தனது வாதத்திற்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தையும் பெரியன்ஸ் கூறுகிறார்.
I தீமோத்தேயு 2:14 மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
இவ்வசனம் சொல்வதை மறுப்பதற்கில்லை; இவ்வுண்மையை பவுல் சொல்லித்தான் நாம் தெரியவேண்டும் என்பதுமில்லை. சாத்தான் ஏவாளிடம் பொய்சொல்லி வஞ்சித்ததையும், அதன் பின்னர் ஏவாளின் பேச்சைக் கேட்டு ஆதாம் தேவகட்டளையை மீறியதையும் ஆதி. 3:1-6,17 வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
ஆதாமிடம் சாத்தான் நேரடியாக எதையும் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆகிலும் ஆதாம் கனியைப் புசிக்கக் காரணமென்ன? இக்கேள்விக்கான பதிலை சற்று ஆராய்ந்தறிவோம்.
ஏவாள் ஆதாமிடம் கனியைப் புசிக்கச் சொன்னதும், உடனே ஆதாம் கனியைப் புசித்திருப்பாரா? நிச்சயம் மாட்டார். இத்தனை நாட்களாக தேவகட்டளைக்குக் கீழ்ப்படிவதில் மிகவும் கவனமாக இருந்த ஆதாம், ஏவாள் கனியைக் கொடுத்ததும் எந்தக் கேள்வியும் கேட்காமல் நிச்சயம் புசித்திருக்க மாட்டார். வேதாகமத்தில் இவ்விபரங்கள் கூறப்படவில்லை என்பதால், ஏவாள் கனியைக் கொடுத்ததும் எக்கேள்வியும் கேட்காமல் ஆதாம் அதைப் புசித்திருப்பார் என நாம் கருதமுடியாது.
உண்மையில், ஆதாமிடம் கனியைக் கொடுத்த ஏவாள், அது விலக்கப்பட்ட கனி என்பதைக்கூட சொன்னதாக வேதாகமம் கூறவில்லை. வெறுமனே, “கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள், அவனும் புசித்தான்” என்றுதான் வேதாகமம் கூறுகிறது. இதனால், அது விலக்கப்பட்ட கனி என அறியாமல் ஆதாம் புசித்தார் எனச் சொல்லமுடியுமா? நிச்சயம் முடியாது. அது என்ன கனி என்பதை ஏவாள் சொல்லியிருப்பாள், அக்கனியைக் குறித்து சாத்தான் தன்னிடம் சொன்னதையும் சொல்லியிருப்பாள். சாத்தான் சொன்னபடியே தான் கனியைப் புசித்து சாகாமல் இருந்ததையும் சொல்லியிருப்பாள்.
ஆதாமும் அதைக் குறித்த விவரங்களை ஏவாளிடம் கேள்விகேட்டு அறிந்திருப்பார். மேலும், “தேவன் சொன்னது சரியல்ல, சாத்தான் சொன்னதுதான் சரி, எனவேதான் ஏவாள் சாகாமல் இருக்கிறாள்” என்பதைக் கண்கூடாகப் பார்த்து, அதன்பின்னரே கனியைப் புசிக்க ஆதாம் துணிந்திருப்பார். எனவே சாத்தான் ஏவாள் மூலமாகச் சொன்னதை நம்பித்தான் கனியைப் புசிக்க ஆதாம் துணிந்திருப்பார்.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையே நடந்த உரையாடல் முழுவதும் வேதாகமத்தில் எழுதப்படவில்லை. உதாரணமாக, விலக்கப்பட்ட கனியைப் புசிக்கவேண்டாம் என ஆதாமிடம் தேவன் சொன்னதை ஆதாம் ஏவாளிடம் சொன்னதாக வேதாகமத்தில் காணப்படவில்லை. ஆகிலும் கனியைப் புசித்தால் சாகவே சாவீர்கள் என தேவன் சொன்னதாக சாத்தானிடம் ஏவாள் கூறுகிறாள். இவ்விஷயம் ஏவாளுக்கு எப்படி தெரிந்திருக்கும்? ஆதாம் சொல்லித்தான் தெரிந்திருக்கும். ஆனால் இது பற்றி வேதாகமம் எதுவும் சொல்லவில்லை.
இதுபோலத்தான், விலக்கப்பட்ட கனியைப் புசித்த ஏவாள், தான் கனியைப் புசித்தது எப்படி என்கிற விபரத்தை ஆதாமிடம் விரிவாகச் சொல்லித்தான் கனியை அவரிடம் கொடுத்திருப்பாள். அவளிடம் சாத்தான் சொன்ன வார்த்தைகளை நம்பி ஏமாந்துதான் ஆதாம் கனியைப் புசித்திருப்பார்.
உண்மையில், ஏவாள் மட்டும் கனியைப் புசித்திருந்தால் உலகில் பாவமும் அதன் விளைவான மரணமும் பிரவேசித்திருக்காது. ஆதாம் கனியைப் புசித்ததால்தான் உலகில் பாவமும் மரணமும் பிரவேசித்ததாக வேதாகமம் கூறுகிறது.
ரோமர் 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
எனவே ஏவாளின் மீறுதலைவிட ஆதாமின் மீறுதல்தான் முக்கியமானது. அந்த மீறுதல், ஏதோ சாதாரணமாக ஏவாள் பேச்சைக் கேட்டு நடந்த ஒன்றாக இருக்கமுடியாது. சாத்தான் ஏவாளிடம் சொன்னதையெல்லாம் நன்றாகக் கேட்டறிந்து, சாத்தானின் பேச்சில் நம்பிக்கை வந்துதான் தேவனின் கட்டளையை ஆதாம் மீறியிருப்பார். எனவே ஆதாமும் சாத்தானின் பேச்சை நம்பி ஏமாந்தார் எனச் சொல்வதில் தவறெதுவுமில்லை.