இன்றைய கிறிஸ்தவத்தில் கிறிஸ்துவின் போதனை அதிகமாக போதிக்கப்படுவதில்லை. மாறாக, ஊழியர்கள் எனப்படும் சில தனிமனிதர்களின் சுயபோதனைதான் அதிகமாகப் போதிக்கப்படுகிறது.
அவர்களின் போதனைப்படியே, “தமிழ்நாட்டின் க்ஷேமத்திற்காக உபவாசம் போட்டு ஜெபிப்பதிலும், குடும்ப ஆசீர்வாதங்களுக்காக திட்டம் போட்டு ஜெபிப்பதிலும், தீர்க்கதரிசன மையங்களைக் கட்டுவதிலும், எழுப்புதல் மையங்களைக் கட்டுவதிலும், ஜெபக் கோபுரம்/தோட்டம், தேவனுடைய கூடாரம் கட்டுவதிலும் இன்றைய கிறிஸ்தவம் மூழ்கிக் கிடக்கிறது.
இன்றைய சில தனிப்பட்ட ஊழியர்கள், ஜெபிக்கச் சொன்னால் ஜெபிக்க வேண்டும், உபவாசிக்கச் சொன்னால் உபவாசிக்க வேண்டும், புனித யாத்திரை போகச் சொன்னால் போகவேண்டும், இஸ்ரேலுக்கு அழைத்தால் செல்லவேண்டும், ஒரு நாளுக்கு 4 மணி நேரம் ஜெபிக்கச் சொன்னால் அப்படியே ஜெபிக்க வேண்டும், இன்னொரு ஊழியர் ஒரு நாளுக்கு 6 மணி நேரம் ஜெபிக்கச் சொன்னால் அப்படியே ஜெபிக்க வேண்டும், கை தட்டச் சொன்னால் தட்ட வேண்டும், அல்லேலூயா சொல்லச் சொன்னால் சொல்ல வேண்டும், 1000 ஸ்தோத்திரம் சொல்லச் சொன்னால் சொல்ல வேண்டும், அப்படிச் செய்பவன்தான் மெய்யான கிறிஸ்தவன் எனக் கருதும் நிலைக்கு கிறிஸ்தவம் வந்துவிட்டது.
ஒருவேளை இந்த ஊழியர்கள் சொல்கிறபடி ஒருவன் செய்யவில்லையென்றால், அவன் கிறிஸ்துவின் விரோதி, அவனுக்கு இரட்சிப்பு கிடையாது, ஆசீர்வாதம் கிடையாது என்ற நிலைதான் இன்றைய கிறிஸ்தவத்தில் காணப்படுகிறது.
இதெல்லாம் கற்பனையாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் என யாரும் கருதவேண்டாம். அத்தனை விஷயங்களும் சற்றும் பிசகாமல் கிறிஸ்தவத்தில் நடந்துவருகின்றன. இப்போதெல்லாம் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதும், டிவியில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், ஊழியர்களின் பிரமாண்ட திட்டங்களுக்குப் பணம் அனுப்புவதும்தான் தலையாய ஆவிக்குரிய செயல்கள் என ஜனங்கள் எண்ணும் நிலை வந்துவிட்டது.
கிறிஸ்துவின் போதனை சொல்வதென்ன, அவரது போதனைப்படி பிறரிடம் அன்பு கூருகிறோமா, பூமியில் பொக்கிஷம் சேர்க்காதிருக்கிறோமா, உலகசிநேகம் இல்லாதிருக்கிறோமா, தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறோமா என்பது போன்ற சிந்தனைகளெல்லாம் காற்றில் பறந்துபோய்விட்டன.
மாறாக, இம்மாத திறப்பின் வாசல் கூட்டத்திற்குக் கண்டிப்பாகச் சென்றுவிட வேண்டும், இவ்வருட வாக்குத்தத்தக் கூட்டத்திற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும், அப்போதுதான் நமக்கு ஆசீர்வாதம் பெருகும் என எண்ணி ஏராளமாகப் பணம் செலவளித்து அங்குமிங்கும் ஓடும் நிலை உண்டாகிவிட்டது.
