இக்கட்டுரையின் பிரதான நோக்கம், “தசமபாகம் கேட்கக்கூடாது, மேய்ப்பன் தேவையில்லை, ஆலயம் தேவையில்லை” எனும் விதமாக போதிப்போரைத் தாக்குவதே.
அவ்வித போதனைதான் 2 தீமோ. 4:3-ல் பவுல் கூறுகிற செவித்தினமான போதனை என அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியுள்ளது தவறு. குறிப்பிட்ட ஒருவரை எப்படியாவது தாக்கவேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாயிருப்பதால், அப்படித் தாக்குவதற்கு பொருத்தமான வசனஆதாரம் கிடைக்காத நிலையில், சம்பந்தமில்லாத ஒரு வசனத்தை எடுத்து, அவ்வசனம் கூறுகிற “செவித்தினவான போதனை” இதுதான் என்கிறார்.
ஆனால் உண்மையில் “தசமபாகம் கேட்கக்கூடாது, மேய்ப்பன் தேவையில்லை, ஆலயம் தேவையில்லை” எனும் போதனைகளெல்லாம் செவித்தினவான போதனைகள் அல்ல. இப்போதனைகள் யாருடைய செவிக்கும் “தினவூட்டுவதில்லை”; அதாவது யாருடைய இச்சையையும் ஊக்குவிப்பதில்லை. ஒருவர் ஏதோ ஒரு இச்சையில் ஏற்கனவே இருக்கையில், அவரது அந்த இச்சையை மேலும் தூண்டும்விதமாக போதிப்பதுதான் செவித்தினவான போதனை.
ஜனங்களில் யாரும் “தசமபாகம் கொடுக்கக்கூடாது, ஆலயம் வேண்டாம், மேய்ப்பன் வேண்டாம்” என இச்சை கொள்வதில்லை. விருப்பமுள்ளவர்கள் “தசமபாகம் கொடுப்பார்கள், ஆலயம் செல்வார்கள்”, விருப்பமில்லாதவர்கள் இவ்விஷயங்களில் ஒதுங்கிக் கொள்வார்கள்; அவ்வளவே. மற்றபடி இம்மாதிரி விஷயங்களுக்கும் ஜனங்களின் இச்சைக்கும் பெரிதாக சம்பந்தமில்லை. அப்படியானால் 2 தீமோ. 4:3-ல் பவுல் குறிப்பிடுகிற செவித்தினவான போதனை எது? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
2 தீமோத்தேயு 4:3 அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, 4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
இவ்வசனத்தில் பவுல் கூறியுள்ள காலத்திற்கு நமது காலம் மிகப்பொருத்தமாகவே உள்ளது. இப்படிப்பட்ட காலம் வரத்தான் செய்யும் என்பது பவுலின் தீர்க்கதரிசனம். ஆகிலும் இக்காலத்தில் நடக்கிற சத்தியத்துக்கு விரோதமான காரியங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க பவுல் சொல்லவில்லை. மாறாக,
2 தீமோத்தேயு 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. 5 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
எனவே கட்டுக்கதைகளுக்கு ஜனங்கள் செவிசாய்த்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், எது செவித்தினவான போதனை, எது ஆரோக்கியமான உபதேசம், சுய இச்சைக்கேற்ற போதகர்கள் யார் என்பதை திருவசனத்தைக் கொண்டு எடுத்துரைப்பது அவசியமாகிறது.
1. எது ஆரோக்கியமான உபதேசம்?
இயேசுவின் உபதேசத்துக்கு மிஞ்சின ஆரோக்கிய உபதேசம் எதுவும் இருக்கமுடியாது. இயேசுவின் உபதேசம் எது?
மத்தேயு 4:17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
மாற்கு 1:14 யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: 15 காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
தேவனுடைய ராஜ்யமான பரலோக ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிப்பதுதான் இயேசுவின் உபதேசமாக இருந்தது. பரலோக ராஜ்யத்தைக் குறித்தல்லாமல் வேறு எதையும் குறித்து இயேசு உபதேசிக்கவில்லை. எனவே பரலோகராஜ்யத்துக்கடுத்த உபதேசம் மட்டுமே ஆரோக்கியமான உபதேசம். இதற்கு மாறான வேறெந்த உபதேசமும் ஆரோக்கியமற்ற உபதேசம்தான்.
2. எது செவித்தினவான போதனை? சுயஇச்சைகளுக்கேற்ற போதகர்கள் யார்?
தேவசித்தத்திற்கு எதிரான “இச்சைகள்” அனைத்தும் மனிதர்களின் சுயஇச்சையே!
