நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மிஷனரிப் பணி - பூரண சற்குணராகுங்கள் பத்திரிகையின் கருத்து


Militant

Status: Offline
Posts: 830
Date:
மிஷனரிப் பணி - பூரண சற்குணராகுங்கள் பத்திரிகையின் கருத்து
Permalink  
 


மிஷனரிப் பணி தேவையா இல்லையா என்பது பற்றி சில தளங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறிவருகின்றன. இது பற்றி எமது “பூரண சற்குணராகுங்கள்” பத்திரிகையின் மே 2008 இதழில் சில கருத்துக்களைக் கூறியிருந்தோம். அக்கருத்துகளை தள அன்பர்களின் கவனத்திற்காக இங்கு பதிக்கிறேன்.

கடந்த மார்ச் 2008 இதழின் ஆசிரியர் மடல் பகுதியில்: ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக கல்விச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளைப் பெருமளவில் நிறுவினர் என்றும், அவர்கள் அப்படிச் செய்தது வேதபோதனைக்கு மாறானது என்றும், அவர்கள் உருவாக்கி வைத்த அந்நிறுவனங்களும் சொத்துக்களும்தான் இன்றைய சபைகளின் பதவிப்போட்டிக்குப் பிரதான காரணமாயுள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

இக்கருத்துக்களைக் குறித்து ஒருசில வாசகர்கள் விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். அதேவிதமான கருத்தும் கண்டனமும் வேறு சில வாசகர்களின் மனதிலும் தோன்றியிருக்கலாம். எனவே அவற்றிற்கு இவ்விதழில் பதிலும் விளக்கமும் தருகிறோம்.

இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்பியது ஆங்கிலேயர் ஆட்சியாளர்கள் அல்ல, ஐரோப்பாவைச் சேர்ந்த பல தேசத்தின் மிஷனரிமார்கள்தான் அப்பணியைச் செய்தனர் என்றும், மிஷனரிமார்கள் இந்தியா வருவதற்கு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தடையாயிருந்தனர் என்றும் ஒரு வாசகர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுக்கீஸு, ஹாலந்து, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல தேசத்து மிஷனரிகள் இந்தியாவில் மிஷனரிப்பணி செய்தனர் என்பது மறுக்க இயலாத சரித்திர உண்மையே. இவ்வுண்மையை மறைக்கவேண்டும் என இப்பத்திரிகையாளர் நினைக்கவில்லை. அன்று யார் யார் மிஷனரிப்பணி செய்தனர் என்பதைவிட, அவர்களின் வழிமுறை வேதபோதனைக்கு மாறானதாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுவதே இப்பத்திரிகையாளரின் நோக்கமாயிருந்ததாலும், ஐரோப்பியரில் ஆங்கிலேயரே நீண்டகாலம் இந்தியாவை ஆட்சிசெய்ததாலும், ஆங்கிலேயரை மட்டும் குறிப்பிட்டு இப்பத்திரிகையில் எழுதியிருந்தோம்.

அன்றைய சுவிசேஷப்பணியில் ஆங்கிலேய மிஷனரிகளுக்கு மட்டுமல்ல, பிற ஐரோப்பிய மிஷனரிகளுக்கும் பங்குண்டு என்பதை முழுமையாக ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளை சுவிசேஷத்தைப் பரப்பும் கருவிகளாகப் பயன்படுத்தியது வேதபோதனைக்கு மாறானது என்பதுதான் நாம் அறியவேண்டிய முக்கிய விஷயமாகும்.

அடுத்து, ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவத்தைப் பரப்பினர் என இப்பத்திரிகையாளர் எழுதியதை, ஆங்கிலேய ஆட்சியாளர்கள்தான் கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள் என எழுதியுள்ளதாகக் கருதி ஒரு வாசகர் வருத்தப்பட்டுள்ளார். உண்மையில் “ஆங்கிலேயர்கள்” என இப்பத்திரிகையாளர் எழுதியுள்ளதில், “ஆங்கிலேய ஆட்சியாளர்களோடு ஆங்கிலேய மிஷனரிமார்களும்” அடங்குவார்கள் என்பதை, “தற்கால ஊழியர்கள், வேதாகம ஊழியர்களின் முன்மாதிரியைப் பின்பற்றாமல், ஆங்கிலேய ஊழியர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றனர்” என மார்ச் 2008 இதழின் 3-ம் பக்கத்தின் 9-ம் பத்தியில் இப்பத்திரிகையாளர் எழுதியுள்ளதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

மிஷனரிகள் இந்தியா வருவதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் தடையாயிருந்ததாக ஒரு வாசகர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளபடியே சில வேளைகளில் நடந்திருந்தாலும், பல வேளைகளில் ஆட்சியாளர்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும்தான் மிஷனரிமார்கள் சுவிசேஷப்பணி செய்தனர் என்றே சரித்திரம் கூறுகிறது. இது சம்பந்தமாக சரித்திரம் கூறுவதை சற்று ஆய்வு செய்தால், நாம் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

கிறிஸ்துவின் சீடரான தோமாவுக்குப் பின் கி.பி.1320-ல் பிரான்ஸ் மிஷனரிகள் இந்தியாவுக்கு வந்து கிறிஸ்தவத்தைப் பரப்பினர். பின்னர் 15-ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய கம்பெனியின் ஆதிக்கத்தில் இந்தியாவின் சில பகுதிகள் வந்தபோது, போர்ச்சுக்கீசிய மிஷனரிகள் சுவிசேஷப்பணி செய்தனர்.

