கிருபையும் இரக்கமுமுள்ள பிதாவே! உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக, உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக! உமது சித்தம் எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்பத்திலும் சபையிலும் செய்யப்படுவதாக! மீண்டும் ஒருமுறை ஐயாவின் குடும்பத்தைக் காணச் செய்த கிருபைக்காக நன்றி!
ஆண்டவரே! இந்தக் குடும்பத்தாரின் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள இவர்கள் அன்பையுங்குறித்து அறிந்திருக்கிறபடியினாலே இவர்களுக்காக உம்மைத் துதிக்கிறோம்.
”ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.(லூக்கா 10:5,6) என்று சொன்னீர்.ஆண்டவரே! உம்முடைய வார்த்தைப்படியே இந்த வீட்டின் மேல் சமாதானத்தைக் கூறுகிறோம்!
அப்பா! பிரதானமாக இந்த வீட்டார் உம்மை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை இவர்களுக்கு தந்தருள வேண்டுமென்று (எபே 1:17) கருத்தாய் உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம், மாத்திரமல்ல இவர்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் உம்முடைய சித்தத்தை அறிகிற அறிவினாலும் நிரப்பப்படுவார்களாக! (கொலோ 1:9)
ஆண்டவரே! நீர் விரும்பும் சந்தோஷமும் சந்தோஷத்தோடு கூடிய பொறுமையும் நீடிய சாந்தமும் இவர்களில் பெருகும்படிக்கு உம்முடைய வல்லமையால் இவர்களை பெலப்படுத்தும். (கொலோ 1:11)
ஆண்டவரே! இவர்களை நீர் அழைத்த அழைப்பினாலே இவர்களுக்கு உண்டான மகத்தான நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் நீர் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும், கல்லறையில் இருந்த கிறிஸ்துவை உயிரோடு எழுப்பி அவரிடத்தில் காட்டிய உமது வல்லமைப்படியே விசுவாசிக்கும் பிள்ளைகளாகிய இவர்களிடத்தில் நீர் காண்பிக்கும் வல்லமை எப்படிப்பட்டதென்றும் இவர்கள் அறியும்படி இவர்களுக்குப் பிரகாசமான மனக் கண்களைக் கொடுத்தருளும். (எபே 1:18,19)
சோதனைகளை சகிக்கவும், பாவத்தை ஜெயிக்கவும் இவர்களுக்கு பெலன் தாரும். உம்மைத்தவிர வேறு ஒன்றும் இந்தப் பூமியில் இவர்களைக் கவர்ச்சிக்கக் கூடாதப்பா! விசேஷமாக பிள்ளைகள் பள்ளியிலிருந்து நல்லவைகளை மட்டும் கற்றுக் கொள்ளவும், இவர்கள் உலகத்தால் பாதிக்கப் படாமல் உலகத்தை பாதிக்கிறவர்களாக இவர்களை மாற்றும். படிப்பில் நல்ல ஞானம் தாரும்! கடினமாய் உழைத்துப் படிக்கும் இவர்களது முயற்சியை ஆசீர்வதியும்.
ஐயாவுக்காக வருகிறோம்! குடும்பத்தின் தலைவராக உம்மைப் பிரதிபலிக்கிறவராக இருக்க கிருபைதாரும். குடும்பத்தையும் பிள்ளைகளையும் செவ்வனே நடத்த கிருபை தாரும். தொழிலில் உமக்கு சாட்சியாக இருக்க உதவி செய்யும். சுமத்திரையான நிறைக்கல்லே உமக்குப் பிரியம் கள்ளத் தராசு உமக்கு அருவருப்பு என்று வார்த்தை சொல்லுகிறது. இவரது உண்மையைப் பார்த்து இவரது வாடிக்கையாளர் உம்மை மகிமைப்படுத்த கிருபை தாரும்.
அன்பான ஐயா அவர்களே! வேதத்திலுள்ள ஆசீர்வாதங்கள் எல்லாம் நிபந்தனைக்குட்பட்டவை நீங்கள் நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படியும்போது மாத்திரமே அதில் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் தங்கும்.
இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும் என்று வேதம் சொல்லுகிறது (உபா 11:26-28) ஆகவே தேவனுடைய வார்த்தைக்கு கருத்தாய் கீழ்ப்படிய கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக!
அன்பான அம்மாவுக்காக ஜெபிக்கிறோம்! புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள் என்று வார்த்தை சொல்லுகிறது.(நீதி 14:1) அம்மாவுக்கு வீட்டை ஞானமாய் ஜாக்கிரதையாய்க் கட்ட கிருபை தாரும். அவர்களது கால் பிரச்சனையை கிருபையாய் சுகமாக்கும்படியாய் ஜெபிக்கிறோம். இவர்களது பக்கத்து வீட்டாரோடு இருக்கும் பிரச்சனையைப் பகிர்ந்து கொண்டார்கள் ஆண்டவரே! அது நீங்கி சமாதானமுண்டாக கிருபை தாரும்! அம்மா! நீங்கள் உடனடியாக அவர்களோடு வலிய சென்று ஒப்புரவாகுங்கள்! அதுவே சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை! கர்த்தர் உங்களுக்கு பெலன் தருவாராக!
பாட்டியம்மா மீது உம்முடைய இரக்கம் இருக்கட்டும். அவர்களது கண்களை சுகமாக்கும். அதே வேளையில் உண்மையான சந்தோஷத்தை உம்மிடத்தில் கண்டுகொள்ள அவர்களுக்கு உதவி செய்யும்.
ஆண்டவரே! சகோதர சிநேகத்தில் எங்களை ஊன்றக் கட்டும். நாங்கள் எங்களுக்குரியவைகளை அல்ல பிறரது நன்மைகளையே தேட எங்களுக்கு உதவி செய்யும். உமக்கு சாட்சிகளாய் வாழ எங்களுக்கு அருள் புரியும்! இயேசுவின் நாமத்தில் ஆமேன்!
அன்பானவர்களே! உண்மை ஊழியரின் ஜெபம் எப்படி இருக்கும் என்பதன் மாதிரிதான் இது. இவர் கர்த்தரை எவ்வளவாய் ருசித்திருக்கிறார் என்பது விளங்குகிறது. மனிதரை திருப்திப்படுத்த ஜெபிக்கவில்லை. இது தேவனை, நித்தியத்தை மையமாகக் கொண்ட ஜெபம். இப்படிப்பட்ட ஊழியர்களை கனம் பண்ணுங்கள். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்களுக்காக கருத்தாய் ஜெபியுங்கள். இவர்கள் தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறார்கள்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறார்கள் இதனாலே இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே இப்படிப்பட்ட தகப்பன்மாரைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டி கர்த்தரை மகிமைப் படுத்துங்கள். (2 கொரி 5:11,12)
கர்த்தர் உங்கள் கண்களைத் திறப்பாராக! அவருக்கே சதாகாலங்களிலும் மகிமையுண்டாகட்டும்!