தேவனுடைய ஊழியக்காரன் என்பவன் யார் எனும் கேள்விக்கான பதிலை வேதாகமத்தின் அடிப்படையில் நாம் அறியவேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஏனெனில், இந்நாட்களில் கிறிஸ்தவ வட்டாரத்தில் சிலர் மட்டும் “தேவனுடைய ஊழியர்கள்” என முத்திரை குத்தப்பட்டு, மிகவும் கனப்படுத்தப்படுகின்றனர்.
தேவனுடைய ஊழியர்களை கனப்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் இந்நாட்களில் “தேவனுடைய ஊழியன்” என்ற பெயரால் எவர்கள் கனப்படுத்தப்படுகிறார்களோ, அவர்களில் பலர்தான் தேவனுடைய நாமம் வெகுவாக தூஷிக்கப்பட காரணமாயுள்ளனர். எனவேதான் “யார் தேவனுடைய ஊழியக்காரன்” என்பதை நாம் அறியவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பழையஏற்பாட்டின் ஒரு வசனம் இப்படிச் சொல்கிறது.
லேவியராகமம் 25:55 இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
இஸ்ரவேலர் அனைவருமே தேவனுடைய ஊழியக்காரர்தான். One who serves to his master, is a servant of the master.
தேவாதி தேவனை சேவிக்க வேண்டும் என்பது இஸ்ரவேலர் அனைவருக்கும் இடப்பட்ட பொதுவான கட்டளை. எனவே தேவாதி தேவனை சேவிக்கிற அனைத்து இஸ்ரவேலரும் தேவனுடைய ஊழியக்காரர் தான்.
ஆகிலும் தேவனுக்கு விசேஷித்தவிதமாக பணி செய்யும்படி இஸ்ரவேலரின் நடுவிலிருந்து லேவியரை தேவன் பிரித்தெடுத்தார். அவர்களிலும் சிலரைப் பிரித்தெடுத்து ஆசாரியப் பணியை அவர்களுக்குக் கொடுத்தார்.
இந்த ஆசாரியர்கள் முழுக்க முழுக்க தேவனுடைய ஆலயப் பணிகளை செய்யும்படி பணிக்கப்பட்டனர். குறிப்பாக பிரதான ஆசாரியன் என்பவன், தேவனுடைய ஆலயத்தில் சடங்காச்சாரமான பலி மற்றும் ஆராதனை செய்யும்படி நியமிக்கப்பட்டான்.
இந்த கனமான ஊழியத்துக்கு எவரை தேவன் நியமிக்கிறாரோ அவர்கள் மட்டுமே அதைச் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஆம், கனமான ஊழியமான தேவனுடைய ஆலயத்துக்கடுத்த பணிகளுக்கு மட்டுமே குறிப்பிட்ட சிலர் நியமிக்கப்பட்டனர். மற்றபடி, இஸ்ரவேலர் அனைவருமே தேவனுடைய ஊழியக்காரர்தான்.
ஆசாரியர்கள் தவிர மற்றொரு விசேஷித்த ஊழியக்காரரும் உண்டு. அவர் தான் இஸ்ரவேலரை நியாயம் விசாரிக்கவும் ஆண்டுகொள்ளவும் நியமிக்கப்பட்ட ராஜா. ஜனங்களின் வேண்டுகோளின்படியே இஸ்ரவேலருக்கு ராஜாவை தேவன் நியமித்தார்.
ராஜாவும் ஆசாரியர்களும் தேவனுக்கும் அவரது ஜனங்களுக்குமிடையே மத்தியஸ்தர்களாக விளங்கினர். ஆனால் எப்போது ஒரே மத்தியஸ்தரான நம் மீட்பர் இயேசுகிறிஸ்து இவ்வுலகில் தமது பணியை நிறைவேற்றி முடித்தாரோ, அப்போதிலிருந்து ராஜா ஆசாரியர் எனும் பிரிவினைகள் அனைத்தும் முடிந்துபோயின. அதற்கு அடையாளமாகத்தான் இயேசுவின் மரணத்தின்போது, தேவாலய திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது (மத்தேயு 27:51)
பழைய ஏற்பாட்டில் ஒரேயொரு ஆலயம் மட்டுமே தேவனுடைய ஆலயமாக விளங்கினது; அதுவே எருசலேம் தேவாலயம். ஆனால் புதிய ஏற்பாட்டின் உடன்படிக்கைப்படி தேவாதி தேவனையும் அவரது குமாரனான இயேசுவையும் விசுவாசித்து ஏற்றுக்கொள்கிற அத்தனை பேரும் தேவனுடைய ஆலயங்களே.
புதிய ஏற்பாட்டு உடன்படிக்கைப்படி கைகளால் கட்டப்பட்ட தேவனுடைய ஆலயம் என எதுவும் கிடையாது. அப்படி எதையாவது தேவனுடைய ஆலயம் என யாராவது சொன்னால் அப்படிச் சொல்வனும் தேவனுக்கு விரோதமானவன், அதை நம்பி ஏற்பவனும் தேவனுக்கு விரோதமானவன்.
எதை தேவனுடைய ஆலயம் என சொல்வதற்கான அதிகாரம் தேவனுக்கு மட்டுமே உண்டு. எருசலேம் தேவாலயம் முழுக்க முழுக்க தேவனின் திட்டப்படி தேவன் நியமித்த இடத்தில் மனிதரால் கட்டப்பட்டது. அந்த ஒரு ஆலயத்துக்கு மட்டுமே தேவனுடையம் ஆலயம் என அழைக்கப்படும் தகுதி உண்டு.
மற்றபடி இன்று ஆளாளுக்கு தங்கள் சுயதிட்டப்படி கட்டுகிற ஆலயம் தேவனுடைய ஆலயமும் அல்ல; அந்த ஆலயத்தில் பாஸ்டர், ரெவரண்ட், ஆயர், பேராயர் என்ற பெயரில் பணி செய்பவர்கள் தேவனால் விசேஷமாக நியமிக்கப்பட்ட தேவனுடைய ஊழியக்காரர்களும் அல்ல.
இன்று பிதாவாகிய தேவனையும் கிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்கிற அத்தனை பேரும் தேவனுடைய ஆலயங்களே! (1 கொரி. 3:17). அந்த ஆலயத்தில் செய்யவேண்டிய புத்தியுள்ள ஆராதனை எதுவென்பதை பின்வரும் வசனத்தில் பவுல் கூறியுள்ளார்.
ரோமர் 12:1 சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
பழைய ஏற்பாட்டில் “ஆராதனை” எனும் விசேஷித்த பணியைச் செய்ய பிரதான ஆசாரியன் மட்டுமே அழைக்கப்பட்டான், எனவே அவன் மட்டுமே அப்பணியைச் செய்தான். ஆனால் புதிய ஏற்பாட்டு நியமனத்தின்படி விசுவாசிகள் அத்தனை பேரும் புத்தியுள்ள ஆராதனைச் செய்ய அழைக்கப்படவர்களே! எனவே விசுவாசிகள் அத்தனை பேரும் தேவனுடைய விசேஷித்த ஊழியக்காரர்களே!
விசுவாசிகள் அத்தனைபேரும்தேவனுடையவிசேஷித்தஊழியக்காரர்களே! என கடந்த பதிவில் பார்த்தோம்.
அதெப்படி எல்லோரும் தேவனுடைய விசேஷித்த ஊழியக்காரராக முடியும்? பவுலும் பேதுருவும் நாமும் ஒன்றாகிவிட முடியுமா? என நம்மில் சிலர் கேட்கலாம். அவர்கள் பின்வரும் வசனங்களைப் படிப்பார்களாக.
மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்,
1 கொரி. 11:1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.
இயேசுவை/பவுலைப் பின்பற்றுவதென்றால் என்ன? அவர்கள் எப்படி தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்களோ அவர்கள் எப்படி தேவனுக்குப் பணிசெய்தார்களோ அதேவிதமாக நடக்கவேண்டும் என்பதே.
ஒருவன் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுதான் அவன் தேவனுக்குச் செய்கிற மெய்யான ஊழியம்.
1 கொரிந்தியர் நிருபத்தின் தொடக்கவரிகளில் தேவனுடைய சபை முழுவதற்கும் தனது நிருபத்தை எழுதுவதாக பவுல் கூறுகிறார். எனவே யாரெல்லாம் தாங்கள் தேவனுடைய சபையில் இருப்பதாகக் கருதுகிறார்களோ அவர்கள் அனைவருமே பவுலைப் பின்பற்றத்தான் வேண்டும்.
அதாவது, பவுல் எப்படி தேவனுக்குத் தொண்டாற்றினாரோ அதேவிதமாக தேவனுடைய சபையார் அத்தனைபேருமே தேவனுக்குத் தொண்டாற்றத்தான்வேண்டும். பவுலின் கூற்று ஒருவேளை நேரடியாக இல்லாததாகத் தோன்றலாம். ஆனால் பேதுருவின் கூற்று நேரடியாக உள்ளது.
ஆம், தனது நிருபத்தை எவர்களுக்கு எழுதுகிறாரோ அவர்கள் அத்தனை பேரையும் பார்த்து, “நீங்களெல்லாம் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாக இருக்கிறீர்கள்” என்கிறார் பேதுரு.
பவுலின்/பேதுருவின் நிருபத்தில் கூறப்பட்ட வாக்கியங்கள் சபையார் அனைவருக்கும் சொந்தமானதா? அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமானதா?
அனைவருக்கும் சொந்தமானதென்றால், தேவனுடைய சபையார் அனைவருமே ராஜரீகமான ஆசாரியர்கள்தான். ஆனால் நம் மத்தியில் நடப்பதென்ன? பாஸ்டர், ரெவரெண்ட், பேராயர், சுவிசேஷகர், மிஷனரி போன்றவர்கள் மட்டுமே ராஜரீகமான ஆசாரியர்கள் போலவும், மற்றவர்களெல்லாம் அவர்கள் சொல்வதைக் கேட்டு தலையாட்டுகிற பொம்மைகள் போலவும் தான் நடக்கிறது.
இப்படியெல்லாம் வித்தியாசம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், “நீங்களெல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” என இயேசு சொன்னார்.
இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழலாம். விசுவாசிகளான நம் எல்லோரையுமே ராஜரீகமான ஆசாரியராக தேவன் ஏற்றுக்கொள்வாரா? விசுவாசிகளாக இருந்தாலும், எத்தனையோ பேர் மகா பாவங்கள் செய்கின்றனரே, அக்கிரமங்களைச் செய்கின்றனரே, அவர்கள் அத்தனை பேரும் ராஜரீகமான ஆசாரியராகிவிட முடியுமா எனக் கேட்கலாம்.
இதுதான் மிகமிக முக்கியமான கேள்வி.
விசுவாசிகள் அனைவரும் தங்களை ராஜரீகமான ஆசாரியப்பணிக்கு அழைக்கப்பட்டவர்களாகக் கருதுவதில் தவறே இல்லை. ஆனால் அவர்கள் மெய்யாகவே ஆசாரியப்பணியைச் செய்தனரா, ஆசாரியர் என அழைக்கப்பட தகுதியானவர்களா என்பதைத் தீர்மானிக்கப்போவது தேவன்.
ஆம், அழைக்கப்பட்டவர்கள் அநேகர், ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்.
எவரைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற உரிமை தேவனை மட்டுமே சாரும். ஆனால் இன்று நாமாக சிலரை மேன்மைப்படுத்தி, இவர்கள் தான் ஆசாரியர்கள், மற்றவர்களெல்லாம் வெறும் விசுவாசிகள் எனப் பிரித்துவிடுகிறோம். அதனால்தான் “தேவனுடைய ஊழியர்”, “விசுவாசிகள்” எனும் 2 பிரிவு நம்மிடையே காணப்படுகிறது.
இப்படி ஒரு பிரிவை பவுலோ பேதுருவோ உண்டாக்கவில்லை. அவர்கள் தங்களை மாத்திரம் தேவனுடைய ஊழியர்கள் எனச் சொல்லிக்கொண்டு மற்றவர்களைப் பார்த்து “நீங்களெல்லாம் வெறும் விசுவாசிகள்” எனச் சொல்லவில்லை.
நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள் எனப் பவுல் சொன்னார், நீங்களும் ராஜரீகமான ஆசாரியர்தான் எனப் பேதுரு சொன்னார். பேதுருவும் பவுலும் தேவனால் நேரடியாக அழைக்கப்பட்ட அப்போஸ்தலராக இருந்தபோதிலும், தங்களை மாத்திரம் “தேவனுடைய ஊழியர்” என்ற பிரிவில் வைத்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை.
ஒருவன் இவ்வுலக மனிதனுக்கு வேலைக்காரனாக இருந்தால்கூட, அவன் தேவசித்தத்தின்படி தன் பணியைச் செய்கையில், அவனுங்கூட கிறிஸ்துவின் ஊழியக்காரனாகவே கருதப்படுவான். எனவே தேவசித்தப்படி நடக்கிற யாராயிருந்தாலும் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களே!
ஒருவன் சுவிசேஷம் அறிவிக்கிறானா, தீர்க்கதரிசனம் சொல்கிறானா என்பதெல்லாம் கேள்வியல்ல; தேவன் அவனுக்கு இவ்வுலகில் நியமித்த பணியை தேவசித்தப்படி செய்கிறானா என்பதே கேள்வி. தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை தேவசித்தப்படி ஒருவன் நிறைவேற்றினால், அவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனே!! இன்னும் சொல்லப்போனால், உலக அதிகாரிகள்கூட ஒருவிதத்தில் தேவஊழியக்காரர்களே எனப் பின்வரும் வசனத்தில் பவுல் கூறுகிறார்.
ரோமர் 13:3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். 4 உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான்.
எனவே இவர் தான் தேவஊழியர், அவர் தான் தேவஊழியர் என நாம் பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை. நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினான் எனப் பவுல் சொல்கிறபடியே, இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைத் தேவன் தருகிறார். அப்பணியைத் தேவசித்தப்படி செய்துமுடிக்கிற அத்தனைபேரும் தேவனின் ஊழியக்காரர்களே.
எனவே இவர்கள்தான் தேவஊழியர்கள், இவர்களெல்லாம் வெறும் விசுவாசிகள் என்ற பிரிவு நம்மிடையே தேவையில்லை.
இனி, இவ்வுலகில் தேவஊழியர்களாக (அல்லது கிறிஸ்துவின் ஊழியர்களாக) விளங்குகிற நாம், அந்தப் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள எப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தேவனை தங்கள் எஜமானராக ஏற்றுக்கொண்ட அனைவரும் தேவனுடைய ஊழியர்கள்தான். ஆனால் அவர்கள் தேவனுக்கு உண்மையானவர்களாக நடந்தால்தான் “உண்மையான தேவஊழியர்கள்” (True servants of God) என தேவனால் அங்கீகரிக்கப்படுவார்கள்.
ஒருவன் உண்மையான தேவஊழியனா என்பதை தேவன் மட்டுமே தீர்மானிக்க முடியும். நம் பார்வைக்கு வெளித்தோற்றத்தில் ஒருவன் உண்மையானவனாகக் காணப்பட்டாலும், இருதயத்தை அறிகிற தேவன் மட்டுமே, அவன் உண்மையானவனா என்பதை அறியமுடியும். மாத்திரமல்ல, உண்மையான ஊழியனாக விளங்குகிற ஒருவன் தனது ஜீவியகாலம் முடியும்வரை உண்மையைக் காத்துக்கொண்டால்தான் அவனை உண்மையான ஊழியன் என தேவன் அங்கீகரிப்பார்.
நம்மைப் பொறுத்தவரை ஓர் ஊழியனை உண்மையான ஊழியன் எனத் தீர்மானிப்பது கூடாத காரியம். ஆனால் உண்மையில்லாத ஊழியனை நாம் கண்டுகொள்ள வாய்ப்புள்ளது. எப்படியெனில் ஓர் ஊழியன் வெளிப்படையாக தேவனின் கட்டளைக்கு எதிராக நடக்கையில், அவன் உண்மையான ஊழியன் அல்ல என நாம் தீர்மானித்துவிடலாம்.
உண்மையில்லாத ஊழியர்களில் 3 பிரிவினர் உண்டு.
தங்களது தனிப்பட்ட காரியங்களில் தேவசித்தத்துக்கு விரோதமாக நடப்பவர்கள்
தேவனின் விரோதியான வேறொரு எஜமானுக்கு ஊழியம் செய்பவர்கள்
தங்களது உடன் ஊழியர்களையும் வேறொரு எஜமானுக்கு ஊழியம் செய்யத் தூண்டுபவர்கள் (பிறருக்கு இடறலாக இருப்பவர்கள்)
இந்த 3 பிரிவினரில் 2-ம் 3-ம் பிரிவினர்கள்தான் கள்ள ஊழியர்கள், அதாவது False Servants. இம்மூன்று பிரிவினரைக் குறித்தும் சற்று விபரமாகப் பார்ப்போம்.
1. தங்களது தனிப்பட்ட காரியங்களில் தேவசித்தத்துக்கு விரோதமாக நடப்பவர்கள்
உலகப்பிரகாரமான ஓர் எஜமானையும் அவனது ஓர் ஊழியனையும் எடுத்துக்கொள்வோம். ஊழியனிடம் எஜமான் ரூ.1000 கொடுத்து கடையில் சில பொருட்களை வாங்கிவரச் சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். ரூ.800-க்கு பொருட்களை வாங்கின உழியன், தனது அவசர தேவைக்காக ரூ.100-ஐ எடுத்துக்கொண்டு, பொருட்களுக்கு ரூ.900 ஆனதாகக் கணக்குச் சொன்னால், அவன் உண்மையில்லாத ஓர் ஊழியனே. ஆனால் அவனது செயல் எஜமானுக்கும் அவனுக்கும் இடையிலான தனிப்பட்ட செயலாகும்.
இதேவிதமாக தனிப்பட்ட முறையில் தேவனுக்கு உண்மையில்லாத பலர் நம்மிடையே உண்டு. ஆனால் இவர்களைக் குற்றஞ்சொல்ல மற்ற யாருக்கும் தகுதியும் கிடையாது, அதிகாரமும் கிடையாது. ஏனெனில் எல்லோருமே தங்கள் மாம்சபலவீனத்தினால் தேவசித்தத்துக்கு விரோதமாக ஏதோ ஒருவகையில் நடப்பவர்கள்தான்.
தன்னிடம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை எப்படி ஒருவன் குற்றஞ்சாட்ட முடியும்? அப்படி குற்றஞ்சாட்டுவோருக்காகத்தான் இவ்வசனங்களை இயேசு கூறினார்.
மத்தேயு 7:1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். 2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 4 இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
தனிப்பட்ட முறையில் தேவசித்தத்துக்கு விரோதமாக நடப்பவர்கள், தங்கள் பாவத்தை உணர்ந்து மன்னிப்பு வேண்டுகையில் தேவன் அவர்களை மன்னிப்பார்.
2. தேவனின் விரோதியான வேறொரு எஜமானுக்கு ஊழியம் செய்பவர்கள்.
இப்பிரிவினரும் 3-ம் பிரிவினரும் தான் கள்ள ஊழியர்கள் (False Servants). இவர்கள் ஊழியம் செய்கிற மற்றொரு எஜமான் யார் என்பதை அறிய பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
1 யோவான் 2:15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
யாக்கோபு 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
மத்தேயு 6:24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
உலகம் அல்லது உலகப்பொருள்தான் தேவனுக்கு விரோதமான மற்றொரு எஜமான். எனவே உலகப்பொருளை சினேகிப்பவன், தேவனின் விரோதியான மற்றொரு எஜமானுக்கு ஊழியஞ்செய்பவனாகிவிடுவான். இப்படிப்பட்டவனைக் கள்ள ஊழியன் எனச் சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
நாம் அனைவருமே தேவஊழியர்கள்தான் என ஏற்கனவே பார்த்தோம். தேவஊழியர்களான நாம், உலகப்பொருட்கள் மேல் பற்றுதல் வைத்து தேவனின் விரோதியான மற்றொரு எஜமானுக்கு ஊழியஞ்செய்தால், நாமுங்கூட கள்ள ஊழியர்கள்தான். பொருளாசை என்பது விக்கிரகாராதனையாயிருக்கிறது எனப் பவுல் சொல்வதை இங்கு நினைவுகூருவோமாக.
3. தங்களது உடன் ஊழியர்களையும் வேறொரு எஜமானுக்கு ஊழியம் செய்யத் தூண்டுபவர்கள் (பிறருக்கு இடறலாக இருப்பவர்கள்)
இவர்களைக் குறித்துதான் நாம் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவர்கள் அனைவருமே 2-வது பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். உலகப்பொருளை எஜமானனாகக் கொண்ட இவர்கள், உலகப்பொருளை ஆதாயமாகப் பெறும் நோக்கத்துடன், தங்களது எஜமானனான உலகப்பொருளைக் குறித்து அதிகமாகப் பேசுவார்கள்.
கூடவே, தேவனைக் குறித்தும் இவர்கள் பேசுவதால் இவர்களின் எஜமானர் தேவன்தான் என அனைவரும் நம்பிவிடுவார்கள். எனவேதான் “இந்தக் கள்ள ஊழியர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வருவார்கள்” என்றும், “உள்ளத்திலோ இவர்கள் ஓநாய்கள்” என்றும் இயேசு சொன்னார்.
தேவனுக்கு விரோதியான உலகப்பொருள் எனும் எஜமானனைக் குறித்து அதிகமாகப் பேசி, மற்றவர்களையும் அந்த எஜமானனை நோக்கி இழுக்கிற இந்தப் பிரிவினர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்கள். இந்தக் கள்ள ஊழியர்களுக்கு எச்சரிக்கையாயிருக்கும்படித்தான் இயேசுவும் அப்போஸ்தரும் எச்சரித்துள்ளனர்.
இவர்கள் வெளியில்லுள்ளவர்கள் அல்ல. நம்மோடுகூட நம் எஜமானராகிய தேவனுக்கு ஊழியஞ்செய்பவர்கள்தான். ஆனாலும், உலக இச்சைக்குப் பலியாகி தாங்கள் கெட்டதுமில்லாமல், மற்றவர்களையும் உலக இச்சைக்கு நேராக இழுப்பார்கள். அதன்மூலம் உலகஆதாயத்தை அடைவதுதான் அவர்களின் நோக்கம்.
ஆட்டுத்தோல் போர்வையில் வருகிற இந்த ஓநாய்களை நாம் அடையாளங்கண்டுகொண்டேயாக வேண்டும். இந்தக் கள்ள ஊழியர்களை அடையாளங்கண்டு, இவர்களிடம் எச்சரிக்கையாயிருப்பதுதான் மிகமிக அவசியம்.
இதுவரை யார் தேவனுடைய ஊழியன், யார் உண்மையான ஊழியன், யார் கள்ள ஊழியன் எனும் கேள்விகளுக்கான பதிலைப் பார்த்தோம்.
இறுதியாக, நாம் தேவனின் உண்மையான ஊழியர்களாக விளங்க என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பதையும், எவர்களிடம் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பதையும் சொல்லுகிற சில வசனங்களைப் பார்ப்போம்.
கலாத்தியர் 1:10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
லூக்கா 6:26எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
லூக்கா 16:13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது.
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (மனிதர்கள் அல்ல; எல்லா மனிதர்களாலும் புகழப்படுபவன் கள்ளத் தீர்க்கதரிசி)
2 கொரி. 4:5 நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
2 தீமோ. 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். 25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், 26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
அப்போஸ்தலர் 20:29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
ரோமர் 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
2 கொரி. 4:1 இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. 2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
2 பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
மத்தேயு 24:24 கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (அற்புத ஊழியன் என ஒருவன் தன்னைச் சொல்கிறானா? அவன் கள்ளத் தீர்க்கதரிசியாக இருக்க 99% வாய்ப்புள்ளது)
2 தெச. 2:9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
வெளி. 13:13 அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, 4 மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.