அந்த மிஷனரிகளால் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு போர்ச்சுக்கீசிய அரசு இலவச அரிசி வழங்கியது, அரசின் பெரும்பதவிகளைக் கொடுத்து பல சலுகைகளையும் வழங்கியது. மாத்திரமல்ல, கி.பி.1540-ல் போர்ச்சுக்கீசிய அரசின் ஆணைப்படி பல இந்துக்கோவில்கள் இடிக்கப்பட்டன. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்து அவர்கள் கட்டாயமாக மதம் மாறும்படி செய்தனர். வேறு பல தீய வழிமுறைகளாலும் போர்ச்சுகீசியர் இந்தியரை மதமாற்றம் செய்தனர். இதனாலும் வேறு பல காரணங்களாலும் போர்ச்சுக்கீசியருக்கு எதிராக எதிர்ப்பு உருவாகி, இறுதியில் அவர்களின் ஆதிக்கம் முடிவுற்றது.

போர்ச்சுக்கீசியர்களுக்கு அடுத்தபடியாக, டென்மார்க், ஹாலந்து, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பல தேசத்து வணிகர்களும் இந்த்தியாவில் காலனி அமைத்து வியாபாரம் செய்தனர். அப்போது அவரவர் நாட்டு மிஷனரிகளை சுவிசேஷப்பணி செய்ய அவர்கள் அனுமதிக்கத்தான் செய்தனர்.

நம் வாசகர் ஒருவர், ஜெர்மனியைச் சேர்ந்த சீகன்பால்க் எனும் மிஷனரி கி.பி.1706-ல் தரங்கம்பாடி வருவதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் தடையாயிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அறைகூவல் எனும் பத்திரிகையின் ஜூலை 2006 இதழின் 13-ம் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“டென்மார்க் நாட்டின் திருச்சபைக்குத் தலைவனாயிருந்த 4-ம் பிரடெரிக் மன்னன், தன் நாட்டின் காலனியான தரங்கம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆத்துமாக்களுக்கு தானே பொறுப்பு என உணர்ந்து, சீகன்பால்க் மற்றும் ஹென்றி புளுட்சோ ஆகியோரை இந்தியாவுக்கு மிஷனரிகளாக அனுப்பினார். அவர்கள் 1706 ஜூலை 9-ம் தேதி தரங்கம்பாடி வந்திறங்கினர்”

இதேபோன்று ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தினரும் தங்கள் நாட்டின் காலனிகளுக்கு மிஷனரிகளை அனுப்பத்தான் செய்தனர். ஆயினும் மிஷனரிப் பணியால் கிறிஸ்தவம் வளர்ந்ததாலும், இந்திய கலாச்சாரம் பாதிக்கப்பட்டதாலும், இந்தியரின் ஏழ்மையைப் பயன்படுத்தி உணவு உடைகள் வழங்கி மதமாற்றம் செய்ததாலும், இந்திய இந்துக்கள் மிஷனரிகளை எதிர்த்ததோடு மிஷனரிகளை அனுமதித்த காலனி அரசாங்கத்தினரையும் எதிர்த்தனர்.

எனவேதான் மிஷனரிமாரால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடுமே என அஞ்சிய காலனி அரசாங்கத்தினர், மிஷனரிமார் இந்தியா வருவதற்குத் தடைசெய்தனர். மேலும் காலனி ஆதிக்கத்தினரின் ஆதரவு பெற்ற போதர்களுக்கும் மிஷனரிமார்களுக்கும் இடையே போட்டியிருந்ததாலும், காலனி அரசாங்கத்தினர் மிஷனரிமார்களை ஒடுக்கினர். இதில் பாதிக்கப்பட்ட மிஷனரிகலில் சீகல்பால்கும் அவரோடி இணைந்து பணியாற்றிய ஹென்றி புளுட்சோவும் அடங்குவர்.

இந்தியாவுக்குள் கி.பி.1600-ல் நுழைந்து காலனி அமைத்த ஆங்கிலேய கம்பெனிகள், மிஷனரிகள் விஷயத்தில் ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாயிருந்தனர். அவர்கள் வணிகத்திலேயே நோக்கமாயிருந்ததால், மிஷனரிமார்கள் இந்தியாவுக்குள் வருவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆனால் கி.பி.1803-ல் பிரிட்டன் அரசாங்கம், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வியாபாரம் செய்யக் கொடுத்த அனுமதியை புதுப்பிகும்போது, கம்பெனிக்கு சில நிபந்தனைகளை சட்டமாக்கியது. அவற்றில் ஒன்று: ஆங்கிலேய மிஷனரிகளை இந்தியாவில் மதப்பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதாகும்.

