நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனுஷரை பிரியப்படுத்தும் பொய்யான ஊழியர்கள்


Militant

Status: Offline
Posts: 830
Date:
மனுஷரை பிரியப்படுத்தும் பொய்யான ஊழியர்கள்
Permalink  
 


கலாத்தியர் 1:10 நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.

தேவனைப் பிரியப்படுத்தாமல் மனுஷரைப் பிரியப்படுத்துகிற அத்தனை பேரும் கிறிஸ்துவின் ஊழியக்காரர் அல்ல என இவ்வசனத்தில் பவுல் மிகத்தெளிவாகக் கூறுகிறார். ஆயினும் இன்றைய ஊழியர்களில் அநேகர் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் பவுலின் மேற்கூறிய வசனத்தை அறியாதவர்கள் அல்ல. ஆயினும் வசனத்தை அசட்டை செய்துவிட்டு, தங்கள் சுயஆதாயத்துக்காக மனுஷரைப் பிரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மனுஷரைப் பிரியப்படுத்த அவர்கள் எடுக்கிற முதல் கருவி: உலகவாழ்வில் செழிப்பு.

தேவஆசீர்வாதம் என்ற பெயரில், உலகவாழ்வில் செழிப்பைச் சொல்லி, ஏராளமான ஜனங்களை இவர்கள் பிரியப்படுத்துகின்றனர்.

மனுஷரைப் பிரியப்படுத்த அவர்கள் எடுக்கிற 2-வது கருவி: உலகதுன்பங்களிலிருந்து விடுதலை.

வறுமை, வியாதி, திருமணம் நடைபெறாமை, குழந்தைப்பேறு இல்லாமை, வேலை கிடைக்காமை, பள்ளி/கல்லூரியில் இடம் கிடைக்காமை, பரீட்சையில் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி போன்ற துன்பங்கள், மற்றும் சக மனிதர்களால் வருகிற துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலையைச் சொல்லி, ஏராளமான ஜனங்களை இவர்கள் பிரியப்படுத்துகின்றனர்.

உண்மையில் புதியஏற்பாட்டு விசுவாசிகளுக்கு வேதாகமம் கூறுவதென்ன?

லூக்கா 6:20,21 அப்பொழுது அவர் (இயேசு) தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.

1 தீமோத்தேயு 6:8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.

யோவான் 16:33 உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

அப்போஸ்தலர் 14:22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.


இப்படி பல வசனங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றையெல்லாம் இன்றைய ஊழியர்கள் நன்கறிந்துள்ள போதிலும், அவற்றை மறைத்துவிட்டு, பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள் காட்டி, இரண்டத்தனை ஆசீர்வாதம், 10 மடங்கு, 100 மடங்கு, 1000 மடங்கு, கோடாகோடி ஆசீர்வாதம் என்றெல்லாம் சொல்லி ஜனங்களைப் பிரியப்படுத்துகின்றனர்.

கிறிஸ்தவ தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் முழுவதிலும் உலகசெழிப்பு மற்றும் உலகதுன்பங்களிலிருந்து விடுதலை ஆகியவைதான் மாறிமாறி கூறப்படுவதை நாம் பார்க்கலாம்.

இயேசுவிடுவிக்கிறார் ஊழியங்களில், வியாபாரிகளின் ஆசீர்வாதத்திற்கென்றே மாதாமாதம் விசேஷித்த உபவாசக்(?) கூட்டத்தை நடத்துகின்றனர். இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் உலகஆசீர்வாத ஓலம் உலகறிந்த விஷயமாகும். லட்சம் கொடுத்தால் கோடி, கோடி கொடுத்தால் கோடா கோடி என சற்றும் நாகூசாமல் உலகசெழிப்பை ஏலம் விடுகிற அவர்கள் பின் செல்கிற ஏராளமான ஜனக்கூட்டம், அவர்கள் எவ்வளவாய் மனுஷரைப் பிரியப்படுத்துகின்றனர் என்பதற்கு சாட்சி.

இப்படிப்பட்ட பெரிய பெரிய ஊழியர்கள் பின்னே செல்லும் ஏராளமான ஜனக்கூட்டத்தைப் பார்க்கிற சிறு ஊழியர்கள் மற்றும் புது ஊழியர்கள், தங்கள் பின்னாலும் ஏராளமான ஜனங்கள் வரவேண்டும், பணத்தை அள்ளித்தரவேண்டும் என்ற ஆசையில், வேதம் காட்டுகிற மெய்யான ஊழிய முறைகளை ஒதுக்கிவிட்டு, பெரிய பெரிய பொய்யான ஊழியர்களின் முறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

விசுவாசிகளும், கண்ணுக்கு அருகில் தெரிகிற உலகக்காரியங்களைத்தான் பார்க்கின்றனரேயொழிய, கண்ணுக்குத் தெரியாத தூரத்திலுள்ள பரமகாரியங்களைப் பார்ப்பதில்லை. இப்படிப்பட்ட அவர்கள் பவுலின் பின்வரும் வசனத்தின் கருத்தை நிதானமாக சிந்தித்து ஆராய்ந்து, தங்களைப் பிரியப்படுத்துகிற பொய்யான ஊழியர்களை அடையாளங்கண்டு, அவர்களை விலக்குவார்களாக.

கொலோசெயர் 3:1,2 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard