சமீபத்தில் கோவை பெரியன்ஸ் தளத்தில் குயவனை எதிர்க்கும் மட்பாண்டங்கள் எனும் திரியில், “ரோமர் 9 எப்போதாவது வாசித்ததுண்டா, இல்லை "கிரிட்டிக்கல்" என்று ஒதுக்கிவிட்டீர்களா?” எனும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஏதோ தாங்கள் மட்டுமே வேதாகமம் முழுவதையும் ஆராய்ச்சி செய்வதைப் போன்ற எண்ணத்தில் இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இக்கேள்விகளைக் கேட்டவர், “கிரியை” சம்பந்தமாக வேதாகமம் சொல்வதற்கு எப்பேற்பட்ட மதிப்பு கொடுத்துள்ளார் என்பதற்கு பின்வரும் அவரது பதிவு ஆதாரமாயுள்ளது.
//ஆனால் ஒருசில கீறல் விழுந்த மட்பாண்டங்கள் தங்களை பெரிய உபதேச போதகர்களாக நினைத்துக்கொண்டு, கீறல் விழுந்த கிராமபோன் ரெக்காடு போல ஒரு சில கிரியை வசனங்களைப் பிடித்துக்கொண்டு கிரியை, கிரியை என்று கத்திகொண்டு இருக்கிறார்கள்.//
கிரியை பற்றி ஒரு சில வசனங்கள் இருப்பதாக அவரே ஒத்துக்கொள்கிறார்; ஆனால் அவ்வசனங்களைச் சொல்லக்கூடாதாம்; மீறி யாராவது சொன்னால் அவர் “கீறல் விழுந்த கிராமபோன் ரெக்கார்டாம்”. இப்படிச் சொல்லி பரியாசம் செய்கிற இவர், வேதவசனங்கள் பற்றி என்னதான் நினைக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு சில வசனங்கள் மட்டுமே ஒரு விஷயத்தைச் சொன்னால், “அவ்வசனங்கள் தேவையில்லை, அவற்றை தூக்கியெறிந்துவிடலாம்” என்கிறாரா இவர்?
இத்தனை நாட்களாக வேதாகமம் படித்து ஆராய்ச்சி செய்யும் இவர், கிரியை பற்றி வேதாகமத்தில் ஒரு சில வசனங்களை மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் உண்மையில் கிரியை பற்றி ஏராளமான வசனங்கள் உள்ளன; வேறொரு திரியில் அவ்வசனங்கள் விரைவில் வெளியிடப்படும். அதன் பின்னராவது இந்த மரமண்டைக்கு உரைக்கிறதா என பார்க்கலாம்.
எமது பூரண சற்குணராகுங்கள் பத்திரிகையின் மார்ச் 2009 இதழில், ரோமர் 9-லுள்ள சில விஷயங்களின் அடிப்படையிலான 2 கேள்விகளுக்கு பதில்கள் தரப்பட்டுள்ளன. விரைவில் அப்பதில்கள் இத்திரியில் பதியப்படும்.
அதற்கு முன்னர் அப்பதில்களைப் படிக்க விரும்புவோர், பின்வரும் தொடுப்பை சொடுக்கி, 7-ம் பக்கம் பார்க்கவும்.
ரோமர் 9-ம் அதிகாரத்தின் சில விஷயங்களின் அடிப்படையில், எமது “பூரண சற்குணராகுங்கள்” பத்திரிகையின் மார்ச் 2009 இதழில் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவற்றிற்கான பதிகளும்:
கேள்வி: ரோமர் 9:10-21 வசனங்களில் பவுல் கூறியுள்ள சில விஷயங்கள் சம்பந்தமான பின்வரும் கேள்விகளுக்கு பதில் தரும்படி வேண்டுகிறேன். 1. தன் தாயின் வயிற்றில் நல்வினை தீவினை ஒன்றும் அறியாத நிலையில் இருந்த ஏசாவை தேவன் வெறுத்தது முறையா? 2. ஓர் குயவன் தன் விருப்பப்படி ஓர் மண்பாண்டத்தை உருவாக்குவதைப்போல, தேவனும் தமது விருப்பப்படி ஒவ்வொரு மனிதனையும் உருவாக்குவதாக பவுல் கூறுகிறார். அவ்விதமாக உருவாக்கப்பட்ட மனிதனின் செயல்களுக்கு அவனைப் பொறுப்பாக்க முடியுமா?சகோ.S.பீட்டர் சுகந்தன், நாகர்கோவில்
பதில்: ரோமர் 9:11-13 வசனங்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டதுதான் தங்கள் முதல் கேள்விக்கு காரணமாயுள்ளது.
அதாவது 11,13-ம் வசனங்கள் கூறுவதை இணைத்து, ஏசாவும் யாக்கோபும் நல்வினை தீவினை அறியாதவர்களாக ரெபெக்காளின் வயிற்றில் இருந்தபோதே தேவன் யாக்கோபைச் சிநேகித்து ஏசாவை வெறுத்ததாக தாங்கள் கருதுவதே தங்கள் முதல் கேள்விக்கு காரணமாயுள்ளது.
ஆனால் 11,12 வசனங்களுக்கிடையே இருப்பதைப் போன்ற நேரடித் தொடர்பு, 11,13 வசனங்களுக்கிடையே கிடையாது. அதாவது, 12-ம் வசனத்தில் காணப்படுகிற அறிவிப்பு மட்டுமே பிள்ளைகள் தாயின் வயிற்றில் இருந்தபோது கூறப்பட்டதாகும். 13-ம் வசனத்தில் கூறப்பட்ட வாசகம், பிள்ளைகள் பிறந்து, வளர்ந்து, மறைந்து, சந்ததியினர் பெருகியபின் கூறப்பட்டதாகும். எனவே அவ்வாசகம் தனிப்பட்ட ஏசா யாக்கோபைப் பற்றியதாயிராமல், அவர்களின் சந்ததியினரைப் பற்றியதாயிருக்கிறது. அவ்வாசகம் எப்போது, ஏன், யாரைப் பற்றிக் கூறப்பட்டது என்பதை பின்வரும் வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.
மல்கியா 1:2-4 கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன். ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்; ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
தனிப்பட்ட ஏசாவை தேவன் வெறுத்திருந்தால், ஏசாவின் நாட்களில் அவருடைய மலைகளைப் பாழாக்கி, அவருடைய சுதந்தரத்தை சர்ப்பங்களின் குடியிருப்பாக்கியிருக்க வேண்டும். ஆனால் தேவன் அவ்வாறு செய்ததாக வேதாகமம் கூறவில்லை. ஏசா எக்குறைவுமின்றி நிறைவோடிருந்ததாக ஆதியாகமம் 33:9 கூறுகிறது; ஏசாவின் குடும்பத்தார் யாவரும் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாதபடி அவர்களின் சம்பத்து மிகுதியாயிருந்ததாகவும், அவர்களின் மந்தையை அவர்கள் குடியிருந்த பூமி தாங்கக்கூடாததாக இருந்ததாகவும் ஆதியாகமம் 36:7 கூறுகிறது.
எனவே தனிப்பட்ட ஏசாவை தேவன் வெறுத்ததாக நிச்சயமாகக் கூறமுடியாது. துன்மார்க்கத்தின் எல்லையாக இருந்த ஏதோமியரையே தேவன் வெறுத்ததாக மல்கியா 1:3,4 வசனங்கள் கூறுகின்றன. எனவே தங்கள் முதல் கேள்வி எழுவதற்கான வாய்ப்பு வேதாகமத்தில் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
மாத்திரமல்ல, “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” எனும் அறிவிப்புகூட தனிப்பட்ட ஏசா யாக்கோபைப் பற்றியதாயிராமல், அவர்களின் சந்ததியினரான ஏதோமியர் மற்றும் இஸ்ரவேலரைப் பற்றியதாகவே உள்ளது.
ஆதியாகமம் 25:23-ல் காணப்படும் அவ்வறிவிப்பில், “மூத்தவன், இளையவன்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூலப்பிரதி எபிரெய வார்த்தைகள், “ரேப், ஸ்தாவீர்” என்பதாகும். இவற்றிற்கான அர்த்தங்கள் ஆங்கிலத்தில், “abundant, little" என்பவையாகும்; தமிழில் “ஏராளம், குறைவு” என்பவையாகும்.
இந்த “ஏராளம், குறைவு” என்பவை அவ்வார்த்தைகள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து, அளவையோ, வயதையோ, எண்ணிக்கையையோ குறிப்பிடலாம் என அகராதி கூறுகிறது. ஆதியாகமம் 25:23-ன் முதன் 3 அறிவிப்புகளும் ஜனக்கூட்டத்தையே குறிப்பிடுவதாகும்.
ஆதி. 25:23 அதற்குக் கர்த்தர்: (அறிவிப்பு 1) இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; (அறிவிப்பு 2) இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், (அறிவிப்பு 3) அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், (அறிவிப்பு 4) மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.
எனவே 4-வது அறிவிப்பும் ஜனக்கூட்டத்தைக் குறித்தே கூறுவதாக இருக்க வேண்டும். மேலும் இரட்டைப் பிள்ளைகளான ஏசாவும் யாக்கோபும் சம வயதுடையவர்கள் என்பதால், யாக்கோபைவிட ஏசா ஏராளமான வயது அதிகமானவர் எனக் கூற இயலாது.
எனவே 4-வது அறிவிப்பை “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” என மொழிபெயர்ப்பதைவிட, “ஏராளமான ஜனங்கள் கொஞ்ச ஜனங்களைச் சேவிப்பார்கள்” என மொழிபெயர்ப்பதே பொருத்தமானது.
மேலும், “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்” எனும் அறிவிப்பு நிறைவேறியதற்கான ஆதாரமோ, சாத்தியக்கூறோ வேதாகமத்தில் காணப்படவில்லை. உண்மையில், இளையவனாகிய யாக்கோபுதான் மூத்தவனாகிய ஏசாவை 7 முறை வணங்கியதாக ஆதி. 33:3 கூறுகிறது. ஆனால் “அநேக ஜனங்கள் கொஞ்ச ஜனங்களைச் சேவிப்பார்கள்” எனும் அறிவிப்பு சரியாக நிறைவேறுவதை பின்வரும் வசனங்களில் காணலாம்.
உபாகமம் 7:7 சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் (ஏதோமியர் உட்பட) சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.
2 சாமுவேல் 8:14 ஏதோமில் (தாவீது) தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் (இஸ்ரவேலரின் ராஜாவான) தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்;
எனவே ஆதியாகமம் 25:23-ன் 4-ம் அறிவிப்பு, “அநேக ஜனங்கள் கொஞ்ச ஜனங்களைச் சேவிப்பார்கள்” என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வறிவிப்பை பவுல் மேற்கோள் காட்டுகிற ரோமர் 9:12-ன் மூலப்பிரதி வார்த்தைகளின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தால், அவ்வசனத்திலும் “அநேக ஜனங்கள் கொஞ்ச ஜனங்களைச் சேவிப்பார்கள்” என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும் என நாம் அறியலாம்.
எனவே ரோமர் 12,13 வசனங்களில் கூறப்பட்டுள்ள அறிவிப்பும் வாசகமும் தனிப்பட்ட ஏசா யாக்கோபைக் குறிக்கவில்லை என்பதால், தனிப்பட்ட ஏசாவை தேவன் வெறுத்ததைக் குறித்து கேள்வி எழ வாய்ப்பிலை.
ஆயினும் அவரது சந்ததியினரான ஏதோமியரை தேவன் வெறுத்ததை பவுல் ஏன் மேற்கோள் காட்டுகிறார் எனும் கேள்வி நமக்கு எழக்கூடும். குறிப்பாக, இஸ்ரவேலரின் தெரிந்துகொள்தலைப் பற்றி 11,12 வசனங்களில் கூறிவிட்டு, அதையடுத்து ஏதோமியரை தேவன் வெறுத்ததை மேற்கோள் காட்டுவதால், இஸ்ரவேலரின் தெரிந்துகொள்தலுக்கும் ஏதோமியரை தேவன் வெறுத்ததற்கும் தொடர்பு உள்ளதா எனும் கேள்வி எழக்கூடும். இக்கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம்.
இஸ்ரவேலரைத் தேவன் தெரிந்துகொள்ள அவர்களின் கிரியை காரணமல்ல என்பதையே ரோமர் 9:11,12 வசனங்கள் மூலம் பவுல் எடுத்துரைக்கிறார். குறிப்பாக, அவர்களின் முற்பிதாவான யாக்கோபின் கிரியைகூட காரணமல்ல எனக் காட்டும்படி, பிள்ளைகள் ரெபெக்காளின் வயிற்றிலிருக்கும்போதே தமது தெரிந்துகொள்தலை தேவன் அவளிடம் அறிவித்ததை எடுத்துரைக்கிறார்.
இதையடுத்து 13-ம் வசனத்தில் ஏசாவை (அதாவது அவரது சந்ததியினரை) தேவன் வெறுத்ததை மேற்கோளிடுவதும், தேவனின் தெரிந்துகொள்தலின் தொடர்பாகத்தான் என்பது தெளிவாகக் காணப்படுகிறது. ஆனால் அத்தொடர்பு என்னவென்பதை பவுல் குறிப்பிடவில்லை. எனினும் பின்வரும் 2 விஷயங்களில் ஒன்றாகத்தான் அத்தொடர்பு இருக்குமென நாம் யூகிக்கலாம்.
1. பிள்ளைகள் தாயின் வயிற்றிலிருக்கும்போதே, ஏசாவின் சந்ததியினரை வெறுக்கவேண்டும் என தேவன் தீர்மானித்துவிட்டு, யாக்கோபின் சந்ததியினரைத் தெரிந்தெடுத்திருக்கவேண்டும்.
2. பிள்ளைகள் தாயின் வயிற்றிலிருக்கும்போதே, ஏசாவின் சந்ததியினரான ஏதோமியர் துன்மார்க்கத்தின் எல்லைக்குச் சென்று தமது வெறுப்புக்கு ஆளாவார்கள் என்பதை தீர்க்கதரிசனமாக அறிந்ததால், அவர்களைத் தவிர்த்துவிட்டு இஸ்ரவேலரைத் தெரிந்தெடுத்திருக்க வேண்டும்.
இவ்விரு விஷயங்களில், முதல் விஷயம் நடக்க சற்றும் வாய்ப்பில்லை. ஏனெனில் காரணமேயில்லாமல், ஏசாவின் வருங்கால சந்ததியினரை வெறுக்கவேண்டுமென தேவன் தீர்மானிப்பது, அவரைப் பட்சபாதமுள்ளவராகக் காட்டும். ஆனால் தேவன் பட்சபாதமுள்ளவரல்ல (உபாகமம் 10:17; அப்போஸ்தலர் 10:34; கலாத்தியர் 2:6). மேலும், உன் சகோதரனாகிய ஏதோமியனை அருவருக்காயாக என்றும், அந்நியரைச் சிநேகிப்பாயாக என்றும் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்ட தேவன் (உபாகமம் 23:7; 10:19), அந்நியர் மீது அன்புவைத்து அவர்களுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவரான தேவன் (உபாகமம் 10:18), துன்மார்க்கனின் சாவை விரும்பாத தேவன் (எசேக்கியேல் 18:32), ஏதோமியர் துன்மார்க்கத்தின் எல்லைக்குச் செல்லவேண்டும் என்றும் அதினிமித்தம் தாம் அவர்களை வெறுக்கவேண்டும் என்றும் வெகுகாலத்திற்கு முன்பே நிச்சயமாகத் தீர்மானித்திருக்க மாட்டார்.