இவ்விதமாக கி.பி.1803-க்குப் பின் தடையின்றி இந்தியாவில் மதப்பிரச்சாரம் செய்த ஆங்கில மிஷனரிகள், கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளையும் தடையின்றி செய்தனர். பின்னர் 1883-ல் பிரிட்டன் அரசாங்கம் விதித்த சட்டப்படி, மிஷனரிகள் மட்டுமின்றி அனைத்து ஆங்கிலேயர்களும் இந்தியா வந்து நிலம வாங்கவும் மதப்பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் 1858-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நீக்கப்பட்டு, பிரிட்டீஷ் மகாராணியின் நேரடி ஆட்சிக்குள் இந்தியா வந்தது. அப்போது மகாராணியார் பல வாக்குறுதிகளை அறிவித்தார். அவற்றில் சில: கிறிஸ்தவ மதக்கொள்கைகள் இந்தியர்மீது திணிக்கப்படமாட்டாது, மதத்தின் பெயரால் யாருக்கும் சலுகை வழங்கப்படமாட்டாது, சட்டப்படி எல்லோருக்கும் பாரபட்சமற்ற பாதுகாப்பு கொடுக்கப்படும் (பக்கம் 232 - இந்திய வரலாறு Vol. VIII by ஜே.தர்மராஜ்).

மகாராணியின் மேற்கூறிய அறிவிப்புகளிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? அவ்வறிவிப்புகளுக்கு முன்வரை: கிறிஸ்தவ மதக்கொள்கைகள் இந்தியர் மீது திணிக்கப்பட்டதும், மதத்தின் பெயரால் சலுகைகள் வழங்கப்பட்டதும், பாரபட்சமாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டதும் நடந்துவந்தன என்பதுதானே? அவ்வாறு நடந்ததற்கு மிஷனரிகளும் ஒருவகையில் பொறுப்புதானே?

மகாராணியார் மேற்கூறிய அறிவிப்புகளை அறிவித்தபோதிலும், அவை பெயரளவிலேயே இருந்தனவேயன்றி செயலாக்கப்படவில்லை என சரித்திரம் கூறுகிறது. கட்டாய மதமாற்றம் வேதபோதனைக்கு எதிரானது என்பதை எவ்வித மறுப்புமின்றி வாசகர்கள் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறோம்.

இப்போது நாம் அறியவேண்டியது: கல்வி/மருத்துவச் சேவைகள் மூலம் கிறிஸ்தவத்தைப் பரப்ப மிஷனரிகள் முற்பட்டது வேதபோதனைக்கு உட்பட்டதா இல்லையா என்பதே. (கல்வி/மருத்துவச் சேவைகளை கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்குக் கருவிகளாக மிஷனரிகள் பயன்படுத்தினர் என்பதற்கு ஆதாரம்: பக்கம் 68 - தமிழ் நாட்டுப் பாடநூல் கழகத்தின் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம்)

 

தொடர்கிறது ....



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: மிஷனரிப் பணி - பூரண சற்குணராகுங்கள் பத்திரிகையின் கருத்து
Permalink  
 


மிஷனரிப்பணியில் கல்வி/மருத்துவச் சேவைகளும் அவசியம் என்பதை நிலைநாட்டுவதற்கு வசன ஆதாரம் எதையும் தரஇயலாத ஒரு வாசகர், "எழுத்தறிவில்லாமல் மக்கள் வேதத்தைக் கற்றுக்கொள்வது எப்படி" எனக் கேள்வி கேட்கிறார். அதாவது ஒருவர் எழுத்தறிவு பெற்றால்தான் அவருக்கு வேதத்தைக் கற்றுக்கொடுத்து சுவிசேஷத்தை அவருக்கு அறிவிக்கமுடியும் என்பதாக அவர் கூறுகிறார். ஆனால் சுவிசேஷம் அறிவிக்கும்படி கட்டளையிட்ட இயேசு கூறியதென்ன?

மத்தேயு 28:19,20 நீங்கள் ... சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ... ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். (தமது கட்டளைகளைப் போதித்து சீஷராக்க வேண்டும் என்பதே சரியான மொழிபெயர்ப்பு)

ஜனங்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி போதித்து சீஷராக்கவேண்டும் என்பதே கிறிஸ்துவின் கட்டளை. இதைச் செயல்படுத்த மக்களுக்கு எழுத்தறிவைக் கொடுக்கவேண்டியதுமில்லை, வேதத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டியதுமில்லை. அவரவர் பேசுகிற மொழியில் கிறிஸ்துவின் கற்பனைகளை அழுத்தமாகப் போதித்து, அவற்றின்படி நடக்கச்செய்தலே போதுமானது. அதைத்தான் பேதுரு பவுல் போன்ற வேதாகம ஊழியர்கள் செய்தனர்; அதன்மூலம் அவர்கள் ஆயிரக்கணக்கானோரை சீஷர்களாகவும் ஆக்கினர் (அப். 2:41,47; 10:47; 11:20,21; 14:1; 16:14,32,33). மக்கள் வேதத்தைக் கற்கவேண்டுமென்றோ, எழுத்தறிவைப் பெறவேண்டுமென்றோ அவர்கள் நினைக்கவுமில்லை, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுமில்லை.

மிஷனரிகள் நம் மக்களுக்கு எழுத்தறிவைக் கொடுத்ததன் நோக்கம், மக்கள் வேதத்தைக் கற்கவேண்டும் என்றிருந்தால், ஆரம்பப்பள்ளிகளை நிறுவியதோடு அவர்கள் நிறுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பக்கல்வி கற்றாலே ஒருவர் எழுத்தறிவு பெற்று வேதத்தைக் கற்கமுடியும். அப்படியிருக்க உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளையும் மிஷனரிகள் நிறுவியுள்ளனரே?

எனவே மக்கள் எழுத்தறிவைப் பெற்று வேதத்தைக் கற்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் மிஷனரிகள் கல்விப்பணி செய்தனர் என வாசகர் சொல்வதை ஏற்கஇயலாது. அதற்கும்மேலாக மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் மிஷனரிகள் கல்விப்பணி செய்தனர் என்பதே மெய்.

இதனால்தான் உலகப்பிரகாரமான முன்னேற்றத்தைக் கொடுப்பதன்மூலம் கிறிஸ்தவத்தைப் பரப்ப ஆங்கிலேயர்கள் (ஐரோப்பிய மிஷனரிகள்) முற்பட்டதாக எமது மார்ச் 2008 பத்திரிகையின் 3-ம் பக்கம் 5-ம் பத்தியில் கூறியிருந்தோம். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் எனக் கொலோசெயர் 3:2-ல் பவுல் கூறியிருக்க, அன்றைய மிஷனரிகள் பூமியிலுள்ள முன்னேற்றத்தைக் கொடுப்பதன்மூலம் கிறிஸ்தவத்தைப் பரப்பமுற்பட்டது நிச்சயம் வேதபோதனைக்கு மாறானதுதான்.

மிஷனரிகளின் கல்விப்பணியால் வாழ்க்கைத்தரத்தில் உயர்வுபெற்ற மக்கள் என்ன செய்தனர்? வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான் எனும் வேதவசனத்தின்படி (இப்படி ஒரு வசனம் வேதாகமத்தில் இருப்பதே பலருக்குத் தெரியுமா என்பது சந்தேகந்தான்), ஏழைகளுக்கு வாரியிறைத்தனரா? அல்லது பூமியிலே பொக்கிஷம் சேராதிருங்கள் எனும் கிறிஸ்துவின் போதனைப்படி பூமியில் பொக்கிஷம் சேர்க்கத்தான் மறுத்தனரா?

எழுத்தறிவோடு உயர்கல்வியையும் பெற்ற கிறிஸ்தவர்கள் நல்ல வேலையில் அமர்ந்து, கை நிறைய சம்பாதித்து, சம்பாதிப்பதை நிலமாகவும் வீடுகளாகவும் பொன்னாகவும் வங்கிச் சேமிப்பாகவும் சேர்ப்பதுதானே நடக்கிறது? கிட்டத்தட்ட எல்லா கிறிஸ்தவர்களும் இதைத்தானே செய்கின்றனர்?

தங்கள் பெண் பிள்ளைகளுக்கு 100,200 பவுன் நகைகளைப் போட்டு லட்சம் லட்சமாகப் பணம் கொடுத்து, மிக உய்ர்ந்த மாப்பிளைக்குத் திருமணம் செய்யத்துடிக்கும் பெற்றோர் ஒருபுறம், தனது மகனுக்கு லட்சம் லட்சமாகப் பணம் வாங்கி 100,200 பவுனோடு பெண்கொள்ளத் துடிக்கும் பெற்றோர் ஒருபுறம், வீடுகளையும் நிலங்களையும் சேர்த்துவைத்து தங்கள் பிள்ளைகளுக்குப் பங்கு போட்டுவைக்கத் துடிக்கும் பெற்றோர் ஒருபுறம், இப்படிப்பட்ட மக்கள் மேலும் மேலும் உலக ஆசீர்வாதங்களைப்பெற இரவுபகலாக ஜெபிக்கும் ஊழியர் ஒருபுறம். இதற்குத்தானா அவர்கள் எழுத்தறிவு பெற்றனர்? அவர்கள் பெற்ற எழுத்தறிவு அவர்களுக்கே கேடாகிப்போனதுதானே உண்மை?

இன்றைய நம் சபைகளில் காணப்படும் தவறுகளுக்கு நாம்தான் பொறுப்பேயன்றி, அன்றைய மிஷனரிகளைக் குறைகூறுவது தவறு என ஒரு வாசகர் கூறியிருந்தார். ஒருவரின் தவறுக்கு மற்றவரை நிச்சயமாகப் பொறுப்பாக்கவும் முடியாது, குறைகூறவும் முடியாதுதான். ஆனால் ஒருவரின் தவறுக்கு எதெல்லாம் காரணம், எது மூல காரணம் என்பது பற்றி அலசி ஆராய்வது தவறல்ல.

உதாரணமாக, பிலாத்து இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்ததற்கு பிலாத்துவே முழுப்பொறுப்பு என்பதில் சந்தேகமில்லைதான். ஆனால் அவனது செயலுக்கு பிரதான ஆசாரியர், வேதபாரகர், பரிசேயர் ஆகியோர் மூல காரணமாயிருந்தனர் என்பதும் மெய்தான். இதைச் சொல்வதால் பிலாத்துவின் செயலுக்காக பிரதான ஆசாரியர், வேதபாரகர், பரிசேயரைக் குறைகூறுவதாக ஆகாது.

அவர்களைப் பொறுத்தவரை அவர்களும் தவறுசெய்தவர்கள்தான். ஆனால் பிலாத்துவின் தவறுக்கு அவர்கள் பொறுப்பாயிராமல் காரணமாக மட்டுமே இருந்தனர். அதேவிதமாகத்தான் நம் சபைத்தலைவர்களின் பதவிப்போட்டிக்கு அன்றைய மிஷனரிகள் உருவாக்கி வைத்த நிறுவனங்களும் சொத்துக்களும் பிரதான காரணமாயுள்ளன எனக் கூறியிருந்தோம். இப்படிக் கூறுவதால் நம் சபைத்தலைவர்களின் தவறுக்காக அன்றைய மிஷனரிகளைப் பொறுப்பாக்குகிறோம் என்றோ, குறைகூறுகிறோம் என்றோ அர்த்தமல்ல.

ஆயினும் மிஷனரிகளைப் பொறுத்தவரை அவர்கள் கிறிஸ்தவத்தைப் பரப்ப கல்வி மற்றும் மருத்துவச்சேவைகளைக் கருவிகளாகப் பயன்படுத்தியது வேதபோதனைக்கு மாறானதாக இருந்ததால் அதைச் சுட்டிக்காட்டியிருந்தோம். மேலும் இன்றைய ஊழியர்கள், வேதாகம ஊழியர்களைப் பின்பற்றாமல் அன்றைய மிஷனரிகளைப் பின்பற்றி, இன்றளவும் கிறிஸ்தவத்தைப் பரப்ப கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளைப் பயன்படுத்தி வருவதால், அப்படிச்செய்வது வேதபோதனைக்கு மாறானது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அப்போஸ்தலர் 6:7-ல், நாங்கள் ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திரிப்போம் எனப் பேதுரு கூறினார். எழுத்தறிவு மூலம் வேதத்தைக் கற்றுக்கொடுத்து சுவிசேஷத்தை அறிவிக்கும்படி வேதாகமம் கூறவுமில்லை, வேதாகம ஊழியர்கள் அப்படிச் செய்யவுமில்லை. இதைத்தான் மார்ச் 2008 இதழின் ஆசிரியர் மடலில் நாம் ஆணித்தரமாகக் கூறியிருந்தோம். ஆனால் இதை மறுக்கக்கூடிய வேதவசன ஆதாரத்தை எந்த வாசகரும் எடுத்துக்கூறாமல், தங்கள் சொந்தக் கருத்துக்களையே கூறியுள்ளனர்.

“கிரியை இல்லாத விசுவாசம் செத்தது, எனவேதான் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளாகிய நற்கிரியைகளை மிஷனரிகள் செய்தனர்” என ஒரு வாசகர் கூறியிருந்தார். நம்மை எந்தெந்த நற்கிரியைகள் நீதிமானாக்குகின்றன என இயேசு நேரடியாகக் கூறுபவை: பசித்தவனுக்கு ஆகாரங்கொடுத்தல், தாகமுள்ளவனின் தாகந்தீர்த்தல், அந்நியனைச் சேர்த்துக்கொள்ளுதல், வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் கொடுத்தல், வியாதியுள்ளவனை விசாரித்தல் (கவனிக்கவும்:வியாதியுள்ளவனுக்கு மருத்துவச் சேவை கொடுத்தல் அல்ல), காவலிலுள்ளவனைப் பார்த்தல் ஆகியவைகளே (மத்தேயு 25:31-46).

கல்வி மற்றும் மருத்துவச்சேவையை நற்கிரியகள் எனக் கூறிய வாசகர் உட்பட நம்மில் எத்தனைபேர் இயேசு நேரடியாகக் கூறிய மேற்கூறிய நற்கிரியைகளைச் செய்கிறோம்? சிந்தித்துப் பார்ப்போம்.

வாசகரின் கருத்துப்படி கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளை நற்கிரியைகள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அவற்றை சுவிசேஷப்பணியோடு இணைத்து கிறிஸ்தவத்தைப் பரப்பும் கருவிகளாக பயன்படுத்துவது வேதபோதனைக்கு மாறானது என்பதையே வேதஆதாரத்துடன் எடுத்துரைத்துள்ளோம்.

பசியிலிருக்கும் ஒருவரைக் கிறிஸ்தவத்திற்கு மாற்றும் நோக்கத்தில் அவருக்கு ஆகாரம் கொடுத்தால், அதுவும் வேதபோதனைக்கு மாறானதுதான். ஒருவர்மீது அன்புகூர்ந்து, அவரது குறைச்சலை நிவிர்த்தி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு உதவுவது மட்டுமே நற்கிரியையன்றி, வேறொரு உள்நோக்கத்துடன் அவருக்கு உதவுவது நற்கிரியை ஆகாது.

அன்றைய மிஷனரிகள் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளை கிறிஸ்தவத்தைப் பரப்பும் கருவிகளாகப் பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரத்தை ஏற்கனவே கூறியுள்ளோம். இவ்வாறு உலகப்பிரகாரமான நற்கிரியைகளைச் செய்வதன் மூலம் கிறிஸ்தவத்தைப் பரப்பும்படி வேதாகமம் ஒருபோதும் கூறவில்லை.

தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது, தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி தேவன் தம்மை அபிஷேகம் பண்ணினார்” என்றெல்லாம் கூறிய இயேசு, தரித்திரரை உலகப்பிரகாரமாக முன்னேற்ற தேவன் தம்மை அபிஷேகம் பண்ணியதாகக் கூறவுமில்லை, அதை அவர் செய்யவுமில்லை.

லாசரு-ஐசுவரியவான் உதாரணத்தில் (லூக்கா 16:19-31), லாசரு ஒரு தரித்திரனாக, புண்களால் பாதிக்கப்பட்டவனாகத்தான் இருந்தான்; கல்வியறிவும் அவனுக்கு இருந்திருக்காது என நாம் நம்பலாம். அப்படிப்பட்ட அவனுக்கு கல்வியும் கிடைக்கவில்லை, மருத்துவமும் கிடைக்கவில்லை, அவனது பசிக்கு முழுமையான ஆகாரமும் கிடைக்கவில்லை. ஆயினும் அவன் மறுமையில் பாக்கியவானாக மகிழ்ந்திருந்ததை நாம் அறிவோமல்லவா?

லாசரு பெற்ற அந்த மறுமையின் பாக்கியத்தை ஜனங்கள் பெறவேண்டும் என்பது மட்டுமே சுவிசேஷப்பணி செய்வோரின் நோக்கமாக இருக்கவேண்டும். அந்த நோக்கம்தான் இயேசுவிடமும் வேதாகம ஊழியர்களிடமும் இருந்தது.

இதனால் யாரும் கல்வி கற்கவேண்டியதில்லை, உலக முன்னேற்றத்தைப் பெறவேண்டியதில்லை என்பது எமது வாதமல்ல. அவை தேவசித்தப்படி யார் யாருக்கு எப்போது/எப்படி நேரவேண்டுமோ அப்படி நேர்ந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சுவிசேஷப்பணியாளரைப் பொறுத்தவரை, ஒருவன் கல்வியறிவு பெற்றவனோ/பெறாதவனோ, தரித்திரனோ/ஐசுவரியவானோ யாராயிருந்தாலும் அவனுக்கு சுவிசேஷத்தைக் கூறி, கற்பனைகளை உபதேசித்து, அவனை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துவது மட்டுமே நோக்கமாயிருக்கவேண்டும்.

தொடர்கிறது...



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

இந்துக் கோவில்களில் தேவதாசிகளாக விடப்பட்ட பெண்களை மீட்பது பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதா என ஒரு வாசகர் கேட்டிருந்தார். பின்வரும் வசனங்களில் அவரது கேள்விக்கு பதில் உள்ளது.

ஏசாயா 58:6,7 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், ... அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்?

ஏமிகார் மிக்கேல் அம்மையார், தேவதாசிகளாக கட்டாயப்படுத்தி விடப்பட்ட பெண்களை மீட்டது, நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கும் ஒரு செயல்தான். அவ்வாறே வில்லியம் கேரி அவர்கள், சதி எனப்படும் உடன்கட்டை பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டதும், அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிற ஒரு செயல்தான். ஆனால் அவற்றையும் கிறிஸ்தவத்தைப் பரப்பும் கருவிகளாகப் பயன்படுத்த அவர்கள் முற்பட்டிருந்தால், அது வேதபோதனைக்கு மாறானதுதான்.

அன்றைய மிஷனரிமார்களில் பலர் இந்திய சீதோஷ்ணம் ஒத்துக்கொள்ளாமல் கஷ்டப்பட்டது மெய்தான், சுயநலமின்றி பணிசெய்ததும் மெய்தான். ஆனால் அவர்களின் பணி முழுக்க முழுக்க வேதபோதனையின் அடிப்படையில் இருந்ததா என்பதே கேள்வி.

கட்டாய மதமாற்றம் ஒருபுறம், பசிக்கு சோற்றையும் உடுக்க உடையையும் கொடுத்து சிலரைக் கிறிஸ்தவர்களாக்கியது ஒருபுறம், சலுகைகளைக் கொடுத்து சிலரைக் கிறிஸ்தவர்களாக்கியது ஒருபுறம், கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளைக் கொடுத்து சிலரைக் கிறிஸ்தவர்களாக்கியது ஒருபுறம் எனப் பல்வேறு விதங்களில் சுவிசேஷப்பணி நடந்ததை சரித்திரம் கூறுகிறது.