இந்தக் கேடுகெட்ட நிலைக்கு இன்றைய (தவறான) ஊழியர்களே பிரதான காரணம் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும். உதாரணமாக:
இந்த வருடத்தின் துவக்கம் முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 12 மணி நேர உபவாசக்கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் க்ஷேமத்திற்காக மல்லுக்கட்டி ஜெபித்துவரும் சகோ.மோகன சி லாசரஸ், இறுதியாக 2013 ஜனவரி மாதம் சென்னையில் பெரிய அளவில் ஜெபமாநாடு கூட்டி, தமிழ்நாட்டின் க்ஷேமத்திற்காக ஜெபிக்கப்போவதாக விளம்பரம் செய்து, அந்த மாநாட்டில் ஏராளமான மக்கள் கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பும் விடுத்துள்ளார்.
உலக ஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்பதே வேதத்திற்கு எதிரானது; அப்படியிருக்க, பகிரங்கமாக மேடைபோட்டு, ஆயிரக்கணக்கானவர்களை வரவழைத்து, உலக ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்பது வேதத்திற்கு எத்தனை முரணானது?
ஆனால் இப்படியெல்லாம் ஜனங்கள் சிந்திப்பதில்லை. அவர்களுக்குத் தேவை ஆசீர்வாதம், ஆசீர்வாதம், ஆசீர்வாதம். அதோடுகூட தங்களது அபிமான ஊழியரின் மனதைக் குளிரச் செய்துவிட வேண்டும், அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் பரவாயில்லை என்பதே அவர்களின் எண்ணம்.
மற்றபடி, இயேசுவின் போதனை, அப்போஸ்தரின் போதனை எல்லாம் வேதாகமத்தில் எழுதப்பட்டதோடு சரி; அவற்றையெல்லாம் இவர்கள் சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை.
உண்மையில் கூட்டங்களுக்குச் செல்வதோ, உலக ஆசீர்வாதங்களைப் பெறுவதோ நம் நித்தியவாழ்வுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை. கிறிஸ்துவின் உபதேசங்களின்படி நடப்பதுதான் நம்மை நித்தியஜீவனுக்கு நேராக வழிநடத்தும்.
ஆம், கிறிஸ்துவின் வார்த்தையாகிய அவரது மாம்சம்தான் நமக்கு நித்தியஜீவனைத் தருகிற மெய்யான அப்பம். ஆனால் இந்த மெய்யான அப்பத்தைப் புறக்கணித்துவிட்டு, இன்றைய நவீன ஊழியர்கள் தருகிற உலக ஆசீர்வாதம் எனும் போலி அப்பத்தை நாடிஓடுவதில்தான் இன்றைய கிறிஸ்தவம் வீழ்ந்துகிடக்கிறது.
இவ்விஷயத்தில் ஊழியர்களைச் சொல்லிப் பயனில்லை. அவர்களுக்கு இது வியாபாரம். வியாபாரிகளான அவர்கள் பெருங்கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் தங்கள் வியாபாரத்திற்கு ஜனங்களின் மத்தியில் எத்தனை மவுசு உள்ளது என்பதை அறிய முற்படுகின்றனர்.
இப்படிப்பட்ட வியாபார ஊழியர்களின் கட்டுப்பாட்டில்தான் இனிமேலும் கிறிஸ்தவம் செல்ல வேண்டுமா? அன்பர்களே சிந்திப்பீர்!!
இந்த வியாபாரிகளின் கட்டுப்பாட்டை உதறிவிட்டு, வேதாகமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவோமாக; அதன் மூலம் கிறிஸ்தவத்தை சரியான பாதையில் கொண்டு செல்வோமாக.