உலகக்காரியங்கள் எதுவும் நமக்கு வேண்டாம் என தேவன் சொல்லவில்லை. சில உலகக்காரியங்கள் நமக்குக் கண்டிப்பாக அவசியமானவைகளே. உதாரணமாக உணவு, தண்ணீர், உடை போன்ற காரியங்கள் நமக்கு நிச்சயம் அவசியமானவைகளே! ஆனால் அவற்றைக்கூட நாடித்தேடுபவர்களை அஞ்ஞானிகள், உலகத்தார் என இயேசு கூறுகிறார்.
லூக்கா 12:29 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். 30 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்;
இவ்வசனங்களின் கருத்தென்ன? இவ்வுலகில் நமக்கு அவசியமான காரியங்களில்கூட கவலைப்பட்டு, எங்கே அவை நமக்குக்கிடைக்காமற்போய்விடுமோ என சந்தேகப்பட்டு, அவற்றிற்காக அங்குமிங்கும் ஓடி நாடித்தேடுவதென்பது நம்மை அஞ்ஞானிகளாக/உலகத்தாராக ஆக்கிவிடும் என்பதே. அப்படியானால் இக்காரியங்களில் நாம் என்னதான் செய்யவேண்டும்?
பிரசங்கி 9:10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;
ஆம், இதுதான் நாம் செய்யக்கூடியது. எதையும் நடித்தேடி அங்குமிங்கும் ஓடாமல், நம் கைக்குத் தானாக நேரிடுவதை நம் பெலத்துடனே செய்யவேண்டும் என்பதே வேதாகமம் சொல்லும் ஆலோசனை.
உதாரணமாக +2 முடிக்கிற ஒரு மாணவன், மேற்கல்வி விஷயத்தில் “பொறியியல் படிப்புதான் படிக்கவேண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் படிக்கவேண்டும், இந்தக் கல்லூரியில்தான் படிக்கவேண்டும், வெளிநாட்டில்தான் படிக்கவேண்டும்” எனத் தீர்மானித்து அதற்காக எவ்வளவு பணமும் செலவளிக்க தயாராயிருந்து அதற்காக வெகுபிரயத்தனம் எடுப்பதென்பது தன் சுயபுத்தியின்படி தன் சுய இச்சையைத் தீர்க்க எடுக்கிற நடவடிக்கையாகும். மாறாக, தனக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ள ஒருசில கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் தானாகக் கிடைக்கிறவற்றில் ஒன்றை தன் விருப்பப்படி தெரிவுசெய்வதன்பது, பிரசங்கி 9:10-ன் ஆலோசனைப்படி நடப்பதாகும்.
அதாவது நாமாக எந்த target-ஐயும் குறிக்காமல் தானாக வருவதை ஏற்றுக்கொண்டு, அதில் நம் பெலத்துடன் செயல்பட வேண்டும் என்பதே வேத ஆலோசனை. ஆனால் நாமோ எந்தக் காரியத்திலும் “இதுதான் வேண்டும், இதுதான் சிறந்தது” என நாமாகத் தீர்மானித்து, அதையே விரும்பி, அத்தீர்மானத்தை நிறைவேற்ற வெகுவாகப் பிரயாசப்படுகிறோம். இதுதான் தேவசித்தத்துக்கு விரோதமானதும் நம் சுய இச்சையின்படியானதுமான “உலகஇச்சை”.
இந்நாட்களில் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் திருமண விஷயத்தில்கூட சில நிபந்தனைகளை விதித்து வரன் பார்க்கின்றனர். உதாரணமாக “குறைந்தது இவ்வளவு படித்திருக்க வேண்டும், இவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும், இவ்வளவு ரொக்கம் தரவேண்டும், இவ்வளவு நகை போடவேண்டும்” என்றெல்லாம் நிபந்தனை விதித்து வரன் தேடுகின்றனர்.
இவர்களின் இம்மாதிரி இச்சைகள்தான் தேவசித்தத்திற்கு விரோதமான சுயஇச்சைகள். இந்த சுயஇச்சைகளைத் தூண்டும்விதமான போதனைகள்தான் “செவித்தினவான போதனை”. இப்போதனைகளைப் போதிப்பவர்கள்தான் “சுயஇச்சைகளுக்கேற்ற போதகர்கள்”.
இம்மாதிரி போதகர்கள்தான் இந்நாட்களில் நம்மிடையே புற்றீசல்போல் பெருகி வருகின்றனர்.
