கோவை பெரியன்ஸ் தளத்தின் சில திரிகளில், மனிதன் பாவம் செய்வது உட்பட சகலமும் தேவசித்தமே எனும் கருத்து கூறப்பட்டுள்ளது. அத்தளத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்கள்:
மனிதனுடைய கீழ்ப்படியாமைக்கும் காரணம் யார் என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது.//
//உலககில் நடக்கும் எல்லா அக்கிரமங்களும், அநியாயங்களும், கொள்ளை நோய், இன்னபிர துர்சம்பவங்கள், இயற்கைப் பேரழிவுகள் எல்லாமே தேவனால் 'ப்ரொக்ராமிங்' செய்யப்பட்டவையே!//
//நாமெல்லாரும் சூழ்நிலையின் கைதிகள்; ... நடந்தவை, நடப்பவை, நடக்கப்போவது யாவும் தேவ சித்தம். தேவசித்தம் மட்டுமே.//
ஆதாம் பாவம் செய்ததும் தேவசித்தமே, நோவா காலத்தில் நோவாவைத் தவிர மற்ற எல்லா மனிதரும் பாவம் செய்ததும் தேவசித்தமே, சோதோம் கொமோரா பட்டணத்தாரின் பாவங்களும் தேவசித்தமே எனும் கருத்தை கோவை பெரியன்ஸ் தளம் கூறுகிறது.
மனிதன் தன் சுய இச்சையினால் பாவத்தைக் கர்ப்பம் தரிப்பதாக வேதாகமம் சொல்லியிருக்க, மனிதன் பாவம் செய்யவேண்டும் என தேவனின் “ப்ரொக்ராமில்” தீர்மானமாக எழுதப்பட்டது என கோவை பெரியன்ஸ் தளம் கூறுகிறது. அவர்களின் இக்கூற்று சரிதானா மனிதனின் பாவத்திற்கு யார் பொறுப்பு, மனிதன் பாவம் செய்யவேண்டும் என்பது தேவனின் சித்தமா எனும் கேள்விகளுக்கான பதிலை இத்திரியில் பார்ப்போம்.
இறைவன் தளத்தில் எல்லாமே தேவசித்தமா? எதற்கும் ஜெபம் வேண்டாமா? எனும் திரியில் சகோ.சுந்தர் சில வசனங்களைப் பதித்து, தனது கருத்தையும் கூறியுள்ளார். அவரது கருத்து இத்திரிக்கு பயனுள்ளதாக இருக்குமென்பதால் அதை இங்கு வெளியிடுகிறேன்:
//எரேமியா 7:31தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.
தேவன் மனதிலேயே தோன்றாத காரியங்களை தேவசித்தப்படிதான் மனிதன் செய்கிறான் என்பது மிகப்பெரிய அபந்தம்!
ஏசாயா 66:4நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்து கொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
"தேவன் விரும்பாததை தேவசித்தப்படிதான் மனிதன் செய்கிறான்" என்று விளக்குவது எவ்விதத்திலும் சரியான கருத்து அல்ல!//
இவ்வுலகில் மனிதன் தன் சுயசித்தத்தால் ஒரு செயலைச் செய்ய முற்படும்போது, அச்செயலைச் செய்யவிடாதபடி தடுத்து நிறுத்த தேவனால் முடியும் என்பது மெய்தான். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதனின் செயல்களில் தேவன் குறுக்கிடுவதில்லை.
இஸ்ரவேலரை சபிக்கும்படி பிலேயாம் என்பவன் பாலாக் எனும் மோவாபிய ராஜாவால் கூலி பேசப்பட்டான். இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதுதான் கர்த்தருக்குப் பிரியமாயிருந்ததேயொழிய, அவர்களை சபிப்பது தேவனுக்கு சற்றும் பிரியமாயிருக்கவில்லை.எனவே இஸ்ரவேலரை சபிக்கவிருந்த பிலேயாமை தேவன் தடுத்து, அவன் இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கும்படி செய்தார்.
இக்காரியத்தில், பிலேயாம் பாவம் செய்யக்கூடாது என்பதோ, பிலேயாம் செய்யவிருந்த பாவத்தைத் தடுப்பதோ தேவனின் நோக்கமல்ல; அவன் இஸ்ரவேலரை சபிக்கக்கூடாது என்பதுதான் அவரது நோக்கமாயிருந்தது.
தமக்குப் பிரியமில்லாத செயலைச் செய்யவிருந்த பிலேயாமைத் தடுத்த தேவன், தமக்குப் பிரியமில்லாத செயலைச் செய்யவிருந்த தாவீதைத் தடுக்கவில்லை. பிலேயாம் மற்றும் தாவீதின் காரியங்களிலிருந்து நாம் அறிவதென்ன?
தமக்கு விரோதமாக ஒருவன் பாவம் செய்வதை தேவன் தடுக்க நினைத்தால் அதை அப்படியே அவர் செய்கிறார்; தடுக்க வேண்டாம் என நினைத்தால் மனிதனின் சித்தப்படியே நடப்பதற்கு அவர் விட்டுவிடுகிறார், அல்லது அனுமதித்து விடுகிறார். தேவன் இப்படி அனுமதிப்பதால், அதை அவரது சித்தம் எனக் கருதமுடியாது.
இவ்வுண்மையை எரேமியா 7:31 மற்றும் ஏசாயா 66:4 வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
தேவன் கட்டளையிடாததும் தேவன் மனதில் தோன்றாததுமான செயல்களை யூதாவின் புத்திரர் செய்தனர். அச்செயலை தேவன் அனுமதித்தார் என்பது மெய்தான். ஆனால் அது அவரது சித்தத்திற்கு இசைவானது அல்ல என எரேமியா 7:31 தெளிவாகக் கூறுகிறது.
அவ்வாறே, இஸ்ரவேலரின் பொல்லாத செயல்கள் யாவும் தேவனுக்கு விருப்பமானவை அல்லதான் என்றாலும், அவற்றைச் செய்ய அவர் அனுமதித்தது மெய்தான். ஆனால் அவை அவரது சித்தத்திற்கு இசைவானது அல்ல என ஏசாயா 66:4 தெளிவாகக் கூறுகிறது.
எனவே மனிதன் பாவம் செய்யவேண்டும் என்பது ஒருபோதும் தேவசித்தமாக இருக்கமுடியாது. மனிதன் தனது சித்தப்படியே பாவம் செய்கிறான்; அவன் அப்படிச் செய்வதை தேவன் தடுக்க நினைத்தால் தடுக்கிறார். இல்லாவிடில், மனித சித்தப்படியே அவன் பாவம் செய்வதற்கு விட்டுவிடுகிறார்.