சில நாட்களுக்கு முன், ஒரு வலைமலரில், தசமபாகம் - ஒரு நீதிமன்ற வழக்கு என்ற தலைப்பில் ஒரு கற்பனையான விவாதம் இடம்பெற்றிருந்தது.
அதில், ஆபிரகாம் தனக்கு சொந்தமல்லாத கொள்ளைப் பொருளிலிருந்து தசமபாகம் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இக்கருத்து ஒருசிலரால் ஆட்சேபிக்கப்பட்டு, அதையொட்டிய விவாதமும் சில விவாத தளங்களில் எழுந்துள்ளது.
உண்மையில் ஆபிரகாம் கொள்ளைப் பொருளில்தான் தசமபாகம் கொடுத்தாரா? சற்று ஆராய்ந்தறிவோம்.
முதலாவது, ஆபிரகாம் தசமபாகம் கொடுத்த சம்பவத்தின் பின்னணியை, ஆதியாகமம் 14:1-20 வசனங்களில் படித்து அறிந்துகொள்வோம்.
ஆபிரகாமின் சகோதரனுடைய குமாரனான லோத்து குடியிருந்த பட்டணமான சோதோமை, 4 ராஜாக்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது லோத்தையும் அவன் பொருள்களையும்கூட அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். (கவனிக்க: கொள்ளையடித்தது - சோதோமுக்கு எதிராக வந்த ராஜாக்களே!)
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போராடி மீட்பதற்கு சோதோமின் பட்டணத்தாருக்கு முழு உரிமை உண்டு. இந்நிலையில், லோத்தும் அவனது பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த ஆபிரகாம், கொள்ளையடித்த ராஜாக்களோடு போரிட்டு, கொள்ளைப் பொருட்களை மீட்டு வந்தார். அவ்வாறு மீட்டு வந்த பொருட்களில், தசமபாகத்தை தேவனின் ஆசாரியனான மெல்கிசேதேக்கு ராஜாவுக்குக் கொடுத்தார்.
இச்சம்பவத்தில் ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததை, புதிய ஏற்பாட்டின் எபிரெயர் நிருபத்தின் ஒரு வசனம் பின்வருமாறு கூறுகிறது.
எபிரெயர் 7:4 இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
இவ்வசனத்தில் ‘கொள்ளையிடப்பட்ட பொருள்களில்’ ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தார் எனக் கூறப்பட்டுள்ளதால், கொள்ளைப் பொருளில்தான் அவர் தசமபாகம் கொடுத்தார் என ஒரு பிரிவினர் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் இப்புரிந்துகொள்தல் சரியானதல்ல. அவர்களின் தவறான புரிந்துகொள்தலுக்குக் காரணம், அவ்வசனத்தில் மறைவாக இருக்கும் ஒரு வார்த்தையை அவர்கள் அறியாமற்போனதுதான். மறைவான அவ்வார்த்தையைச் சேர்த்து அவ்வசனத்தைப் படிப்போம்.
எபிரெயர் 7:4 இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் (ராஜாக்களால்) கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லையெனில், மேலும் சில இணைப்போடு அவ்வசனத்தைப் படிப்போம்.
எபிரெயர் 7:4 இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் (ராஜாக்களால்) கொள்ளையிடப்(பட்டு தன்னால் மீட்கப்)பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
ஆம், பொருட்களைக் கொள்ளையிட்டது ஆபிரகாம் அல்ல; சோதோமுக்கு எதிராக வந்த ராஜாக்கள்தான் கொள்ளையிட்டனர். அவர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்களை ஆபிரகாம் மீட்டு வந்தார். எனவே மீட்கப்பட்ட பொருள்களில் அவர் தசமபாகம் கொடுத்தார் என்பதே சரியான புரிந்துகொள்தலாகும்.
இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது.
Hebrews 7:4 Just think how great he was: Even the patriarch Abraham gave him a tenth of the plunder! - NIV
Hebrews 7:4 Now consider how great this man was, unto whom even the patriarch Abraham gave the tenth of the spoils. - KJV
plunder, spoils என்றால் கொள்ளைப் பொருள் அல்லது திருடப்பட்ட பொருளாகும். ஆபிரகாம் கொள்ளையடிக்கவுமில்லை, திருடவுமில்லை. கொள்ளையடித்ததும் திருடியதும் சோதோமுக்கு எதிராக வந்த 4 ராஜாக்கள்தான். அவர்கள் கொள்ளையடித்ததும் திருடியதுமான பொருட்களை, ஆபிரகாம் போரிட்டு மீட்டுவந்தார், அவ்வளவே.
ஆபிரகாமின் நோக்கம், பொருட்களை மீட்பதுதானேயொழிய அவற்றைக் கொள்ளையடிப்பதல்ல.
மீட்கப்பட்ட பொருட்களின்மீது, மீட்டவருக்கு முழு உரிமையுண்டு என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஆபிரகாம் அந்த முழு உரிமையை எடுக்கவில்லை. மாறாக, 4 ராஜாக்களை தன்னிடம் ஒப்புக்கொடுத்த தேவனுக்கு (ஆதி. 14:20), அப்பொருட்கள் மூலம் நன்றிசெலுத்த மட்டுமே அவர் நினைத்தார். அதன்படி, பொருட்களில் தசமபாகத்தை தேவனின் ஆசாரியனான மெல்கிசேதேக்கிடம் கொடுத்தார்.
சோதோமின் ராஜாவோடு சேர்த்து 5 ராஜாக்களை முறிந்தோடச் செய்யும் பலமுள்ளவர்களாக 4 ராஜாக்கள் விளங்கினர். அத்தனை பலம் வாய்ந்த 4 ராஜாக்களை ஆபிரகாம் முறியடிப்பது என்பது கூடாத காரியம் என்றுதான் சொல்லவேண்டும். ஆயினும், தேவன் ஆபிரகாமோடு இருந்ததால், அவர் ஆபிரகாமிடம் அந்த 4 ராஜாக்களையும் ஒப்புக்கொடுத்தார்.
இவ்விதமாக ஆபிரகாமை வெற்றியடையச் செய்து, பொருட்களை மீட்கச்செய்த தேவன்தான் முழுப்பொருட்களுக்கும் உரிமையுள்ளவர். இதை ஆபிரகாம் நன்கறிந்ததால், தேவன் மூலமாகப் பெற்ற பொருட்களில் தசமபாகத்தை அவருக்கே கொடுத்தார்.
எனவே, கொள்ளைப் பொருளில் ஆபிரகாம் தசமபாகத்தைக் கொடுக்கவுமில்லை, கொள்ளைப் பொருளில் தசமபாகத்தை தேவன் பெறவுமில்லை என்பதே உண்மை.