ஆனால் 2-வது விஷயம் நடப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. வெகுகாலத்திற்குப் பின் நடக்கப்போவதை, நம் தேவன் தீர்க்கதரிசனமாக அறியும் வல்லமையுள்ளவர் என வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது.
எனவே, பிற்காலத்தில் ஏதோமியர் துன்மார்க்கத்தின் எல்லைக்குச் செல்வார்கள் என்பதையும் அதினிமித்தம் தாம் அவர்களை வெறுக்கநேரிடும் என்பதையும் தீர்க்கதரிசனமாக தேவன் அறிந்ததால், ஏதோமியரைப் புறக்கணித்து, இஸ்ரவேலரை அவர் தெரிந்தெடுத்திருக்கக்கூடும்.
இதைக் குறித்த விபரம் வேதாகமத்தில் காணப்படவில்லையென்றாலும், தங்கள் சந்தேகத்தைப் போக்கவேண்டுமென்ற நோக்கத்தில், இப்படியும் நடந்திருக்கக்கூடும் என யூகத்தின் அடிப்படையிலேயே கூறியுள்ளோம். மற்றபடி, தேவனின் செயலில் நிச்சயமாக அநீதி இருக்காது என்பதால், அவர் ஏதோமியரை வெறுத்தது மற்றும் அதைப் போன்ற வெறெந்த செயலிலும் அவர் அநீதியுள்ளவர் என நாம் சொல்லக்கூடாது என்பதே பவுல் நமக்குக் கூறும் ஆலோசனை (ரோமர் 9:14).
ஏதோமியரின் துன்மார்க்கத்தினிமித்தம் அவர்களை வெறுத்த தேவன், அதற்குமுன் அவர்கள்மீது கரிசனையுள்ளவராக இருந்தார் என்பதற்கு இவ்வசனம் ஆதாரமாயுள்ளது.
உபாகமம் 2:4 ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; 5 அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.
மாத்திரமல்ல, இஸ்ரவேலர், ஏதோமியர், எகிப்தியர், புறஜாதியினர் என்ற வித்தியாசமின்றி இவ்வுலகில் அனைவர் மீதும் தேவன் அன்புகூர்ந்துள்ளார் எனப் பின்வரும் வசனம் கூறுகிறது.
யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
இவ்வுலகில் தாம் படைத்த ஜனங்கள் அனைவரின்மீதும் அன்புகூர்ந்த தேவன், அவர்கள் இழந்துபோன நித்தியஜீவனை மீண்டும் அடையும்படியாகத்தான் தமது குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்.
இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்புதல், அவர் மூலம் மனுக்குலத்திற்குக் கிடைத்த இரட்சிப்பை உலகிற்கு நற்செய்தியாக அறிவித்தல் போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கருவியாகத்தான் இஸ்ரவேலரைத் தேவன் தெரிந்துகொண்டார்.
அந்தத் தெரிந்துகொள்தலால் உலகப்பிரகாரமான சில மேன்மைகளை இஸ்ரவேலர் பெற்றது மெய்தான். ஆனால் பரலோகப் பாக்கியங்களைப் பொறுத்தவரை இஸ்ரவேலர், ஏதோமியர், புறஜாதியினர் என்ற பாகுபடின்றி அனைவரும் அவற்றைப்பெற சமஉரிமையுடையவர்களே.
மேலும், “எவனிடம் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும்” என லூக்கா 12:48-ல் இயேசு கூறுகிறபடி, அதிகம் கொடுக்கப்பட்ட இஸ்ரவேலரிடம் அதிகம் கேட்கப்படவும் கூடும் என்பதோடு, தேவன் அவர்களிடம் கூறின பின்வரும் வசனத்தையும் இங்கு நினைவு கூர்வோமாக.
ஆமோஸ் 3:2 பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.
கேள்வி 2. ஓர் குயவன் தன் விருப்பப்படி ஓர் மண்பாண்டத்தை உருவாக்குவதைப்போல, தேவனும் தமது விருப்பப்படி ஒவ்வொரு மனிதனையும் உருவாக்குவதாக பவுல் கூறுகிறார். அவ்விதமாக உருவாக்கப்பட்ட மனிதனின் செயல்களுக்கு அவனைப் பொறுப்பாக்க முடியுமா?
பதில்: தேவன் தமது சித்தப்படி இவ்வுலகில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரியத்திற்குப் பயன்படுத்துகிறார், அதற்கேற்றவாறு ஒவ்வொருவரையும் உருவாக்குகிறார் என்பதை இஸ்ரவேலருக்குப் புரியவைப்பதற்காகவே குயவன் - மட்பாண்டம் உதாரணத்தைப் பவுல் கூறுகிறார்.
ஒரே களிமண்ணிலிருந்து கொஞ்சத்தை எடுத்து கனமான காரியத்திற்கும், கொஞ்சத்தை எடுத்து கனமற்ற காரியத்திற்கும் உருவாக்க குயவனுக்கு அதிகாரம் உள்ளதைப்போல, மனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரியத்திற்காக உருவாக்க தேவனுக்கு அதிகாரமுள்ளது என்பதே குயவன் - மட்பாண்டம் உதாரணத்தின் மூலம் பவுல் சொல்ல முற்படும் விஷயம்.
அதாவது, மனிதனை அரசனாக/சேவகனாக, அதிகாரியாக/ஊழியனாக படைப்பதும் உருவாக்குவதும் தேவனின் முழு அதிகாரத்திலிருக்கிறது என்பதையே பவுல் எடுத்துரைக்கிறார். மாத்திரமல்ல, அரசனாக உருவாக்கி பின்னர் சேவகனாக்குவதும் சேவகனாக உருவாக்கி பின்னர் அரசனாக்குவதுங்கூட தேவனின் முழு அதிகாரத்தினாலாவதே (1 சாமுவேல் 2:7,8; தானியேல் 5:20).
மற்றபடி, மனிதன் தன் சுயாதீனத்தின்படி ஒரு செயலைச் செய்ய முற்படுகையில் அவனது சுயாதீனத்தில் தேவன் தலையிடுவதில்லை. ஆனால் அவன் தன் சுயாதீனத்தின்படி செய்ய முற்படும் செயலை அனுமதிப்பதும் தடுப்பதும் தேவனின் சித்தமாக இருக்கிறது (மத்தேயு 10:29-ஐ படித்துப்பார்க்கவும்).
எனவே ஒரு செயலைச் செய்ய முடிவெடுப்பதற்கான சுயாதீனம் மனிதனிடமே இருப்பதால், அவன் செய்கிற செயல்களுக்கு அவனே பொறுப்பாகும்.
உலக இரட்சிப்புக்கான தேவதிட்டம் எனும் கனமான காரியத்திற்கு இஸ்ரவேலரைப் பயன்படுத்த தேவன் தெரிந்துகொண்டது முழுக்க முழுக்க அவரது சுயசித்தத்தின்படியே என்பதை இஸ்ரவேலருக்குப் புரியவைக்கவே குயவன் - மட்பாண்டம் உதாரணத்தை பவுல் கூறுகிறார்.
அதாவது இவ்வுலகில் ஒருவன் கனமுள்ளவனாகவோ கனவீனனாகவோ உருவாவது அவனால் அல்ல (வசனம் 16) என்பதைப் புரியவைக்கவே அந்த உதாரணத்தைக் கூறுகிறார். கூடவே, பார்வோனின் இருதயத்தைத் தேவன் கடினப்படுத்தியதையும் எடுத்துரைப்பதால், ஒருவனின் சுயாதீனத்தைத் தேவன் கட்டுப்படுத்துவதாக நீங்கள் கருதுகிறீர்கள்; ஆனால் அப்படியல்ல.
பார்வோன் ஏற்கனவே கடின இருதயமுள்ளவனாகத்தான் இருந்தான் (யாத்திராகமம் 3:19). அப்படிப்பட்ட அவனை ஒரே வாதையின் மூலம் மாற்றிவிட தேவன் நினைத்திருந்தால், அப்படிச் செய்திருக்க முடியும். அதாவது, தண்ணீரை இரத்தமாக மாற்றிய முதல் வாதையை பார்வோனின் மனம் முழுமையாக மாறும்வரை விட்டுவைத்திருந்தால் அப்போதே அவன் மனம் மாறியிருப்பான்.
ஆனால் தேவன் அவ்வாறு செய்யவில்லை. பார்வோன் மோசே மூலம் தேவனை வேண்டிக்கொண்டபோது தேவன் உடனுக்குடன் வாதையை நிறுத்திக்கொண்டேயிருந்தார். துன்பம் வரும்போது தேவனைத் தேடிய பார்வோன், துன்பம் விலகியதும் தேவனுக்கு எதிராகச் செயல்பட்டான்.
இந்நாட்களில் நாமுங்கூட தேவனுக்கெதிராகச் செயல்பட்டு, அதினிமித்தம் வியாதியால் தாக்கப்பட்டு துன்பப்படுகையில் தேவனை சற்று அதிகமாக நாடுகிறோம். கூடவே நாம் மருத்துவத்தை நாடினாலும், தேவன் தமது சித்தப்படியே மருத்துவத்தால் நம் வியாதி குணமாக அனுமதிக்கிறார்; அதாவது, நம் இருதயம் மீண்டும் கடினப்படுவதற்கான சூழ்நிலையை அனுமதிக்கிறார்.
நாமும் வியாதி குணமானதும் பழையபடி தேவனுக்கெதிராகச் செயல்படத் தொடங்கிவிடுகிறோம். ஒருவேளை மருத்துவத்தால் நம் வியாதி குணமாகாமலே இருந்திருந்தால், அல்லது வியாதிக்குப்பின் வியாதியால் மீண்டும் மீண்டும் நாம் தாக்கப்பட்டுக்கொண்டேயிருந்தால், ஒரு காலகட்டத்திற்குப்பின் நாம் முழுமையாகத் தேவனைத் தேடுவோராகிவிடுவோம்.
பார்வோனுக்கும் முதல் வாதை நீங்காமலேயே இருந்திருந்தால், அவன் அப்போதே முழுமையாக மாறி, இஸ்ரவேலரை விடுவித்திருப்பான்; ஆனால் அப்படி நடந்திருந்தால் பார்வோனும் எகிப்தியரும் மற்ற ஜனங்களும் தேவனின் வல்லமையை முழுமையாக அறிந்திருக்கமாட்டார்கள் (வசனம் 17). எனவேதான் ஒவ்வொரு வாதையையும் அவ்வப்போது நீங்கச்செய்து, பார்வோனின் இருதயம் கடினப்படும் சூழ்நிலையை தேவன் அனுமதித்தார். இவ்வாறு தேவன் செய்ததைத்தான், அவர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதாக பவுல் கூறுகிறார்.
தேவன் நேரடியாக யாருடைய இருதயத்தையும் கடினப்படுத்துவதில்லை; நம் வாழ்வில் அவர் நிகழ்த்துகிற சம்பவங்களின் மூலமாகவே நம் இருதயத்தைக் கடினமாக்குகிறர், அல்லது மிருதுவாக்குகிறார். தேவன் நம் வாழ்வில் நிகழ்த்தும் சம்பவங்களுக்கு என்ன காரணமென உணர்ந்து நம் இருதயத்தை மாற்றுவது நம் சுயாதீனமேயன்றி தேவனல்ல; அந்த சுயாதீனத்தின்படி நாம் செய்கிற செயல்களுக்குப் பொறுப்பு நாமேயன்றி தேவனல்ல.