை சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.
நம்மில் பலர் நல்ல வருமானம் பெற்று வருகிறோம். ஆனால் நம்மைச் சுற்றி எத்தனையோபேர் பசியில் போராடுவதை அறிந்துங்கூட, நாம் நமக்காக பொன்னையும் ஆஸ்தியையும் சேர்ப்பதில்தான் தீவிரமாயிருக்கிறோமேயொழிய, பசியிலிருப்போரைக் குறித்து நாம் கரிசனை கொள்வதில்லை.
அந்தக் குஷ்டரோகிகள் நினைத்திருந்தால், தங்களுக்காக ஏராளமான பொன்னையும் பொருளையும் எடுத்துவைத்திருக்கமுடியும்தான். ஆனால் அவர்களின் நீதியான சிந்தை அதற்கு இடங்கொடுக்கவில்லை. அந்த நீதியான சிந்தை நம்மிடம் இல்லாததால், நமக்காக பொன்னையும் ஆஸ்தியையும் சேர்க்கிற நாம், பசியிலிருப்போரைப் பற்றி கரிசனையில்லாதவர்களாக இருக்கிறோம்.
நமது இச்செயல் நீதியானதல்ல என்பதை அக்குஷ்டரோகிகளின் நீதியிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.
-- Edited by anbu57 on Saturday 27th of February 2010 04:15:40 AM
இச்சம்பவத்தின் முக்கிய பாத்திரங்களான குஷ்டரோகிகளின் நீதியான செயலால், பஞ்சத்தில் தவித்த சமாரியா பட்டணத்தார் அனைவரும் பஞ்சத்திலிருந்து விடுதலை பெற்றனர். குஷ்டரோகிகள் செய்த அந்த நீதியான செயல் எது?
2 இராஜாக்கள் 7:9,10 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.
சமாரியா மக்கள் பஞ்சத்தில் வாடுவது அவர்களுக்குத் தெரியும்; அதேசமயம் சீரியரின் பாளையத்தில் ஜனங்களுக்குத் தேவையான ஆகாரம் ஏராளமாகக் கிடப்பதை அவர்கள் கண்ணாரக் கண்டனர். அவர்கள் கண்ணாரக் கண்ட அந்த விஷயம், நிச்சயமாக சமாரிய மக்களுக்கு நற்செய்திதான். அந்த நற்செய்தியை சமாரிய மக்களிடம் அறிவித்தால் போதும்; வேறெதுவும் அவர்கள் செய்யவேண்டியதில்லை. ஆனால், அச்செய்தியை அறிவிக்கத் தவறினால் அது அநீதி என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.
அந்தக் குஷ்டரோகிகளிடம் இருந்த உணர்வு, இன்றி நம்மில் பலரிடம் இல்லை. நாம் உண்டு செழித்தால் போதும்; மற்றவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன, நமக்கும் நம் சந்ததிக்கும் சேர்த்து வைப்போம் என்ற எண்ணமே நம்மிடம் உள்ளது. அது மாத்திரமல்ல, தேவனைக் குறித்தும் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்தும் நம் மீட்பராகிய இயேசுவைக் குறித்துமான நற்செய்தியை (அதாவது சுவிசேஷத்தை) நாம் மட்டும் அறிந்தால் போதும் என்ற எண்ணமே நம்மில் பலரிடம் உள்ளது.
நம்மில் ஒரு பிரிவினர், நம் நேரத்தை உலகக்காரியங்களில் செலவுசெய்துவிடுவதால் பிறருக்கு சுவிசேஷம் அறிவிக்க இயலாதிருக்கிறோம். மற்றொரு பிரிவினரோ, சுவிசேஷம் அறிவிப்பது நம் வேலையல்ல என்று சொல்லி சுவிசேஷம் அறிவிக்கக்கூடாது என்றிருப்பதோடு, சுவிசேஷம் அறிவிக்கிற பிறரையும் தடைசெய்து கொண்டிருக்கிறோம்.
இயேசுவின் சீஷர் மற்றும் பவுலிடம் சுவிசேஷம் அறிவிக்கும்படி நேரடியாக இயேசு சொன்னதைப்போல் என்னிடம் நேரடியாகச் சொன்னால்தான் சுவிசேஷம் அறிவிப்பது என் கடமை, மற்றபடி எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதாக நாம் கூறிக்கொண்டிருக்கிறோம்.
ஜனங்களுக்கு நற்செய்தியை இவர்கள்தான் சொல்லவேண்டும்; மற்றவர்கள் சொல்லக்கூடாது என வேதாகமம் தடைவிதிக்கவில்லை. நாம் தியானிக்கிற இச்சம்பவத்தில், குஷ்டரோகிகள் தாங்கள் அறிந்த நற்செய்தியை மற்றவர்களிடம் அறிவிக்கவேண்டும் என யாரும் அவர்களுக்குச் சொல்லவில்லை. ஒருவேளை அவர்கள் நற்செய்தியை அறிவியாதிருந்தால் என்னாகியிருக்கும்? ஜனங்களுக்குத் தேவையான நன்மை கிடைத்திருக்காது; எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறியிருக்காது; தேவவார்த்தை பொய்யாகியிருக்கும்.
நன்மைசெய்யத் திராணியிருந்தும் அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமலிராதே என வேதாகமம் கூறுகிறது, நன்மைசெய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாதிருப்பது பாவமே என்றும் வேதாகமம் கூறுகிறது. எனவே ஜனங்களுக்கு நன்மையான காரியம் எதுவாக இருந்தாலும் அதைச் செய்வதுதான் நீதி, நியாயம். இதை அந்தக் குஷ்டரோகிகள் அறிந்ததால், ஜனங்களுக்கு நன்மையான காரியத்தை அவர்கள் அறிவித்தனர்.
அவ்வாறே நாமும்கூட நாம் அனுபவிக்கிற நன்மைகளை பிறருக்கு அறிவிக்கத்தான் வேண்டும். அதுதான் நீதியும் நியாயமுமாகும். குறிப்பாக தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த சுவிசேஷத்தை நாம் கட்டாயமாக அறிவிக்கத்தான் வேண்டும். ஏனெனில் மனிதரின் எல்லா நன்மைகளைக் காட்டிலும் மேலானதும் அவசியமானதும், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த சுவிசேஷமே. இவ்விஷயத்தில், இது என் கடமையல்ல, சுவிசேஷம் அறிவிக்கும்படி தேவன் என்னிடம் நேரடியாகச் சொல்லவில்லை என்று சொல்லி சுவிசேஷம் அறிவிப்பதைப் புறக்கணித்தால், அக்குஷ்டரோகிகள் சொன்னபடி, நம்மீது குற்றம் சுமரும் என்பதை அறிவோமாக.
-- Edited by anbu57 on Monday 1st of March 2010 07:35:18 AM