இப்படியெல்லாம் செய்தவர்கள், அவற்றை விடுத்து, வேதாகமம் சொல்வதன்படியும், வேதாகம ஊழியர்கள் செய்ததன்படியும் (அப். 2:42; 4:31; 5:42; 6:2,4; 8:4,35; 9:20; 10:44; 11:20; 13:49; 14:1; 16:32; 19:26; 28:23) கிறிஸ்துவின் உபதேசங்களைத் தீவிரமாகப் போதித்திருப்பார்களேயானால், கிறிஸ்தவம் இன்றைக்கு இவ்வளவாய் புறஜாதிகளால் தூஷிக்கப்படக்கூடிய நிலைக்கு ஒருவேளை சென்றிருக்காது.

பேதுரு ஒரு பெரும் ஊழியர்தான், பல தியாகங்களைச் செய்து சபையைக் கட்டியவர்தான், சுவிசேஷத்திற்காகக் காவலில் அடைபட்டவர்தான். ஆயினும் அவரது சுவிசேஷப்பணியிலும் ஒரு தவறு நேர்ந்தபோது, அதைப் பவுல் சுட்டிக்காட்டி கடிந்துகொள்ளத்தான் செய்தார்; பேதுருவும் தனது தவறை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ளத்தான் செய்தார் (கலாத்தியர் 2:11-14).

அன்றைய ஊழியர்களும் விசுவாசிகளும் வேதவசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால், வசனத்தைவிட்டு விலகுவோரைக் கடிந்துகொள்ள யாரும் தயங்கவுமில்லை, கடிந்துகொள்தலுக்கு செவிசாய்க்க யாரும் மறுக்கவுமில்லை. ஆனால் அவர்களுக்குப் பின்வந்த விசுவாசிகளும் சரி, ஊழியர்களும் சரி, அறிந்தோ அறியாமலோ கொஞ்சங்கொஞ்சமாக வசனத்தைவிட்டு விலக ஆரம்பித்தனர்.

நாளாவட்டத்தில் வசனத்தைவிட்டு விலகுவதை யாராவது சுட்டிக்காட்டினால்கூட உணரமுடியாத அளவு, வசனத்திற்கு மாறான காரியங்கள் கிறிஸ்தவ சமுதாயத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன.

உதாரணமாக: பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் எனும் வசனத்திற்கு மாறாக (கொலோசெயர் 3:2), விசுவாசிகளின் தொழில் முன்னேற்றத்திற்காக ஊழியர்கள் உபவாசமிருந்து ஜெப்பிப்பதும் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது; விசுவாசிகளுக்கு (உலகப்) பேராசீர்வாதத்தைத் தரக்கூடிய தங்கநிற சாவியை ஓர் ஊழியர் விற்பதும் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது; விசுவாசிகளின் உலகவாழ்வுக்காக ஊழியர்கள் இரவுபகலாக ஜெபித்து, அதற்காக காணிக்கை கேட்பதும் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது.

சமீபத்தில் இயேசு அழைக்கிறார் பத்திரிகையில், காலஞ்சென்ற சகோ.D.G.S.தினகரனிடம் இ-மெயில் மூலம் ஓர் ஆஸ்திரேலிய தீர்க்கதரிசி(?) பின்வருமாறு கூறியதை சகோ.பால் தினகரன் அறிவித்துள்ளார்.

“ஆண்டவர் வெகுசீக்கிரம் உங்களை பரலோகம் அழைத்துச்சென்று, மிகவும் உன்னதமான பரலோக ஆலோசனைக் குழுவில் உங்களை அங்கத்தினராக நியமிப்பார். அக்குழுவில் ஆபிரகாம், தேர்ந்தெடுக்கப்பட்ட முற்பிதாக்கள், அப்போஸ்தலருடன் நீங்களும் அமர்ந்திருப்பீர்கள். ஆண்டவர் உலகக்காரியங்களைக் குறித்து தீர்மானம் செய்யும்போது, உங்கள் ஆலோசனையைக் கேட்பார்”.

இவ்வாறு அறிவித்த பால் தினகரன், தனது தகப்பனார் தற்போது பரலோகத்தில் இருப்பதையும் தேவன் நம்மைப் பற்றி தீர்மானம் எடுக்கையில் தனது தகப்பனாரும் கூட இருப்பார் என்பதையும் தான் விசுவாசிப்பதாகக் கூறியுள்ளார். அவரது கூற்று பின்வரும் வசனத்திற்கு விரோதமாக இருப்பதை நாம் உணருகிறோமா?

ரோமர் 11:34 .... கர்த்தருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?

ஆலோசனைக்கர்த்தாவாகிய கர்த்தருக்கு (ஏசாயா 9:6) ஆலோசனைகூற சாதாரண மனிதர்கள் அடங்கிய ஓர் ஆலோசனைக் குழுவா? ஒருவேளை சங்கீதம் 89:7-ல் கூறப்பட்டுள்ள ஆலோசனை சபையில் சகோ.தினகரனை அங்கத்தினராக ஆண்டவர் நியமிக்கக்கூடாதா என நாம் கேட்கலாம்.