“ஊழியத்துக்குக் காணிக்கை கொடுங்கள், இயேசு உங்கள் விருப்பத்துக்கேற்ற மணவாளனை/மணவாட்டியைக் கொண்டு வருவார்”, “தசமபாகம் கொடுங்கள், தேவன் உங்கள் பிள்ளைகளை கல்வியில்/வேலையில் உயர்த்துவார்”, “தேவனுடைய கூடாரத்துக்கு 5000 கொடுத்தால் 500000 பெறுமான வீட்டைக்கட்ட தேவன் உதவுவார்”, “இளம் பங்காளர் திட்டத்தில் உங்கள் பிள்ளைகளைச் சேருங்கள், தேவன் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வைப் பொறுப்பெடுத்துக் கொள்வார்”, “வியாபாரிகளுக்கான உபவாச ஜெபத்தில் பங்குபெறுங்கள், தேவன் உங்கள் வியாபாரத்தை ஆசீர்வதிப்பார்” எனப் பலவிதமாக வசனித்து, ஜனங்களின் இச்சையைத் தூண்டும் உபதேசங்கள் இந்நாட்களில் மலிந்து கிடக்கின்றன.
உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என வேதாகமம் தெளிவாகக் கூறியுள்ள போதிலும் உலகசிநேகத்தைத் “தூண்டும்விதமான” பல அறிவிப்புகளைத்தான் இன்றைய போதகர்களில் பலர் அறிவிக்கின்றனர். இயல்பாகவே ஜனங்களிடம் “உலக இச்சை” இருப்பதால், அவர்களும் தங்களது இச்சைகளுக்கு தீனி போடுகிற போதகர்களை நாடி ஓடுகின்றனர்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் (உணவு/உடை) உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (will be added) என்பதே இயேசுவின் ஆரோக்கியமான போதனை. ஆனால் இன்றைய ஊழியர்களோ இயேசுவை விசுவாசித்தால், அவரது ஊழியத்திற்கு காணிக்கை கொடுத்தால், தசமபாகம் கொடுத்தால் தேவன் இவ்வுலகக் காரியங்களில் அபரிதமாக ஆசீர்வதிப்பார் எனப் போதிக்கின்றனர்.
இப்போதனைகள் ஜனங்களின் உலக இச்சைக்கேற்றபடி இருப்பதால், இம்மாதிரி போதனைகளைத் தருவோரை ஜனங்கள் திரளாகச் சேர்த்துக்கொள்கின்றனர்.
இந்தத் திரளான போதகர்கள், தங்களது சுயஆதாயத்துக்காக வேதாகமம் சொல்லாத வாக்குத்தத்தங்களையெல்லாம் சொல்லி, ஜனங்களை ஈர்க்கின்றனர். தாங்கள் சொல்வதை ஜனங்கள் நம்பவேண்டும் என்பதற்காக இவர்கள் ஏராளமான கட்டுக்கதைகளையும் கூறுவதுண்டு.
உதாரணமாக: “எங்கள் ஊழியத்துக்கு இவர் ரூ.1000 கொடுத்ததால் தேவன் இவரை ஆசீர்வதித்து, இவரது தென்னந்தோப்பிலுள்ள மரங்களெல்லாம் கொத்துக் கொத்தாகக் காய்க்கும்படி செய்தார்”, “இப்பெண் தனது கஷ்டத்தின் மத்தியிலும் எங்கள் ஊழியத்துக்கு ரூ.100 அனுப்பினார், தேவன் இவருக்கு அயல்நாட்டில் வேலைபார்க்கும் மணவாளனைக் கொடுத்துள்ளார்” என்றெல்லாம் கதை சொல்வார்கள்.
இவர்கள் சொல்கிற கதைகளை நம்பி “நமக்கும் அப்படியே நடக்கவேண்டும்” என இச்சித்து, அப்போதகர்களின் கட்டுக்கதைகளுக்கு ஜனங்கள் செவி சாய்த்துவிடுகின்றனர். இம்மாதிரி காலம் வருமென்பதுதான் பவுலின் தீர்க்கதரிசனம். ஆகிலும் நாம் செவித்தினவுள்ளவர்களாக அம்மாதிரி கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்கவேண்டும் என்பது தேவசித்தம் அல்ல.
மாறாக, இயேசு சொன்னபடி இவ்வுலகக் காரியங்களில் மனதை வைக்காமல் பரலோக ராஜ்யத்துக்கடுத்த காரியங்களில் மனதை வைக்க வேண்டும் என்பதே தேவசித்தம். தேவனின் இந்த சித்தப்படியே நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போமாக.