“ஆதிக்கிறிஸ்தவர்களுக்கு தெரியாத உண்மைகள்!” என்ற தலைப்பில் சகோ.விஜய்76 அவர்கள் பின்வரும் தொடுப்பில் பட்டியலிட்டுள்ள சில குறிப்புகளை சில மாற்றங்களுடன் இங்கு வெளியிடுகிறேன். மாறுதல் செய்யப்படாத கட்டுரையைப் படிக்க பின்வரும் தொடுப்புக்குச் செல்லும்படி வேண்டுகிறேன்.
முக்கிய குறிப்பு: இக்கட்டுரையின் தொனி கிண்டல் செய்வதுபோல இருக்கலாம். இக்கட்டுரையில் கிறிஸ்துமஸ், ஞாயிறு ஆராதனை போன்றவற்றைப் பற்றிய கருத்துக்கள் அவற்றைச் அனுசரிப்பவர்களைப் பாவிகள் என்று குற்றப்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. மாறாக ஆதிக் கிறிஸ்தவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டும்படியே எழுதப்பட்டது. முறைமைகளை மாற்றுவதால் எழுப்புதல் வந்துவிடாது. ஆனாலும் ஆதிச்சபைக்கும் நமக்குமுள்ள வேறுபாட்டை நாம் அறிந்து, நாம் அவர்களைவிட்டு எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டோம் என்பதை உணர்வது மிக மிக அவசியம்.
கீழ்கண்ட நமது சாதனைகளைப் படித்து ஆதித்திருச்சபையினரை விட நாம் உயர்ந்தவர்கள், நிறைய தெரிந்தவர்கள் என்று நமது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
சாதனை #1 இயேசுகிறிஸ்து பிறந்தது டிசம்பர் 25 என்ற உண்மை ஆதிக்கிறிஸ்தவர்களுக்குத் தெரியாது. அப்போஸ்தலன் பேதுருவுக்கே தெரியாது, இவ்வளவு ஏன்? இயேசுவின் தாயாகிய மரியாளுக்கே கூடத் தெரியாது. அவர்களெல்லோரும் டிசம்பர் 25-ஐ ரோமானியக் கடவுளான சூரியக்கடவுளின் பிறந்தநாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சிலுவைமரம் தெரியும், கிறிஸ்மஸ் மரம் தெரியாது. அதுமாத்திரமின்றி ”சாண்டா கிளாஸ்” என்ற மாபெரும் தேவ மனிதரை ஆதிக்கிறிஸ்தவர்களில் ஒருவருமே அறியாதவர்களாயிருந்தார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை.
சாதனை #2 ஞாயிற்றுக்கிழமைதான் தம்மை ஆராதிக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னது ஆதிக்கிறிஸ்தவர்களுக்குத் தெரியாமல் எல்லா நாளும் அவரை ஆராதித்துக் கொண்டிருந்தார்கள்.(அப் 2:46,47). ஒன்றுக்கு மேற்ப்பட்ட சகோதரர் கூடும் நாளெல்லாம் ஆராதனை நாள்தான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைதான் பரலோகச் சட்டம் என்னும் உண்மை நான்காம் நூற்றாண்டு விசுவாச வீரர்களுக்கே தெரியவந்தது.
சாதனை #3 முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு தங்களோடு ஒருவராக கர்த்தருக்கு சாட்சியாக வாழ்ந்த இயேசுவின் தாயாகிய மரியாள் மரியாதைக்குரிய முன்மாதிரி என்பது மட்டுமே தெரிந்திருந்தது. தொழுகைக்குரியவர் என்ற உண்மை தெரியாதிருந்தது.
சாதனை #4 (இச்சாதனையில் சகோ.விஜய் “விசுவாச அறிக்கை” என எதைச் சொல்கிறார் என்பது புரியவில்லை. எனவே அவர் எழுதியதை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தந்துள்ளேன். அதன் மொத்தக் கருத்தாக நான் புரிந்ததை அதையடுத்து தந்துள்ளேன் ) “விசுவாச அறிக்கை” என்ற 20ஆம் நூற்றாண்டு செழிப்பின் உபதேசகர்களுடைய மாபெரும் கண்டுபிடிப்பு ஆதிகிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் தெரிந்திருந்தால் அவர்கள் உபத்திரவத்தில் உழன்றிருக்க மாட்டார்கள். சிங்கங்களுக்கு இரையாகியிருந்திருக்க மாட்டார்கள். ”கிறிஸ்துவுக்குள் நான் தேவநீதி” என்று திரும்பத்திரும்ப அறிக்கையிட்டு நீதியை download செய்துகொள்ளுதலும். ”கிறிஸ்துவுக்குள் நான் ஐசுவரியவான்” என்று திரும்பத் திரும்ப அறிக்கையிட்டு பில்கேட்ஸை விட பணக்காரர் ஆகுதலுமாகிய மாபெரும் கண்டுபிடிப்பின் பெருமை இந்நூற்றாண்டு ஞானிகளாகிய எங்களுக்கே உரியது.
(20-ஆம் நூற்றாண்டின் “செழிப்பு உபதேசகர்களின்” மாபெரும் கண்டுபிடிப்பான “செழிப்பு உபதேசத்தை” ஆதிகிறிஸ்தவர்கள் தெரிந்திருந்தால், அவர்கள் உபத்திரவத்தில் உழன்றிருக்க மாட்டார்கள், சிங்கங்களுக்கு இரையாகியிருந்திருக்க மாட்டார்கள். “கிறிஸ்துவுக்குள் நான் ஐசுவரியவான்” என்று திரும்பத் திரும்ப அறிக்கையிட்டு பில்கேட்ஸை விட பணக்காரர் ஆகுவதாகிய மாபெரும் கண்டுபிடிப்பின் பெருமை இந்நூற்றாண்டு ஞானிகளாகிய எங்களுக்கே உரியது. )
சாதனை #5 கைகளால் கட்டப்பட்ட ஆலயத்தில் நான் வசிப்பதில்லை என்று சொன்ன தனது நிலையை கர்த்தர் மாற்றிக்கொண்டு விட்டார் என்ற உண்மை ஆதிக்கிறிஸ்தவர்களுக்குத் தெரியாது; அவர்கள் தாங்களே தேவனுடைய ஆலயம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்படி நினைத்தது சரியல்ல என்று கண்டுபிடித்து, விண்ணை முட்டும் கோபுரங்களுடைய ஆலயங்களைக் கட்டி அதில் கர்த்தரைக் குடிவைத்த பெருமை நான்காம் நூற்றாண்டுக்குப் பின் வந்த விசுவாச வீரர்களுக்கே உரியது.
சாதனை #6 கிறிஸ்துவோடு பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைப்பதை மனதார உணர்ந்து அதை அடையாளமாகக் காட்டும் திருமுழுக்கை எடுக்கும் அளவுக்கு முதல் நூற்றாண்டுக் குழந்தைகள் ஞானமற்றவர்களாயிருந்தார்கள். ஆனால் நான்காம் நூற்றாண்டிலிருந்து பிறந்த குழந்தைகள் அனைவரும் பிறந்தவுடனே அதைச் செய்யுமளவுக்கு விஷேச ஞானமுடையவர்களாய்ப் கர்த்தரால் படைக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்து “குழந்தை ஞானஸ்நான” முறையைக் கண்டுபிடித்து 4-ம் நூற்றாண்டு விசுவாச வீரர்கள் மற்றுமொரு சாதனையைச் செய்துள்ளனர்.
சாதனை #7 ஆதிக்கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாடு முறைமைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு புது உடன்படிக்கை உதயமாகிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழைய ஏற்பாட்டின் தசமபாகம் மாத்திரம் இன்னும் ஒழிக்கப்படவில்லை என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாதிருந்தது. பழைய ஏற்பாட்டின் தசமபாகக் கட்டளை புதியஏற்பாட்டு உடன்படிக்கையிலும் உண்டு எனும் உண்மையைக் கண்டுபிடித்து, தசமபாகம் சேர்க்கப்படவேண்டிய பண்டகசாலையாக மேய்ப்பனுடைய வங்கிக் கணக்கை மாற்றிய பெருமை தற்கால சபைகளையே சேரும்.
சாதனை #8 விசுவாசிகளின் ஐக்கியம் என்றால் ஆவிக்குரிய உறவு கொள்வது என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள், கிறிஸ்துவைத் தலையாகவும் தங்களை ஒரே சரீரத்தின் வெவ்வேறு உறுப்புகளாகவும் பாவித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் விசுவாசிகளின் ஐக்கியமென்றால் நிகழ்ச்சிகள் நடத்துவதும் அதில் பங்கெடுப்பதும் என்ற நமக்குத் தெரிந்த பேருண்மை அவர்களுக்குத் தெரியவில்லை. நிகழ்ச்சிகள் முடிந்தபின் நாம் நமது பழைய வாழ்க்கையைத் தொடரலாம். ஆனால் இதெல்லாம் அந்நியரும் பரதேசிகளுமாகிய அவர்களுக்குத் தெரியாது.
சாதனை #9 ஆதிக்கிறிஸ்தவர்கள் புத்தியுள்ள ஆராதனையென்றால் சரீரங்களை பரிசுத்த பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எங்களுக்கோ ஒரு மெலடியான பாட்டு அப்புறம் கிடாரோ, கீபோர்டோ இருந்துவிட்டால் போதும் சூப்பராக ஆராதிப்போம். தினமும் புதுப்புது ஆராதனைகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். Soaking Prayer, Prophetic worship, Apostalic worship என்று Software versions போல புதுசு புதுசாகக் கண்டுபிடித்து வெளியிடுகிறோம். சரீரங்களை ஒப்புக் கொடுப்பது மாத்திரமே புத்தியுள்ள ஆராதனை என்று ரோமர் 12:1 -இல் கூறியிருப்பதால் எங்களுடைய ஆராதனையை ஆதித்திருச்சபையார் புத்தியற்ற ஆராதனை என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும் அவர்களுடைய ஆராதனைக்கு அடியும், உதையும்தான் விழுந்தது, எங்கள் ஆராதனைக்கோ மேலிருந்து தங்கப்பொடியே விழுகிறது. எது சிறந்ததென்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.(இசை வழியாக கர்த்தரை துதிப்பது தவறல்ல, ஆனால் சரீரத்தை அநீதியின் அவயவங்களாக ஒப்புக்கொடுத்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் நாம் செய்யும் இசைவழி துதியானது அவரைக் கேலி செய்யும் செயலாகும்)
சாதனை #10 ஆதிக்கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொண்டு சத்தியத்தைச் சொல்லி எல்லோருக்கும் சத்துருவாகிப் போனார்கள். நாங்களோ அதே வேதத்தைப் பயன்படுத்தியே யாரையும் புண்படுத்தாமல் லாவகமாக சுவிசேஷத்தைச் சொல்லி எல்லோருக்கும் நண்பர்களாகி விட்டோம். அவர்கள் வாசல் இடுக்கமானது, ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்தார்கள். எங்கள் வாசலோ எங்கள் மனதைப் போலவே விசாலமானது. அவர்களைப் பொறுத்தமட்டில் ஊழியம் என்றால் ஒருவனை மறுபிறப்புக்கு வழிநடத்தி அவனை சீஷனாக உருவாக்குவது. எங்களைப் பொறுத்தவரை ஊழியம் என்பது மதமாற்றம் மட்டுமே. (உண்மையாய் ஊழியம் செய்யும் சில மிஷனரி அண்ணன்மார் இதற்கு விதி விலக்கு)
சாதனை #11 ஆதிக் கிறிஸ்தவர்களுக்கு மூன்று எதிரிகள் உலகம், மாமிசம் மற்றும் பிசாசு ஆகியன. எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி பிசாசு மட்டுமே. அவனைக் கட்டுவோம், ஓட்டுவோம், ஆட்டுவோம், மொத்தமாகக் கட்டி நரகத்துக்கு அனுப்புவோம் அக்கினியால் சுட்டெரிப்போம்.
சாதனை #12 தீர்க்கதரிசி என்றால் தேவனுக்குக் கண்ணாக இருந்து சபையை வழிநடத்துபவன், வாயில் காப்பாளன், ஜாமக்காரன் என்றெல்லாம் ஆதித்திருச்சபையார் நினைத்திருந்தார்கள். ஆனால் தீர்க்கதரிசி என்பவன் தலையில் கைவைத்து குறி சொல்லுபவன், அப்புறம் ஒவ்வொரு புத்தாண்டுக்கும் முதல் தேதியிலே அந்த ஆண்டு என்னன்ன நடக்கப்போகுதுன்னு அதாவது பல இடங்களில் வெள்ளம், இந்தோனேஷியாவில் பூகம்பம், பல எரிமலைகள் குமுறும் என்பது போன்ற யாராலுமே கண்டுபிடிக்கமுடியாத அரிய காரியங்களை தீர்க்கமாக தரிசித்து ஜனங்களை எச்சரிப்பவன் மட்டுமே என்ற உண்மை எங்களுக்கே தெரியும்.
சாதனை #13 பழைய ஏற்பாட்டில் ஆசாரியன் சாதாரண ஜனங்கள் என்ற வேறுபாடு இருந்தது. இதை இயேசுவின் சிலுவை மரணம் ஒழித்து எல்லோரும் சகோதரர்கள் (மூப்பரும் கண்காணியும் கூட சகோதரரில் ஒருவரே) என்று ஆக்கிவிட்டதாக ஆதித்திருச்சபையார் நினைத்திருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பதை நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால் நாங்கள் நிரூபித்து மறுபடியும் Clergy-Laity முறையைக் கொண்டுவந்து விட்டோம்.
மகாபெரிய சாதனை #14 மேற்சொன்ன எல்லாவற்றையும் விட மகுடம் வைத்தாற்போல எங்களுடைய சிறந்த கண்டுபிடிப்பு என்னவென்றால் தேவனையும் நேசித்து உலகத்தையும் நேசிக்க முடியும் என்பதை நிரூபித்ததன் மூலம் கிறிஸ்தவத்துக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்ததே! ஆதித் திருச்சபையாருக்கு இந்த உண்மையெல்லாம் தெரியவே தெரியாது. அவர்கள் தேவனை மாத்திரம் நேசித்து உலக இன்பங்களை அனுபவிக்க முடியாத பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
தற்கால சபைகளின் சாதனைகளென சகோ.விஜய் கூறியுள்ள அத்தனை சாதனைகளும் 100-க்கு 100 உண்மையே. தற்கால சபைகளின் இன்னும் சில சாதனைகளும் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது “திரித்துவ ” கண்டுபிடிப்பு சாதனை.
இச்சாதனையை சகோ.விஜய் அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டுவந்திருந்தேன். ஆனால் அவர் “திரித்துவ” கண்டுபிடிப்பு சாதனை குறித்து எழுத தான் விரும்பவில்லை எனக் கூறுகிறார். அவரது எழுத்துக்களைப் படிக்கையில் அவரும் “திரித்துவக்” கண்டுப்பிடிப்பை ஒத்துக்கொள்வதாகவே தெரிகிறது. அது அவரது சொந்த விருப்பம்.
வேதாகமத்தின் உண்மைகளை நாம் என்னதான் ஆராய்ந்து கண்டறிந்தாலும் ஒருசில விஷயங்களில் பாரம்பரிய காரியங்கள் நம்மில் ஆழமாகப் பதிந்துவிடும் என்பதற்கு சகோ.விஜய் ஓர் உதாரணமாக இருக்கிறார்.
மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் தனது காலத்திற்குப் பின் சபைக்குள் வந்து மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள் எனும் பவுலின் தீர்க்கதரிசனம் (அப். 20:29,30), அப்படியே நிறைவேறி வருகிறது. எனவே எச்சரிக்கையாயிருப்போம்.
சகோ.விஜய் அவர்களின் தளத்தில் “திரித்துவ” கண்டுபிடிப்பு சம்பந்தமான எனது பின்னூட்டங்கள் மற்றும் சகோ.விஜய்-யின் பின்னூட்டங்களை அடுத்த சில பதிவுகளில் வெளியிடுகிறேன். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளும்படி (1 தெச. 5:21) தள அன்பர்களை வேண்டுகிறேன்.
தள அன்பர்களும் தங்கள் கருத்துக்களைப் பதிக்கும்படி வேண்டுகிறேன்.
சிந்தனையைத் தூண்டும் நல்லதொரு கட்டுரையை வடிவமைத்துள்ளீர்கள், பாராட்டுக்கள்.
ஆனால் அநேக சாதனைகளைச் சொன்ன நீங்கள், முக்கியமானதொரு சாதனையை மறந்துவிட்டீர்கள். அதுதான் “திரித்துவம்”.
ஒருவேளை நீங்களும் “திரித்துவ” கண்டுபிடிப்பு சாதனையை ஓர் அரும்பெரும்சாதனையாக ஒப்புக்கொள்வதால், தெரிந்தே அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீர்களோ?
“இயேசுவுக்கு ஆராதனை”, “இயேசுவை ஆராதிக்க வாருங்கள்” எனும் கூக்குரல் ஆதிக் கிறிஸ்தவர்களிடம் ஒலித்ததா?
“பிதாதான் இயேசுவாக வந்தார், பிதாவும் இயேசுவும் ஒன்றுதான்” என்பது போன்ற உண்மைகளை(?) ஆதிக் கிறிஸ்தவர்கள் அறியவில்லையே!
ஆனால் இவற்றையெல்லாம் கண்டுபிடித்து, பிதாவை ஒதுக்கிவிட்டு, இயேசுவை ஆராதிக்கும் வழிமுறையைக் கொண்டுவந்தது இமாலய சாதனை அல்லவா? அதை ஏன் சொல்லத் தவறினீர்கள் சகோதரரே?
சகோதரர் அன்பு57 அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நானும் இயேசுக்கிறிஸ்துவை எனது கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அவருக்கு முன்பாக வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோர் யாவருடைய முழங்காலும் முடங்கியே தீரவேண்டும்.
எனவே தாங்கள் எழுதிய கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை.
தேவனுடைய தன்மையைப் புரிந்து கொள்வது கடினம்தான். நமது சுண்டைக்காய் மூளையால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. எனக்கு என்ன புரிந்ததோ நான் அதை Doctrin- ஆக மற்றவர்களுக்கு போதிக்க முடியாது. அது பார்வையற்றவர்கள் யானையை வருணித்த கதையாகிவிடும். எனவே அதைப் பரலோகம் சென்றவுடன் தேவன் வெளிப்படுத்த விரும்பினால்தான் புரிந்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். எனவே திரித்துவம் போன்ற விஷயங்களை விவாதித்து நேரத்தை வீணாக்க ஒருபோதும் நான் விரும்பியதில்லை. அவர் ஒருவரில் மூவரோ அல்லது மூவரில் ஒருவரோ இந்த வியாக்கியானங்களெல்லாம் எனக்குத் தெரியாது. அவருக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும். இயேசுவுக்கு எப்படி சீஷனாக வாழவேண்டும் என்பதே அடியேனுடைய அனுதின ஆராய்ச்சியாகும். இன்றைய கிறிஸ்தவனுக்கு தேவையானதும் இதுவே.
குயவன் எப்படி இருக்கிறார் என்பதை ஆராய்வதை விட எதை விரும்புகிறார் என்று ஆராய்வது மிதியிட்ட களிமண்ணுக்கு உசிதம் அல்லவா?
திரித்துவம் போன்ற நமது எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஆராய்வதிலும் விவாதிப்பதிலும் நேரத்தை செலவிட்டு எல்லோருடனும் சண்டையிட்டு, ஒரு பரிசேயனாக மாறிப்போய் தேவ அன்பை, நித்திய ஜீவனை இழந்து நரகம் போவதை விட. இப்போதைக்கு அவரைச் சென்றடைய என்ன வழியோ அதைப் பார்ப்போம்.
அனபான சகோதரரே! தங்கள் கட்டுரையின் முன்னுரையின் அடிப்படியில்தான் எனது விமர்சனத்தைக் கூறியுள்ளேன்.
//ஆதிச்சபைக்கும் நமக்குமுள்ள வேறுபாட்டை நாம் அறிந்து, நாம் அவர்களைவிட்டு எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டோம் என்பதை உணர்வது மிக மிக அவசியம்.//
“மிகமிக அவசியம்” என்று சொல்லித்தான் “ஆதிச்சபைக்கும் நமக்குமுள்ள பல வேறுபாடுகளை” பட்டியலிட்டுள்ளீர்கள். ஆதிச்சபையினர் கூறாத “திரித்துவத்தை” நாம் கூறுவது வேறுபாடு இல்லையா? எத்தனையோ வேறுபாடுகளை நீங்கள் சொன்னீர்கள், நானும் எனக்கு உணர்த்தப்பட்ட ஒரு வேறுபாட்டைச் சொன்னேன். நான் சொல்லும்போது “இதெல்லாம் வேண்டாம், இயேசுவுக்கு சீஷனாக வாழ்வது எப்படி என்பதுதான் முக்கியம், அவரை சென்றடைய என்ன வழி என்பதுதான் முக்கியம்” என்கிறீர்கள்.
ஆரம்பத்தில் “வேறுபாடுகளை உணர்வது மிகமிக அவசியம்” என்று சொல்லிவிட்டு, வேறுபாட்டில் ஒன்றை நான் சொன்னால், “அது முக்கியமல்ல, இதுதான் முக்கியம்” என்கிறீர்கள். இது உங்களது நடுநிலையையும் நேர்மையையும் கேள்விக் குறியாக்குகிறது.
நமது “சுண்டைக்காய்” மூளையால் தேவனுடைய தன்மையைப் புரிந்துகொள்வது கடினம் என்கிறீர்கள். ஆனால் “அதே சுண்டைக்காய் மூளையால்தான்” தேவனுடைய தன்மைகளை ஆராய்ந்து “திரித்துவத்தைக்” கண்டுபிடித்துள்ளனர் நம் பாபிலோன் சபையினர். “திரித்துவத்தை” வேதாகமமும் கூறவில்லை, நானும் கூறவில்லை. நம் சபையார் கண்டுபிடித்ததுதான் “திரித்துவம்”. “கிறிஸ்துமஸ், ஞாயிறு ஆராதனை” ஆகியவற்றையெல்லாம், நம் சபையார் கண்டுபிடித்து சொன்னதை எடுத்துரைத்த நீங்கள், மெய்யாகவே நடுநிலையாளராக இருந்தால், நம் சபையார் திரித்துவத்தைக் கண்டுபிடித்துச் சொன்னதையும் எடுத்துரைத்திருக்க வேண்டும்.
//திரித்துவம் போன்ற நமது எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஆராய்வதிலும் விவாதிப்பதிலும் நேரத்தை செலவிட்டு எல்லோருடனும் சண்டையிட்டு,…//
ஒரு திருத்தம் சகோதரரே! திரித்துவம் என்பது நமது எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம் அல்ல, நம் வேதாகமத்தில் இல்லாத விஷயம். வேதாகமத்தில் இல்லாத திரித்துவத்தை நான் ஒருபோதும் ஆராய்ந்ததில்லை. அது எனது வேலையுமல்ல. வேதாகமத்தில் இல்லாத ஒன்றை நான் ஏன் ஆராயவேண்டும்?
“திரித்துவம் வேதாகமத்தில் இல்லை” எனும் உண்மையை எடுத்துச் சொல்வதுமட்டுந்தான் என் வேலை. அப்படிச் சொல்லும்போது விவாதம் எழுந்தால் அதில் எனது நேரத்தைச் செலவளித்துதான் ஆகவேண்டும். உண்மையை எடுத்துரைப்பதற்கு எனது நேரத்தைச் செலவளிப்பது அவசியம்தான் என நான் கருதுகிறேன்.
தேவனின் தன்மைகளை ஆராயும் விஷயத்தில் நமது மூளையை “சுண்டைக்காய்” மூளை என்று சொல்லி மட்டுப்படுத்த எனக்கு மனதில்லை. ஏனெனில் தேவனும் தேவகுமாரனாகிய இயேசுவும் இப்படிக் கூறியுள்ளனர்.
ஏசாயா 1:3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது.
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
“மாடும் கழுதையுங்கூட எஜமானனை அறியும்போது, அவற்றைவிட அறிவில் கூடின நீ, உன் எஜமானனாகிய என்னை அறியாமற் போனாயே” என தேவன் ஆதங்கப்படுகிறார்.
எனவே தேவன் தந்தது “சுண்டைக்காய்” மூளையோ, அல்லது “பலாக்காய்” மூளையோ என்பதெல்லாம் எனக்குத் தெரியாது; அவர் தந்த மூளையைக் கொண்டு அவரை எல்லாவிதத்திலும் அறிய வேண்டும், அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் என்பதுதான் எனக்குத் தெரியும்.
தேவனின் தன்மைகளை நாம் ஆராய்ந்து அறியத்தக்கதாகத்தான் அவரை வேதாகமம் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதி அப்போஸ்தலர் தேவனை சரியாகத்தான் அறிந்து கூறி வந்தனர். உதாரணம்:
1 கொரி. 8:5,6 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
ஆனால் இந்த அறிவு இல்லாதவர்கள்தான் (1 கொரி. 8::7), தங்கள் “சுண்டைக்காய்” மூளையைக் கொண்டு வேறு கோணத்தில் ஆராய்ந்து, “திரித்துவத்தைக்” கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் இக்கண்டுபிடிப்பு, ஆதிச்சபையாருக்கும் இன்றைய சபையாருக்கும் இடையேயான ஒரு வேறுபாடுதான். எல்லா வேறுபாட்டையும் சொன்ன நீங்கள், இதையும் சொல்லத்தான் வேண்டும். ஒருவேளை வெகுஜன எதிர்ப்பை சம்பாதிக்க மனதில்லாததால், திரித்துவ வேறுபாட்டை நீங்கள் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால் வேதாகமம் இப்படிச் சொல்வதை சற்று நினைவுகூருங்கள்.
கலாத்தியர் 1:10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
நண்பர் அன்பு அவர்களுக்கு, தங்கள் பதிலுக்கு நன்றி. திரித்துவம், எழுப்புதல் போன்ற நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் வேதத்தில் இல்லாதவைதான். ஆனால் தேவன் யெகோவாவாகவும், இயேசுக்கிறிஸ்துவாகவும், பரிசுத்த ஆவியராகவும் வெவ்வேறு இடங்களில் வெளிப்படுத்தபட்டதைப் பார்க்கிறோம். இது வேதத்தில் இல்லாதது அல்ல.
நான் எழுதிய 14 காரியங்களுமே ஜனங்களை மரியாள் வணக்கம், பரிசேயத்தனம், அன்பற்ற மாய்மாலம், சுயம், பொய், உலக சிநேகம் போன்ற காரியங்களிலிருந்து மக்களை மனந்திரும்பச்செய்யும்படி எழுதப்பட்டது. முறைமைகளை மாற்றுவதால் எழுப்புதல் வந்துவிடாது என்பதையும் மனந்திரும்புதலே அவசியம் என்பதையும் தெளிவுபடுத்தி எழுதியிருந்தேன். ஆனால் தங்களது கேள்வியானது கிறிஸ்துவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டுள்ள யாராலும் சகிக்க முடியாதது. ஆட்டுக்குட்டியானவர் ஆராதனைக்குரியவர். அவர் கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர். அவர் தேவனுடைய ரூபமானவர், அவரையும் பிதாவையும் ஆவியானவரையும் பிரிக்க முடியாது. அவர்களது தன்மையை ஆராய்வது என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது.
என் இயேசு ஆராதனைக்குரியவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனக்காக பரலோக மகிமையை விட்டிறங்கி மனிதனாக அவதரித்து, எனக்காக தன் ஜீவனையும் கொடுத்து, மரணத்தை வென்று பிதாவின் வலது பாரீசத்தில் வீற்றிருப்பவரை ஆராதிப்பது பாவமென்றால். அந்தப் பாவத்தை சாகும் வரை அநுதினமும் செய்ய விரும்புகிறேன். என் நேசர் இயேசுவை ஆராதித்தால் நரகம் தான் என்றால் அந்த நரகத்துக்கே போக விரும்புகிறேன். போதுமா? இந்த விஷயத்தில் எனது நேர்மையையும் நடுநிலையையும் தாங்கள் கேள்வி கேட்க விரும்பினால் தங்கள் கருத்துப்படி நேர்மையற்றவனாகவும், நடுநிலை தவறிய மாபாவியுமாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
எனது ”பாபிலோனும் எருசலேமும்” கட்டுரை குறித்து உங்கள் தளத்தில் பாராட்டிவிட்டு ஒரு கேள்வியும் எழுப்பியிருந்தீர்கள் அப்பொழுதே உங்களது நிலைப்பாட்டை அறிந்து கொண்டேன். அதே போல தமிழ் கிறிஸ்தவத்தளத்திலும் இதுபோன்ற கருத்தையே வைத்து எல்லா சகோதரரோடும் விவாதிக்கிறீர்கள். இதுவரை 25 கட்டுரைகளுக்கு மேல் எனது தளத்திலேயே எழுதியிருக்கிறேன் ஒன்றில் கூட கருத்தைப் பதிவு செய்யாத தாங்கள் திரித்துவம், இயேசுவுக்கு ஆராதனை போன்ற காரியங்களில் மாத்திரம் அளவுகடந்த ஆர்வத்தோடு விவாதிப்பது ஏன்? இதன் மூலம் தாங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?
நான் எனது இன்றைய திருச்சபைகளின், ஊழியக்காரர்களின் பாவங்களுக்கு விரோதமாக எழுதுவதால் நான் திருச்சபைகளையும் ஊழியர்களையும் விரோதிப்பதாக யாராகிலும் தப்பான அர்த்தம் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல, நான் சபைகளையும் ஊழியர்களையும் (பாபிலோனும் எருசலேமும் ஜெபிக்கின்றன கட்டுரையில் ஜெபிக்கும் பாபிலோன் ஊழியரையும் சேர்த்தே சொல்லுகிறேன்) அளவில்லாமல் நேசிக்கிறேன். அதனாலேயே அவர்களின் பாவங்களுக்கு விரோதமாக எழுதுகிறேன். ஏனேனில் அவர்கள் தங்கள் உலக சிநேகத்தை விட்டு மணவாளனிடத்தில் ஒருநாள் திரும்பிவிடமுடியும். அவர்கள் என்னை அடித்தாலும் உதைத்தாலும் வெறுத்தாலும் நான் அவர்களை நேசிக்கிறேன்
ஆனால் யெகோவா அல்ல இயேசு மாத்திரமே கடவுள் என்றோ, இயேசு அல்ல யெகொவொவே கடவுள் என்றோ, ஏழாம் நாள் மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்றோ சொல்லுபவர்களுக்கு நான் பல ஆயிரம் மைல்கள் தூரமானவன். திருச்சபைக்கு விரோதமாக நான் எழுதுவதால் அவர்கள் என்னை கட்டி அணைத்து முத்தமிட முனைந்தாலும் நான் அவர்களது விரோதியே! அவர்களோடு விவாதிப்பதையும் விரும்பவில்லை. அவர்கள் தங்களது CULT கொள்கைகளைக் கொண்டுவந்து எனது வாசக சகோதர சகோதரிகளைக் குழப்புவதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மன்னிக்கவும்!
//திரித்துவம், எழுப்புதல் போன்ற நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் வேதத்தில் இல்லாதவைதான்.//
உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி சகோதரரே!
இது போதும், ஆதித்திருச்சபை அறியாததும் அதன்பின் பின்வந்த சபைகள் கண்டுபிடித்ததுமான கொள்கைதான் “திரித்துவம்” என்பதற்கு.
இது போதும், ஆதிச்சபைக்கும் இன்றைய சபைக்கும் உள்ள வேறுபாடுகளில் “திரித்துவமும் அதைச் சார்ந்த போதனைகளும்” அடங்கும் என்பதற்கு.
//ஆனால் தேவன் யெகோவாவாகவும், இயேசுக்கிறிஸ்துவாகவும், பரிசுத்த ஆவியராகவும் வெவ்வேறு இடங்களில் வெளிப்படுத்தபட்டதைப் பார்க்கிறோம். இது வேதத்தில் இல்லாதது அல்ல.//
தேவனின் நாமம் யெகோவா எனும் தகவல் மட்டுமே “எனது வேதாகமத்தில்” உள்ளது.
//தமிழ் கிறிஸ்தவத் தளத்திலும் இதுபோன்ற கருத்தையே வைத்து எல்லா சகோதரரோடும் விவாதிக்கிறீர்கள்.//
கருத்தில் வேறுபாடு வரும்போது விவாதம் உண்டாவது இயல்பே. அநேகருடன் கருத்தில் வேறுபாடு வரும்போது அநேகருடன் விவாதம் உண்டாவதும் இயல்பானதே.
அநேக வேதபாரக பரிசேயரின் கருத்தோடு இயேசுவின் கருத்து வேறுபட்டதால் அவரோடு அநேக வேதபாரக பரிசேயர் விவாதித்ததையும் அவரைக் குற்றங்காண முயன்றதையும் அறிவீர்கள் அல்லவா?
விவாதம் என்பது இரு சாராரைச் சார்ந்ததாகும்; ஆனால் நான் தான் எல்லாரோடும் விவாதிப்பதாகக் கூறுகிறீர்கள். நீங்கள்கூட விவாதம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு பதிவிலும் உங்கள் வாதத்தை வைத்துள்ளீர்கள். ஆனால் நான் தான் விவாதிப்பதாகக் கூறுவீர்கள்; அப்படியே சொல்லிக் கொள்ளுங்கள்.
//இதுவரை 25 கட்டுரைகளுக்கு மேல் எனது தளத்திலேயே எழுதியிருக்கிறேன் ஒன்றில் கூட கருத்தைப் பதிவு செய்யாத தாங்கள் திரித்துவம், இயேசுவுக்கு ஆராதனை போன்ற காரியங்களில் மாத்திரம் அளவுகடந்த ஆர்வத்தோடு விவாதிப்பது ஏன்?//
கிறிஸ்தவ திரட்டியின் மூலம் தற்போதுதான் உங்களது தளத்தை அடிக்கடி காணநேரிட்டது. எல்லா கட்டுரைகளிலும் கருத்தைப் பதிக்க எனக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு கட்டுரையில் கருத்தைப் பதித்ததற்கே “விவாதம் வேண்டாம்” என்றி சொல்லி கதவைச் சாத்தினால், மற்ற கட்டுரைகளில் எப்படி கருத்தைப் பதிக்கமுடியும்?
//திரித்துவம், இயேசுவுக்கு ஆராதனை போன்ற காரியங்களில் மாத்திரம் அளவுகடந்த ஆர்வத்தோடு விவாதிப்பது ஏன்? இதன் மூலம் தாங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?//
வேதாகமத்துக்கு எதிரான அத்தனை கருத்துகளிலும் பட்சபாதமின்றி நான் விவாதிக்கத்தான் செய்கிறேன். உங்கள் கண்ணுக்கு “திரித்துவம், இயேசுவுக்கு ஆராதனை” போன்ற காரியங்களிலான எனது விவாதங்கள் மட்டுமே தெரிகின்றன. அதற்கு நான் பொறுப்பல்ல.
எந்த விவாதத்தாலும் எதையும் சாதிப்பது என் நோக்கமல்ல. அதான் வேதாகம காலத்திற்குப் பின்வந்த சபைகள் எல்லா சாதனைகளையும் செய்துவிட்டனவே. அவர்களின் தவறான சாதனைகளை நான் எடுத்துச் சொல்கிறேன், அவ்வளவே. இது தேவன் எனக்குத் தந்த பணிகளில் ஒன்று.
//நான் சபைகளையும் ஊழியர்களையும் … அளவில்லாமல் நேசிக்கிறேன். ஆனால் யெகோவா அல்ல இயேசு மாத்திரமே கடவுள் என்றோ, இயேசு அல்ல யெகொவொவே கடவுள் என்றோ, ஏழாம் நாள் மட்டுமே ஆராதிக்க வேண்டும் என்றோ சொல்லுபவர்களுக்கு நான் பல ஆயிரம் மைல்கள் தூரமானவன். அவர்கள் என்னை கட்டி அணைத்து முத்தமிட முனைந்தாலும் நான் அவர்களது விரோதியே!//
என்னைப் பொறுத்தவரை அவர்/இவர் என்ற வேறுபாடு கிடையாது. கிறிஸ்துவுக்கு சீஷனாயிருப்பதனிமித்தம், லூக்கா 14:26 கூறுகிறபடி, அனைவரையும் வெறுக்க ஆயத்தமாயுள்ளேன். (அதேவேளையில் வேதத்திற்குட்பட்ட போதனை எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்கவும் ஆயத்தமாயுள்ளேன்.)
சத்தியத்தைச் சொல்வதால் நீங்கள் உட்பட யாருக்கு நான் சத்துருவானாலும் (கலா. 4:16) அதன்பொருட்டு நான் மிகவும் மகிழவே செய்வேன்.
//தங்களது CULT கொள்கைகளைக் கொண்டுவந்து எனது வாசக சகோதர சகோதரிகளைக் குழப்புவதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.//
இது உங்கள் தளம், உங்கள் விருப்பம் நிறைவேறட்டும். ஆனால் CULT கொள்கைகளைச் சொல்வது யாரென்பதை தேவன் அறிவார்.
இதுவரை எனது பதிவுகளை அனுமதித்து, பொறுமையுடன் படித்து, பதிலளித்ததற்கு நன்றி.
தான் ஆராதிக்கும் தேவன் யார் என்பதைக் கூட அறியாமல் செய்வது எத்தகைய ஆராதனையாகும்!? அதற்காக நரகத்தில் போட்டால் கூட பரவாயில்லை என்றால், அந்த இயேசு கிறிஸ்து யார் என்று தெரியவில்லை என்று தானே அர்த்தம்!!
பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியான தேவனும் (தேவர்களும்!!) ஒன்று தான் என்று எண்ணுபவர்கள் யாரைத்தான் ஆராதிக்கிறார்கள்!? பாரம்பரியத்தின் விளைவால் வருகிற விசுவாசம் எத்தகைய விசுவாசம்!! என் மகிமையை ஒருவனுக்கும் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன யெகோவா, தன் குமாரனின் நாமத்தை உயர்த்தினார்!! ஒருவர் உயர்த்துகிறார், மற்றொருவர் உயர்த்தப்படுகிறார் என்றால் இருவரும் ஒருவரே என்பது மூடத்தனமான கருத்தும், குருட்டு நம்பிக்கையுமாகும்!! வேதத்தின் தெளிவைக் காட்டிலும் திருத்துவத்தை தெளிவுபடுத்த விரும்புவர்களின் விசுவாசம் வேதத்திலிருந்து அல்ல, பாரம்பரியத்தினாலும், சில மனிதர்கள் எழுதிய துதிப்பாடல்களினாலும் வந்ததே!!
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
ஆதிக் கிறிஸ்தவர்களுக்குத் தெரியாத உண்மைகள்(?) - தொடர்கிறது
சகோ.விஜய் தனது தளத்தில் 14 உண்மைகளை(?) மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்லத் தவறியவற்றில் ஒன்றான “திரித்துவ” உண்மையை நான் நினைவூட்டின போது அவர் இவ்வாறு சொன்னார்:
//நான் எழுதிய 14 காரியங்களுமே ஜனங்களை மரியாள் வணக்கம், பரிசேயத்தனம், அன்பற்ற மாய்மாலம், சுயம், பொய், உலக சிநேகம் போன்ற காரியங்களிலிருந்து மக்களை மனந்திரும்பச்செய்யும்படி எழுதப்பட்டது. முறைமைகளை மாற்றுவதால் எழுப்புதல் வந்துவிடாது என்பதையும் மனந்திரும்புதலே அவசியம் என்பதையும் தெளிவுபடுத்தி எழுதியிருந்தேன். ... ஆட்டுக்குட்டியானவர் ஆராதனைக்குரியவர். அவர் கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர். அவர் தேவனுடைய ரூபமானவர், அவரையும் பிதாவையும் ஆவியானவரையும் பிரிக்க முடியாது. அவர்களது தன்மையை ஆராய்வது என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது.//
முறைமைகளை மாற்றுவதால் எழுப்புதல் வந்துவிடாது எனக் கூறும் அவர், “ஆராதனைக்குரியவர் ஒருவரே” எனும் முறைமையை “ஆராதனைக்குரியவர்கள் இருவராவார்கள்” என மாற்றுவதால் மட்டும் எழுப்புதல் வந்துவிடுமெனக் கருதுகிறார் போலும். அதனால்தான் இந்த மாற்றத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்கிறார்.
ஆனால் இந்த மாற்றத்தால் சபையில் எழுப்புதல் வந்துள்ளதா எனக் கேட்டால் “இல்லை” என்றுதான் சொல்லவேண்டும். உண்மையில் “இயேசுவை ஆராதனைக்குரியவராக” கருதுகிற ஊழியர்களும் விசுவாசிகளும்தான் மற்றவர்களைக்காட்டிலும் அதிகமாக உலகசிநேகத்தில் கிடக்கின்றனர். விசுவாசிகளை உலக சிநேகத்தில் இழுத்து, உலக செழிப்பைச் சொல்லி, தங்களைச் செழிப்பாக்கிக் கொண்ட பல ஊழியர்கள் “இயேசுவை ஆராதனைக்குரியவர்களாக” கருதுபவர்களே (உ-ம்: பெனிஹின், டி.ஜி.எஸ்., பால் தினகரன், மோகன் சி.லாசரஸ், பெர்க்மான்ஸ் மற்றும் தமிழ் கிறிஸ்தவ தளத்திலும் யெளவன ஜனத்திலும் விமரிசையாக விவாதிக்கப்படும் சாம் செல்லத்துரை). எனக்குத் தெரிந்து “இயேசுவை ஆராதனைக்குரியவராகக்” கருதாதவர்களில் எவரும் ஊழியத்தின் பெயரால் தங்களைச் செழிப்பாக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஆதிக் கிறிஸ்தவர்களுக்குத் தெரியாத உண்மைகள்(?) என்று சொன்னால் எல்லா உண்மைகளையும் சொல்லுவதுதான் நேர்மை. தான் ஒத்துக்கொண்டவற்றை ஒதுக்கிவிட்டு, தான் ஒத்துக்கொள்ளாததை மட்டும் சொல்வது, பாரபட்சமாகும். எனவே சகோ.விஜய் சொல்லத் தவறின மற்றும் சொல்ல மறுத்த உண்மைகளை இத்தளத்தில் தொடர்கிறேன்.
சாதனை #15 திரித்துவ கண்டுபிடிப்பு சாதனை (இதுபற்றிய விளக்கம் ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது)
சாதனை #16 கிறிஸ்து மரித்து அடக்கம்பண்ணப்பட்டு 3 நாட்கள் இரவும் பகலும் பூமிக்குள் இருக்கவில்லை, சுமார் 42 மணி நேரங்களே (அதாவது 1 நாளும் 3/4 நாளும் மட்டுமே) இருந்து உயிர்த்தெழுந்தார் எனும் மாபெரும் உண்மையைக் (?) கண்டுபிடித்த சாதனை பிற்கால கிறிஸ்தவர்களையே சேரும். (இவ்விஷயத்தில் தெளிவான விளக்கத்தைப் பெற இத்தொடுப்பை சொடுக்கவும்) http://www.christian-perfection.com/QuestionAnswer/JesusDeathDay.pdf)
மூப்பர்கள் மற்றும் சபைப்பணியாளர்களைத் தெரிவு செய்வதிலும் இன்றைய கிறிஸ்தவர்கள் பெரும்சாதனை புரிந்துவிட்டனர். ஆதிக்கிறிஸ்தவர்கள் வயதில் அல்லது ஆவிக்குரிய அனுபவத்தில் மூத்தவர்களை “மூப்பர்” என அழைத்தனர். சபைப் பணியாளர்களை ஆவிக்குரிய அனுபவம் மற்றும் நற்சாட்சியின் அடிப்படையில் தெரிவுசெய்தனர் (அப்போஸ்தலர் 6:1-6). ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு மூப்பர் பணியாளர் என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே முறைதான். அதுவும் உலகத்தாரின் முறையான “தேர்தல்” முறையில்தான் அனைவரும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
ஒருவரின் வயது அனுபவம், ஆவிக்குரிய அனுபவம், நற்சாட்சி போன்ற எதுவுமே அவசியமில்லை. அவருக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருந்தால் போதும், அதுவே மூப்பராகவும் பணியாளராகவும் இருப்பதற்கான தகுதி எனும் விதிமுறையை உண்டாக்கி பெரும் சாதனை புரிந்துள்ளனர்.
மாத்திரமல்ல, இந்த மூப்பர்/பணியாளர்களுக்கு ஆலயப் பணியில் மட்டும் பொறுப்பு கிடையாது, உலகப்பிரகாரமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை போன்றவற்றை நிர்வகிக்கும் பொறுப்பும் உண்டு. பொறுப்பு எனச் சொல்வதைவிட அதிகாரம் எனச் சொல்வதுதான் அதிக பொருத்தமாயிருக்கும். ஏனெனில் பொறுப்பு என்ற பெயரில் கிடைக்கிற அதிகாரத்திற்காகத்தான் இம்மாதிரி பணிகளுக்கு தெரிவுசெய்யப்படுவதற்காக ஏராளமானோர் போட்டாபோட்டி போடுகின்றனர்.
இப்படியாக உலகப்பணியார்கள் தேர்வுக்கு நிகராக ஆவிக்குரிய பணியாளர்களைத் தெரிவுசெய்வதில் இன்றைய கிறிஸ்தவர்கள் பெரும் சாதனைபுரிந்துள்ளனர்.
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பெதஸ்தா எனும் பெயரில் ஒரு குளம் அமைத்தால் அக்குளத்திற்கு வருகை தருபவர்கள் தேவனிடமிருந்து அற்புத சுகத்தைப் பெறமுடியும் எனும் அரும்பெரும் உண்மையை ஆதிக்கிறிஸ்தவர்கள் கண்டறியத் தவறிவிட்டனர். ஆனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊழியராகக் கருதப்பட்ட காலஞ்சென்ற சகோ.டி.ஜி.எஸ்.தினகரன் அவ்வுண்மையைக் கண்டறிந்து காருண்யா நகரில் ஒரு பெதஸ்தா குளத்தை அமைத்தார். தினகரன் அறிந்த உண்மையை நம் விசுவாசிகளும் அறிந்துகொண்டதால் தங்கள் வியாதி நீங்கி சுகம்பெறுவதற்காக அவரது பெதஸ்தா குளத்திற்கு அலைஅலையாய் சென்று வருகின்றனர்.
தினகரனின் பெதஸ்தா குளத்திற்குச் செல்பவர்கள் வெறுமனே சென்று ஜெபிப்பதோடு நிற்பதில்லை; காசு நாணயங்கள், பொன் பொருட்கள் போன்றவற்றை குளத்தினுள் வீசிவிட்டும் வருகின்றனர். மருத்துவரிடம் கொடுக்கும் காசில் ஒரு பகுதியை “குளத்திற்கும்” கொடுத்தால் வியாதி நீங்குமா என்ற நப்பாசையில் காசையும் பொன்னையும் அள்ளிவீசி வருகின்றனர்.
அவர்கள் அள்ளிவீசும் காசையும் பொன்னையும் அவ்வப்போது பொறுக்கிச் செல்லும் தினகரன் குடும்பத்தாருக்கு மக்களின் அறிவீனத்தை எண்ணி உள்ளூர ஒரே ஆனந்தம்தான்.
பெதஸ்தா குளத்தை தேவதூதன் கலக்கியதும் குளத்தினுள் முதலாவது இறங்கும் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனும் குணமடைவான் எனும் தகவல் அடங்கிய யோவான் 5:4 வசனம் மூலப்பிரதிகளில் இல்லை என நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.
வேதாகம பெதஸ்தா குளமே ஒரு மூடநம்பிக்கையின் ஸ்தலமாகத்தான் விளங்கினது. அதையறியாத நம் ஊழியர்களும் கிறிஸ்தவர்களும் பெதஸ்தா என்ற பெயரில் குளங்களையும் மருத்துவமனைகளையும் உண்டாக்கி மூடநம்பிக்கையை இன்னும் அதிகமாக வளர்த்து வருகின்றனர்.
இதுவும் ஆதிக்கிறிஸ்தவர்களின் அறிவுக்கு எட்டாத ஒரு சாதனைதான்.
ஆதிக் கிறிஸ்தவர்கள் ஒரு முக்கியமான சாதனையைக் கோட்டை விட்டுவிட்டனர். அதுதான் இயேசுவின் உருவத்தை சிலையாக/படமாக வடிக்கத் தவறியது.
மோசே காலத்திலேயே ஜனங்கள் அருமையாக சிலை வடிக்க அறிந்தவர்களாகத்தான் இருந்தனர். அதனால்தான் மோசே மூலம் தேவன் இக்கட்டளையைக் கொடுத்தார்.
யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
எந்தவொரு உருவத்தையும் சொரூபமாகவோ (படமாக), விக்கிரகமாகவோ (சிலையாக) உண்டாக்கும் திறமை மோசே காலத்திலேயே ஜனங்களிடம் இருந்தது. ஆயினும் அவர்களுக்கு பல ஆயிரம் வருடங்கள் பிந்தின காலத்தைச் சேர்ந்த இயேசுவின் சீஷர்கள், “தங்களது கண்கண்ட தெய்வமாகிய(?)” இயேசுவின் சொரூபத்தையோ சிலையையோ உண்டாக்க முயலவுமில்லை, அது பற்றி நினைக்கவுமில்லை.
அவர்கள் ஊழியத்தில் பிசியாக இருந்ததால் (அப்போஸ்தலர் 6:4), இயேசுவின் உருவத்தை சிலையாக/படமாக வடிக்க நேரமில்லாமற்போயிருக்கலாம்.
ஆனால் இயேசுவை நேரடியாகப் பார்த்த மற்ற விசுவாசிகளாவது (அதாவது ஆதிக்கிறிஸ்தவர்கள்), இயேசுவின் உருவத்தை சிலையாக/படமாக வடித்து ஒரு சாதனை செய்திருக்கலாம். அவர்களும் ஏனோ அதை செய்யத்தவறிவிட்டனர்.
அவர்கள் அதைச் செய்திருந்தால், அவர்களுக்குப்பின் வந்தவர்கள் இயேசுவின் உருவத்தை அறிவதற்கு வெகு பாடுபட்டிருக்க வேண்டியதில்லை.
ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறியதால், அவர்களுக்குப் பின் வந்த சபைத்தலைவர்கள், இயேசுவின் உருவத்தை அறிய வெகுபாடுபட வேண்டியதாயிற்று. ஆயினும் இயேசுவின் உருவத்தை எப்படியாவது கண்டுபிடித்துவிடவேண்டும் என அலை அலையாய் அலைந்து, இறுதியில் “இரத்த வேர்வை படிந்த இயேசுவின் முகத்தைத்” துடைத்த துணியைக் கண்டுபிடித்து, அதில் பதிந்த இயேசுவின் முகப்பதிவின் மூலம் இயேசுவின் உருவத்தை உண்டாக்கியதாக யாரோ சொல்கிறார்கள். இத்தகவல் எவ்வளவு தூரத்துக்கு உண்மையோ, நாமறியோம்.
அப்போஸ்தலர் 6:4 கூறுகிறபடி ஜெபிப்பதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் தரித்திருக்க வேண்டிய அவர்களுக்கு, வெகு பாடுபட்டு இயேசுவின் உருவத்தைக் கண்டுபிடிக்க எப்படித்தான் நேரம் கிடைத்ததோ?
எப்படியோ இயேசுவின் உருவத்தை சிலையாக/படமாக வடிக்கும் சாதனையை ஆதிக்கிறிஸ்தவர்களுக்குப் பின்வந்த கிறிஸ்தவர்கள் செய்து காட்டிவிட்டனர்.
இச்சாதனையின் காரணமாக மிக முக்கியமான ஒரு நன்மை(?) உண்டானது.
அதாவது “இயேசுவைத் தெய்வமாக” புற மார்க்கத்தாரிடம் அறிமுகம் செய்யும் வேலை மிகமிக எளிதாகிப் போனது.
ஏற்கனவே ராமன் கிருஷ்ணன் போன்ற “அவதார தெய்வங்களை” சிலையாகப் பார்த்து வணங்கினவர்களிடம், இயேசு எனும் அவதாரம்தான் “மெய்யான தெய்வம்” என்று சொல்லி அறிமுகப்படுத்துவது மிக எளிதாகிப் போனது.
அவதாரங்களைத் தெய்வங்களாக வணங்கி பழக்கப்பட்ட அவர்களும், எத்தனையோ அவதாரங்கள் தெய்வமாக இருப்பதுபோல இயேசுவும் ஒரு தெய்வமாக இருந்துவிட்டுப் போகட்டுமே எனப் பரந்த மனப்பான்மையுடன் இயேசுவை ஏற்றுக் கொள்கின்றனர்.
அப்படிப்பட்ட அவர்கள் இயேசுவை சரியாகப் புரிந்துகொண்டுள்ளதாக தமிழ் கிறிஸ்தவ தளத்தில்சகோ.கொல்வின் என்பவர் மிகவும் பாராட்டி, அவர்களுக்கு இருக்கும் புரிந்துகொள்தல்கூட உங்களுக்கு இல்லையே என நம்மைப் பார்த்து மறைமுகமாகக் கேட்கவும் செய்கிறார். கொல்வின் எழுதினது:
//எனக்குத் தெரிந்து இஸ்லாமியர்கள் மற்றும் ஜெகோவா சாட்சியினர் இன்னும் சில பிரிவுகள் தவிர்த்து மற்றவர்கள் இயேசு தேவன் என்பதையே அறிந்து வைத்துள்ளனர். ஏதாவது ஒரு விதத்தில் இப்படி கேள்விப்படுகின்றனர். சாதாரணமாக படிக்கும் காலங்களில் தமிழ் பாடநூல்களிலும் இதனை அவதானிக்கலாம். அவரை தேவனாகவே .இனங்காட்டியிருப்பார்கள்.
எல்லா சாமிகளையும் கும்பிடும் இந்துவைக் கேட்டுப்பாருங்கள். நான் பலரிடம் இவ்விதம் வினா எழுப்பி அறிந்து வைத்துள்ளேன். குறிப்பிட்ட சிலரைத் தவிர்த்து மற்ற அனைவரும் சரியாக புரிந்து வைத்துள்ளனர். மரியாளையும், அந்தோனியாரையும் கும்பிடுவர். இவர்கள் புனிதர்கள், ஆனால் இயேசு கடவுள் என்பர். இந்த வித்தியாசம் அவர்களுக்கு எப்படித் தெரிகிறது?//
உருவங்களாகக் காணப்படும்ராமரையும் கிருஷ்ணரையும் தெய்வங்களாக ஏற்றுக் கொள்கிற “தமிழ் பாடநூல் வெளியீட்டார், இந்துக்கள்” மற்றும் அனைவரும், உருவமாகக் காணப்படும் இயேசுவையும் தெய்வமாகப் புரிந்துகொள்வதில் என்ன ஆச்சரியம்?
இப்படியாக ஆதிக்கிறிஸ்தவர்களுக்குப் பின்வந்த கிறிஸ்தவர்கள் இயேசுவின் உருவத்தை உண்டாக்கியதால், புறமார்க்கத்தாரின் புரிந்துகொள்தலின் அடிப்படையில் நாமும் இயேசுவைப் புரிந்து கொள்ளவேண்டும் எனக் கொல்வின் போன்றவர்கள் சொல்லும் நிலை உண்டாகிவிட்டது.
இயேசுவின் உருவம் கண்டுபிடிக்கப்பட்டு சிலையாக/படமாக வடிக்கப்பட்டுள்ளதால், இந்நாட்களில் மிகப்பெரிய ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் அடிக்கடி கனவில்/தரிசனத்தில் வருகிற உருவத்தை “இது இயேசுவின் உருவமே” என அடையாளம் கண்டுகொள்ள மிக எளிதாகிவிட்டது. இல்லாவிடில், தங்கள் கனவில்/தரிசனத்தில் வரும் உருவம் இயேசுவா, ராமரா, கிருஷ்ணரா என அறிவதற்கு வெகு பாடுபட்டிருப்பார்கள்.
இயேசுவை உருவமாகக் காண்கிற விசுவாசிகளுக்கு ஒரேயொரு மனக்குறை. அதாவது: இயேசுவின் உருவத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வடித்து வைத்துள்ளார்களே இவற்றில் எது சரியானது எனத் தெரியவில்லையே என்பதுதான் அது.
ஆனாலும் தலையின் பின்னே தொங்கும் முடி, தாடி, மீசை, முழி ஆகியவை எல்லா வடிவங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால், ஒரு உருவத்தைப் பார்த்ததும் “இதுதான் இயேசு” என எளிதில் புரிந்துகொள்கின்றனர்.
சமீபத்தில், காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் நடிகருமான திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவஞ்சலி தினத்தையொட்டி, திருநெல்வேலியின் ஒரு சந்தியில் எம்.ஜி.ஆர்.-ன் 3 உருவப்படங்கள் கட்-அவுட்டாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதல் உருவம் இயேசுவின் “கெட்-அப்பிலும்”, 2-வது உருவம் முருகனின் கெட்-அப்பிலும், 3-வது உருவம் ஒரு முகமதியரின் கெட்-அப்பிலும் வனையப்பட்டிருந்தன.
“இயேசுவைத் தெய்வமாக ஆராதனை செய்கிறவர்கள்” இயேசுவின் உருவம் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படுவதைப் பார்த்து வருந்துகிறார்களோ இல்லையோ, ஆனால் இயேசுவைத் தேவனுடைய குமாரனாகவும் பரிசுத்தராகவும் பார்க்கிற நமக்கு மெய்யாகவே வருத்தம் உண்டாகிறது.
இம்மாதிரி நிலை உண்டாகக் காரணமென்ன? இயேசுவின் உருவத்தை சிலையாக/படமாக வடித்த கிறிஸ்தவர்களின் சாதனைதானே? இது ஒரு அறிவீனமான சாதனை என்பதை இனியாவது “கிறிஸ்தவர்கள்” உணர்வார்களா?