ஆனால் அந்த வசனத்திலுள்ள ஆலோசனை எனும் வார்த்தைக்கு இணையான வார்த்தை மூலப்பிரதியிலும் இல்லை, ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் இல்லை. அதாவது அவ்வசனம் பரிசுத்தவான்களின் சபை பற்றி மட்டுமே கூறுகிறதேயன்றி பரிசுத்தவான்களின் ஆலோசனை சபை பற்றி கூறவில்லை. எனவே பால் தினகரனின் அறிவிப்பு, நிச்சயமாக வசனத்திற்கு மாறானதுதான்.

ஆனால் இவரைப் போன்று வசனத்தைவிட்டு விலகிச் செல்லும் ஊழியர்களின் பின்னேதான் லட்சக்கணக்கான விசுவாசிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பேராயர்களும் செல்கின்றனர். இதற்குக் காரணம்: காலங்காலமாக வசனத்தைவிட்டுவிலகி அதில் பழகி ஊறிப்போன நம்மால், வசனத்தை விட்டு விலகுவோரை அடையாளங்காண முடியாமற்போனதுதான். எனவேதான் சுவிசேஷப்பணியில் கல்வி மற்றும் மருத்துவச்சேவைகளை கருவிகளாகப் பயன்படுத்தியது வேதபோதனைக்கு மாறானது என்பதை நம்மால் ஏற்க இயலவில்லை.

மிஷனரிகளின் தியாகத்தை இப்பத்திரிகை ஆசிரியர் நிச்சயமாக மதிக்கிறார். ஒரு வாசகர் சொன்னதைப்போல், மிஷனரிகள் தியாகத்தோடு செய்த கல்விப்பணியால்தான் இப்பத்திரிகை ஆசிரியர் கல்விகற்று பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதற்காக வேதபோதனைக்கு மாறாக மிஷனரிகள் கல்வி மற்றும் மருத்துவச் சேவை மூலம் கிறிஸ்தவத்தைப் பரப்பியதை இப்பத்திரிகை ஆசிரியர் ஏற்கவேண்டியதுமில்லை, அதைச் சுட்டிக்காட்ட அவர் தயங்கவேண்டியதுமில்லை.

மிஷனரிகளின் உன்னத பணிகளைக் கொச்சைப்படுத்தி நம் தரத்தை தாழ்த்திக்கொள்ளவேண்டாம் என ஒரு வாசகர் கேட்டுள்ளார். வேதபோதனைக்கு மாறான ஒருவரின் செயல்களைச் சுட்டிக்காட்டுவது, அவரைக் கொச்சைப்படுத்தும் தரம்தாழ்ந்த செயலன அவ்வாசகர் கருதினால், அதற்கு இப்பத்திரிகை ஆசிரியர் பொறுப்பல்ல.

இப்பத்திரிகையின் கட்டுரைகள் பயனுள்ளதாகவும் வேதத்தை ஆராய்ந்து கற்க வாஞ்சையைக் கொடுப்பதாகவும் பல வாசகர்கள் எழுதியுள்ளனர். அதற்காக வாசகர்களுக்கு நன்றி தெரிவித்து தேவனை ஸ்தோத்தரிக்கிறோம்.

ஒருவன் துன்பப்பட்டால ஜெபம் பண்ணக்கடவன் எனக் கூறுகிற புதியஏற்பாடு (யாக்கோபு 5:13-16), வியாதி தவிர மற்ற உலகக்காரியங்களுக்காக ஊழியர்கள் ஜெபிக்கும்படி கூறவுமில்லை, வேதாகம ஊழியர்கள் அவற்றிற்காக ஜெபிக்கவுமில்லை. ஆனால் இதற்கு மாறாகத்தான் இன்றைய பெரும்பாலான ஊழியர்களின் செயல் காணப்படுகிறது. இவ்விதமாக வசனத்தை விட்டுவிலக்கிச் செல்வோரை அடையாளங்காட்டி விசுவாசிகளை எச்சரிப்பதும் ஓர் ஊழியரின் பணியாயிருப்பதால், அப்பணியை இப்பத்திரிகை ஆசிரியர் செய்து வருகிறாரேயன்றி, யாரையும் குறைகூறுவது அவர் நோக்கமல்ல.

இக்கட்டுரையில் ஐரோப்பிய மிஷனரிகளைக் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கான ஆதாரங்கள்:

1. http://en.wikipedia.org/wiki/Christianity_in_India
2. http://adaniel.tripod.com/Christianity.htm
3. http://cqod.gospelcom.net/cqodrma2.htm
4. இந்திய வரலாறு Vol. III by ஜே.தர்மராஜ் (மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் பற்பல பட்டப் படிப்பு தேர்வுகளுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்ட புத்தகம்)
5. தமிழ்நாட்டுப் பாடநூல் கழக 10-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard